கோல்மால் | தில்லுமுல்லு | Two Much

தொலைக்காட்சிப் பெட்டியைத் தட்டினால் ஏதாவது படம் ஓடிக்கொண்டிருக்கும். சில நேரம் - படம் முடிஞ்சு டைட்டில்ஸ் ஓடிக்கொண்டிருக்கும், இல்லையெனில் சில கடைசிக் காட்சிகள், இல்லை பாதியிலிருந்து, பார்த்த படமே ஓடும், சில நேரம் எந்தக் காட்சியில் முன்பு பார்த்து பாதியில் விட்டேனோ அதே காட்சியில் மீண்டும் தொடங்கும். தொலைக்காட்சி ஒரு குவாண்டம் அனுபவமாக, ஒரு மந்திரநிகர் அனுபவமாக, ஒரு பின் நவீனத்துவமாக இருப்பது வாழ்வை சுவாரசியமாக்குகிறது. சினிமா, கனவு போலவே இருப்பதால்தான் சுவைக்கிறது!உங்களுக்கு எப்படியோ? எனக்கு விட்ட கனவுகள் விட்ட இடத்திலிருந்து தொடங்கும். கனவுக்குள் ஒரு நினைவுப்பின்னல் இருப்பது தெரியும். அந்த மெய்நிகர் உலகில் ஒரு நினைவுப் பின்னல் இருக்கிறது. அந்த உலகில் இருக்கும் போது அதன் தொடர்ச்சி புரியும். விடிந்து விட்டால் புகை போல மறைந்துவிடும்.

இன்று என்ன படம் எனும் பிரேம் போன பிறகு படம் பார்க்க உட்கார்ந்தேன். என்ன படம் பார்க்கிறோம் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு படம்! அது என்ன படமாகவும் இருக்கலாம். நன்றாக இல்லையெனில் வேறு சானலுக்குத் தாவிவிடலாம் பாருங்கள். கனவில் கூட இதைத்தான் செய்கிறோம். தூங்கியவுடன் பல சேனல்கள் ஓடத்தொடங்கும். ஒன்றில் கொஞ்சப்படம், மற்றொன்றில் கொஞ்சப்படம். எந்தப்படமும் முழுவதுமாய் இருப்பதில்லை. என்றாவது முழுசாக ஒரு கனவு பார்த்துவிட்டால் அடுத்த நாள் ஒரு புத்துணர்ச்சி.

படம் ஓடி கொஞ்ச நேரத்தில் அது காமெடி என்று தெரிந்தது. எனக்கு ஹாலிவுட் காமெடி பிடிக்கும் (கொசுறு: ஏதோ டிவியைத் தட்டியவுடன் சூரியச்சுடர் (Sun TV) வருமென்று என்னவேண்டாம். 20 கொரியச் சானலுக்கு இடையில் ஒண்ணு ரெண்டு இங்கிலீஸ் சானல்). படம் பார்க்கப் பார்க்க அது நம்ம ரஜனி நடிச்ச "தில்லு முல்லு" படம் போல இருந்தது. சரி, நம்மாளு காப்பியடிச்ச இங்கிலீஸ் படம் என்னவென்று முழுசுமா பார்த்திடலாமென்று பார்க்கப் பார்க்க சுவாரசியமாகப் படம் போனது. கடைசிவரை என்ன படமென்று தெரியவில்லை. விடவில்லை. கடைசி டைட்டில் ஓடும் வரை ஏதாவது குளூ கிடைக்காதா என்று பார்த்த போது அது "Two Much" என்ற படமாக இருக்க வேண்டுமென்று தோன்றியது. இணையத்தில் படம் பார்த்துத் தேடியவுடம் உறுதியானது! IMDb அதற்கு பத்துக்கு 6 மார்க்கு கொடுத்திருந்தது.

தில்லுமுல்லு மாதிரியே ஒரே ஆளு அண்ணன், தம்பி என்று அக்கா, தங்கையைக் காதலிக்கும் கதை! ரஜனி வெறும் மீசையை வைத்து அண்ணன், தம்பியை வேறு படுத்துவார். இதில் குடுமியைக் கட்டியிருந்தால் அண்ணன். அவிழ்த்துவிட்டால் தம்பி. எல்லா ஊரிலும் ஏமாளிகள் இருக்கும் வரை எப்படி வேண்டுமானாலும் கதையடிக்கலாம்தானே!

சரி, யார்? யாரைப் பார்த்து காப்பி அடிச்சது?

தில்லுமுல்லு, கோல்மால் எனும் இந்திப் படத்தின் ரீமேக். அது 1981 ல் வருகிறது. ஆனால் Two Much 1995-ல் தான் வெளிவருகிறது. இக்கருத்து கிழக்கேயிருந்து மேற்கே போயிருக்கலாம். Donald Westlake எழுதிய ஒரு நாவலை வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள்! எனவே படம் பார்த்து காப்பியடிக்கவில்லை. இப்படியெல்லாம் எண்ணுவது எல்லாக் கலாச்சாரத்திலும் உண்டு போலும்!

0 பின்னூட்டங்கள்: