வெற்றிப் புன்னகை?

சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் ஆசிய ஒலிம்பிக். ஆசியாவிற்கென்று சில குணாதிசயங்கள் உண்டு. ஆசியாவில் ஆண் அழலாம். நம்ம சிவாஜி இல்லையா? பாவம் அவர் ஒரு பேட்டியில் சொன்னார் "நான் செட்டுக்குள் வருகிறேன் என்றவுடன் கிளிசரினை வைத்துக்கொண்டு காத்திருப்பர்" என்று. ஆயினும் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர் அழுவது மிகக்குறைவு. பெரும்பாலோர் கொரில்லா போல் மார்ப்பைத் தட்டுவர். சிலர் தேசியக் கொடியை தூக்கிப்பிடிப்பர்.

ஆனால் பாவம் இந்த ஜூடோ வீரனோ தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். தோற்றுப்போனவர் தோள் கொடுத்து ஆறுதல் சொல்ல வேண்டிய நிலை! ஏனிப்படி அழுதீர்? என்று கேட்டதற்கு ஒரு உண்மை புலப்பட்டது. கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் வெற்றி என்பது வெறும் தனிமனித வெற்றியல்ல. அது சமூகத்தின் கௌரவ விஷயம். எனவே ஒலிம்பிக்கில் ஒருவர் கலந்து கொள்கிறார் என்றால் ஏகப்பட்ட மன அழுத்ததிற்கு ஆளாகிறார். வெற்றி பெற்ற பிறகுதான் இந்த அழுத்தம் குறைகிறது! இது எவ்வளவு கண்கூடு என்பதற்கு இந்த வீடியோ சாட்சி!!இந்திய ஒலிம்பிக் கோஷ்டிக்கு இது செல்லாது. ஏனெனில் வெற்றிக் கோப்பைகளை ஏன் குவிக்கவில்லை என்று யாரும் கேட்கப்போவதில்லை. கேட்டாலும் சொல்லிக்கொள்ள ஆயிரம் நொண்டிச் சாக்குகள் உள்ளன!

ஒலிம்பிக் நிறையுற்றது

கோகுலாஷ்டமியன்று ஒரு கொண்டாட்டம் நிறையுற்றது!

ஆகஸ்டு 8ம் தேதி 8 மணிக்கு ஆரம்பித்த பெய்ஜிங் ஒலிம்பிக் ஆகஸ்டு 24ம் தேதி 8 மணிக்கு முடியுற்றது (அஷ்டமி திதியன்று!)தினம், தினம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மகிழ்வான நிகழ்வு முடிவுற்றதே எனும் வருத்தம்தான். ஆயினும் ஒரு சீனப்பழமொழி சொல்வது இனிமையானவை கூட ஒரு பொழுதில் நிறைவுறத்தான் வேண்டும்!

மானுடத்தின் திறமைகளை இத்துணை நட்பான முறையில் வேறு எங்கு காணவியலும்? வெற்றியும் தோல்வியும், கண்ணீரும், கும்மாளமும் நிறைந்த நாட்கள். கண்ணீர் என்பது துக்கத்தின் அறிகுறி என்று மட்டும் சொல்லமுடியாதே! அதுவும் ஆசியர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் முதலில் வருவது கண்ணீர்தான். கொஞ்சம் வேடிக்கையாகக் கூட இருந்தது. ஜூடோவில் வென்ற கொரியன் தேம்பித் தேம்பி அழ, தோற்றுப்போன நெதர்லாந்துக்காரன் பதறிப்போய் அவனை அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்ல :-)

எந்தவொரு விக்னமும் இல்லாமல் ஒலிம்பிக் நிறைவேறியது. சீன அரசு தீர்மானித்தால் எதையும் சாதித்துக்காட்டமுடியும் என்பது புரிகிறது! ஆரம்பம் போலவே முடிவும் சீனப்பெருஞ்சுவர் போல் பிரம்மாண்டமாக அமைந்தது. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒன்று சேரும் ஒரு பெரும் பார்ட்டியாக முடிந்தது சிறப்பு. முதன் முறையாக ஒரு ஆசியநாடு அதிக தங்கப்பதக்கங்கள் பெற்று உலகை ஆச்சர்யப்பட வைத்திருக்கும் நிகழ்வு. முதல் பத்தில் மேலும் இரண்டு ஆசிய நாடுகள் (கொரியா, ஜப்பான்) நிற்பது சிறப்பு.அடுத்த ஒலிம்பிக் லண்டனில். எப்போதுமே பிரச்சனையுள்ள இடம் லண்டன். நல்லபடியாக அடுத்த ஒலிம்பிக் நடக்க வேண்டுமே என்று இப்போதே கையைப் பிசைய ஆரம்பித்தாகிவிட்டது!

இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்பதை பெரும் அறைகூவலுடன் சொல்லும் நிகழ்வு பெய்ஜிங் ஒலிம்பிக். வாழ்க சீனா! வாழ்க ஆசியா!

வேடிக்கை விளையாட்டு!

நஞ்சுண்ட கண்டன்!

ஒலிம்பிக் பற்றிய பல்வேறு சேதிகளில் அங்கு வழங்கப்படும் சீன உணவு பற்றிய சேதியுமொன்று. ஊர்வன, பறப்பன, நகர்வன, நடப்பன என ரசிக்கத்தக்க உணவென சீன 'நளபாகம்' இருபது வகையான மிருகங்களைச் சுட்டுகிறது.

அன்று கொரியாவில் என் வங்கி முன்பாக ஒரு சிறுகடை விரித்து ஒருவன் ஏதேதோ விற்றுக் கொண்டிருந்தான். என்ன விற்கிறான் எனப்பார்க்கப்போனது தவறாகப் போய்விட்டது. அவன் கடையில் விற்பனைக்கு காய்ந்து போன தேள், பூரான், வண்டு இன்னபிற விஷஜந்துக்கள்!! இதையெல்லாம் கூட உண்பார்களா? என்ற சந்தேகத்தில் ஆய்வகம் வந்து சகாக்களை வினாவினேன். அவர்கள் சொன்ன பதில் இன்னும் தூக்கிவாரிப் போட்டது. இந்த விஷப்பிராணிகளை கொதிக்க வைத்து சூப் தயாரித்தால் சுவையாக இருக்கும் என்றனர்.

ரசனை ஊருக்கு ஊர் வேறுபடுகிறது என்ன செய்ய?

நஞ்சுண்ட கண்டன் சிவன் என்று எண்ணியிருந்தேன். அது 'சிவன்' அல்ல, 'சீனன்' என்று கண்டு கொண்டேன்.

ஐ.நா வை ஸ்தம்பிக்க வைத்த சிறுமியின் பேச்சு!

சூழல் பற்றிய விழிப்புணர்வு தீ போல் பரவும் காலமிது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆரம்பித்த இந்த இயக்கம் இப்போது ஒரு போர் வெறியில் நிற்கிறது. அதற்குக் காரணங்கள் உள்ளன. இந்தச் சிறுமியின் பேச்சைக் கேட்டும் நாம் திருந்தவில்லையெனில் 'சும்மா' பிள்ளை பெற்றுக்கொள்ளுவதில் அர்த்தமே இல்லை! (பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. தெளிவான ஆங்கிலம். 5 நிமிடங்கள்தான்)

ஒலிம்பிக்கின் பெண்ணிய வெற்றி

ஒலிம்பிக்கின் பெண் விடுதலை

ஒலிம்பிக் காட்சிகளை நம் தமிழ்ப் பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். அது பெண் விடுதலைக்கான உந்துதலாக அமையும். பெண்ணால் சாதிக்க முடியாததுதான் என்ன? ஒலிம்பிக்தான் அத்தாட்சி!பளு தூக்குவதில் ஆரம்பித்து, தடையோட்டம், மாரதான், சைக்கிள், படகு, ஜூடோ, பாட்மிண்டன், வாலிபால், கால்பந்து...பட்டியல் நீண்டு கொண்டே போகும்! மிக நளின விளையாட்டுக்களிலிருந்து மிகவும் ஆண்மைத்தனமான முரட்டு விளையாட்டுவரை எல்லாவற்றிலும் இன்று பெண்கள், ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்று நிரூபித்து வருகிறார்கள். இதைப்பார்த்த பிறகாவது நம் இலக்கியவாதிகள் பேசும் பெண் விடுதலை இன்னும் கிண்டர்கார்டன் அளவிலேயே நிற்கிறது என்பதை உணர்ந்து கட்டற்ற முழு விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் தயாராக வேண்டும் (அதாவது விடுதலை வேண்டும் என்போர்!)அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பால் வேறுபாடு என்பது உயிரியப்பரிமாணத்தில் பின்னால் தோன்றியது. பால் வேறுபாடு இல்லாத உயிரினங்கள்தான் உலகில் அதிகம். மீன் போன்ற உயிரிகளில் தேவைக்கேற்றவாறு பால் மாறுபாட்டைக் கொண்டுவரமுடியும். மனித இனத்தில் கூட ஆண் என்பவன் பாதிப்பெண்ணே! (XY chromosomes).தமிழ்ப் பெண்கள் தங்களை "பெண் உடல்" என்று நம்பி, அடையாளப்படுத்திவருகிறார்கள். இது மாற வேண்டும். பெண் "உடல்" என்று கொண்டாலும், உடற்கூறுகள் மனத்தளவில் தோற்றுவிக்கும் கற்பிதங்களைக் களைய முன்வரவேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் தங்கங்களை அள்ளிக் குவிக்கும் சீன, வெள்ளைய, கருப்பின மக்கள் தங்கள் உடல் சார்ந்த விழுமியங்களை மாற்றிக் கொண்ட பின்பே ஒலிம்பிக்கில் வெற்றிப் பெற முடிகிறது. நமக்கு ஒன்பது முழம் சேலை கொண்டு முற்றும், முழுவதுமாக மூடியபின்தான் வெளியே நடமாடவே முடிகிறது இதற்குக் காரணம் ஆண்களின் காமப்பார்வை என்று சொல்லிவிடலாம். உண்மைதான். ஆணும் பெண் என்பது வெறும் "உடல் அல்ல" என்பதை அறியவேண்டும்! வாழ்வில் எத்தனையோ தடைகளைத் தாண்டும் பெண்ணால் 'உடல்' எனும் தடையைத் தாண்டமுடியாதா? என்ன?நமது ஆன்மீகம் இதற்குத் துணை வருகிறது. இந்து மதம் என்றும் மனிதனை வெறும் உடல் என்று கண்டதில்லை. அவனை 'ஆத்மா' என்றே அடையாளம் காண்கிறது. சிவ-சக்தியை அர்த்தநாரியாகக் காட்டுவது, கோபி-கிருஷ்ணா (ராதே-கிருஷ்ணா) போன்றவை ஆணும், பெண்ணும் சமம் என்பதைக் காட்டுவதுடன், இரண்டும் சமமாகக் கலந்ததே மனித உயிர் என்றும் சொல்கிறது. வைணவம் ஒரு படி மேலே போய், ஜீவன்கள் அனைவரும் பெண்களே! என்று சொல்லிவிடுகிறது. எனவே, தமிழக ஆண்களும், பெண்களும் தங்களது 'சொரூப லட்சணமான ஆன்மா' என்பதைப் புரிந்து கொண்டு ஒலிம்பிக் விளையாட்டிற்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.சீனாவின் இன்றைய வெற்றி அந்த நாட்டை எங்கே நிறுத்தப் போகிறது! என்பதைக் கண்ட பிறகாவது நாம் விழித்துக் கொண்டால் நல்லது!

ஓடி விளையாடி ஒலிம்பிக் பார் பாப்பா!

இந்தியா கொஞ்சம் மண்டை காய்ந்த நாடு. எதற்கெடுத்தாலும் குற்றம் பார்த்து, கொணஷ்டை சொல்லும் நாடு. மூளையை அது வீணாக செலவழிக்கிறது! தத்துவம் தத்துவமென்று மண்டை காய்ந்து போனதால்தான் "பக்தி" இயக்கமே அங்கு தோன்றியிருக்குமோ? என்று யோசிக்க வைக்கிறது! இதனால்தான் ஆன்மீக உலகில் புரட்சி வீரராக வந்த சுவாமி விவேகாநந்தர் ஒவ்வொரு இந்தியனும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றார். ஆன்மீகம் கோயிலுக்குப் போவதில் மட்டுமில்லை. "ஊனுடம்பு ஆலயம்" எனும் திருமூலர் சொல்லுக்கிணங்க ஊனுடம்பைப் பேண வேண்டிய கடமை இருக்கிறது. ஓடி விளையாடி போல் வால்ட் தாவவில்லையெனினும் கொஞ்சம் யோகாவாவது செய்யலாம். இந்தியாவை ஏழை நாடு என்பதெல்லாம் பொய். இந்திய மனிதர்களின் ஊளச்சதையின் கொழுப்பை மட்டும் எடுத்தால் உலகத்திற்கு 10 ஆண்டுகள் உணவு தயாரிக்கலாம் ;-)ஓடி விளையாடு பாப்பா! என்றான் பாரதி. குழந்தைகளுக்கு ஓடி விளையாடக்கூட இடமில்லாத அபார்ட்மெண்டில் வாழ்கிறோம் பாதிப்பேர். சாப்பிட்ட பின் 100 அடியாவது நடக்க வேண்டும் என்கிறது தொல்காப்பியம் (இதெல்லாம் கூட அதிலே இருக்கா? என்று கேட்பவர்கள் நச்சினார்க்கினியார் உரை வாசிக்க வேண்டும்). காலற நடக்க சென்னையில் கடற்கரையை விட்டா வேறு இடமில்லை. வெளிநாடுகளின் நகர அமைப்பில் நடை பழகும் விதம் பூங்காக்ககளை நகர மத்தியில் அமைப்பது வழக்கம்.
சரி, ஓடித்தான் விளையாடவில்லை. மற்றவர்கள் செய்யும் விளையாட்டையாவது காணலாமே? அதுவுமில்லை. இந்த அறிவுகெட்ட டிவி சீரியல்களைப் பார்த்துக்கொண்டு ஒரு இளைஞர் சமுதாயமே பாழாய் போவதை நினைத்தால் வயிறு எரிகிறது.

ஏன் உடனே நாம் ஒலிம்பிக் காட்சிகளைக் காண வேண்டும்?

1. ஒலிம்பிக் என்பது சிறந்ததில் சிறந்ததான விளையாட்டுக்களை வைத்து சிறந்ததில் சிறந்ததான விளையாட்டு வீரர்களைத் தருவிக்கும் நிகழ்ச்சி. எனவே உலகத்திறம் என்னவென்று அறிந்து கொள்ள ஒலிம்பிக் பார்க்க வேண்டும்!2. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அனைத்துமே மனிதனை தேவனாக்கும் முயற்சி. ஆச்சர்யப்படாதீர்கள். மனிதச் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது, பஞ்ச பூதச்செயல்களே. ஒலிம்பிக் என்பது இந்த பஞ்சபூதச்செயற்பாடுகளுக்கு சவால் விடும் நிகழ்வு. நீரில் இவ்வளவு வேகமாக நீந்த முடியுமா? தூரத்தே இருக்கும் கருப்புப்புள்ளியைப் பார்த்து அம்பு ஏவ முடியுமா? யானை தூக்க வேண்டிய சுமையை மனித உடம்பால் தூக்க முடியுமா? உடம்பை ரப்பர் போல் வளைத்து விண்ணில் பறக்க முடியுமா? (சில நொடிகளேனும்!). இப்படி எந்த விளையாட்டை எடுத்தாலும் அது ஐம்பூதங்களுக்குச் சவாலாக அமைகிறது.

நமது சமயங்கள் என்ன சொல்லுகின்றன தேவர்களுக்கு இந்த ஐம்பூதக்கட்டுப்பாடு இல்லை என! வைகுந்தத்தில் எல்லாமே அப்பிராகிருத திவ்ய மங்கள விக்ரகமாக இருக்குமாம். ஆக, அங்கு ஐம்பூதங்களின் வேலை நடக்காது என்று தெரிகிறது. இப்புவியில் ஓர் சொர்க்கத்தை உருவாக்கும் முயற்சியே ஒலிம்பிக். எனவே இந்த அதிசயத்தைக் கண்ணாறக் காண வேண்டாமா?

3. மனிதன் முன்னேறக் கனவு வேண்டும். இவ்வருட ஒலிம்பிக் தீம் "ஓருலகு ஓர் கனவு" என்பது. குழந்தைகளுக்கு கனவை வளர்க்க ஒலிம்பிக் காட்டுங்கள்.

4. ஒலிம்பிக் பணிவைக் கற்றுத்தருகிறது. நாம்தான் சிறந்த வீரன் என்று அங்கு போனால் நமக்கும் மிஞ்சும் ஒருவன் இருப்பான். அது பணிவைச் சொல்லித்தருகிறது.

5. உலகம் பல்வேறு மனித இனங்களைக் கொண்டது. ஒவ்வொரு இனத்திற்கும் சில சாமர்த்தியங்களுண்டு. அதையறிய ஒலிம்பிக் உதவுகிறது.

6. சித்தி போன்ற வெட்டி சீரியல்களைப் பார்ப்பதற்குப் பதில் ஒலிம்பிக் பார்ப்பது ஆயிரம் மடங்கு மேல்!

பார்க்க..பார்க்க..ஒலிம்பிக் பார்க்க.

வெள்ளித்திரை!

வெள்ளித்திரை! "மொழி"க்குப் பிறகு பிரகாஷ்ராஜ், பிரிதிவிராஜ் கூட்டமைப்பில் இன்னொரு வெற்றிப்படம். பெயர் சொல்லும் படம். திரையுலகின் வாழ்வு பற்றிப் பேசும் கதை. மனித வாழ்வு பற்றிப் பேசுவது இலக்கியம் என்றால் சினிமா பற்றிப் பேசுவதும் சினிமாதான்! எல்லோருமே அளவான நடிப்பு. வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கூட தேவையான அளவு வில்லத்தனம்தான் காட்டுகிறார். நிச்சயம் இயக்குநர் 'விஜி' க்கு இதுவொரு வெற்றிப்படம். துணை நடிகர்கள் கதைக்கு இவ்வளவு பாந்தமாக அமைவது வெகு சில படங்களில்தான். ஹீரோத்தனத்தை கேலி செய்யும் தைர்யமும், அதே சமயத்தில் அது தொழில் அதன் நுணுக்கமறிந்தவன் வாணிப நோக்கில் கூட 'சினிமா' என்று பெயர்சொல்லும் படங்களைத் தாயாரிக்க முடியும் என்று சொல்லும் கதை. பிரகாஷ்ராஜ் கடைசிக்காட்சியில் வெளுத்து வாங்குகிறார். அவருக்கு இம்மாதிரி ரோல்தான் நன்றாகப் பொருந்துகிறது. ஏதோ அவருக்குள்ளும் இருக்கும் ஹீரோ கனவை கொஞ்சம் சொந்தக்காசுச் செலவில் சொறிந்து கொள்கிறார். சகித்துக் கொள்ளுகின்ற அளவிலேயே நிறுத்தி இருப்பது அழகு!

விஜிக்கு இயக்குநர் திலகம் பாலச்சந்தர் போல் பேர் எடுக்க வேண்டுமென்ற கனவை டைட்டில் உருளலிலேயே காட்டிவிடுகிறார். "ததாஸ்து" (அப்படியே ஆகுக! அதற்கான திறமை இருக்கிறது!!)

பிரகாஷ்ராஜ் இப்படியொரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

தமிழ் சினிமாதான் எவ்வளவு முன்னேறிவிட்டது!

பேசாப்படம். பின் பேசும் படம். 30 பாடல்கள் என பாட்டிற்காக சினிமா எடுத்த காலம். பின் ஹீரோ நல்லவன் (தர்மம் தலை காக்கும்), வில்லவன் கெட்டவன் என்ற கருப்பு-வெளுப்பு பார்முலா படங்கள். பின் நல்லவனே வாழ்வில் வில்லனாகிவிடுவது போன்ற ஹீரோக்கதைகள். பின் வில்லனே ஹீரோ போல பார்க்கபட்ட படங்கள் (சத்யராஜ், ரஜனி). வில்லன் ஹீரோவாக மாறிய காலங்கள். இதிலும் வில்லன் எனும் இமேஜ் கெட்டுவிடாமல் அவனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள வைக்கும் சாதுர்யம்! அடேங்கப்பா! சொல்பவர் சொன்னால் சொரைக்காய்க்கு கொம்பு உண்டுதான்!! அதுதான் சினிமா! அதுதான் அக்கலையின் சாமர்த்தியம்.சபாஷ்! பிரகாஷ். நீங்களே சொல்லிக்கொள்வது போல் நீங்கள் "மக்கள் செல்லம்"தான். அது எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ (கொஞ்சம் தொந்தியைக் குறைக்கலாம்!)

துணை நடிகர்கள் எல்லோருமே சூப்பர். அவர்கள்தான் இப்படத்தின் ஹீரோக்கள்! நடிகைகள் அளவான, அழகான நடிப்பு.

இசை ஆகா! ஓகோ! இல்லையெனினும் கேட்கக்கூடியதாய் இருக்கிறது. இந்தோனிஷியா கொள்ளை அழகு!

எல்லா பார்முலாவையும் கலக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. வெள்ளித்திரை. இதுவொரு மலையாளம் ரீமேக் (உதயானானு தாரம்) என்றவுடன் மேலே சொன்ன எல்லாம் கொஞ்சம் சுரத்து குறைந்து விடுகிறது! "அகா! என்றெழுந்தது பார்! ஓர் தமிழ் வெள்ளித்திரை" என்று கூவத்தொடங்கும் போது இன்னும் நல்ல படங்கள் மலையாளத்திலும், வங்காளத்திலும்தான் எடுக்கப்படுகின்றன என்ற உண்மையை இந்தியர்கள் மறந்துவிடக்கூடாது என்று ஞாபகப்படுத்தும் படம்.

எப்படியானால் என்ன? இதுவொரு வெற்றிப்படம், இந்திய சினிமாவிற்கு!!

பிந்திராவின் தங்கப்பதக்கம்!

இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம்!! வாவ்!! சண்டிகாரைச் சேர்ந்த பிந்திரா 10மீ துப்பாக்கி சுடுதலில் முதலாவதாக வந்து இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கித்தந்துள்ளார். இது சாதாரண வெற்றியல்ல! Near perfect shot என்று சொல்லக்கூடிய அளவில் மிகத்துல்லியமாக சுட்டு இதைப் பெற்றிருக்கிறார். இதனால் இவருடன் போட்டி போட்ட பின்லாந்துக்காரரையும், முன்னாள் சாம்பியன் சீனாவையும் இவர் ஓரங்கட்டிவிட்டார்!

இந்தியா நிச்சயம் பெருமை கொள்ள வேண்டிய வெற்றி இது.இந்தியா மேலும் பதக்கங்கள் பெற நாம் உளமார வாழ்த்துவோம்!

Bindra clinches India's first individual Olympic gold

வில்லுக்கு கொரியன்!

இராமாயண கதா பாத்திரங்களில் கைகேயின் வில்வித்தைத்திறன் மிகவும் சிலாகித்துப் பேசப்படுகிறது. கைகேயி மத்திய ஐரோப்பியப் பெண். காகஸ் மலைவாசி. ஆனால், ஒலிம்பிக் வில்லேந்தும் வீராங்கணைகளாக கொரியப் பெண்கள் கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து தங்கப்பதக்கம் பெற்று வருவது ஒலிம்பிக் ரெகார்டு மட்டுமல்ல, உலக சரித்திரமும் கூட.

தொடர்ந்து மழை பெய்த போதும் அவர்களது கவனம் சிதராமல் குறிபார்த்து வில் எய்தது மனிதத் திறமைக்கு எடுத்துக்காட்டு. கொஞ்சம் கூடப் பதறாமல், கூட்டத்தைக் கண்டு, அதன் கூச்சலைக் கண்டு (உற்சாகக் கூச்சல் என்றாலும் அது கவனத்தை சிதறடிக்கக்கூடியதே!) பதட்டமடையாமல். 'காரியமே கண்ணாயினர்' என்று இவர்கள் வில்லெய்த திறம், ஆகா!வில்லுக்கு விஜயன் என்று சொல்லுவார்கள். இனிமேல் வில்லுக்கு கொரியன் என்று மாற்றவேண்டுமென்று தோன்றுகிறது.

இதுவரை தென்கொரியா மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது! பெண்களுக்கான கூட்டு வில்லெறியும் போட்டி, நீச்சல் போட்டி, 60கிலோ ஜூடோ!

வடகொரியாவும், பிரேசிலும் ஆடிய கால்பந்தாட்டப்போட்டி எவ்வளவு சிறப்பாக இருந்தது. நான் பார்த்த பொழுது 2க்கு ஒன்று என்ற கணக்கில் பிரேசில் முன்னின்றது.

ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதை நிரூபிக்கும் ஒலிம்பிக் போட்டிகள் வாழ்க.

பால் வேறுபாடு, இனவேறுபாடு, தேசிய வேறுபாடு என்று பார்க்காமல் மானுடத்திறமை ஒன்றை மட்டும் கணக்கில் கொண்டு நடக்கும் இந்த அதிசயம் காணக் கண்கோடி வேண்டும்.

வாழ்க ஒலிம்பிக்!

புத்தாக்கம் பெறும் உயிர்

வெறும் அறிவியல் என்று மட்டும் இருந்த காலங்கள் எனக்குண்டு. அறிவியல் தந்த ஒரு திமிர்த்தனம் கூட இருந்தது. என் வாத்தியார் வேறு நாத்திகராக இருந்ததால் 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்று வாழ்ந்த மாணவர் பருவமுண்டு. ஆனால் இலக்கியம் என்று உள்ளே நுழைந்த போது அது என்னை மனிதனாய் மாற்றிவிட்டது. வழக்கமாய் கவிஞர்கள் பேசும் 'பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு தரும்' அதிநுண்ணிய சிலிர்ப்பு பற்றிய தெளிவு மெல்ல, மெல்ல உட்புக ஆரம்பித்தது. பின் வாழ்வின் மலர்ச்சி பற்றிய ஞானம், தேடுதல் வர ஆரம்பித்தது. அப்போது கற்ற கல்வி (அறிவியல்) உதவியது. இந்தப் பட்டாம்பூச்சியின் படிமம் ஆழமாக மனதில் பதிந்தது. பச்சைப் புழுவாய் இலையில் தவழ்ந்து. மோனமுனியாய் கூட்டில் தவமிருந்து. பட்டாம்பூச்சியாய் காற்றில் தவழும் இதன் படிநிலைகள் ஆன்மீகக் கேள்விகளை என்னுள் எழுப்பின. இதை ஒரே ஜீவன் என்று சொல்வதா? இல்லை மூன்று ஜீவன்களின் தொடர்ச்சி என்பதா?

பாம்புகள் கூட தோலுரித்து தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றன. எந்த ஜீவனாக இருந்தாலும் சில படி நிலைகள் பொதுவாய் உள்ளன. உதாரணமாக, கருவாய்த் தோன்றும் போது கர்ப்பகிரக வாசம் (முட்டைக்குள் அல்லது கருப்பையில்) பின் உயிரியாய் வெளித்தோற்றம். இவ்வமைப்பு நாம் கடலிலிருந்து தோற்றமுற்ற தன்மையைப் பிரதிபலிப்பதாய் அறிவியல் சொல்கிறது. அமீபாக்கள் முட்டையிடுவதில்லை. ஆனால், மிக அடிமட்டத்தில் வாழும் உயிரிகள் கூட சில நேரங்களில் ஸ்போர் எனும் முட்டைக்குள் அடைந்துவிடுகின்றன. ஓரிடம் விட்டு, ஓரிடம் பயணப்படும் போது எப்படி பெட்டி என்பது பாதுகாப்பாக நம் உடமைகளைக் காக்கிறதோ அது போல் உயிர்கள் பயணப்படும் காலங்களில் இந்த ஸ்போர் எனும் கூடு பயன்படுகிறது. அண்டத்தில் தோன்றிய உயிர் இப்படிப் பூமியில் ஸ்போர் வடிவில் விழுந்து உயிர்த்தோற்றமுற்று இருக்கலாம் என்பதொரு வாதம். ஏனெனில் மிக அடிநிலை உயிரியே மிகவும் complex ஆக இருக்கிறது (எளிமையிலிருந்து சிக்கலான அமைப்பை நோக்கிய பயணம் வாழ்வு எனக் கொண்டால்).

பாலூட்டிகள் என்று வரும் போது பட்டாம்பூச்சி போன்ற வடிவமைக்கப்பட்ட படிநிலைகள் தெரிவதில்லை. குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. முதுமை அடைகிறது. பின் மடிகிறது. இதுதான் தெரிகிறது. பார்த்துக் கொண்டே இருக்கும் போது வளர்ச்சி கண்ணுக்குப் புலப்படுவதில்லை. குழந்தை பிறந்து 'அப்பா' எனக் கூப்பிடும் போது தந்தை ஆகிவிட்டோம் என உணர்கிறோம். பின் நாம் பெற்ற குழந்தை கல்யாணமாகி குழந்தை பெற்று அக்குழந்தை நம்மை 'தாத்தா' எனும் போது முதுமையுற்றோம் என உணர்கிறோம். ஆனால், மனது எப்போதும் இளமையாகவே இருக்கிறது. உலகு நம்மை அங்கிள், 'ஏய் கிழடு' எனக் கூவும் போது, அதுவும் பொதுவிடங்களில்! நம் ஈகோ படாதபாடு படுகிறது. அது நாம் கிழடு அல்ல, வாலிபன் என்று பறைசாற்றுகிறது. ஆனால் உடல் ஒத்துழைப்பதில்லை. அதுபாட்டுக்கு வயதாகிவிடுகிறது. தசாவதராம் கமல் போல்:-) அவர் 'ஹீரோ' என்றுதான் சொல்லிக்கொள்கிறார். உடல் காட்டிக் கொடுத்துவிடுகிறது. நேற்று Indiana Jones and the Kingdom of the crystal skull படம் பார்த்தேன். ஸ்டார்வார்ஸ் படத்தில் பார்த்த ஹேரிசன் போர்டு இல்லை இவர். அதே ஆள்தான். ஹீரோ என்றுதான் இயக்குநர் சொல்கிறார். அந்தக் கிழடைப் பார்க்கும் போது "யாக்கையின்" நிலையாமை புரிகிறது. இளமை நிலைத்து நிற்பதில்லை.

குட்டியாக இருக்கும் போது வயசு என்ன என்று கேட்டால் இரண்டு வயதைக் கூட்டியே சொல்லுவோம். முன்பெல்லாம் பள்ளியில் வயதைக் கூட்டிச் சொல்லி சேர்த்துவிடுவது வழக்கம்! பதின்ம வயது வந்தவுடன் 16 வயதிலேயே நிற்பதாக உள்ளம் சொல்லும். 20-25 என்றாலும் வயது 18தான் என்று சொல்வதுண்டு! ஆண்களுக்கு வயது 40க்கு மேல் ஏறுவதில்லை என்று சொல்லும் பழக்கமொன்றுண்டு! ஜெர்மன் மொழியில் இளமையான யுவதிகளை Fraulein என்று சொல்லும் வழக்கமிருந்தது. இப்போது வெறும் 'பெண்' (Frau) என்று சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது. ஆனால் இப்படிச் சொன்னால் அவள் 20 ஆக இருக்கலாம் அல்லது 80ஆகக் கூட இருக்கலாம். எனவே மொட்டையாக Frau. XX என்று சொல்வதை யாரும் விரும்புவதில்லை, அதுவும் பதின்ம வயதைக் கடக்கும் பருவத்தினர். எனவே புதிதாக 'Junge Frau' என்றொரு பதத்தைப் போடுகின்றனர். அதாவது இளம்பெண் என்று பொருள். எனவே இளமையத் தக்கவைக்க எத்தனையோ முயற்சிகள். சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் 80 வயதானத் தலைவர்கூட (பாதிக்கு மேல் 60 தாண்டியவர்கள்தான் ஆளுகின்றனர்) ஒரு முடி கூட நரைக்காத தலையுடன், 'கரு, கரு' என்று அடர்த்தியான முடியுடன் இருப்பது அதிசயமாக இருக்கும். (உம்.ஒலிம்பிக் தொடக்கவிழா பாருங்கள்!).

என்னதான் செய்தாலும் உடல் வயதுருவதைத் தடுக்கமுடியாமல் இருக்கிறோம். அறிவியலும் கோடான கோடி ரூபாய் முடக்கி ஆராய்ந்து வருகிறது - மனித முதுமை குறித்து.

இது ஒருபுறம் இருக்க இந்த மாற்றங்களைக் கவிஞன் காண்கிறான். அதைப் பட்டாம்பூச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். புழு செத்து கூட்டுப்புழுவாகிறது. கூட்டுப்புழு செத்து பட்டாம்பூச்சியாகிறது என்று படுகிறது அவனுக்கு. இதே அலகை மனிதனுக்குப் போட்டுப் பார்க்கிறான். "பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் ஏற்படுகிறது. காளைப் பருவம் செத்து, காதலுக்குரிய இளமைப் பருவம் பிறக்கிறது. அதுவும் மாறி முதுமை உண்டாகிறது." என்று சொல்லக்கூடாதா? சொல்லலாம். இப்படிச் சொல்வதில் பல அர்த்தங்கள் உள்ளே புகுந்துவிடுகின்றன.

மறுபிறவி என்று தனியான ஒன்றில்லை, அது காணக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளது என்பது. ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற ஞானியைக் காண புப்புல் ஜெயகர் எனும் மாது போகிறாள். அப்போதுதான், தனது கணவரை அவள் இழந்து இருக்கிறாள். ஆறுதல் தேடி அவரிடம் போகிறாள். ஜேகே கேட்கிறார் "எந்தக் கணவன் இறந்துவிட்டான் என்று இப்படி ஒப்பாரி வைக்கிறாய்?" என்று. தூக்கிவாரிப்போடுகிறது இவளுக்கு. "எனக்கு ஒரே கணவன் தானுண்டு" என்கிறாள். "அப்படியா! அப்படியாகின் கல்யாணமான புதிதில் இளமைத் துடிப்புடன் குறும்புகள் செய்து துள்ளி விளையாடிய கணவனைப் பற்றி பேசுகிறாயா? இல்லை, உனக்கு ஒரு குழந்தை தந்து தந்தையென்று பொறுப்புடன் நடந்து கொண்ட அன்பான தந்தையான ஒரு கணவனைப் பற்றிப் பேசுகிறாயா? இல்லை முதுமையுற்று பிள்ளை குட்டிகள் தனிக்குடித்தனம் போனபின் 'ஒருவருக்கொருவர் ஊன்று கோல் போல்' துணையிருக்கும் கணவனைப் பற்றிப் பேசுகிறாயா?" எந்தக் கணவனைப் பற்றிப் பேசுகிறாய்? என்றாராம்.

ஒரே வாழ்வில் எத்தனையோ பிறவிகள். அவதாரங்கள். வீட்டில் கணவன். அலுவலகத்தில் மேனேஜர். ஊரில் நண்பன். பிள்ளைக்குத் தந்தை. பேத்திக்குத் தாத்தா. பிடிக்காதோருக்கு 'கிழப்பிசாசு' இப்படிப் பல அவதாரங்கள்!!

ஒன்றில் செத்து, வேறொன்றாக புத்துயிர் ஆக்கம் நடைபெறுகிறது என்று கவிஞன் சொல்கிறான் என்றால், 'ஆன்மா என்பது என்றுமே சாகாமல் உள்ளே இருக்கிறது' என்பதைச் சுட்டுவது போலவும் படுகிறது. அதுதான் இப்படிச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்றாகிறது!

ஆன்மீகம் தலைப்பட ஆரம்பிக்கிறது! உயிர்ச்சுழற்சி பற்றிய ஞானம் பிறக்கிறது. நிலையற்ற வாழ்விலும் நிலையானதொன்று உண்டோ? என்ற கேள்வி எழ ஆரம்பிக்கிறது. புத்தாக்கம் பெரும் உயிருக்கு அடிப்படையான நிலைக்கலன் எது? என்ற கேள்வி வருகிறது. இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கும் கவிஞன் யார்? அவன் எக்காலத்தவன்? முதலில் கவிதையைப் பாருங்கள். அதன் எளிய நடையைப் பாருங்கள்.

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?"

சித்தர் பாடலோ? கடைசி வரி அப்படி இருக்கிறதே! தினம் செத்து, செத்து பிழைக்கும் நாம் ஏன் நமக்காக அழுவதில்லை? பட்டிணத்தார் செத்த வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதாராம். ஒருவர் "என்னப்பா! செத்தவன் உனக்கு உறவா? இப்படி அழுகிறாயே?" என்றாராம். அதற்கு பட்டிணத்தார் "செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும் இத்தனை சனமும் ஒருநாள் இப்படித்தானே செத்துப் போகும் என்பதையறிந்து அழுகிறேன்" என்றாராம். இக்கருத்திற்கு விதை இக்கவிதையோ?


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்


கருப்பையை 'பெரும் துயருடும் பை' என்று சொல்கிறாரே திருமங்கை ஆழ்வார். இவர்கள் பேசும் யாக்கை நிலையாமைக்கும் இக்கவிதை ஒரு முன்னோடியாக இருக்குமோ?

அப்படித்தான் தோன்றுகிறது. இக்கவிதையை இயற்றிவர் பெயர் தொடித்தலை விழுத்தண்டினார். இப்பாடல் புறநானூறு தொகையில் "கையறுநிலைத் துறையில்" வருகிறது! சங்கப்பாடல்களை ஊன்றிக் கவனித்தால் தமிழின் பக்தி இலக்கியத்தின் தோற்றுவாய் புலப்படுகிறது. சித்தர் இயக்கத்தின் தோற்றுவாய் புலப்படுகிறது!

தமிழ் மரபு அறக்கட்டளையின் "என்ன சேதி?" எனும் வலைப்பதிவில் மேலும் காட்சிகள் காணக்கிடைக்கின்றன!

பெய்ஜிங் ஒலிம்பிக் ஆரம்பம்

பெய்ஜிங் ஒலிம்பிக் அதிசயம் ஆரம்பித்துவிட்டது. இதன் ஆரம்பவிழாவைக் கண்டவர்கள் பிரம்மித்துப் போகாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோஷம் என்று பொருள்!

அடேங்கப்பா! சீனாவின் எத்தனை நாள் கனவு இது. நவீன உலகம் விழித்துக் கொண்டு மேற்குலகம் ஆளத்தொடங்கிய காலத்திற்கு முன்வரை உலகப் பண்டாட்டை சீனம் வளர்த்திருக்கிறது. சீனப்பண்டாட்டின் எச்சமில்லாத கலாச்சாரம் இல்லையென்றே சொல்லவேண்டும். கடல் வழியாகட்டும், நில வழியாகட்டும், சீனா செல்லாத பிரதேசமில்லை. தாமஸ்குக் ஆஸ்திரேலியா போகும் முன், வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டு கொள்ளுமுன், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் முன், சீனா அங்கெல்லாம் நின்றிருக்கிறது. பௌத்த வழியில் வந்த சீனா அக்காலத்தில் ஆக்கிரமிப்போ, காலனிகளோ கொள்ளவில்லை!

யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் சீனா வீஅழ்ந்து கிடந்த காலங்களுண்டு. இப்போது மீண்டும் அது தன் பலமறிந்து எழுந்துவிட்டது. எதிர் வரும் காலங்களில் சீனாவின் உலக ஆளுமை எப்படி இருக்கும் என்பதற்கொரு முன்னுதாரணமாக ஒலிம்பிக்விழா காட்சிகள்!

மானுடம் அழகானது. மனிதர்களில்தான் எத்தனை வகை. 204 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொன்றும் ஒருவிதமாக. மனித முகங்களைக் காணும் போது மகிழ்வாக உள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் மற்ற கண்டங்களின் முகங்கள் அப்படியே, அச்சாக...ஆனால் நிற வேற்றுமைகளுடன். மூன்று பிரதான நிறங்கள் தென்படுகின்றன. கறுப்பு, வெள்ளை, மஞ்சள். பின் இதன் பல்வேறு சதவிகிதக் கலப்பு. இதை கண்ணுற வேண்டுமெனில் ஒலிம்பிக் ஆரம்ப விழாவைக் காணவேண்டும்!

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொலைகட்சிப் பெட்டிக்கு முன் கட்டிப்போட்டிவிட்டதே! ஏதோ திரில்லர் படம் பார்ப்பது போன்ற பிரம்மிக்க வைக்கும் காட்சி அமைப்பு. சீன வெடி என்று சொல்வது போல் நினைத்ததெற்கெல்லாம் வான வேடிக்கை. காசைக் கரியாக்கி சீனவெடி போடு! என்று பாட்டி திட்டுவாள். இங்கு எவ்வளவு காசு கரியாகியிருக்கும். ஆனாலும் அது தரும் பிரம்மிப்பு. மானுடத்தின் மீதான காதல்..ஆகா! அதற்காகவே காசைக் கரியாக்கலாம்.

பொறுமையுடன் எல்லா நாடுகளும் வலம் வருவதைக் கண்ணாறக் கண்டோம். சில நாடுகள் வரும் போது சல, சலப்பு. பெரிய சல, சலப்பு தாய்வான் (சீனாவின் தாய்பெய்) வரும் போது! பின் இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி (என்னையறிமால் கைதட்டு இங்கு :-), ரஷ்யா, அமெரிக்கா. ஆகப்பெரிய கூட்டம் அமெரிக்காவினுடையது என்று தோன்றுகிறது. புஷ் அவரது மனைவி சகிதம்! புட்டின் தனியாக (ஏந்தான் ரஷ்யர்கள் இப்படி உம்மாணாம்மூஞ்சிகளோ!). இந்தியா! யெஸ்! அழகான உடையில், மூவர்ணக்கொடி தாங்கி, அமைதியாக வலம் வந்தது. சர்தார்ஜி கெனாடா நாட்டிற்கும் சொந்தம் போலும் :-) குட்டி, குட்டி நாடுகள். நாலு பேர் குழு கொண்ட லைக்கன்ஸ்டைன்! இன்னும் சில பசிபிக், ஆப்பிரிக்க, தென்னமரிக்க நாடுகள்.

திறமை, நட்பு, நம்பகதன்மை இவைகளைக் குறிக்கோளாக் கொண்டு ஒலிம்பிக் தொடங்கிவிட்டது. மிக, மிக அற்புதத் தொடக்கம்! சீனா எத்தனை தங்கப் பதக்கங்களை அள்ளுகிறது பார்ப்போம்.

சோனியா காந்தி வந்திருந்தார் இந்தியவிற்காக. வேடிக்கையாகத் தோன்றினாலும். உலகம் அப்படித்தான் இருக்கிறது! பப்புவா நியூகினி என்று சொல்லிவிட்டு ஒரு வெள்ளையர் கொடி தாங்குகிறார். ஸ்வீடன் என்று சொல்லிவிட்டு ஒரு ஆப்பிரிக்கப் பெண் கொடி தாங்குகிறாள். கனாடா டீமில் நிறைய சர்தார்கள். கனடா பிரதமரின் மனைவி ஒரு ஆப்பிரிக்கர். உலகம் பார்க்க வேடிக்கையாகத்தான் உள்ளது! சுத்தம், மடி என்று இனிமேலும் பார்த்துக் கொண்டு இந்தியா விளையாடாமல் இருக்கக் கூடாது. இந்தியா எதிர்கால நட்சத்திரம் என்பது உறுதியானால் பெரிய ஒலிம்பிக் கனாவை இன்றே தொடங்க வேண்டும். அப்போதுதான் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும். ஒலிம்பிக்கை ஒரு நாடு நடத்துகிறது என்றால் உலக அரங்கில் அது பூப்பெய்துவிட்டது என்று பொருள்!!

ஓருலகம்! ஓர் கனவு!

ஒலிம்பிக் பதக்கம் - யார், யார்? எவ்வளவு?

One World One Dream - விடியோ!

08.08.08 அன்று ஒலிம்பிக் ஆரம்பம். எல்லாம் எட்டு! சீனர்களுக்கு எட்டு அதிர்ஷ்டமாம்! ஏன்?

எட்டுமெட்டு மெட்டுமாயொ
ரேழுமேழு மேழுமாய்,
எட்டுமூன்று மொன்றுமாகி
நின்றவாதி தேவனை,
எட்டினாய பேதமோடி
றைஞ்சிநின்ற வன்பெயர்,
எட்டெழுத்து மோதுவார்கள்
வல்லர்வான மாளவே. (திருச்சந்தவிருத்தம்)

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம் (திருமாலை)