பெய்ஜிங் ஒலிம்பிக் ஆரம்பம்

பெய்ஜிங் ஒலிம்பிக் அதிசயம் ஆரம்பித்துவிட்டது. இதன் ஆரம்பவிழாவைக் கண்டவர்கள் பிரம்மித்துப் போகாமல் இருந்தால் பிரம்மஹத்தி தோஷம் என்று பொருள்!

அடேங்கப்பா! சீனாவின் எத்தனை நாள் கனவு இது. நவீன உலகம் விழித்துக் கொண்டு மேற்குலகம் ஆளத்தொடங்கிய காலத்திற்கு முன்வரை உலகப் பண்டாட்டை சீனம் வளர்த்திருக்கிறது. சீனப்பண்டாட்டின் எச்சமில்லாத கலாச்சாரம் இல்லையென்றே சொல்லவேண்டும். கடல் வழியாகட்டும், நில வழியாகட்டும், சீனா செல்லாத பிரதேசமில்லை. தாமஸ்குக் ஆஸ்திரேலியா போகும் முன், வாஸ்கோடகாமா இந்தியாவைக் கண்டு கொள்ளுமுன், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் முன், சீனா அங்கெல்லாம் நின்றிருக்கிறது. பௌத்த வழியில் வந்த சீனா அக்காலத்தில் ஆக்கிரமிப்போ, காலனிகளோ கொள்ளவில்லை!

யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல் சீனா வீஅழ்ந்து கிடந்த காலங்களுண்டு. இப்போது மீண்டும் அது தன் பலமறிந்து எழுந்துவிட்டது. எதிர் வரும் காலங்களில் சீனாவின் உலக ஆளுமை எப்படி இருக்கும் என்பதற்கொரு முன்னுதாரணமாக ஒலிம்பிக்விழா காட்சிகள்!

மானுடம் அழகானது. மனிதர்களில்தான் எத்தனை வகை. 204 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொன்றும் ஒருவிதமாக. மனித முகங்களைக் காணும் போது மகிழ்வாக உள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் மற்ற கண்டங்களின் முகங்கள் அப்படியே, அச்சாக...ஆனால் நிற வேற்றுமைகளுடன். மூன்று பிரதான நிறங்கள் தென்படுகின்றன. கறுப்பு, வெள்ளை, மஞ்சள். பின் இதன் பல்வேறு சதவிகிதக் கலப்பு. இதை கண்ணுற வேண்டுமெனில் ஒலிம்பிக் ஆரம்ப விழாவைக் காணவேண்டும்!

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொலைகட்சிப் பெட்டிக்கு முன் கட்டிப்போட்டிவிட்டதே! ஏதோ திரில்லர் படம் பார்ப்பது போன்ற பிரம்மிக்க வைக்கும் காட்சி அமைப்பு. சீன வெடி என்று சொல்வது போல் நினைத்ததெற்கெல்லாம் வான வேடிக்கை. காசைக் கரியாக்கி சீனவெடி போடு! என்று பாட்டி திட்டுவாள். இங்கு எவ்வளவு காசு கரியாகியிருக்கும். ஆனாலும் அது தரும் பிரம்மிப்பு. மானுடத்தின் மீதான காதல்..ஆகா! அதற்காகவே காசைக் கரியாக்கலாம்.

பொறுமையுடன் எல்லா நாடுகளும் வலம் வருவதைக் கண்ணாறக் கண்டோம். சில நாடுகள் வரும் போது சல, சலப்பு. பெரிய சல, சலப்பு தாய்வான் (சீனாவின் தாய்பெய்) வரும் போது! பின் இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி (என்னையறிமால் கைதட்டு இங்கு :-), ரஷ்யா, அமெரிக்கா. ஆகப்பெரிய கூட்டம் அமெரிக்காவினுடையது என்று தோன்றுகிறது. புஷ் அவரது மனைவி சகிதம்! புட்டின் தனியாக (ஏந்தான் ரஷ்யர்கள் இப்படி உம்மாணாம்மூஞ்சிகளோ!). இந்தியா! யெஸ்! அழகான உடையில், மூவர்ணக்கொடி தாங்கி, அமைதியாக வலம் வந்தது. சர்தார்ஜி கெனாடா நாட்டிற்கும் சொந்தம் போலும் :-) குட்டி, குட்டி நாடுகள். நாலு பேர் குழு கொண்ட லைக்கன்ஸ்டைன்! இன்னும் சில பசிபிக், ஆப்பிரிக்க, தென்னமரிக்க நாடுகள்.

திறமை, நட்பு, நம்பகதன்மை இவைகளைக் குறிக்கோளாக் கொண்டு ஒலிம்பிக் தொடங்கிவிட்டது. மிக, மிக அற்புதத் தொடக்கம்! சீனா எத்தனை தங்கப் பதக்கங்களை அள்ளுகிறது பார்ப்போம்.

சோனியா காந்தி வந்திருந்தார் இந்தியவிற்காக. வேடிக்கையாகத் தோன்றினாலும். உலகம் அப்படித்தான் இருக்கிறது! பப்புவா நியூகினி என்று சொல்லிவிட்டு ஒரு வெள்ளையர் கொடி தாங்குகிறார். ஸ்வீடன் என்று சொல்லிவிட்டு ஒரு ஆப்பிரிக்கப் பெண் கொடி தாங்குகிறாள். கனாடா டீமில் நிறைய சர்தார்கள். கனடா பிரதமரின் மனைவி ஒரு ஆப்பிரிக்கர். உலகம் பார்க்க வேடிக்கையாகத்தான் உள்ளது! சுத்தம், மடி என்று இனிமேலும் பார்த்துக் கொண்டு இந்தியா விளையாடாமல் இருக்கக் கூடாது. இந்தியா எதிர்கால நட்சத்திரம் என்பது உறுதியானால் பெரிய ஒலிம்பிக் கனாவை இன்றே தொடங்க வேண்டும். அப்போதுதான் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும். ஒலிம்பிக்கை ஒரு நாடு நடத்துகிறது என்றால் உலக அரங்கில் அது பூப்பெய்துவிட்டது என்று பொருள்!!

ஓருலகம்! ஓர் கனவு!

ஒலிம்பிக் பதக்கம் - யார், யார்? எவ்வளவு?

One World One Dream - விடியோ!

08.08.08 அன்று ஒலிம்பிக் ஆரம்பம். எல்லாம் எட்டு! சீனர்களுக்கு எட்டு அதிர்ஷ்டமாம்! ஏன்?

எட்டுமெட்டு மெட்டுமாயொ
ரேழுமேழு மேழுமாய்,
எட்டுமூன்று மொன்றுமாகி
நின்றவாதி தேவனை,
எட்டினாய பேதமோடி
றைஞ்சிநின்ற வன்பெயர்,
எட்டெழுத்து மோதுவார்கள்
வல்லர்வான மாளவே. (திருச்சந்தவிருத்தம்)

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம் (திருமாலை)

4 பின்னூட்டங்கள்:

Karthigesu 8/09/2008 07:38:00 PM

நானும்தான் "ஓ" என்று உட்கார்ந்து பார்த்தேன். பிரமித்தேன். 21ஆம் நூற்றாண்டில் மானுடனாய் பிறந்ததற்கு பெருமிதம் கொண்டேன். "அரிது, அரிது..."

ஆகப் பெரிய பங்கேற்புக் குழு சீனாவுடையது. அமெரிக்கா இரண்டாவது பெரிய குழுவாக இருக்கும்.

அவர்கள் வரலாற்றை எப்படி கவினழகோடு சித்தரித்தார்கள்! சித்தரித்த அத்தனை ஆயிரம் பேர்களில் ஒருவர் கூட தப்படி எடுத்து வைக்கவில்லை.

அரங்கத் தரை ஒரு சீன scroll ஓவியம் போல் இருந்தது. அதிலே ஓவியங்கள் தீட்டப்பட்டன; அழிந்தன; மாயமாய் மாறின. அந்தத் தரையிலிருந்து முப்பரிமாண உருவங்கள் எழுந்தன. இருந்தும் அத்தரை ஓவியத்தின் மீது சிலர் நடக்கிறார்கள். எப்படிச் செய்தார்கள்?

இந்தத் தரை ஜாலங்கள் எல்லாம் இந்தப் பறவைக் கூடு அரங்கக் கூரையைச் சுற்றிய திரையிலும் வந்தன.

"புலவர்களே! ஒரு தூக்கணாங் குருவி போல உங்களுக்கு ஒரு கூடு கட்டத் தெரியுமா?" என அவ்வை கேட்டாளாம். கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்.

கூடு கட்டி, ஒளிபுகும் நீச்சல் சதுரம் கட்டி, உலகிற் பெரிய கலையரங்கம் கட்டி, அதிநவீன விமானத் தளம் கட்டி... எத்தனை விஸ்வகர்மாக்கள் உதித்திருக்கிறார்கள் சீனாவிலே!

"சீனத்தராய்விடுவாரோ?" என்று பாரதி அன்று கேட்டான். இன்றிருந்தால் "சீனத்தராய்விடுவீரே!' என்று சொல்லியிருப்பான்.

காசைக் கரியாக்கவில்லை கண்ணன், கலையாக்கியிருக்கிறார்கள்.

ரெ.கா.

வடுவூர் குமார் 8/10/2008 09:09:00 AM

நேரடி ஒளிபரப்பை பார்க்கவில்லை,இங்கு செய்திகளில் சில துண்டுகள் போட்டார்கள்.
இன்னும் 10 ஆண்டுகளில் நமக்கு ஒலிம்பிக்கா? - வேண்டிய கட்டிடம் கட்ட நிலம் ஆர்ஜிதம் செய்யவே 50 ஆண்டுகள் ஆகும்.
உ-ம் கத்திப்பாரா பாலம்.இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.:-(

நா.கண்ணன் 8/10/2008 09:14:00 AM

உண்மை! அப்படியே ஒத்துக்கொள்கிறேன். சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, பிறநாடுகள் என்று இருக்கும். இந்தியா எப்போதுதான் இந்தக் குழுவில் சேருமோ? இந்தோனீயக் குழுவை விடச் சிறியது, லைக்கன்ஸ்டைனைவிடக் கொஞ்சம் பெரியது. அவ்வளவுதன் !!

முதல் சில நிமிடங்கள் விட்டுவிட்டேன் ரெ.கா. வேறொரு சானலில் ஒலிம்பிக் வேறொரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். ஒளி, ஒலி, மேடை அமைப்பு என்று மூன்று பரிமாணக் காட்சிகளாக அமைத்து பிரம்மிக்க வைத்திருக்கிறார்கள். நடுவில் ஒரு கோளம். கோளத்தின் மேலே இரு அற்புதமான பாடகர்கள். கோளம் முழுவது ஒளிக்காட்சிகள். டால்பின் தாவுகிறது. நீர் பொங்குகிறது. நீங்கள் சொல்வது போல் திடீரென்று மனிதர்களும் நடமாடுகிறார்கள். ஒன்றுமே புரியவில்லை. Bat man மாதிரி இந்தக் கூரையின் வளையில் ஒரு முன்னாள் ஒலிம்பிக் வீரர் தீப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு ஓடுகிறாரே? அது எப்படிச் சாத்தியம். அவர் ஏதாவதில் கால் பதித்து அப்படி ஓடுகிறாரா? (அதற்கு சாத்தியமில்லையே? ஹும்ம்..) இல்லை வெறுமனே ஓடுவது போல் கால் அசைக்கிறாரா (அதுவும் மிக, மிகக் கடினமே!). என்னமோ மாயாஜாலம் ரெ.கா! நிச்சயம் இந்த நூற்றாண்டின் அதிசயங்களைக் கண்ணுறும் நாம் பாக்கியவான்!

நா.கண்ணன் 8/10/2008 09:19:00 AM

புஷ் சந்தோஷமாக வந்திருந்தார்!!

இந்தியா ஏன் இப்படி இருக்கிறது? இதற்கு அடிப்படைக் காரணமென்ன? ஏன் வெறும் சினிமாக் கனவிலே காலத்தைக் கழித்துவிட்டு, உலகக்கனவை (one world one dream) விட்டுவிடுகிறோம்!