புத்தாக்கம் பெறும் உயிர்

வெறும் அறிவியல் என்று மட்டும் இருந்த காலங்கள் எனக்குண்டு. அறிவியல் தந்த ஒரு திமிர்த்தனம் கூட இருந்தது. என் வாத்தியார் வேறு நாத்திகராக இருந்ததால் 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்று வாழ்ந்த மாணவர் பருவமுண்டு. ஆனால் இலக்கியம் என்று உள்ளே நுழைந்த போது அது என்னை மனிதனாய் மாற்றிவிட்டது. வழக்கமாய் கவிஞர்கள் பேசும் 'பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு தரும்' அதிநுண்ணிய சிலிர்ப்பு பற்றிய தெளிவு மெல்ல, மெல்ல உட்புக ஆரம்பித்தது. பின் வாழ்வின் மலர்ச்சி பற்றிய ஞானம், தேடுதல் வர ஆரம்பித்தது. அப்போது கற்ற கல்வி (அறிவியல்) உதவியது. இந்தப் பட்டாம்பூச்சியின் படிமம் ஆழமாக மனதில் பதிந்தது. பச்சைப் புழுவாய் இலையில் தவழ்ந்து. மோனமுனியாய் கூட்டில் தவமிருந்து. பட்டாம்பூச்சியாய் காற்றில் தவழும் இதன் படிநிலைகள் ஆன்மீகக் கேள்விகளை என்னுள் எழுப்பின. இதை ஒரே ஜீவன் என்று சொல்வதா? இல்லை மூன்று ஜீவன்களின் தொடர்ச்சி என்பதா?

பாம்புகள் கூட தோலுரித்து தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றன. எந்த ஜீவனாக இருந்தாலும் சில படி நிலைகள் பொதுவாய் உள்ளன. உதாரணமாக, கருவாய்த் தோன்றும் போது கர்ப்பகிரக வாசம் (முட்டைக்குள் அல்லது கருப்பையில்) பின் உயிரியாய் வெளித்தோற்றம். இவ்வமைப்பு நாம் கடலிலிருந்து தோற்றமுற்ற தன்மையைப் பிரதிபலிப்பதாய் அறிவியல் சொல்கிறது. அமீபாக்கள் முட்டையிடுவதில்லை. ஆனால், மிக அடிமட்டத்தில் வாழும் உயிரிகள் கூட சில நேரங்களில் ஸ்போர் எனும் முட்டைக்குள் அடைந்துவிடுகின்றன. ஓரிடம் விட்டு, ஓரிடம் பயணப்படும் போது எப்படி பெட்டி என்பது பாதுகாப்பாக நம் உடமைகளைக் காக்கிறதோ அது போல் உயிர்கள் பயணப்படும் காலங்களில் இந்த ஸ்போர் எனும் கூடு பயன்படுகிறது. அண்டத்தில் தோன்றிய உயிர் இப்படிப் பூமியில் ஸ்போர் வடிவில் விழுந்து உயிர்த்தோற்றமுற்று இருக்கலாம் என்பதொரு வாதம். ஏனெனில் மிக அடிநிலை உயிரியே மிகவும் complex ஆக இருக்கிறது (எளிமையிலிருந்து சிக்கலான அமைப்பை நோக்கிய பயணம் வாழ்வு எனக் கொண்டால்).

பாலூட்டிகள் என்று வரும் போது பட்டாம்பூச்சி போன்ற வடிவமைக்கப்பட்ட படிநிலைகள் தெரிவதில்லை. குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. முதுமை அடைகிறது. பின் மடிகிறது. இதுதான் தெரிகிறது. பார்த்துக் கொண்டே இருக்கும் போது வளர்ச்சி கண்ணுக்குப் புலப்படுவதில்லை. குழந்தை பிறந்து 'அப்பா' எனக் கூப்பிடும் போது தந்தை ஆகிவிட்டோம் என உணர்கிறோம். பின் நாம் பெற்ற குழந்தை கல்யாணமாகி குழந்தை பெற்று அக்குழந்தை நம்மை 'தாத்தா' எனும் போது முதுமையுற்றோம் என உணர்கிறோம். ஆனால், மனது எப்போதும் இளமையாகவே இருக்கிறது. உலகு நம்மை அங்கிள், 'ஏய் கிழடு' எனக் கூவும் போது, அதுவும் பொதுவிடங்களில்! நம் ஈகோ படாதபாடு படுகிறது. அது நாம் கிழடு அல்ல, வாலிபன் என்று பறைசாற்றுகிறது. ஆனால் உடல் ஒத்துழைப்பதில்லை. அதுபாட்டுக்கு வயதாகிவிடுகிறது. தசாவதராம் கமல் போல்:-) அவர் 'ஹீரோ' என்றுதான் சொல்லிக்கொள்கிறார். உடல் காட்டிக் கொடுத்துவிடுகிறது. நேற்று Indiana Jones and the Kingdom of the crystal skull படம் பார்த்தேன். ஸ்டார்வார்ஸ் படத்தில் பார்த்த ஹேரிசன் போர்டு இல்லை இவர். அதே ஆள்தான். ஹீரோ என்றுதான் இயக்குநர் சொல்கிறார். அந்தக் கிழடைப் பார்க்கும் போது "யாக்கையின்" நிலையாமை புரிகிறது. இளமை நிலைத்து நிற்பதில்லை.

குட்டியாக இருக்கும் போது வயசு என்ன என்று கேட்டால் இரண்டு வயதைக் கூட்டியே சொல்லுவோம். முன்பெல்லாம் பள்ளியில் வயதைக் கூட்டிச் சொல்லி சேர்த்துவிடுவது வழக்கம்! பதின்ம வயது வந்தவுடன் 16 வயதிலேயே நிற்பதாக உள்ளம் சொல்லும். 20-25 என்றாலும் வயது 18தான் என்று சொல்வதுண்டு! ஆண்களுக்கு வயது 40க்கு மேல் ஏறுவதில்லை என்று சொல்லும் பழக்கமொன்றுண்டு! ஜெர்மன் மொழியில் இளமையான யுவதிகளை Fraulein என்று சொல்லும் வழக்கமிருந்தது. இப்போது வெறும் 'பெண்' (Frau) என்று சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது. ஆனால் இப்படிச் சொன்னால் அவள் 20 ஆக இருக்கலாம் அல்லது 80ஆகக் கூட இருக்கலாம். எனவே மொட்டையாக Frau. XX என்று சொல்வதை யாரும் விரும்புவதில்லை, அதுவும் பதின்ம வயதைக் கடக்கும் பருவத்தினர். எனவே புதிதாக 'Junge Frau' என்றொரு பதத்தைப் போடுகின்றனர். அதாவது இளம்பெண் என்று பொருள். எனவே இளமையத் தக்கவைக்க எத்தனையோ முயற்சிகள். சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் 80 வயதானத் தலைவர்கூட (பாதிக்கு மேல் 60 தாண்டியவர்கள்தான் ஆளுகின்றனர்) ஒரு முடி கூட நரைக்காத தலையுடன், 'கரு, கரு' என்று அடர்த்தியான முடியுடன் இருப்பது அதிசயமாக இருக்கும். (உம்.ஒலிம்பிக் தொடக்கவிழா பாருங்கள்!).

என்னதான் செய்தாலும் உடல் வயதுருவதைத் தடுக்கமுடியாமல் இருக்கிறோம். அறிவியலும் கோடான கோடி ரூபாய் முடக்கி ஆராய்ந்து வருகிறது - மனித முதுமை குறித்து.

இது ஒருபுறம் இருக்க இந்த மாற்றங்களைக் கவிஞன் காண்கிறான். அதைப் பட்டாம்பூச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். புழு செத்து கூட்டுப்புழுவாகிறது. கூட்டுப்புழு செத்து பட்டாம்பூச்சியாகிறது என்று படுகிறது அவனுக்கு. இதே அலகை மனிதனுக்குப் போட்டுப் பார்க்கிறான். "பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் ஏற்படுகிறது. காளைப் பருவம் செத்து, காதலுக்குரிய இளமைப் பருவம் பிறக்கிறது. அதுவும் மாறி முதுமை உண்டாகிறது." என்று சொல்லக்கூடாதா? சொல்லலாம். இப்படிச் சொல்வதில் பல அர்த்தங்கள் உள்ளே புகுந்துவிடுகின்றன.

மறுபிறவி என்று தனியான ஒன்றில்லை, அது காணக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளது என்பது. ஜே.கிருஷ்ணமூர்த்தி என்ற ஞானியைக் காண புப்புல் ஜெயகர் எனும் மாது போகிறாள். அப்போதுதான், தனது கணவரை அவள் இழந்து இருக்கிறாள். ஆறுதல் தேடி அவரிடம் போகிறாள். ஜேகே கேட்கிறார் "எந்தக் கணவன் இறந்துவிட்டான் என்று இப்படி ஒப்பாரி வைக்கிறாய்?" என்று. தூக்கிவாரிப்போடுகிறது இவளுக்கு. "எனக்கு ஒரே கணவன் தானுண்டு" என்கிறாள். "அப்படியா! அப்படியாகின் கல்யாணமான புதிதில் இளமைத் துடிப்புடன் குறும்புகள் செய்து துள்ளி விளையாடிய கணவனைப் பற்றி பேசுகிறாயா? இல்லை, உனக்கு ஒரு குழந்தை தந்து தந்தையென்று பொறுப்புடன் நடந்து கொண்ட அன்பான தந்தையான ஒரு கணவனைப் பற்றிப் பேசுகிறாயா? இல்லை முதுமையுற்று பிள்ளை குட்டிகள் தனிக்குடித்தனம் போனபின் 'ஒருவருக்கொருவர் ஊன்று கோல் போல்' துணையிருக்கும் கணவனைப் பற்றிப் பேசுகிறாயா?" எந்தக் கணவனைப் பற்றிப் பேசுகிறாய்? என்றாராம்.

ஒரே வாழ்வில் எத்தனையோ பிறவிகள். அவதாரங்கள். வீட்டில் கணவன். அலுவலகத்தில் மேனேஜர். ஊரில் நண்பன். பிள்ளைக்குத் தந்தை. பேத்திக்குத் தாத்தா. பிடிக்காதோருக்கு 'கிழப்பிசாசு' இப்படிப் பல அவதாரங்கள்!!

ஒன்றில் செத்து, வேறொன்றாக புத்துயிர் ஆக்கம் நடைபெறுகிறது என்று கவிஞன் சொல்கிறான் என்றால், 'ஆன்மா என்பது என்றுமே சாகாமல் உள்ளே இருக்கிறது' என்பதைச் சுட்டுவது போலவும் படுகிறது. அதுதான் இப்படிச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது என்றாகிறது!

ஆன்மீகம் தலைப்பட ஆரம்பிக்கிறது! உயிர்ச்சுழற்சி பற்றிய ஞானம் பிறக்கிறது. நிலையற்ற வாழ்விலும் நிலையானதொன்று உண்டோ? என்ற கேள்வி எழ ஆரம்பிக்கிறது. புத்தாக்கம் பெரும் உயிருக்கு அடிப்படையான நிலைக்கலன் எது? என்ற கேள்வி வருகிறது. இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கும் கவிஞன் யார்? அவன் எக்காலத்தவன்? முதலில் கவிதையைப் பாருங்கள். அதன் எளிய நடையைப் பாருங்கள்.

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் வியல்பும் இன்னே
மேல்வரும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின் றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ?"

சித்தர் பாடலோ? கடைசி வரி அப்படி இருக்கிறதே! தினம் செத்து, செத்து பிழைக்கும் நாம் ஏன் நமக்காக அழுவதில்லை? பட்டிணத்தார் செத்த வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதாராம். ஒருவர் "என்னப்பா! செத்தவன் உனக்கு உறவா? இப்படி அழுகிறாயே?" என்றாராம். அதற்கு பட்டிணத்தார் "செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும் இத்தனை சனமும் ஒருநாள் இப்படித்தானே செத்துப் போகும் என்பதையறிந்து அழுகிறேன்" என்றாராம். இக்கருத்திற்கு விதை இக்கவிதையோ?


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம் திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்


கருப்பையை 'பெரும் துயருடும் பை' என்று சொல்கிறாரே திருமங்கை ஆழ்வார். இவர்கள் பேசும் யாக்கை நிலையாமைக்கும் இக்கவிதை ஒரு முன்னோடியாக இருக்குமோ?

அப்படித்தான் தோன்றுகிறது. இக்கவிதையை இயற்றிவர் பெயர் தொடித்தலை விழுத்தண்டினார். இப்பாடல் புறநானூறு தொகையில் "கையறுநிலைத் துறையில்" வருகிறது! சங்கப்பாடல்களை ஊன்றிக் கவனித்தால் தமிழின் பக்தி இலக்கியத்தின் தோற்றுவாய் புலப்படுகிறது. சித்தர் இயக்கத்தின் தோற்றுவாய் புலப்படுகிறது!

தமிழ் மரபு அறக்கட்டளையின் "என்ன சேதி?" எனும் வலைப்பதிவில் மேலும் காட்சிகள் காணக்கிடைக்கின்றன!

4 பின்னூட்டங்கள்:

ஜீவா (Jeeva Venkataraman) 8/10/2008 09:39:00 PM

அருமை, இன்புறத் துய்த்தேன் தங்கள் எழுத்தை!

நா.கண்ணன் 8/10/2008 10:07:00 PM

மிக்க நன்றி, ஜீவா!

ஏ.சுகுமாரன் 10/11/2008 12:35:00 AM

உண்மையை சொன்னால் மிக உணர்வு
பூர்வமாக எழுதி இருகிறீர்கள் .
மிக அற்புதம் !

//நம்ம சித்த மருத்துவம் இதற்கு உதவினால் இந்தியா 10 வருடங்களில் முதல் உலக
நாடாகிவிடும். வருமானமுள்ள ஆய்வு //

கொட்டி கிடக்கு பறிக்க ஆளில்லாமல்
நமது முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற
அபூர்வ அறிவை நாம் பயன் படுத்த
தொடங்கினால் நாம் தான்
உலகின் வளமான நாடு .
ஆனால் கொரியாவின் ஜிங் ஜென் க்கு இருக்கும்
மதிப்பு நம் நாட்டிலேயே
நமது அமுக்குரா வுக்கு இல்லையே .

அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

நா.கண்ணன் 10/11/2008 08:21:00 AM

சுகுமாரன்! நன்றி. வாய்மொழிச் செய்தியாகவே உள்ள நம் சித்த மருத்துவச் சிறப்பு பொலிவுற்றால் உலகம் உய்யும்.