வெள்ளித்திரை!

வெள்ளித்திரை! "மொழி"க்குப் பிறகு பிரகாஷ்ராஜ், பிரிதிவிராஜ் கூட்டமைப்பில் இன்னொரு வெற்றிப்படம். பெயர் சொல்லும் படம். திரையுலகின் வாழ்வு பற்றிப் பேசும் கதை. மனித வாழ்வு பற்றிப் பேசுவது இலக்கியம் என்றால் சினிமா பற்றிப் பேசுவதும் சினிமாதான்! எல்லோருமே அளவான நடிப்பு. வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கூட தேவையான அளவு வில்லத்தனம்தான் காட்டுகிறார். நிச்சயம் இயக்குநர் 'விஜி' க்கு இதுவொரு வெற்றிப்படம். துணை நடிகர்கள் கதைக்கு இவ்வளவு பாந்தமாக அமைவது வெகு சில படங்களில்தான். ஹீரோத்தனத்தை கேலி செய்யும் தைர்யமும், அதே சமயத்தில் அது தொழில் அதன் நுணுக்கமறிந்தவன் வாணிப நோக்கில் கூட 'சினிமா' என்று பெயர்சொல்லும் படங்களைத் தாயாரிக்க முடியும் என்று சொல்லும் கதை. பிரகாஷ்ராஜ் கடைசிக்காட்சியில் வெளுத்து வாங்குகிறார். அவருக்கு இம்மாதிரி ரோல்தான் நன்றாகப் பொருந்துகிறது. ஏதோ அவருக்குள்ளும் இருக்கும் ஹீரோ கனவை கொஞ்சம் சொந்தக்காசுச் செலவில் சொறிந்து கொள்கிறார். சகித்துக் கொள்ளுகின்ற அளவிலேயே நிறுத்தி இருப்பது அழகு!

விஜிக்கு இயக்குநர் திலகம் பாலச்சந்தர் போல் பேர் எடுக்க வேண்டுமென்ற கனவை டைட்டில் உருளலிலேயே காட்டிவிடுகிறார். "ததாஸ்து" (அப்படியே ஆகுக! அதற்கான திறமை இருக்கிறது!!)

பிரகாஷ்ராஜ் இப்படியொரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

தமிழ் சினிமாதான் எவ்வளவு முன்னேறிவிட்டது!

பேசாப்படம். பின் பேசும் படம். 30 பாடல்கள் என பாட்டிற்காக சினிமா எடுத்த காலம். பின் ஹீரோ நல்லவன் (தர்மம் தலை காக்கும்), வில்லவன் கெட்டவன் என்ற கருப்பு-வெளுப்பு பார்முலா படங்கள். பின் நல்லவனே வாழ்வில் வில்லனாகிவிடுவது போன்ற ஹீரோக்கதைகள். பின் வில்லனே ஹீரோ போல பார்க்கபட்ட படங்கள் (சத்யராஜ், ரஜனி). வில்லன் ஹீரோவாக மாறிய காலங்கள். இதிலும் வில்லன் எனும் இமேஜ் கெட்டுவிடாமல் அவனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள வைக்கும் சாதுர்யம்! அடேங்கப்பா! சொல்பவர் சொன்னால் சொரைக்காய்க்கு கொம்பு உண்டுதான்!! அதுதான் சினிமா! அதுதான் அக்கலையின் சாமர்த்தியம்.சபாஷ்! பிரகாஷ். நீங்களே சொல்லிக்கொள்வது போல் நீங்கள் "மக்கள் செல்லம்"தான். அது எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ (கொஞ்சம் தொந்தியைக் குறைக்கலாம்!)

துணை நடிகர்கள் எல்லோருமே சூப்பர். அவர்கள்தான் இப்படத்தின் ஹீரோக்கள்! நடிகைகள் அளவான, அழகான நடிப்பு.

இசை ஆகா! ஓகோ! இல்லையெனினும் கேட்கக்கூடியதாய் இருக்கிறது. இந்தோனிஷியா கொள்ளை அழகு!

எல்லா பார்முலாவையும் கலக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. வெள்ளித்திரை. இதுவொரு மலையாளம் ரீமேக் (உதயானானு தாரம்) என்றவுடன் மேலே சொன்ன எல்லாம் கொஞ்சம் சுரத்து குறைந்து விடுகிறது! "அகா! என்றெழுந்தது பார்! ஓர் தமிழ் வெள்ளித்திரை" என்று கூவத்தொடங்கும் போது இன்னும் நல்ல படங்கள் மலையாளத்திலும், வங்காளத்திலும்தான் எடுக்கப்படுகின்றன என்ற உண்மையை இந்தியர்கள் மறந்துவிடக்கூடாது என்று ஞாபகப்படுத்தும் படம்.

எப்படியானால் என்ன? இதுவொரு வெற்றிப்படம், இந்திய சினிமாவிற்கு!!

5 பின்னூட்டங்கள்:

cable sankar 8/12/2008 10:44:00 AM

நீங்கள் சொன்ன "வெள்ளிதிரை'திரைப்படம் ஓரு தோல்வி படம்.நீங்கள் அந்த படத்தின் ஓரிஜினலான உதயமானு தாரம் படத்தை பார்த்திருந்தால் இந்த படத்தை இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் எவ்வளவு கெடுத்திருக்கிறார் என்று தெரியும்.

தமிழ் சினிமாவை அவ்வளவுசாடும் இயக்குனர் விஜியும், பிரகாஷ்ராஜும், ஏன் சொந்தமாய் யோசிக்காமல் ஓரு ரீமேக் படத்தை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் டிவிடி பார்த்து படம் எடுப்பதை பற்றி கிண்டல் வேறு. அதற்கு இவர்களுக்கு அருகதை இல்லை. ஏனென்றால் வெள்ளிதிரை படத்தின் க்ளைமாக்ஸான நடிகரின் ஓத்துழைப்பு இல்லாமலே திரைப்படத்தை முடிக்கும் உத்தி, காட்சிக்கு, காட்சி "Bowfinger" என்ற ஆங்கில படத்தின் அப்படமான காட்சி. ஓரிஜினல் மலையாள படத்திலும் அதே தான். இப்படி டிவிடி பார்த்து காப்பியடிப்பதை கிண்டல் செய்பவர்கள் ஏன் புதிதாக் யோசிக்ககூடாது. சும்மா ஊருக்குத்தான் உபதேசம். இந்த படத்தின் மூலம் இயக்குனர் விஜி மீண்டும் ஓரு முறை ஓரு நல்ல வசனகர்தா என்று நிருபித்திருக்கிறார்

நா.கண்ணன் 8/12/2008 10:49:00 AM

மிக்க நன்றி சங்கர். இவ்வளவு உள்விவரம் எனக்குத்தெரியாது. சமீபத்தில் பார்த்த படங்களில் நன்றாக இருந்தது. இனி மூலப்படங்களைத் தேடிப்பார்க்கிறேன்.

லக்கிலுக் 8/13/2008 05:24:00 PM

மூச்சுக்கு முன்னூறு முறை வெற்றிப்படம் என்கிறீர்கள். ஆனால் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் காற்று தான் வாங்கியது. படம் எனக்கு பிடித்திருந்தது என்பது வேறு விஷயம்.

நா.கண்ணன் 8/13/2008 05:28:00 PM

இது கமெர்சியலா வெற்றி பெறும் என்று அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதை முதல் பிரேமிலேயே சொல்லுகிறார்கள். எனவே மத்திய சினிமா (முழுக்கலைப்படம் என்றில்லாமல்) என்றளவில் இது வெற்றிப்படமே (எனது ரேங்கிங்க்)

Anonymous 9/17/2008 10:45:00 PM

evvalavu appattamaana uNmai kamalam