ஓடி விளையாடி ஒலிம்பிக் பார் பாப்பா!

இந்தியா கொஞ்சம் மண்டை காய்ந்த நாடு. எதற்கெடுத்தாலும் குற்றம் பார்த்து, கொணஷ்டை சொல்லும் நாடு. மூளையை அது வீணாக செலவழிக்கிறது! தத்துவம் தத்துவமென்று மண்டை காய்ந்து போனதால்தான் "பக்தி" இயக்கமே அங்கு தோன்றியிருக்குமோ? என்று யோசிக்க வைக்கிறது! இதனால்தான் ஆன்மீக உலகில் புரட்சி வீரராக வந்த சுவாமி விவேகாநந்தர் ஒவ்வொரு இந்தியனும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றார். ஆன்மீகம் கோயிலுக்குப் போவதில் மட்டுமில்லை. "ஊனுடம்பு ஆலயம்" எனும் திருமூலர் சொல்லுக்கிணங்க ஊனுடம்பைப் பேண வேண்டிய கடமை இருக்கிறது. ஓடி விளையாடி போல் வால்ட் தாவவில்லையெனினும் கொஞ்சம் யோகாவாவது செய்யலாம். இந்தியாவை ஏழை நாடு என்பதெல்லாம் பொய். இந்திய மனிதர்களின் ஊளச்சதையின் கொழுப்பை மட்டும் எடுத்தால் உலகத்திற்கு 10 ஆண்டுகள் உணவு தயாரிக்கலாம் ;-)ஓடி விளையாடு பாப்பா! என்றான் பாரதி. குழந்தைகளுக்கு ஓடி விளையாடக்கூட இடமில்லாத அபார்ட்மெண்டில் வாழ்கிறோம் பாதிப்பேர். சாப்பிட்ட பின் 100 அடியாவது நடக்க வேண்டும் என்கிறது தொல்காப்பியம் (இதெல்லாம் கூட அதிலே இருக்கா? என்று கேட்பவர்கள் நச்சினார்க்கினியார் உரை வாசிக்க வேண்டும்). காலற நடக்க சென்னையில் கடற்கரையை விட்டா வேறு இடமில்லை. வெளிநாடுகளின் நகர அமைப்பில் நடை பழகும் விதம் பூங்காக்ககளை நகர மத்தியில் அமைப்பது வழக்கம்.
சரி, ஓடித்தான் விளையாடவில்லை. மற்றவர்கள் செய்யும் விளையாட்டையாவது காணலாமே? அதுவுமில்லை. இந்த அறிவுகெட்ட டிவி சீரியல்களைப் பார்த்துக்கொண்டு ஒரு இளைஞர் சமுதாயமே பாழாய் போவதை நினைத்தால் வயிறு எரிகிறது.

ஏன் உடனே நாம் ஒலிம்பிக் காட்சிகளைக் காண வேண்டும்?

1. ஒலிம்பிக் என்பது சிறந்ததில் சிறந்ததான விளையாட்டுக்களை வைத்து சிறந்ததில் சிறந்ததான விளையாட்டு வீரர்களைத் தருவிக்கும் நிகழ்ச்சி. எனவே உலகத்திறம் என்னவென்று அறிந்து கொள்ள ஒலிம்பிக் பார்க்க வேண்டும்!2. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அனைத்துமே மனிதனை தேவனாக்கும் முயற்சி. ஆச்சர்யப்படாதீர்கள். மனிதச் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது, பஞ்ச பூதச்செயல்களே. ஒலிம்பிக் என்பது இந்த பஞ்சபூதச்செயற்பாடுகளுக்கு சவால் விடும் நிகழ்வு. நீரில் இவ்வளவு வேகமாக நீந்த முடியுமா? தூரத்தே இருக்கும் கருப்புப்புள்ளியைப் பார்த்து அம்பு ஏவ முடியுமா? யானை தூக்க வேண்டிய சுமையை மனித உடம்பால் தூக்க முடியுமா? உடம்பை ரப்பர் போல் வளைத்து விண்ணில் பறக்க முடியுமா? (சில நொடிகளேனும்!). இப்படி எந்த விளையாட்டை எடுத்தாலும் அது ஐம்பூதங்களுக்குச் சவாலாக அமைகிறது.

நமது சமயங்கள் என்ன சொல்லுகின்றன தேவர்களுக்கு இந்த ஐம்பூதக்கட்டுப்பாடு இல்லை என! வைகுந்தத்தில் எல்லாமே அப்பிராகிருத திவ்ய மங்கள விக்ரகமாக இருக்குமாம். ஆக, அங்கு ஐம்பூதங்களின் வேலை நடக்காது என்று தெரிகிறது. இப்புவியில் ஓர் சொர்க்கத்தை உருவாக்கும் முயற்சியே ஒலிம்பிக். எனவே இந்த அதிசயத்தைக் கண்ணாறக் காண வேண்டாமா?

3. மனிதன் முன்னேறக் கனவு வேண்டும். இவ்வருட ஒலிம்பிக் தீம் "ஓருலகு ஓர் கனவு" என்பது. குழந்தைகளுக்கு கனவை வளர்க்க ஒலிம்பிக் காட்டுங்கள்.

4. ஒலிம்பிக் பணிவைக் கற்றுத்தருகிறது. நாம்தான் சிறந்த வீரன் என்று அங்கு போனால் நமக்கும் மிஞ்சும் ஒருவன் இருப்பான். அது பணிவைச் சொல்லித்தருகிறது.

5. உலகம் பல்வேறு மனித இனங்களைக் கொண்டது. ஒவ்வொரு இனத்திற்கும் சில சாமர்த்தியங்களுண்டு. அதையறிய ஒலிம்பிக் உதவுகிறது.

6. சித்தி போன்ற வெட்டி சீரியல்களைப் பார்ப்பதற்குப் பதில் ஒலிம்பிக் பார்ப்பது ஆயிரம் மடங்கு மேல்!

பார்க்க..பார்க்க..ஒலிம்பிக் பார்க்க.

5 பின்னூட்டங்கள்:

Karthigesu 8/13/2008 06:17:00 PM

//இந்தியாவை ஏழை நாடு என்பதெல்லாம் பொய். இந்திய மனிதர்களின் ஊளச்சதையின் கொழுப்பை மட்டும் எடுத்தால் உலகத்திற்கு 10 ஆண்டுகள் உணவு தயாரிக்கலாம் ;-)//

வறுமை மிகுந்த ஆப்பிரிக்காவில் கூட தலைவர்களைப் பார்த்தால் தடிதடியாகத்தான் இருக்கிறார்கள். இது நாட்டுப் பிரச்சினையல்ல. வர்க்கப் பிரச்சினை.

//காலற நடக்க சென்னையில் கடற்கரையை விட்டா வேறு இடமில்லை. வெளிநாடுகளின் நகர அமைப்பில் நடை பழகும் விதம் பூங்காக்ககளை நகர மத்தியில் அமைப்பது வழக்கம்.//

சென்னையில் திநகரில் இரண்டு அழகிய பூங்காக்கள் இருக்கின்றன. அதில் ஏராளமான பேர் காலையில் நடக்கிறார்கள். சில கல்லூரி வளாகங்களும் நடப்பதற்கு மட்டும் காலை வேளைகளில் திறந்து விடப்படுவது போல்தான் இருக்கிறது. இந்தியர்களுக்கு - குறிப்பாக நடுத்தர/மேல்நடுத்தர வர்க்கத்தினருக்கு உடற்பயிற்சி பற்றிய அறிவு மேம்படத் தொடங்கியிருக்கிறது.

இந்தியா விளையாட்டுக்களில் பின் தங்கி இருப்பதற்கு நீங்கள் சொல்லும் காரணங்கள் இருந்தாலும் அரசாங்க அக்கறை அப்பக்கத்தில் முழுமையாகத் திரும்பாததே முக்கிய காரணம் என நினைக்கிறேன். அமெரிக்காவில் இந்த முயற்சி தனியாரில் தொடங்கி அரசாங்கத்தில் முடிகிறது (boottom up). சீனாவில் இம்முயற்சி அரசாங்கத்தில் தொடங்கி தனியாரில் முடிகிறது (top down). சீனாவின் மாதிரியே இந்தியாவிற்கு ஏற்றது.

இந்தியாவின் இந்த முதல் தங்கப் பதக்கம் அரசாங்கத்தாரின் விழிகளைத் திறந்து விடும் என எதிர்பார்ப்போம்.

ரெ.கா.

நா.கண்ணன் 8/13/2008 07:22:00 PM

உடல்வாகு என்பதை ஒத்துக் கொண்டாலும், இந்தியாவில் பெரும்பாலான மத்திம குடும்பங்களில் உடற்பயிற்சி என்பதே கிடையாது. யோகாசனம் என்பது இந்தியக்கலைதானே? அது ஏன் இந்தியாவை விட ஜெர்மனியில் பிரபலமாக இருக்கிறது?

எங்கேயோ கோளாறு!

Vetrimagal 8/14/2008 01:15:00 AM

For an indoor soceity like ours "ஓடி விளையாடு ' only in closed doors ( for girls). We cant even walk freely on the roads, where to run in front of all men guys and tramps? " be careful, don't run on the roads, look down etc etc was the mantra for yesteryear moms. How will they train their children in physical excercise?

Yoga.. mm.. only dance music .. for girls who can afford it. otherwise hosue work and filling up water/washing clothes.

so where is the excersice or physical fitness?

Hope thing will change soon for this generation . And then by 2050 we will have some medals.

:-)

நா.கண்ணன் 8/14/2008 10:16:00 AM

வெற்றிமகள் சுட்டும் சிந்தனைகள் இன்னும் நாம் கடக்கவேண்டிய தூரத்தைக் காட்டுவனவாக அமைகின்றன. பெண் விடுதலை என்பது இன்னும் நடைமுறைக்கு வாராத ஒன்றாக இந்தியாவில் உள்ளது. இது ஆண்களிடமிருந்து பெறும் விடுதலை மட்டுமன்று, பெண் தானாகப் போட்டுக்கொண்டிருக்கும் தளைகளிலிருந்தும் விடுதலை பெறவேண்டும். ஒலிம்பிக் வெற்றி நாடுகள் அனைத்திலும் பெண்கள் முதலில் தங்களது உடல் சார்ந்த தளைகளிலிருந்து விடுபட்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

என்று ஒரு பெண் இந்தியாவில் தைர்யமாக இரவில் நடமாடமுடிகிறதோ அன்றே இந்தியா முன்னேறிய நாடு என அறிய வேண்டும். இடைப்பட்ட பொழுதில் பெண்கள் தற்காப்புப் பயிற்சிகளில் திறமை பெற்று நடமாட ஆரம்பிக்க வேண்டும்.

Anonymous 8/14/2008 10:23:00 AM

இது குறித்த பல சுவாரசியமான சிந்தனைகள் மின்தமிழ் மடலாடற்குழுமத்தில் இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் எனும் தலைப்பில் உள்ளன.