ஒலிம்பிக்கின் பெண்ணிய வெற்றி

ஒலிம்பிக்கின் பெண் விடுதலை

ஒலிம்பிக் காட்சிகளை நம் தமிழ்ப் பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். அது பெண் விடுதலைக்கான உந்துதலாக அமையும். பெண்ணால் சாதிக்க முடியாததுதான் என்ன? ஒலிம்பிக்தான் அத்தாட்சி!பளு தூக்குவதில் ஆரம்பித்து, தடையோட்டம், மாரதான், சைக்கிள், படகு, ஜூடோ, பாட்மிண்டன், வாலிபால், கால்பந்து...பட்டியல் நீண்டு கொண்டே போகும்! மிக நளின விளையாட்டுக்களிலிருந்து மிகவும் ஆண்மைத்தனமான முரட்டு விளையாட்டுவரை எல்லாவற்றிலும் இன்று பெண்கள், ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்று நிரூபித்து வருகிறார்கள். இதைப்பார்த்த பிறகாவது நம் இலக்கியவாதிகள் பேசும் பெண் விடுதலை இன்னும் கிண்டர்கார்டன் அளவிலேயே நிற்கிறது என்பதை உணர்ந்து கட்டற்ற முழு விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் தயாராக வேண்டும் (அதாவது விடுதலை வேண்டும் என்போர்!)அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பால் வேறுபாடு என்பது உயிரியப்பரிமாணத்தில் பின்னால் தோன்றியது. பால் வேறுபாடு இல்லாத உயிரினங்கள்தான் உலகில் அதிகம். மீன் போன்ற உயிரிகளில் தேவைக்கேற்றவாறு பால் மாறுபாட்டைக் கொண்டுவரமுடியும். மனித இனத்தில் கூட ஆண் என்பவன் பாதிப்பெண்ணே! (XY chromosomes).தமிழ்ப் பெண்கள் தங்களை "பெண் உடல்" என்று நம்பி, அடையாளப்படுத்திவருகிறார்கள். இது மாற வேண்டும். பெண் "உடல்" என்று கொண்டாலும், உடற்கூறுகள் மனத்தளவில் தோற்றுவிக்கும் கற்பிதங்களைக் களைய முன்வரவேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் தங்கங்களை அள்ளிக் குவிக்கும் சீன, வெள்ளைய, கருப்பின மக்கள் தங்கள் உடல் சார்ந்த விழுமியங்களை மாற்றிக் கொண்ட பின்பே ஒலிம்பிக்கில் வெற்றிப் பெற முடிகிறது. நமக்கு ஒன்பது முழம் சேலை கொண்டு முற்றும், முழுவதுமாக மூடியபின்தான் வெளியே நடமாடவே முடிகிறது இதற்குக் காரணம் ஆண்களின் காமப்பார்வை என்று சொல்லிவிடலாம். உண்மைதான். ஆணும் பெண் என்பது வெறும் "உடல் அல்ல" என்பதை அறியவேண்டும்! வாழ்வில் எத்தனையோ தடைகளைத் தாண்டும் பெண்ணால் 'உடல்' எனும் தடையைத் தாண்டமுடியாதா? என்ன?நமது ஆன்மீகம் இதற்குத் துணை வருகிறது. இந்து மதம் என்றும் மனிதனை வெறும் உடல் என்று கண்டதில்லை. அவனை 'ஆத்மா' என்றே அடையாளம் காண்கிறது. சிவ-சக்தியை அர்த்தநாரியாகக் காட்டுவது, கோபி-கிருஷ்ணா (ராதே-கிருஷ்ணா) போன்றவை ஆணும், பெண்ணும் சமம் என்பதைக் காட்டுவதுடன், இரண்டும் சமமாகக் கலந்ததே மனித உயிர் என்றும் சொல்கிறது. வைணவம் ஒரு படி மேலே போய், ஜீவன்கள் அனைவரும் பெண்களே! என்று சொல்லிவிடுகிறது. எனவே, தமிழக ஆண்களும், பெண்களும் தங்களது 'சொரூப லட்சணமான ஆன்மா' என்பதைப் புரிந்து கொண்டு ஒலிம்பிக் விளையாட்டிற்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.சீனாவின் இன்றைய வெற்றி அந்த நாட்டை எங்கே நிறுத்தப் போகிறது! என்பதைக் கண்ட பிறகாவது நாம் விழித்துக் கொண்டால் நல்லது!

1 பின்னூட்டங்கள்:

Vinayak 8/24/2008 01:39:00 AM

அட பெண்களின் வெற்றியை கண்டறிய ஒலிம்பிக்குக்கு, சீனாவுக்கு ஏன் போகவேண்டும்...

நம்ம நாட்டு RAW ஸ்தாபனத்தின் கதியை பாத்தாலே தெரியாதா என்ன ?

மேல் விபரங்களுக்கு
http://batteredmale.blogspot.com/2008/08/blog-post_6091.html

அன்புடன்
விநாயக்