ஒலிம்பிக் நிறையுற்றது

கோகுலாஷ்டமியன்று ஒரு கொண்டாட்டம் நிறையுற்றது!

ஆகஸ்டு 8ம் தேதி 8 மணிக்கு ஆரம்பித்த பெய்ஜிங் ஒலிம்பிக் ஆகஸ்டு 24ம் தேதி 8 மணிக்கு முடியுற்றது (அஷ்டமி திதியன்று!)தினம், தினம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மகிழ்வான நிகழ்வு முடிவுற்றதே எனும் வருத்தம்தான். ஆயினும் ஒரு சீனப்பழமொழி சொல்வது இனிமையானவை கூட ஒரு பொழுதில் நிறைவுறத்தான் வேண்டும்!

மானுடத்தின் திறமைகளை இத்துணை நட்பான முறையில் வேறு எங்கு காணவியலும்? வெற்றியும் தோல்வியும், கண்ணீரும், கும்மாளமும் நிறைந்த நாட்கள். கண்ணீர் என்பது துக்கத்தின் அறிகுறி என்று மட்டும் சொல்லமுடியாதே! அதுவும் ஆசியர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் முதலில் வருவது கண்ணீர்தான். கொஞ்சம் வேடிக்கையாகக் கூட இருந்தது. ஜூடோவில் வென்ற கொரியன் தேம்பித் தேம்பி அழ, தோற்றுப்போன நெதர்லாந்துக்காரன் பதறிப்போய் அவனை அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்ல :-)

எந்தவொரு விக்னமும் இல்லாமல் ஒலிம்பிக் நிறைவேறியது. சீன அரசு தீர்மானித்தால் எதையும் சாதித்துக்காட்டமுடியும் என்பது புரிகிறது! ஆரம்பம் போலவே முடிவும் சீனப்பெருஞ்சுவர் போல் பிரம்மாண்டமாக அமைந்தது. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒன்று சேரும் ஒரு பெரும் பார்ட்டியாக முடிந்தது சிறப்பு. முதன் முறையாக ஒரு ஆசியநாடு அதிக தங்கப்பதக்கங்கள் பெற்று உலகை ஆச்சர்யப்பட வைத்திருக்கும் நிகழ்வு. முதல் பத்தில் மேலும் இரண்டு ஆசிய நாடுகள் (கொரியா, ஜப்பான்) நிற்பது சிறப்பு.அடுத்த ஒலிம்பிக் லண்டனில். எப்போதுமே பிரச்சனையுள்ள இடம் லண்டன். நல்லபடியாக அடுத்த ஒலிம்பிக் நடக்க வேண்டுமே என்று இப்போதே கையைப் பிசைய ஆரம்பித்தாகிவிட்டது!

இந்த நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்பதை பெரும் அறைகூவலுடன் சொல்லும் நிகழ்வு பெய்ஜிங் ஒலிம்பிக். வாழ்க சீனா! வாழ்க ஆசியா!

0 பின்னூட்டங்கள்: