வைஷ்ணவ ஜனதோ!

பல்லவி

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

சரணங்கள்

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை
இந்தி மூலம்: நரசிம்ம மேத்தா

6 பின்னூட்டங்கள்:

dondu(#11168674346665545885) 9/12/2008 11:17:00 AM

இந்த வைஷ்ணவ ஜனதோ பாட்டின் பொருளை கல்கி அவர்கள் தனது தியாகபூமி நாவலில் அருமையாக எழுதியுள்ளார். அத்துடன் நாவலும் நிறைவு பெறுகிறது. அது இதோ:

"அன்று சாவடிக் குப்பம் ஒரே குதூகலமாயிருந்தது. "சாஸ்திரி ஐயாவும் சாருவும் திரும்பி வந்துட்டாங்க" என்னும் செய்தி சாவடிக் குப்பத்து ஜனங்களுக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது. அன்றைய தினமே பஜனை ஆரம்பித்துவிட வேண்டுமென்று நல்லான் வற்புறுத்தினான். சாயங்காலம் பஜனை ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் ஜனங்கள் ஏராளமாக வந்து கூடிவிட்டார்கள். குப்பத்து ஜனங்கள் மாத்திரமின்றி, வக்கீல் ஆபத்சகாயமய்யர், சாருவின் பழைய வாத்தியாரம்மா முதலியோரும் வந்திருந்தார்கள். கூட்டம் அதிகமாயிருந்தபடியால், குப்பத்துத் தெருவில் திறந்த வெளியிலேயே பஜனை நடத்த வேண்டியதாயிற்று.

ஆனால், அன்று பஜனையில் சம்பு சாஸ்திரியினால் பாடவே முடியவில்லை. உணர்ச்சி மிகுதியால் அவருக்குத் தொண்டை அடிக்கடி அடைத்துக் கொண்டது. மற்றவர்கள்தான் பாடினார்கள். காந்தி மகானுக்குப் பிரியமான கீதம் என்று பிரசித்தமான "வைஷ்ணவ ஜனதோ" என்ற பாட்டைச் சம்பு சாஸ்திரி பஜனையில் அடிக்கடி பாடுவதுண்டு. அதை மற்றவர்களுக்கும் கற்பித்திருந்தார். அந்தக் கீதம் இன்று பஜனையில் பாடப்பட்டபோது, சாஸ்திரி மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

"எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்."

"எவன் உலகில் பிறந்தோர் அனைவரையும் வணங்குவானோ, யாரையும் நிந்தனை செய்ய மாட்டானோ, மனோ வாக்குக் காயங்களைப் பரிசுத்தமாக வைத்துக் கொண்டிருப்பானோ, அப்படிப்பட்டவனுடைய தாயே தன்யை யாவள்."

"எவன் (விரோதியையும் நண்பனையும்) சமதிருஷ்டியுடன் நோக்குவானோ, எவன் பரஸ்திரீயைத் தன் தாயாகக் கருதுவானோ, எவன் தன் நாவால் ஒரு போதும் பொய் பேச மாட்டானோ, எவன் பிறருடைய பொருளைக் கையால் தொடவும் மாட்டானோ, அவனே வைஷ்ணவன்."

"எவனை மோகமோ மாயையோ அண்டாதோ, எவனுடைய மனத்தில் திட வைராக்கியம் குடிகொண்டிருக்குமோ, எவன் ஸ்ரீராம நாமத்தைக் கேட்டதுமே அதில் ஆழ்ந்து மெய் மறந்து விடுவானோ, அவனுடைய சரீரம் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் இருப்பிடமாகும்."

"எவன் லோபமும் கபடமும் இல்லாதவனோ, எவன் காமத்தையும் குரோதத்தையும் விட்டொழித்தவனோ, அப்படிப்பட்ட உத்தமனைத் தரிசிப்பவனது எழுபத்தொரு தலைமுறையும் கரையேறிவிடும்."

இந்த கீதத்தைக் கேட்டு வருகையில் சம்பு சாஸ்திரிக்கு இன்று அதனுடைய உண்மையான பொருளைத் தாம் உணர்வதாகத் தோன்றியது. 'ஆகா! இந்தப் பாட்டில் சொல்லியபடி உண்மை வைஷ்ணவனாக நாம் என்று ஆகப் போகிறோம்? இந்த ஜன்மத்தில் அத்தகைய பேற்றை நாம் அடைவோமா! அம்பிகே! தாயே! இந்தக் கீதத்தில் வர்ணித்திருக்கும் குணங்களில் நூறில் ஒரு பங்காவது எனக்கு அருளமாட்டாயா?' என்று தமது இருதய அந்தரங்கத்தில் பிரார்த்தனை செய்தார்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

நா.கண்ணன் 9/12/2008 11:22:00 AM

மிக்க நன்றி ராகவன்:

எனது ஆழ்வார்க்கடியான் வலைப்பதிவில் காலையில் தோன்றிய பூ இது. இசையும், பாடலும், காட்சிப்பதிவும் நெஞ்சை அள்ளின, அப்படியே நாமக்கல் கவிஞரின் பாடலும் சேர்ந்தது. இப்போது கல்கியின் வருணனை வேறு! அடடா! சம்பு சாஸ்திரிகள் எப்படி நம் மனோநிலையை அப்படியே வருணிக்கிறார்!

ஜீவா (Jeeva Venkataraman) 9/12/2008 11:34:00 AM

கவிஞரின் வரிகளும், கவின்மிகு காட்சியும், பாடல் கலைஞரின் ஆலாபனைகளும் இதம் அளித்தன.

நா.கண்ணன் 9/12/2008 11:52:00 AM

உண்மை ஜீவா.

காட்சி அமைப்பு கவிதையாக உள்ளது. பாடல் வரிகளுடன் அவைகளுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றாலும் ;-) !!

பாடல், இசை அற்புதம். யார்? ஏ.ஆர்.ரகுமான்?

Karthigesu 9/13/2008 08:12:00 PM

அற்புதம்தான்! இறுதி credit-இல் சித்ரா என்றிருக்கிறது. நமது சின்னக் குயிலோ தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல கொஞ்சம் சம்பந்தமில்லாத irrelevant காட்சிகள் உள்ளன. இனிமையான ஃபில்லர்கள் மாதிரி.

அதென்ன 71 தலைமுறைகள்? இப்படி ஒரு கணக்கு உண்டா? கல்கி அதனை வசதியாக விட்டுவிட்டார்! 71 தலைமுறைகள் கூடக் கூடப் போனால் 2130 ஆண்டுகள்தான். பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் எழேழு தலைமுறைக்கு இது தேவிலை.

ரெ.கா.

நா.கண்ணன் 9/13/2008 08:18:00 PM

சின்னக்குயிலேதான்! அவர் குரல் தெரிகிறது. இந்தக் குழுவைப் பார்த்தால் ஏ.ஆர்.ரகுமான் போலத்தான் தென்படுகிறது!