குமுதம் ஹோம் தியேட்டர்

இலக்கப் புரட்சி (digital revolution) மெல்ல, மெல்ல தமிழ் ஊடகத்தன்மையை மாற்றத்தொடங்கியுள்ளது. முன்பு இப்பதிவில் எழுதியுள்ளேன், இலக்க சினிமா என்பது நுகர்வோர் தேவைக்கேற்றவாறு புதிய வடிவம் கொள்ளும் என்று. இப்பொழுது எல்லாத்தளங்களிலும் செந்தில்-கவுண்ட மணி காமெடியிலிருந்து விவேக், கமல் காமெடி வரை தனியான டிராக்காகக் கிடைக்கிறது. இது புதிது அல்ல. 'டணால்' தங்கவேலு காமெடி தனி ஆடியோ டிரக்காக முன்பெல்லாம் தெருவெல்லாம் முழங்கும். In fact, திருவிளையாடல் நாகேஷ் டிராக் இப்படித்தான் மனப்பாடம் அக்காலங்களில்!

அதனுடைய நீட்சியாக டிஜிட்டல் சினிமா என்பது வெட்டி ஒட்டப்பட்டு 3 மணி நேரம் ஓடும் முழு நீளத்திரைப்படம் இப்போது 45 நிமிடங்களுக்குக் குறைந்திருக்கிறது!குமுதம்.காம் இதைச் செய்திருக்கிறது. நேரமில்லாமல் பரிதவிக்கும் இக்கால சமூகத்திற்கு ஜீரணிக்கத் தக்கவகையில் Abridged Cinema என்ற புதிய வடிவத்தை வழங்குகிறது. ஒரு சினிமா பார்க்க வேண்டிய நேரத்தில் நேற்று நான்கு சினிமா பார்த்துவிட்டேன். பேஷ்! உண்மையில் நேரத்தை ஓட்ட வேண்டிய தேவையிருந்த போது 32 பாட்டு 50 பாட்டு என்று போட்டு 3-4 மணி நேரத்திற்குப் படம் எடுத்தார்கள். ஹாலிவுட் படமெல்லாம் 100 நிமிடங்களுக்குள் எடுக்கிறார்கள். காரணம் நேரம் இல்லாமை. இது தமிழக அளவில் இவ்வளவு விரைவாக வந்திருப்பது ஆச்சர்யம். எவ்வளவு காலத்திற்கு இதைச் செய்வார்கள் என்று பொருந்திருந்து பார்ப்போம்.

ஆனால் இதுவொரு புதிய கேள்வியை எழுப்புகிறது. சினிமாவிற்கு காப்பிரைட் கிடையாதா? ஒரு படம், அதன் தரம், அதன் காலம் என்பதை இயக்குநர் அல்லவோ தீர்மானிக்கிறார். காட்சி அமைப்பு அதன் சமூகத்தாக்கம் இவையெல்லாம் அதில் அடக்கம்தானே. இப்படி சினிமாவை ரிஎடிடிங் (re-editing) செய்வது சரியா? அது காப்பிரைட் மீறல் அல்லவா?

எப்படியாயினும் சித்தி, அண்ணாமலை போன்ற சீரியல்களெல்லாம் உண்மையில் 10 நிமிடக்கதைகள்தான். அதைச் சவ்வாக இழுத்து 3 வருடம் ஓட்டுகிறார்கள். இந்தக் கால விரயத்தை இப்புதிய "குறள் சினிமா" (Abridged Cinema) தடுத்தால் நல்லதுதான்!

2 பின்னூட்டங்கள்:

SurveySan 9/22/2008 10:13:00 AM

Nothing wrong in shrinking a movie and presenting online.

இதை வெட்டி ஒட்டுபவர், தேர்ந்தவரா இருப்பாரான்னு தெரியல.
சில நல்ல படங்களில் பாட்டைத் தவிர எதை வெட்டினாலும், இடிக்குமே.

காப்பிரைட் வயலேஷன் குமுதம் பண்ணுமா? காசு கொடுத்துதான் வாங்கியிருப்பாங்க..

நா.கண்ணன் 9/22/2008 10:51:00 AM

சமீபத்தில் கொரிய கலைப்பொருட்காட்சியில் ஒரு அரங்கில் பல்வேறு வகையான ஆமை ஓடுகளைக் கலை வடிவில் காட்சிக்கு வைத்திருந்தனர். நான் சும்மா வேடிக்கையாக என் கழுத்தையும், ஆமை ஓட்டையும் சேர்த்து வைத்து படமெடுக்கச் சொன்னேன். அப்போது அசரீரி போல் ஒலிபெருக்கியில் "இப்படி செய்யும் போது கவனத்தில் கொள்க! சிற்பி (கலைஞன்) உங்களை கேஸ் போடலாம். தனது கலைப்படப்பை திருத்திக்காட்டுவதாக!" என்று வந்தது. ஒரு வேடிக்கையான போட்டோவிற்கே இந்தக்கதி என்றால்? ஒரு முழு நீள திரைப்படத்தை reedit செய்யும் செயல் உரிமை மீறல்தான். குமுதம் படத்தைக் காசுக்கு வாங்குவது வேறு (என்ன ஒரு DVD வாங்கியிருப்பார்கள் அவ்வளவுதான்)!