ஈர்க்கப்படுவதே உண்மை!

உலகம் பலவாய் நிற்கிறது.
மூலம் ஒன்றாய் திகழ்கிறது


பலவாய் நிற்கும் உலகையே கண்டு உய்க்கும் நமக்கு அதன் தொப்புள் கொடி கண்ணில் படுவதே இல்லை. தொப்புள் கொடி கண்டுணர்ந்த ஆனந்த நிலையர்க்கு, ஒன்று ஏன் இப்படிப் பலவாகி பாடாய் படுத்துகிறது என்பது புரிவதில்லை.

திருப்பதி பற்றிய சென்ற இடுகை என்னுள் சில எண்ணங்களை எழுப்பின. ஏன் திருப்பதி மட்டும் இத்தனை சிறப்புடன், இத்தனை பீடுடன், உலகின் மிகப்பிரம்மாண்டமான திருக்கோயிலாக நிற்கிறது? "பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான், செங்கோலுடையன்!" என்று ஆண்டாள் சொல்கின்றபடி ஈதென்ன அரசாட்சி?

கவனித்துப்பார்த்தால் இந்தியாவின் பிரம்மாண்டமான வழிபடும் தலங்கள் மாலவனுடையனவாகவே உள்ளன. வடக்கே தூவரகை, ஹரித்துவார், நடுவே பாண்டுரங்கன், வடவேங்கடம், தெற்கே திருவரங்கம், மேற்கே குருவாயூரப்பன், பத்மநாபன். "ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறையுடையோம்?" என்று நம்மாழ்வார் மகிழ்வதில் பொருள் உள்ளது.

ஆயினும் வடவேங்கடம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது. இந்தப் பெருமை வடவேங்கடத்திற்கு இன்று நேற்று வந்தது போல் தெரியவில்லை. இல்லையெனில் கம்பமத யானை மீது கம்பீரமாய் கொலுவிருக்கும் குலசேகர மன்னன், தன்னை ஒரு படிக்கல்லாக்கி வடவேங்கடவன் பவளவாய் காணும் நோக்கு வேண்டுமென்று சொல்வானா? அதற்கு அவன் சொல்லும் காரணங்கள் சுவாரசியமாயுள்ளன.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே


வல்வினைகள் மண்டிக்கிடக்கின்றன. அதைத்தீர்க்கும் திறன் ஒருவனுக்கே உள்ளது. அவன் நெடியோன். திருமகளை மால் செய்பவன். வேங்கடவன். எனவே இவன் கோயில் வாசலிலே அடியவர்கள் தினமும் கூடுகின்றனர் (நாளுக்கு 40,000 பேராம். விசேஷ காலங்களில் லட்சம் பேராம்!). வானவர்களும் தேவலோகம் விட்டு இங்கு வருகின்றார்களாம் (நமக்கென்ன தெரியும். ஆழ்வார் சொல்கிறார். நாம் நம்புகிறோம் ;-) அரம்பயர் எனும் கூட்டமும் கிடந்து இயங்குகிறார்களாம். இவர்கள் சும்மா வந்து போகவில்லை. இவர்களின் இயக்கம் இக்கோயிலை அப்படி வைத்திருக்கிறது என்கிறார் ஆழ்வார். அடியார் இல்லாமல் ஆள்வானில்லை. ஆள்வானில்லாமல் அடியார் இல்லை. இந்த இங் யாங் இயக்கமே இக்கோயிலை இத்தனை சிறப்புடன் வைத்திருப்பதாக ஆழ்வார் சொல்கிறார். ஒருவகையில் டோமினோ இயக்கம்தான். இதை முதலில் ஆரம்பித்து வைப்பவன் வேங்கடவனாக உள்ளான்.

செடியாய வல்வினைகள் கொண்ட இப்பிறப்புச் சுழற்சியை எளிதே அறுத்து வருகின்ற அடியார்க்கு விண்ணகம் தந்துவிடுகிறானாம் வேங்கடவன். எல்லோரும் திருப்பதிப் பெருமாள் இகசுகம் தருகிறார் என்று நம்பிப் போய்கொண்டு இருக்கிறார்கள்! அங்கு போனவர்க்கு இனிப்பிறப்பில்லை எனும் ரகசியம் அறிந்தால் போவாரோ என்று தெரியவில்லை ;-)

வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
சீரான் திருவேங்கடம்


உலகில் கடைசி ஜீவன் உய்யும்வரையில் நிற்பேன் என்று வடவேங்கடம் வந்துவிட்டானாம். முதலில் வராகனாக வந்து பூமியை இடந்து எடுத்தான். பின் கோவர்த்தனகிரியை கையில் எடுத்து கோப, கோபியரைக் காத்தான், கஞ்சன் வயிற்றில் நெருப்பாய் நின்றான், திருப்பாற்கடலில் கிடந்தான். ஆனால் நிற்பதற்கென்றே வேங்கடம் வந்துவிட்டானாம். இது பெரிய காரியம்தான் என்று ஆழ்வார் வியக்கிறார்.

இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது


எவ்வளவுதான் ஜரிகண்டி, ஜரிகண்டி செய்தாலும் கிடைக்கின்ற சில நொடியில் செடியாய வல்வினைகள் தீர்த்து,, பழுதொன்றும் வாராத வண்ணம் விண்கொடுக்கும் படியளந்த பெருமாள் வடவேங்கடவனாம்.

இப்படிச் சொல்லும் போது நமது டோமினோ எபெக்ட் தியரி உடைந்துவிடுகிறது. வெறும் புற்றீசல் போல் மூடநம்பிக்கையில் மனிதர்கள் அங்கு கூடவில்லை. அங்கு போனால் அமரஜீவிதம் கிடைக்கிறது. கருங்குழிக்குள் போன உயிர் மீள்வதில்லை போல் வேங்கடத்துக் கருங்குழிக்குள் போன ஜீவன் திரும்புவதில்லை. இதுதான் Singularity. ஜீவனின் கடைசிப் பயணம். ஆனால், மனிதன் இதையறிந்து போகவில்லை. போகமாட்டான். ஆனால் இரும்புத்துகள் காந்தத்தை நோக்கி விரும்பிப் பயணிப்பதில்லை. காந்தம் வந்துவிட்டால் அது தானாகவே ஈர்க்கப்படுகிறது. புயல் கருக்கொண்டவுடன் மேகம் தானாகவே சுழற்சியில் பங்கு கொள்கிறது. இதுதான் ஜீவனின் நிலையும்! காந்தம் அங்குள்ளது. இனிப்பு அங்குள்ளது. ஈர்க்கப்படுகிறோம் நாம். அதுதான் உண்மை.

4 பின்னூட்டங்கள்:

Karthigesu 9/27/2008 07:24:00 PM

ஓர் அறிவியலாளர் ஆன்மீகவாதியாகும் தருணம் இது போலும்! பக்தி மனதில் மூட்டமாகிவிட்டால், ஆய்வு பின்னுக்குப் போகுமோ?

"திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா! உன்
விருப்பம் கூடுமடா!" என்று சீர்காழி கோவிந்தராஜன் தன் கம்பீரமான தொனியில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

1974-இல் முதன் முறையாகத் திருப்பதிக்குப் போய் ஐந்து மணி நேரம் கியூவில் நின்று 20 விநாடிகள் தரிசிக்க முடிந்தது. பெரிதும் மனைவியின் வற்புறுத்தலினாலும் அவரின் திருப்திக்காகவுமே. சீர்காழியாரின் பாடல் உள்ளத்தில் ஓடியவாறு இருந்தது. நம்பிக்கை இல்லாவிட்டாலும் வந்துவிட்ட குறைக்கு அப்போது மனதிலிருந்த ஆசை ஒன்றை வேண்டிக்கொண்டேன் (என்ன குறைந்து விடப் போகிறது என்பது போல!).

திரும்பி மலேசியா வந்தவுடன் அது நடந்தது. ஆனால் அந்த வாழ்க்கை மாற்றத்திற்கு வேறு பல காரணங்களும் முயற்சிகளும் இருந்தன. ஆகவே மாற்றம் நேர்ந்ததன் நன்றிக்கு உரியன என் முயற்சிகளா வேங்கடவன் அருளா என இன்றளவும் தீர்மானிக்க முடியவில்லை. நம்பிக்கை இல்லாத அலட்சியத் தொனியில் வேண்டிக்கொண்ட ஒருத்தனுக்கு அவன் எப்படி அருள் புரிந்திருக்கக் கூடும்?

இலட்சக்கணக்கானோருக்கு வேண்டுதலால் ஒன்றும் நடப்பதில்லை. வேண்டாமலும் பலருக்கு நன்மைகள் நடக்கின்றன. ஆனால் வேண்டுதல் உன்னதமானது என்றும், பலர் கூடி வேண்டும் இடங்களில் சக்தி இருக்கிறதென்றும் நம்பிக்கையாளர்கள் விடாமல் நம்புகிறார்கள்.

கேட்டால் மட்டுமே கொடுக்கும் கடவுள் என்ன கடவுள்? அதுவும் இங்கு வந்து கேள் என்னும் கடவுள் நீதியான, கருணை உள்ள கடவுளா?
வேண்டவும் தெரியாத மூளைக்குறை உள்ள பிள்ளைகளை அப்படியே சாகவிடும் கடவுள் என்ன கடவுள்?

புதிய கேள்விகள் அல்ல! கேட்டுப் பலவித பதில்களைப் பெற்றும் அடங்காமல் மீண்டும் மீண்டும் திமிறிக் கொண்டு வரும் கேள்விகள்தாம். நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதும் கட்டாயமல்ல.

கடவுள் நம்பிக்கை என்பது நமது genetic makeup-இல் இருக்கக் கூடும் எனப் படித்திருக்கிறேன். ஆகவே இயற்கையாகவே நாம் இந்தத் திசையில் (பசியும் தாகமும் தீர்க்க விழைவது போல்) உந்தப் படுகிறோம் என்றும் தோன்றுகிறது.

ரெ.கா.

நா.கண்ணன் 9/27/2008 09:30:00 PM

//ஓர் அறிவியலாளர் ஆன்மீகவாதியாகும் தருணம் இது போலும்! பக்தி மனதில் மூட்டமாகிவிட்டால், ஆய்வு பின்னுக்குப் போகுமோ?//

நானும் முதலில் sceptical-ஆகத்தான் ஆரம்பித்தேன். ஆனால் ஆழ்வார்களுக்குள் போனவுடன் மனோநிலையே மாறிவிடுகிறது. என்ன செய்ய ரெ.கா.?

பக்தி வந்தால் அறிவியல் போகுமென்றில்லை. எல்லாவற்றையும் கருணையோடு பார்க்க முடிகிறது.

//கேட்டால் மட்டுமே கொடுக்கும் கடவுள் என்ன கடவுள்? அதுவும் இங்கு வந்து கேள் என்னும் கடவுள் நீதியான, கருணை உள்ள கடவுளா?
வேண்டவும் தெரியாத மூளைக்குறை உள்ள பிள்ளைகளை அப்படியே சாகவிடும் கடவுள் என்ன கடவுள்?//

இவையெல்லாம் ரொம்ப ஆரம்ப நிலைக்கேள்விகள் ரெ.கா. இதற்கெல்லாம் தெளிவான பதில் இருக்கு. கடவுளை ரொம்பவும் personify பண்ணினால் இந்தச் சிக்கல் வரும்.

//கடவுள் நம்பிக்கை என்பது நமது genetic makeup-இல் இருக்கக் கூடும் எனப் படித்திருக்கிறேன்.//

நாரணன் என்றால் எல்லாம் அதனுள் அடக்கம்தான். இந்தத்தேடல் இயல்பானதே. தாய் தேடும் கன்றுபோல், 'நான்' தேடும் இதயம்!

மின்தமிழில் பேசலாம், வேண்டுமானால்!

Karthigesu 9/28/2008 11:08:00 AM

//கடவுளை ரொம்பவும் personify பண்ணினால் இந்தச் சிக்கல் வரும்''.

அதுதான் நானும் சொல்கிறேன். "வேங்கடவன்" என்பது personoficationதானே! அதனால்தானே வம்பு!

ரெ.கா.

நா.கண்ணன் 9/28/2008 12:15:00 PM

இப்போதுதான் குமுதம்.காமில் ஸ்ரீநிவாசக்கல்யாணம் பார்த்தேன். பிரம்மிப்பாக இருக்கிறது! தீவுத்திடல் நிரம்பி வழிகிறது. இது என்ன அரசாட்சி?

கோயிலுக்குப் போவது நாரத கான சபா போய் சுதா ரகுநாதன் கச்சேரி கேட்பது போல்தான். கேசட்டு போட்டும் கேட்கலாம்தான். ஆனால் கோயில் சூழல் வேறு.

அதேபோல், ஜோதியாக, உள்ளொளியாக உள்ள இறைவனைக் கல்யாண குணங்களுடன் ஏன் பார்த்து வழிபட வேண்டும்? வழிபடும் நமக்கு குணங்கள் இருப்பதால்தான். நாம் இந்த சைத்தன்யம் இல்லாமல் காற்றாக, மலையாக இருந்தோமெனில் இது அவசியமில்லைதான். குணம் இருப்பதால் குணம் ஈர்க்கிறது.

இறை அனுபவம் என்பது ஒன்று. கோயில், அதன் நிர்வாகம், அதில் காணும் ஊழல், மக்களின் நடவடிக்கைகள் என்பது ஒன்று. மக்கள் பக்குவப்பட்டால் இரண்டும் இன்னிசை போல் அமையும். நம்மிடம் தத்துவம் வளர்ந்த அளவிற்கு சமூக நாகரீகம் வளரவில்லை. அது நம்மை பல நேரம் வெறுப்பேற்றுகிறது!