விளங்கிக்கொள்ளத்தக்க விலங்குமனம்!

"விலங்கு மனம்" எனும் பதம் சிவபுராணத்தில் வருகிறது! விலங்குமனமறியும் நவீன துறைக்கு Animal Behaviour Science or Ethology என்று பெயர். தொழில்துறை முன்னேற்றத்தால், குறிப்பாக ஒளிப்பதிவுத்துறை கண்டிருக்கும் அளப்பரிய முன்னேற்றத்தால் முன்னெப்போதுமில்லாத அளவு விலங்குகள் பற்றிய ஆவணம், ஆய்வு இப்போது நடந்து வருகிறது. இரவில் விலங்களைக் காண Infrared Camera, குழியில் புதைந்து, கூட்டிற்குள் வாழும் விலங்களைக் காண சின்னச் சின்ன remote control camera. தூரத்தில் நடக்கும் விலங்குத் துரத்தலை எட்ட இருந்து பிடிக்க, தொலைக்காட்சி கேமிரா என எத்தனையோ வளர்ச்சிகள். மேலும் பி.பி.சி, நேஷனல் ஜியாகிரபிஃக் போன்ற தொலைக்காட்சித்தளங்கள் ஆச்சர்யப்படத்தக்க ஆவணப்படங்களைக் கொண்டு வந்த பின் சுற்றுலாப் பயணிகள் கூட இப்போது படமெடுக்க வந்துவிட்டனர்! இதோ ஓர் ஆச்சர்யமான படம்!காட்டு எருமைகள் 1 டன் எடையுள்ளவை. அவை கால் பட்டால் கூட நம் எலும்பு முறிந்துவிடும். அவை குத்தினால் சொல்லவே வேண்டாம்! ஆயினும் அவை சிங்கங்களுக்குப் பயப்படுவது ஆச்சர்யம்தான். இந்த 'பயம்' என்பது இல்லையெனில் வாழ்வின் சுழற்சி நின்றுவிடும் போலுள்ளது. படைப்பு பற்றிப் பேசும் உபநிடதம் இப்படிச் சொல்கிறது. யோக நித்திரையில் இருக்கும் பரந்தாமன், பிரபஞ்சம் உருவாகட்டுமென நினைத்து பிரமனையும், தேவர்களையும், ஐம்பூதங்களையும் உருவாக்குகிறான். இவை செயல்பட "பசி, தாகம்" இரண்டையும் உருவாக்குகிறான். இந்த இரண்டும்தான் உயிரை ஓடவைக்கும் சக்திகள். ஆப்பிரிக்க ஆவணங்களைப் பார்த்தால் உணவிற்காக பல்லாயிரம் மைல்கள் நடக்க, பறக்க விலங்குகள் தயாராயுள்ளன. எத்தனையோ இடர்களுக்கிடையில் வலசை போகின்றன! இந்த இரண்டிற்கும் இடையில்தான் உயிரெனும் நாடகமே! "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்பது மனித மொழியும் கூட!

இப்படத்தில் காட்டெருமைக்கூட்டம் போகும் வழியில் சிங்கங்கள் இருக்கின்றன. எருமைகள் சேர்ந்து திமு, திமுவென வந்திருந்தால் சிங்கம் விலகியிருக்கும். ஆனால் முதலில் ஒரு குடும்பம் வருகிறது. சும்மா வம்பிற்கிழுக்க சிங்கங்கள் பாய்கின்றன. அதாவது இது என் இருப்பு. இதைத்தாண்டிப் போகும் உரிமை உனக்கில்லை என்பது போல். இந்தியருள் சில சாதிக்காரர்கள் வாழும் தெருவில் சில சாதிக்காரர்கள் போனால் இப்படித்தான் வம்பாகிவிடும்!

சிங்கம் பெரிய வேட்டையை விட்டு கன்றைப் பிடிக்கிறது. ஏனெனில் கன்று பாதுகாப்பற்றது. வேட்டை எளிது. நாமும் பலவீனமானவர்களைத்தானே தாக்குகிறோம். உம். குழந்தைகளை, பெண்களை, சோணிகளை!

எருமைக் கன்று முதலை வாயில் ஒருபுறம், சிங்கத்தின் வாயில் ஒருபுறமென இழுபடுகிறது. நாம் நினைப்போம் அது நாராய்க்கிழிந்து, இரத்தமாய் போயிருக்குமென்று. ஆனால், அப்படி நடக்கவில்லை! எருமைக்கூட்டம் வருமளவும் கன்று தாக்குப்பிடித்து தப்பிவிடுகிறது! இந்த பலத்தை வழங்கியவன் எவன்?

எருமைக்கும், சிங்கத்திற்கும் பகை என்று யார் நிர்ணயம் செய்தது? எருமைகள் சிங்கங்களைக் கொல்வதுமுண்டு. குறிப்பாக சிங்கக்குட்டிகளை! சிங்கம் வீராப்பான மிருகமெனினும் அது கழுதைப் புலிகளுக்கு பயப்படுவதுண்டு. எனவே, தனியாக ஒரு கழுதைப்புலி மாட்டினாலோ, குட்டிகள் கிடைத்தாலோ சிங்கம் இரக்கமின்றி கொன்றுவிடும். இந்த உணர்வு எப்படித் தங்கியது?

பகை உணர்வின் அடிப்படை என்ன? ஏன் மனிதர்களுக்கு இத்தகைய பகை உணர்வு உள்ளது?

விலங்கு மனத்தை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும். அதன் பின்தான், மாணிக்கவாசகர் என்ன பேச வருகிறார் என்பது புரியும்!

தூண்டில் மீன்

தூண்டில் மீன் என்றவுடன் நாம் தூண்டில் போட்டு பிடிக்கிற மீன் என்று எண்ண வேண்டாம். மீன்கள்தான் முதன் முதலில் தூண்டிலையே கண்டு பிடித்தன என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? Lophiiformes எனும் இன மீன்கள் இவ்வலையில் தனக்குச் சின்ன மீன்களை தூண்டில் போட்டுப் பிடிக்கும் வகையின. கடலின் ஆழ்பகுதிக்கு ஆய்வு செய்யச் சென்ற போது இந்த மீன்கள் இப்போதுள்ள தூண்டிலில் காணும் ஒளிவீசும் தூண்டில் போல ஒன்றை வாய்க்கு நேர் எதிராக நீட்டித் தூண்டில் போடுவதைக் கண்ணுற்றனர்.மனிதன் கண்டுபிடித்ததாகப் பெருமைப்படும் பல விஷயங்கள் ஏற்கனவே இயற்கையில் சிறு விலங்குகள் கண்டு பயன்படுத்தி வருகின்றன என்பது ஆச்சர்யமான உண்மை. பேப்பர் (தாள்) கண்டுபிடித்தது சீனர்கள் என்று சரித்திரப்பாடத்தில் படித்திருக்கிறோம் ஆனால், உண்மையில் ஒருவகை குளவிகள் தங்களது கூடுகளை பேப்பர் கொண்டு கட்டுகின்றன. இப்படி, மனிதன் பூமியில் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவையெல்லாம் கண்டிபிடிக்கப்பட்டு நடப்பில் இருந்திருக்கின்றன. "பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்" என்பதே சரி.

இந்தத் தூண்டில்மீன் கதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்கும் என் பெண் வெங்கடேஸ்வர சுப்ரபாதம் வேண்டுமென்று கேட்டாள். சரியென்று உன்குழலை (அதாங்க..YouTube) தேடினேன். அப்போது, Suprabatham Remix by A.R. Rahman என்று ஒரு தொடுப்பு கிடைத்தது. அடடா! ஏ.ஆர்.ரகுமான் இதையும் செய்து விட்டாரா என்று தூண்டில் கண்ட மீன்போல் ஓடினேன்!இது சுப்ரபாத இசையில் ஆதிசங்கரரைப் பற்றிய தோத்திரம் என்பது கேட்டாலே தெரியும். மேலும் இதை முதன் முதலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள். சரிதான்! என்று மேலே படித்தால், இந்த வீடியோ போட்டவர் "கையை" தூக்கிவிட்டார்.

Hi. I want to tell you first that this is not done by A.R. Rhaman. Even I initially thought that this is a song from the Album chathurbujam which was done by ARR. But after doing a long research, I found that there is no album called chathurbujam and this song is not done by ARR. This is a remix of Thodakashtakam which was released as a part of Sacred Chants series. I have put the title as by A.R. Rahman to attract people to watch this video and inform them that this is not done by A.R. Rahman.

ஆனாலும் கூகுளில் தேடினால் ரகுமான் ரீமிக்ஸ் என்று இது அல்லோகலப்படுகிறது. உன்குழல்தான், ஒன்றைத்தொட்டால் இன்னொன்று என்று தூண்டில் போடுமே! அடுத்த தூண்டில் இதோ...அதே இசை, ஆனால் விஷுவல் (காட்சிகள்) மாற்றம். இப்போது இதை முறையாக "தோடகாஷ்டகம்" என்று எழுதிவிட்டனர். இதை எழுதியவர் ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான ஆனந்தகிரி (தோடகர்) என்பவர். இப்பாடலைப் பாடி இருப்பவர்கள் உமா மோகனும், காயத்திரி தேவியும் ஆகும். சுப்ரபாதம் மெட்டில் பாடிவிட்டதனால் இதை சுப்ரபாதம் என்றே பல வீடியோக்கள் அழைக்கின்றன. இன்னொரு சாம்பிள்எப்படியோ ஆதிசங்கர பகவத் பாதாள் அவர்களை நினைவில் கொள்ள அவர்தம் பொற்பாதம் இறைஞ்ச (சங்கர தேசிகமே சரணம்) இந்தத் தூண்டில் உதவி இருக்கிறது. இது சாப்பிட்டு ஏப்பம் விடுகிற தூண்டில் இல்லை, கேட்டு உயர்வடைகின்ற தூண்டில்!!

நா.கண்ணன்

முனைவர் நா.கண்ணன்

இணையத்தில் உலா வருபவர்களுக்குத் தமிழ்மரபு அறக்கட்டளை என்னும் பெயரும் அவ்வமைப்பு செய்யும் பணியும் நன்கு அறிமுகமாகி இருக்கும்.தமிழ் மரபுச்செல்வங்களை அழியாமல் மின்வடிவப்படுத்திப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையாகும்.இவ்வமைப்பின் சார்பில் TAMIL HERITAGE.ORG என்னும் இணையத்தளம் உள்ளது.இத்தளத்தில் அரிய தமிழ்நூல்கள்,ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், படங்கள், ஒலிவடிவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.உலகு தழுவிய அமைப்பாக இவ்வமைப்பு செயல்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இத்தளத்திற்குச் செய்திகளை மின்வடிவப்படுத்தி வழங்கினாலும் இதன் மூளையாக இருந்து செயல்படுபவர் முனைவர் நா.கண்ணன் அவர்கள் ஆவார்.

கொரியாவில் இருந்தபடி தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்யும் நா.கண்ணன் அவர்களின் பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பூவணம். இவ்வூர் சைவசமய நாயன்மார்களால் பாடல்பெற்ற ஊராக விளங்குவது. இச்சிற்றூரில் வாழ்ந்த நாராயணன், கோகிலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். தம் இளமைக் கல்வியைத் தமிழ்வழியில் பயின்றவர். மானாமதுரையில் ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில் பயின்றவர்.பின்னர் திருப்பூவணத்தில் படித்துப் பள்ளியிறுதி வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர்.கண்ணனுக்குத் தமிழ் மொழியில் இயல்பிலேயே ஈடுபாடு இருந்தது.

கல்லூரிக் கல்வியை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர். உயிர்அறிவியல் பாடத்தைப் பட்டப் படிப்பிற்கும் முது அறிவியல் பட்டத்திற்கும் படித்தவர். அமெரிக்கன் கல்லூரியின் சூழல் கண்ணனைத் தமிழ்க்கவிதைகளின் பக்கம் இழுத்தது.சாலமன் பாப்பையா நடத்தும் திருவாசகப் பாடத்திலும் பேராசிரியர் நெடுமாறன் அவர்களின் திராவிட இயக்கப் பேச்சிலும் ஈடுபாடு கொண்டவர்.கோவையை மையமிட்டு வளர்ந்த வானம்பாடிக் கவிதை இயக்கம் வழி கவிஞர் மீராவின் கவிதைகளில் கண்ணன் ஈடுபாடு கொண்டிருந்தார்.பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது புத்திலக்கியப் படைப்பாளிகளின், திறனாய்வா ளர்களின் தொடர்பு அமைந்தது.சிறுகதைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.இதனால் பின்னாளில் கி.இரா,தி.சா.ரா,இந்திரா பார்த்தசாரதி,தீபம் பார்த்தசாரதி,ஆதவன் இதனால் பின்னாளில் கி.ரா, லா.ச.ரா, தி.ஜானகிராமன், ஆதவன், இ.பா, நா.பா உள்ளீட்டோரின் ஆக்கங்களில் பரிட்சயம் கிடைத்தது.கண்ணன் சப்பான் நாட்டிற்கு உயர்கல்விக்குச் சென்றார். சப்பான் அறிவியல் அமைச்சின் உதவித்தொகையில் (Monbusho Fellowship) நான்காண்டுகள் ஆய்வுசெய்தார். இவ்வாய்வின் பயனாகத் தொழில் துறைகளில் பயன்படுத்தும் வேதிப்பொருள் சிக்கலுக்கு உரியது எனவும் இதனால் சூழலியல் சீர்கேடு உருவாகிறது எனவும் கண்டுபிடித்தார். இவ்வாய்வை உற்றுநோக்கிய செர்மனி நாட்டினர் அழைக்க,இணைப்பேராசிரியராக கீல் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். பத்து ஆண்டுகள் பேராசிரியராகப்பணிபுரிந்து அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார்.

சிறப்பு அழைப்பின் பெயரில் கொரியாவுக்கு அழைக்கப்பெற்று இப்பொழுது கொரியாவில் ஆசிய பசிபிக் நாடுகளின் கடலாய்வுப் பயிற்சி மையத்தை( AMETEC) மேலாண்மை செய்து வருகிறார். சூழலியல் சார்ந்த பயிற்சி பெற இவரிடம் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள், சூழலியல் வல்லுநர்கள் வருகின்றனர்.ஆண்டிற்கு இரண்டுமுறை 3 வாரப் பயிற்சி தருகிறார். இவ்வகையில் இவரிடம் கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, பெரு,மலேசியா, பர்மா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் வந்து பயிற்சி பெறுகின்றனர். இச்சூழலியல் பேரறிவால் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

உலகப் பயணங்களில் தமிழுக்கு ஆக்கமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.கல்வெட்டு , ஓலைச்சுவடிகள், தமிழின் அரியநூல்கள், பண்பாட்டுகூறுகளை அறிந்து தமிழகத்திற்கு வழங்கியவர். சப்பான் நாட்டில் ஆய்வு செய்தபொழுது சப்பானியமொழி பேசும் ஆற்றல் கிடைத்தது.இதனால் சப்பானின் கவிதை வடிவமான ஐகூ பற்றி நிறைய அறிந்தார்.இவர் கவிஞர் விச்வநாதன் அவர்களின் நூலுக்கென வரைந்த ஐகூ குறித்த முன்னுரையைக் கவிஞர் மீரா ஓம்சக்தி இதழில் வெளியிட்டார்.

கண்ணன் தமக்குக் கிடைக்கும் ஓய்வுநேரங்களில் தமிழ்ப்படைப்புகளை உருவாக்கினார்.அவை குங்குமம், கணையாழி, இந்தியா டுடே, சுபமங்களா, புதியபார்வை உள்ளிட்ட தமிழக ஏடுகளில் வெளிவந்துள்ளன.வாசந்தி,மாலன்,பாவை சந்திரன்,கோமல் சாமிநாதன் உள்ளிட்டவர்களின் தொடர்பும் தமிழ்ப்படைப்புகள் வெளிவரக் காரணமாயின.

இங்கிலாந்து,செர்மனி,பிரான்சு நாடுகளிலிருந்து வெளிவந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்தன.விலைபோகும் நினைவுகள்,உதிர் இலைக்காலம்,நிழல்வெளி மாந்தர் உள்ளிட்ட சிறுகதை,நெடுங்கதைத் தொகுப்புகளை வழங்கியுள்ளார்.


Dr.N.Kannan


புகலிட வாழ்வைத் தமிழ்ச்சூழலில் புரிந்துகொள்ளும் வண்ணம் நிழல்வெளி மாந்தர்களை மையமிட்டனவாக இவரின் படைப்புகள் இருக்கும்.கண்ணனின் கவிதைகள் இணையத்தில் வெளிவந்தவண்ணம் உள்ளன.தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களுடன் நன்கு அறிமுக மாகியுள்ள கண்ணன் சிங்கப்பூர்,மலேசியா எழுத்தாளர்களுடனும் நன்கு அறிமுகமானவர். அதேபோல் தமிழர்கள் பரவியுள்ள உலகநாடுகள் பலவற்றிலும் இணையத்துறையில், எழுத்துத்துறையில் நன்கு அறிமுகமான பெயர் கண்ணன் என்பதாகும்.

1995 அளவில் அமெரிக்காவில் வாழும் சார்ச்சு கார்ட்டு (George Hart) அவர்கள் முதன்முறையாக ஒருங்கு குறி பற்றி பேச அழைத்த - தமிழ் எழுத்துப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.பிறகு சிங்கப்பூர்,சென்னை, மலேசியாவில் நடைபெற்ற இணைய மாநாடுகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்தவர்.

அவ்வகையில் இவர் செர்மனியில் பணிபுரிந்தபொழுது அந்நாட்டில் ஓலைச்சுவடிகள் பாதாள அறைகளில் மிகவும் பாதுகாப்பாகப் பாதுகாக்கப்படுவதிலிருந்து அதைச் செம்மைய பாதுகாக்கும் தன்மையை புரிந்து கொண்டார். இதே போல் தமிழ் சுவடிகளை எளிமையாக மின்வெளியில் பாதுகாக்கும் திட்டமொன்றை உருவாக்கினார். இது குறித்து சிங்கப்பூரிலும்,மலேசியாவிலும் நடந்த தமிழ் இணையக் கருத்தரங்களில் பேசினார்.

2001இல் மலேசியாவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்று வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தைத் தமிழுக்கு ஆக்கமாகப் பயன்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது பற்றிய களப்பணி ஆய்வுகளை எடுத்துரைத்தார்.மலேசியாவில் பேசிய கண்ணன் அவர்களின் பேச்சு அங்கிருந்தவர்களைக் கவர அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் பத்தாயிரம் அமெரிக்க டாலர் பணத்தை வழங்கித் தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு தமிழ்மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டது.இதில் தமிழ் ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், கோயில்கள்,அரிய நூல்கள் பற்றிய தமிழர் மரபுச்செல்வங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

தமிழ்மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளை முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம், சார்ச் கார்ட்டு (அமெரிக்கா) உள்ளிட்ட அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.இந்திய மின்னூலகம் [Digital Library of India] தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்களைப் பகிர்தல் முறையில் வைத்துள்ளது.இந்தியாவை அடிமைப்படுத்திய நாட்டு அரசு நூலகங்களில் உள்ள தமிழ் நூல்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற ஆவலில் தமிழ் மரபு அறக்கட்டளையினர் பிரித்தானிய நூலகத்துடன் இணைந்து முதன் முறையாகச் சில நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மரபு அறக்கட்டளை இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பதிவு பெற்ற அரசு சாரா, நடுநிலை நிறுவனமாகும் [NGO]. தமிழின் முதல் மடலாடற்குழுவான தமிழ் வலையில் ஆழ்வார்களின் பாசுரங்கள் பற்றி கண்ணன் தொடர்ந்து எழுதினார். பின்னர் ஆழ்வார்க்கடியான் என்னும் பெயரில் ஆழ்வார்களின் பாசுரப் பெருமை, ஆழ்வார்களின் பெருமை பற்றி எழுதத் தனி வலைப்பூவை உருவாக்கி எழுதி வருகிறார். இதனால் இவரைப் 'பாசுரமடல் கண்ணன்' என அழைப்பவர்களும் உண்டு.

ஆழ்வார் படைப்புகளிலும் வைணவ இலக்கியங்கிளிலும் நல்ல ஆர்வம் இவருக்கு உண்டு.தமிழ் இணைய வளர்ச்சியில் கண்ணனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.இவர் தமிழ் இலக்கியம் குறித்தும் இணையம் பற்றியும் தொடக்க காலத்தில் எழுதிய படைப்புகள் பல தகவல்களைத் தாங்கி நிற்கின்றன.

தமிழ்மரபு அறக்கட்டளை முதுசொம் என்னும் வகையில் மரபுவழிப்பட்ட பண்பாட்டுச்
சின்னங்கள், ஓலைச்சுவடிகள்,அரியநூல்கள்,கோயில்கள் பற்றிய செய்திகள்,இசைத்தட்டுகள் உள்ளிட்ட இவற்றை மின்வடிவில் பாதுகாத்துவருகின்றது(காண்க:http://www.tamilheritage.org).

தமிழ்மரபு அறக்கட்டனைக்கு மின்தமிழ் என்னும் மின்குழு உள்ளது. இதில் உறுப்பினராவதன் வழியாகத் தமிழ்மரபு அறக்கட்டளைக்கு யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யமுடியும். மின்தமிழ் குழுவில் இதுவரை 547 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.இவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.

காலச்சுவடு நடத்திய தமிழினி 2000 என்னும் மாநாட்டில் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகளை அறிந்துள்ளன.பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.இப்பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் மரபு மையம் குறித்த ஆய்வுத்துறையில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய உள்ளன.

கண்ணன் தமிழகச் சிற்றூர்ப்புறம் ஒன்றில் பிறந்து சப்பான்,செர்மனி,கொரியா எனப் பல நாடுகளில் வாழ நேர்ந்தாலும் தம் தாய்மண்ணை,தாய்மொழியை நேசிப்பதில் முதன்மை பெற்று நிற்கிறார்.தமிழ்மொழிக்கும் கொரிய மொழிக்கும் உள்ள உறவுகளை ஆராய்ந்து வருகிறார்.இது பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை சிங்கப்பூரில் உள்ள தென்னாசிய ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்திய எழுச்சியும், வெளிநாட்டில் இந்தியக்குடிகளும் (Rising India and Indian Communities in East Asia) எனும் புத்தகத்தில் உள்ளது.

கொரிய தொலைக்காட்சி நிறுவனம்(KBS) ஒன்று கண்ணனுடன் இணைந்து இந்திய-கொரிய உறவு பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கும் முயற்சியில் உள்ளனர்.இவர் கொரிய-தமிழ் மொழிக்கு உரிய உறவுகள் பற்றி ஆராய்ந்து மொழி அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படை யிலும் ஒன்றுபட்டு இருப்பதை வெளிப்படுத்திவருகிறார்.அவ்வகையில் நாம் பயன்படுத்தும் அம்மா,அப்பா சொற்கள் கொரியாவிலும் வழங்குகின்றன என்கிறார்.

நாம் அண்ணி என்பதை ஒண்ணி என்கின்றனர்.கூழ் என்பதை மூழ்(தண்ணீர்)என்கின்றனர். நம்முடைய பண்பாட்டுக் கூறுகள் கொரியர்களிடம் பல உள்ளன. கற்பு, நாணப் படுதல்,ஆண்களிடம் பேசும்பொழுது வாய்பொத்திப் பேசுதல்,ஏப்பம் விடுவது பெருமை, உறிஞ்சிக்குடித்தல் சிறப்பு எனச் சிற்றூர்ப்புறப் பழக்கம் பல கொரியாவில் உள்ளது என்கிறார்.

தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் நடைபெறும் தமிழ்,இணையம் சார்ந்த மாநாடுகள்,கருத்தரங்குகளில் கலந்துகொள்வதில் ஆர்வம்காட்டுபவர். விடுமுறைகளில் தமிழகம் வந்து செல்லும் கண்ணன் தமிழ் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதும்,வைணவத் திருத்தலங்களை வழிபட்டுச் செல்வதும் வழக்கம்.

நா.கண்ணன் தமிழ் எழுத்துரு, மடலாடற்குழுமம், வலைப்பக்கங்கள், வலைப்பதிவுகள் என்று வளர்ந்துவரும் தமிழ்க்கணினித் துறையுடன் இணைந்தே வளர்ந்து வருகிறார். உத்தமம் எனும் உலகலாவிய தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயற்குழுவில் இருக்கிறார். அவர்கள் வெளியிடும் மின்மஞ்சரி எனும் இதழை நிர்வகித்து வருகிறார். தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும் உள்ளார். இவரது சிந்தனைகளை, ஆக்கங்களைத் தாங்கிப் பல்வேறு வலைப்பதிவுகள் உள்ளன.

இவரது வலைத்தளம் காண!. இவரைப் பற்றிய அறிமுகம் அறிய ! இத்தளங்கள் மூலமாக இவரது வலைப்பதிவு முகவரிகள், நேர்காணல்கள், வானொலிப் பேச்சுக்கள், புத்தகங்கள், ஊடக வெளியீடுகள் இவைகளை அறிந்து கொள்ளலாம்.

தாம் பணிபுரிவது வேற்றுத்துறையாக இருந்தாலும் தமிழர்களின் மரபுச்செல்வங்களைப்
பாதுகாப்பது,ஆய்வது,கட்டுரை,சிறுகதை,கவிதை எழுதுவது எனத் தமிழ் நினைவில் வாழும் கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணி என்றும் நினைவுகூரப்படும்.

நன்றி: தமிழ் ஓசை(நாளிதழ்),களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 4,(19.10.2008), சென்னை, தமிழ்நாடுதொடுப்பு:

முனைவர் மு.இளங்கோவன்
நா.கண்ணன்

போகிற போக்கில்

VoIP (voice over IP) எனும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நமது வலைப்பதிவிலிருந்து வெளிநாட்டு நண்பர்களை, உறவுகளை அழைக்க முடியும். என்ன, சில இடங்களுக்கு அதிகம் பேசமுடிகிறது, சில இடங்களுக்கு குறைந்த நிமிடங்களே பேச முடிகிறது. அவசரச் சேதிகள் இலவசமாகச் சொல்ல இதைவிட வேறு என்ன வேண்டும்? முயற்சி செய்து பாருங்கள்! இந்த வாரக்கடைசிக்குள் என்னுடன் பேச 821042664447

மாமாமியா!! ஹாலிவுட் முயுசிகல்!!

நாற்பது வயதிற்கு மேலுள்ளோர்க்கு ஓர் திரைப்படத்தை சமர்ப்பணம் செய்திருப்பது சாதாரண விஷயமில்லை. உங்களில் எத்தனை பேர் 70களில் ABBA குழுவின் இசையில் சொக்கிப்போனதுண்டு? யாராவது கையைத் தூக்கினால் இப்படம் உங்களுக்கு சமர்ப்பணம் என்று கொள்ளலாம்! படமா இது? கவிதை!! இசையில், படப்பிடிப்பில், நடிப்பில், படத்தின் இடத்தேர்வில்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மெரில்ஸ்டிரீப் சாகும்வரை நடிக்கக்கூடிய ஓர் மிகத்திறமையான நடிகை. இந்த வயதிலும் மீண்டும் அதை நிரூபித்து இருக்கிறார்!!

பெரும்பாலும் மேலைத்திய சினிமாவில் முயுசிகல் என்று எடுத்தால் பாடக்கூடிய நடிகர்களையே தேர்வுசெய்வர் (நம் கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, தியாகராஜபாகவதர் போல்). ஆனால், இப்படத்தில் நம்மவூர் சமகால சினிமா போல் 'வாயசைக்க' வைத்துள்ளனர். முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் நடிகரால் இப்படியானதொரு பாத்திரத்தைச் செய்யமுடியுமென என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. கச்சிதமான வாயசைப்பு.

படத்தின் கதை? பாஞ்சாலி பிள்ளை பெற்றால் தந்தையின் பெயரென்ன?

அகமா? புறமா?

இன்று எனது அமெரிக்க நண்பனான சோமுவுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் புரிதல் நிகழ்ந்தது! அவனும் என்னைப் போல் விஞ்ஞானி. எதற்கெடுத்தாலும் தரவு (data), அதைச் சார்ந்த விளக்கங்கள் (explanations), பரிசோதனைகள் (experiments), கோட்பாட்டு (theory, concept) சோதனை (reproduction of the experiment) இப்படி வளர்ந்தவன். தரவு இல்லாமல் விஞ்ஞானிகளிடம் பேசுவது கடினம் ;-) எனவே பரிசோதனை, விளக்கம் என்று அவன் கேட்டவுடன்தான் எனக்கு வாழ்வின் இருத்தலியல் பிரச்சனை புரிந்தது!

பரிசோதனைகள் இல்லாமல் வாழ்வே இல்லையென்று தோன்றியது. அறிவியல் தோன்றியது வியப்பே இல்லை. மனிதனைப் போன்ற உயர் மதி படைத்த உயிரினத்தில் அறிவியல் இயல்பாகவே தோன்றும் தன்மையது. ஏனெனில், இவனது உடனடிப் பிரச்சனையே தனது இருப்பு பற்றிய பிரக்ஞைதான்.

யோசித்துப்பாருங்கள். காலையில் கண் விழித்தவுடன் முதல் ஆச்சர்யம் நாம் உயிருடன் இருப்பது. சிலர் விழிக்கும் போது 'கை' பார்ப்பது வழக்கம் (அதாவது நான் இருக்கிறேன் என்பதை அறிந்து மகிழ்ச்சி). சிலர் கடவுள் படத்தைப் பார்ப்பது வழக்கம். சிலருக்கு எழுந்தவுடன் யாரையாவது திட்டுவது பழக்கம் ;-) விடிந்த பொழுதிலிருந்து நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும் "நாம்" இருக்கிறோம், வாழ்கிறோம் என்பதை உறுதி செய்யும் முகமாகவே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களோ? சாப்பிடுவதிலிருந்து....இதுவொரு இருத்தலியல் சவால். நம் மூளைக்கும்தான். மூளை அப்படியே பழகியிருக்கிறது. நமது ஐம்பொறிகள் நொடிக்கு நொடி கோடிக்கணக்கான சேதிகளை அள்ளித் தெளித்த வண்ணமுள்ளது. முகர்தல், சுவைத்தல், தொடுதல், பார்த்தல், கேட்டல் இப்படி ஒவ்வொறு செயலும் கோடிக்கணக்கான பிட் களாக மூளைக்குப் போகிறது. மூளை அபாரத் திறமையுடன், சூப்பர் கணினியை விட மிகத்திறமையுடன் செயல்பட்டு ஐம்பொறிகள் அனுப்பும் செய்திகளுக்கான விளக்கங்களை அளித்தவண்ணமுள்ளது. ஊறுகாயைச் சுவைத்தால் புளிப்பு, காரம் என்று விளக்கம் கொடுக்கும். இன்று அம்மா சமையல் "சுமார்"தான் என்று எது விளக்கம் கொடுக்கிறது என்று நினைக்கிறீர்கள்? மூளைதான். மூளை இல்லையெனில் நமக்கு விளக்கமில்லை. நாம் இருக்கிறோம் எனும் உணர்வில்லை. எனவே நம் இருத்தலே சுயபரிசோதனையின் விளைவால். எப்போதும், சதா!! எனவே அறிவியல் என்று நாம் சொல்வது இதன் நீட்சியே!நாம் இருக்கிறோம் வாழ்கிறோம் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். கண்ணாடி பார்ப்பது, முகத்தை நீர் கொண்டு அலசுவது, ரோஜாப்பூவை நுகர்வது போன்ற எளிய செயல்கள் மூலம். ஆனால், நம்மில் பலர் இந்த உணர்வை வேண்டாத எண்ணங்கள் கொண்டு மழுங்கடித்து "மரத்து"ப் போய்விடுமாறு செய்கிறோம். மரத்துப் போன கையைக் கிள்ளினால் கூட வலிக்காது. உணர்வற்ற கையை வெட்டினால் கூட வலிக்காது. இப்படி மரத்துப்போன ஜனங்கள் கூடக்கூட நமக்கு உணர்ச்சி கொடுக்க தீவிரமான நுகர்வுச் செயல்களை உருவாக்குகிறோம். உதாரணமாக, சாதரணமாக சுவைக்கமுடியாத உரப்பான ஊறுகாயை தண்ணி போட்டவுடன் சுவைத்து உண்பான். அதாவது மது எனும் பொருள் நம் நாக்கை தடிக்க வைத்துவிடுகிறது. அதனால் அது மரத்துப்போகிறது. அப்போது அதை உணர வைக்க கூடுதல் காரம் தேவைப்படுகிறது.

"பருத்தி வீரன்" என்றொரு படம். மதுரை வட்டத்து சேர்வை எனும் மக்கள் பற்றிய படம். என் பால பருவ வாழ்வுச்சூழல் முக்குலத்தோர் நிரம்பியது. நினைத்தால் வீச்சு அருவாள்தான். கையை வெட்டுவது, காலை வெட்டுவது என்பது சர்வ சாதாரணம். இப்போது நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது. இது என்ன life style? வன்முறைகள் நிரம்பிய வாழ்வுமுறை? மதுரை சிம்மக்கல்லில் நின்று கொண்டு இருக்கும் போது திடீரென்று எங்கிருந்தோ கல் வந்து விழும். சோடா பாட்டில் உடைந்து சிதறும். எல்லோரும் அறக்கப்பறக்க ஓடுவர். யாருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாது. களேபரத்தில் முடியாதவரோ, வயதானவரோ அடிபட்டு விழுந்தால், போக வேண்டியதுதான். சோடா பாட்டில் கண்ணாடி குத்தி கண் இழந்தால் யாரும் பொறுப்பல்ல! இது என்ன நாகரீகம்? யார் இதை தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதைப் பற்றிய ஓர் சித்திரம்:

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன். (அகநா - 4)

அகநானூறு தரும் இக்காட்சியில் தலைவன் தேரில் வருகிறான். போகும் வேகத்தில் தேரின் மணி ஆடும். இது இயல்பு. ஆனால் அம்மணி எழுப்பும் ஓசை அங்கு கூடி மகிழும் வண்டினங்களைக் கலைத்துவிடுமோ என அஞ்சி மணியின் நாக்கைக் கட்டி விடுகிறானாம் தலைவன்! அடடா! என்ன மெல்லிய உணர்வு. பிறர் துன்பம் தாங்கா இதயம்.

2000 வருடங்களில் என்ன நிகழ்ந்துவிட்டது தமிழகத்திற்கு. ஏன் இந்த சமகால வன்முறை? தமிழகம் செல்லும் ஒவ்வொருமுறையும் எங்கே காரில் அடிபட்டு செத்துப் போவோமோ? எங்கே லாரியில் அடிபட்டுப் போவோமோ? எனும் பயம். இது தானாக எழுப்பிய பயமல்ல. எனது சகாக்களின் உயிரை இவ்வாகனங்கள் வாங்கியிருக்கின்றன. ஒழுங்கற்ற வாழ்வுமுறை எப்போது தமிழகத்தில் வந்தது?

வன்முறை வருவதற்குக் காரணமே நாம் உணர்வால் "மரத்துப்போதலே". மரத்துப்போன இதயங்களுக்கு மற்றோர் துன்பம் தெரியாது. வன்முறையின் மூலமாகவே 'தாங்கள்' வாழ்கிறோம் எனும் உணர்வைப் பெறுகின்றனர்.

இந்தியாவில் வாழ்ந்திருந்தால் பருத்தி வீரனை மற்றோர் போல் ரசித்திருப்பேன் (375 நாட்கள் ஓடியிருக்கிறது). இப்போது முடியவில்லை. மரத்துப்போன வாழ்வுமுறை மாறி எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. 'நான்' வாழ்கிறேன், என்பதை எனக்கு உணர்த்த எளிய வழிகளே போதுமென்று உணர்கிறேன். அதீத பழக்கங்கள், அதீத உணர்ச்சிகளைத் தவிர்க்கிறேன். யோகம் மூலம் உடலையும், உள்ளத்தையும் இணைக்கிறேன். அப்போது வன்முறை கசக்கிறது. நடக்கும் போது தெருவில் பூத்துக் கிடக்கும் சின்னச்செடி கண்ணில் படுகிறது.

தமிழன் சங்கத்திற்கு திரும்ப வேண்டிய அவசியம் புரிகிறது!

சங்கத்திலும் 'புறம்' என்று பேச வருவார்கள். வன்முறை காட்டுவார்கள். மீண்டும் நாம் ஓர் சுழற்சியில் மாட்டிக்கொள்வோம். நமக்கு முன் தெளிவான பாதைகள் தெரிகின்றன. ஒன்றில் எளிமையும், நட்பும், காருண்யமும் தெரிகின்றன. மற்றதில் அவை இல்லை. 'நாம்' வாழ்கிறோம் என்பதை உணரத்தானே இத்தனை முயற்சியும்? ஏன் எளிய சோதனைகளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?

இருத்தலிய சவால் என்பது பூதாகரமாக என் முன் நிற்பதை உணர்கிறேன். பல தத்துவ அறிஞர்கள் மேற்குலகில் இதன் பாரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதுண்டு. எனவே, இந்த இருத்தலியல் சவாலை சமாளிக்கவே பக்தி இலக்கியம் தோன்றியது என்று தோன்றுகிறது. தமிழனுக்கு அகம் சார்ந்த வாழ்வே நிம்மதியைத் தருமென்று பெரியோர் உணர்ந்து இதை சமைத்தனர் போலும். அகம்-புறம் எனப்பார்த்தால் அகம் சார்ந்த தமிழ் வாழ்வே ஆகச் சிறந்தது.

கற்றையியலும் காரணங்களும்

அமித் கோசுவாமி எனும் இந்திய-அமெரிக்க கற்றையியல் (Quantum Physicist)விஞ்ஞானி 'சுய அறிதலுடைய அகிலம்' (Self Aware Universe)எனும் புத்தகம் எழுதப் போய் அதுவே கடவுளின் இருப்பிற்கு அறிவியல் சாட்சி என்று தற்போது அறியப்படுகிறது. இது பற்றி முன்பும் எழுதியிருக்கிறேன். போன இடுகையில் மீண்டும் இது பற்றி பிரஸ்தாபிக்க தருமி அவர்கள் அது பற்றி இன்னும் கொஞ்சம் எழுதும் படி பின்னூட்டம் தந்ததால் இதைப் பின்னூட்டமாக இல்லாமல் முன்னூட்டமாக எழுதுகிறேன்.

அமித் கோசுவாமியின் அறிவியல் கொள்கைகள் பற்றி நான் சொல்லுமுன் அவர் வாயாலேயே கேட்க இங்கே சுட்டுக!

கோசுவாமி தன்னளவில் வீட்டுப்பாடம் (he did his maths, as the scientists say) செய்துவிட்டுத்தான் இக்கோட்பாட்டை முன் வைக்கிறார். அவர் கணித வாதங்களை முன் வைத்தே, அறிவியல் பூர்வமாக இதை விளக்குகிறார். அதை அப்படியே சொல்லும் திறன் எனக்கில்லை. எனவே அப்புத்தகத்திலிருந்து நான் முன்பு கிரகித்ததை வைத்தும், அவரது நேர்காணலை மீண்டும் வாசித்ததிலிருந்தும் 'என் மொழியில்' எழுதுகிறேன். இவ்வளவு முஸ்தீபு எதற்கென்றால் அறிவியலை நான் ஆன்மீகம் கொண்டு கொச்சைப்படுத்திவிட்டேன் எனும் பழி வரக்கூடாது என்பதற்காக.

அனைத்து அறிவியலும் காணும் உலகை கட்டிக்காக்கும் பருப்பொருள் (அணு, மூலக்கூறு, தனிமங்கள், காற்று, நீர், மண்)தான் பிரபஞ்சத்தின் ஆதாரம், அஸ்திவாரம் என்ற கணக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதன், கடவுள், அதீத உணர்வுகள், பரிமாணம் கடந்த நிலை, அநுபூதி இவை பற்றி அறிவியல் கண்டு கொண்டாலும் அதில் இன்னும் காலை வைக்கவில்லை. காரணம் அது விளங்கமுடியாத்தன்மை கொண்டதாய் இருப்பதால். இதை 20 நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் உருவான கற்றை இயல் உடைத்திருக்கிறது. அது வந்த பிறகு அறிவியலாரும் நம்மாழ்வார் போல பேச ஆரம்பித்துவிட்டனர். உம். 'உளன் எனில் உளன், இலன் எனில் இலன்' என்பது போல் (அணுவின் இலத்திரன் இருக்கிறது, இல்லாமலும் இருக்கிறது). இந்தக் கற்றை இயலை வைத்து அமித்கோசுவாமி பிரபஞ்சத் தோற்றம், இருப்பு இதற்குக் காரணம் பருப்பொருள் இல்லை, 'ஆன்மாவே' என்று நிரூபிக்கிறார். இங்கு ஆன்மா என்பதை அவசரப்படாமல் புரிந்துகொள்ள வேண்டும் (The idea that consciousness is the ground of all being).

சுய அறிதல் எனும் பரிமாணம் வரும் முன் பிரபஞ்சத்தோற்றம் என்பது பல்வேறு சாத்தியங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆயின் பிரக்ஞை தோன்றியவுடன் அலைவரிசை குலைக்கப்பட்டு நிகழ்வு சாத்தியப்படுகிறது (collapse of the wave function). இதையெல்லாம் விவரமாக விளக்குகிறார் புத்தகத்தில். இதன் மேல் விளக்கம் அவரது நேர்காணலில் உள்ளது.

புத்தகம் வாசித்து முடித்தவுடன் திருமழிசை ஆழ்வார் ஏன்,

நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை


என்று சொல்கிறார் என்பது புரிகிறது. நாத்திகம் பேசினாலும், ஆத்திகம் பேசினாலும் கடவுளின் இருப்பிற்கு மனிதனே சாட்சியாக அமைகிறான். அவனின்றி இறைத்தத்துவம் இல்லை. ஏனெனில் அவனது சுய அறிதலே இறைவனின் இருப்பைக் கண்டு கொள்கிறது. எனவே அமித் கோசுவாமியும் ஆழ்வார்களும் ஒன்றையேதான் பேசுகின்றனர், வெவ்வேறு மொழியில், வெவ்வேறு உதாரணங்கள் கொண்டு.

இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான்! உன்னை, - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்.

கடைசி வரிகள்தான் முக்கியம். காரணன் அவன், கற்பவை அவன், செய்யும் செயலும் அவனே.

இது கீழத்திய தத்துவங்களின் அடிநாதமாக இருக்கும் போது மேலைத்திய வழிமுறையில் சிலராலேயே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இனிமேல் இத்துறை வளரும். அறிவியல் இறைவனை முழுவதும் காட்டுமா? என்பது ஒருபுறமிருக்க. அறிவியல் இறைவனைப் புரிந்து கொள்ளத் தடையாக இருக்காது என்றளவில் இவை நிம்மதியளிக்கின்றன.