அகமா? புறமா?

இன்று எனது அமெரிக்க நண்பனான சோமுவுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்தப் புரிதல் நிகழ்ந்தது! அவனும் என்னைப் போல் விஞ்ஞானி. எதற்கெடுத்தாலும் தரவு (data), அதைச் சார்ந்த விளக்கங்கள் (explanations), பரிசோதனைகள் (experiments), கோட்பாட்டு (theory, concept) சோதனை (reproduction of the experiment) இப்படி வளர்ந்தவன். தரவு இல்லாமல் விஞ்ஞானிகளிடம் பேசுவது கடினம் ;-) எனவே பரிசோதனை, விளக்கம் என்று அவன் கேட்டவுடன்தான் எனக்கு வாழ்வின் இருத்தலியல் பிரச்சனை புரிந்தது!

பரிசோதனைகள் இல்லாமல் வாழ்வே இல்லையென்று தோன்றியது. அறிவியல் தோன்றியது வியப்பே இல்லை. மனிதனைப் போன்ற உயர் மதி படைத்த உயிரினத்தில் அறிவியல் இயல்பாகவே தோன்றும் தன்மையது. ஏனெனில், இவனது உடனடிப் பிரச்சனையே தனது இருப்பு பற்றிய பிரக்ஞைதான்.

யோசித்துப்பாருங்கள். காலையில் கண் விழித்தவுடன் முதல் ஆச்சர்யம் நாம் உயிருடன் இருப்பது. சிலர் விழிக்கும் போது 'கை' பார்ப்பது வழக்கம் (அதாவது நான் இருக்கிறேன் என்பதை அறிந்து மகிழ்ச்சி). சிலர் கடவுள் படத்தைப் பார்ப்பது வழக்கம். சிலருக்கு எழுந்தவுடன் யாரையாவது திட்டுவது பழக்கம் ;-) விடிந்த பொழுதிலிருந்து நாம் செய்யும் ஒவ்வொரு செய்கையும் "நாம்" இருக்கிறோம், வாழ்கிறோம் என்பதை உறுதி செய்யும் முகமாகவே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களோ? சாப்பிடுவதிலிருந்து....இதுவொரு இருத்தலியல் சவால். நம் மூளைக்கும்தான். மூளை அப்படியே பழகியிருக்கிறது. நமது ஐம்பொறிகள் நொடிக்கு நொடி கோடிக்கணக்கான சேதிகளை அள்ளித் தெளித்த வண்ணமுள்ளது. முகர்தல், சுவைத்தல், தொடுதல், பார்த்தல், கேட்டல் இப்படி ஒவ்வொறு செயலும் கோடிக்கணக்கான பிட் களாக மூளைக்குப் போகிறது. மூளை அபாரத் திறமையுடன், சூப்பர் கணினியை விட மிகத்திறமையுடன் செயல்பட்டு ஐம்பொறிகள் அனுப்பும் செய்திகளுக்கான விளக்கங்களை அளித்தவண்ணமுள்ளது. ஊறுகாயைச் சுவைத்தால் புளிப்பு, காரம் என்று விளக்கம் கொடுக்கும். இன்று அம்மா சமையல் "சுமார்"தான் என்று எது விளக்கம் கொடுக்கிறது என்று நினைக்கிறீர்கள்? மூளைதான். மூளை இல்லையெனில் நமக்கு விளக்கமில்லை. நாம் இருக்கிறோம் எனும் உணர்வில்லை. எனவே நம் இருத்தலே சுயபரிசோதனையின் விளைவால். எப்போதும், சதா!! எனவே அறிவியல் என்று நாம் சொல்வது இதன் நீட்சியே!நாம் இருக்கிறோம் வாழ்கிறோம் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும். கண்ணாடி பார்ப்பது, முகத்தை நீர் கொண்டு அலசுவது, ரோஜாப்பூவை நுகர்வது போன்ற எளிய செயல்கள் மூலம். ஆனால், நம்மில் பலர் இந்த உணர்வை வேண்டாத எண்ணங்கள் கொண்டு மழுங்கடித்து "மரத்து"ப் போய்விடுமாறு செய்கிறோம். மரத்துப் போன கையைக் கிள்ளினால் கூட வலிக்காது. உணர்வற்ற கையை வெட்டினால் கூட வலிக்காது. இப்படி மரத்துப்போன ஜனங்கள் கூடக்கூட நமக்கு உணர்ச்சி கொடுக்க தீவிரமான நுகர்வுச் செயல்களை உருவாக்குகிறோம். உதாரணமாக, சாதரணமாக சுவைக்கமுடியாத உரப்பான ஊறுகாயை தண்ணி போட்டவுடன் சுவைத்து உண்பான். அதாவது மது எனும் பொருள் நம் நாக்கை தடிக்க வைத்துவிடுகிறது. அதனால் அது மரத்துப்போகிறது. அப்போது அதை உணர வைக்க கூடுதல் காரம் தேவைப்படுகிறது.

"பருத்தி வீரன்" என்றொரு படம். மதுரை வட்டத்து சேர்வை எனும் மக்கள் பற்றிய படம். என் பால பருவ வாழ்வுச்சூழல் முக்குலத்தோர் நிரம்பியது. நினைத்தால் வீச்சு அருவாள்தான். கையை வெட்டுவது, காலை வெட்டுவது என்பது சர்வ சாதாரணம். இப்போது நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது. இது என்ன life style? வன்முறைகள் நிரம்பிய வாழ்வுமுறை? மதுரை சிம்மக்கல்லில் நின்று கொண்டு இருக்கும் போது திடீரென்று எங்கிருந்தோ கல் வந்து விழும். சோடா பாட்டில் உடைந்து சிதறும். எல்லோரும் அறக்கப்பறக்க ஓடுவர். யாருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாது. களேபரத்தில் முடியாதவரோ, வயதானவரோ அடிபட்டு விழுந்தால், போக வேண்டியதுதான். சோடா பாட்டில் கண்ணாடி குத்தி கண் இழந்தால் யாரும் பொறுப்பல்ல! இது என்ன நாகரீகம்? யார் இதை தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதைப் பற்றிய ஓர் சித்திரம்:

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன். (அகநா - 4)

அகநானூறு தரும் இக்காட்சியில் தலைவன் தேரில் வருகிறான். போகும் வேகத்தில் தேரின் மணி ஆடும். இது இயல்பு. ஆனால் அம்மணி எழுப்பும் ஓசை அங்கு கூடி மகிழும் வண்டினங்களைக் கலைத்துவிடுமோ என அஞ்சி மணியின் நாக்கைக் கட்டி விடுகிறானாம் தலைவன்! அடடா! என்ன மெல்லிய உணர்வு. பிறர் துன்பம் தாங்கா இதயம்.

2000 வருடங்களில் என்ன நிகழ்ந்துவிட்டது தமிழகத்திற்கு. ஏன் இந்த சமகால வன்முறை? தமிழகம் செல்லும் ஒவ்வொருமுறையும் எங்கே காரில் அடிபட்டு செத்துப் போவோமோ? எங்கே லாரியில் அடிபட்டுப் போவோமோ? எனும் பயம். இது தானாக எழுப்பிய பயமல்ல. எனது சகாக்களின் உயிரை இவ்வாகனங்கள் வாங்கியிருக்கின்றன. ஒழுங்கற்ற வாழ்வுமுறை எப்போது தமிழகத்தில் வந்தது?

வன்முறை வருவதற்குக் காரணமே நாம் உணர்வால் "மரத்துப்போதலே". மரத்துப்போன இதயங்களுக்கு மற்றோர் துன்பம் தெரியாது. வன்முறையின் மூலமாகவே 'தாங்கள்' வாழ்கிறோம் எனும் உணர்வைப் பெறுகின்றனர்.

இந்தியாவில் வாழ்ந்திருந்தால் பருத்தி வீரனை மற்றோர் போல் ரசித்திருப்பேன் (375 நாட்கள் ஓடியிருக்கிறது). இப்போது முடியவில்லை. மரத்துப்போன வாழ்வுமுறை மாறி எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. 'நான்' வாழ்கிறேன், என்பதை எனக்கு உணர்த்த எளிய வழிகளே போதுமென்று உணர்கிறேன். அதீத பழக்கங்கள், அதீத உணர்ச்சிகளைத் தவிர்க்கிறேன். யோகம் மூலம் உடலையும், உள்ளத்தையும் இணைக்கிறேன். அப்போது வன்முறை கசக்கிறது. நடக்கும் போது தெருவில் பூத்துக் கிடக்கும் சின்னச்செடி கண்ணில் படுகிறது.

தமிழன் சங்கத்திற்கு திரும்ப வேண்டிய அவசியம் புரிகிறது!

சங்கத்திலும் 'புறம்' என்று பேச வருவார்கள். வன்முறை காட்டுவார்கள். மீண்டும் நாம் ஓர் சுழற்சியில் மாட்டிக்கொள்வோம். நமக்கு முன் தெளிவான பாதைகள் தெரிகின்றன. ஒன்றில் எளிமையும், நட்பும், காருண்யமும் தெரிகின்றன. மற்றதில் அவை இல்லை. 'நாம்' வாழ்கிறோம் என்பதை உணரத்தானே இத்தனை முயற்சியும்? ஏன் எளிய சோதனைகளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?

இருத்தலிய சவால் என்பது பூதாகரமாக என் முன் நிற்பதை உணர்கிறேன். பல தத்துவ அறிஞர்கள் மேற்குலகில் இதன் பாரம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதுண்டு. எனவே, இந்த இருத்தலியல் சவாலை சமாளிக்கவே பக்தி இலக்கியம் தோன்றியது என்று தோன்றுகிறது. தமிழனுக்கு அகம் சார்ந்த வாழ்வே நிம்மதியைத் தருமென்று பெரியோர் உணர்ந்து இதை சமைத்தனர் போலும். அகம்-புறம் எனப்பார்த்தால் அகம் சார்ந்த தமிழ் வாழ்வே ஆகச் சிறந்தது.

8 பின்னூட்டங்கள்:

Anonymous 10/06/2008 01:55:00 PM

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

Karthigesu 10/07/2008 10:35:00 PM

செய்யுங்கள் கண்ணன். இது முக்கியம் என்றே என்ணுகிறேன். உங்கள் வலைப்பூ கருத்துக்கள் இன்னும் படர்ந்த வாசகக் கூட்டத்திற்குப் போக வேண்டும்.

ரெ.கா.

சுரேஷ் கண்ணன் 10/09/2008 06:14:00 PM

கண்ணன்,

சுவாரசியமான, சிந்திக்க வைக்கும் பதிவு.

ஒரு சிறிய சந்தேகம்.

ஆனால் 2000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தில் (அது எந்தச் சமூகமாக இருந்தாலும்) வன்முறை பெரிதளவில் இல்லாமல் இருந்திருக்கும் என்று நம்புவீர்களா? ஒரு சங்கப்பாடலை கொண்டு இதை நிறுவ முடியுமா? இன்றைக்கு எழுதப்படும் ஒரு மென்மையான கவிதையை அளவுகோலாகக் கொண்டு 2000 வருடம் கழித்து ஒருவர் 2008-ல் வன்முறை கலாச்சாரம் இல்லை என்று அவதானித்துக் கொண்டால் அது எவ்வளவு அபத்தமானதாக இருக்கும்?

எல்லா உயிரினங்களையும் போல மனித சமூகத்தின்னுள்ளும் வன்முறை உறைந்துள்ளது. நாகரிகம்,அறம்சார்ந்த சிந்தனை, ஒழுக்கம்,பயம் போன்றவற்றால் அது மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் கூட அது நீறுபூத்த நெருப்புதான். வன்முறைக்காக வாதாடுவதற்காக இதைக் கூறவில்லை. யதார்த்தம் அப்படித்தானே இருக்கிறது. 2000 வருடங்களுக்கு முன்னரும் பல போர்கள் நிகழ்ந்திருப்பதை வரலாறு சொல்லும் போது அதை நம்பத்தான் வேண்டியிருக்கிறது இல்லையா?

நா.கண்ணன் 10/09/2008 07:25:00 PM

இந்த இடுகையில் இன்னும் நிருவ வரவில்லை. அதை வைரம் அவர்கள் 100வது இடுகையில் கொண்டு சேர்ப்பேன். இப்பதிவில் இரண்டு பாதைகள் தெரிகின்றன எதை எடுத்தால் எளிய வழியில் "நாம்" உள்ளோம் என்பதை உணரமுடியும் என்று மட்டும் சொல்கிறேன். சங்கம் தமிழர்களை எவ்வழிக்குத்திருப்பியது அதற்கு சமூக வன்முறை எவ்வளவு தூரம் பின்புலமாக இருந்தது என்பதை பின்னால் காண்போம்.

R.DEVARAJAN 10/16/2008 12:24:00 PM

அகம் சார்ந்த வாழ்க்கையால் மட்டுமே அமைதி என்பதை அழகுற விளக்கியுள்ளீர்கள். பின்னூட்டமிட்ட நண்பர்களும் புரிந்துகொண்டு வரவேற்றுள்ளனர். ‘சுண்டல்’ என்று ஒதுக்குவரோ எனும் அச்சத்தோடு அப்பகுதியைப் பார்த்தேன். மகிழ்ச்சி!

தேவ்

நா.கண்ணன் 10/16/2008 01:49:00 PM

நன்றி, தேவராஜன் ஐயா. அகம் சார்ந்த வாழ்வு பற்றி இன்னும் தெளிய நிறைய உள்ளது. இன்னொரு பதிவு விரைவில் வரும்.

பத்மா அர்விந்த் 11/23/2008 05:57:00 AM

I understand what you mean by numbness. On the same token, over production and less supply will lead to survival of the fittest. When you want to win something be it the same existence, there will be violence. Animal kingdom has the same message and so it is difficult to believe that violence is a recent livelihood. It may have increased as the competition and materialis has increased. I am sorry that my tamil fonts are not working

நா.கண்ணன் 11/23/2008 08:54:00 AM

dear Padma: At times I wonder whether the laws that apply to animals do apply to man. In fact, on earth, we have more than enough to sustain humanity, however, due to lack of global governance and distribution problems people starve or die for want of food. Humans are unique. They problem of man is not physical but psychological. The path of love discovered by early Tamils which lead to Bakthi movement and the message of Buddha are the only salvation to humanity. There is no need to engage in eternal war for self preservation, instead proper governance will lead to a peaceful existence (this includes survival of other species as well).