விளங்கிக்கொள்ளத்தக்க விலங்குமனம்!

"விலங்கு மனம்" எனும் பதம் சிவபுராணத்தில் வருகிறது! விலங்குமனமறியும் நவீன துறைக்கு Animal Behaviour Science or Ethology என்று பெயர். தொழில்துறை முன்னேற்றத்தால், குறிப்பாக ஒளிப்பதிவுத்துறை கண்டிருக்கும் அளப்பரிய முன்னேற்றத்தால் முன்னெப்போதுமில்லாத அளவு விலங்குகள் பற்றிய ஆவணம், ஆய்வு இப்போது நடந்து வருகிறது. இரவில் விலங்களைக் காண Infrared Camera, குழியில் புதைந்து, கூட்டிற்குள் வாழும் விலங்களைக் காண சின்னச் சின்ன remote control camera. தூரத்தில் நடக்கும் விலங்குத் துரத்தலை எட்ட இருந்து பிடிக்க, தொலைக்காட்சி கேமிரா என எத்தனையோ வளர்ச்சிகள். மேலும் பி.பி.சி, நேஷனல் ஜியாகிரபிஃக் போன்ற தொலைக்காட்சித்தளங்கள் ஆச்சர்யப்படத்தக்க ஆவணப்படங்களைக் கொண்டு வந்த பின் சுற்றுலாப் பயணிகள் கூட இப்போது படமெடுக்க வந்துவிட்டனர்! இதோ ஓர் ஆச்சர்யமான படம்!காட்டு எருமைகள் 1 டன் எடையுள்ளவை. அவை கால் பட்டால் கூட நம் எலும்பு முறிந்துவிடும். அவை குத்தினால் சொல்லவே வேண்டாம்! ஆயினும் அவை சிங்கங்களுக்குப் பயப்படுவது ஆச்சர்யம்தான். இந்த 'பயம்' என்பது இல்லையெனில் வாழ்வின் சுழற்சி நின்றுவிடும் போலுள்ளது. படைப்பு பற்றிப் பேசும் உபநிடதம் இப்படிச் சொல்கிறது. யோக நித்திரையில் இருக்கும் பரந்தாமன், பிரபஞ்சம் உருவாகட்டுமென நினைத்து பிரமனையும், தேவர்களையும், ஐம்பூதங்களையும் உருவாக்குகிறான். இவை செயல்பட "பசி, தாகம்" இரண்டையும் உருவாக்குகிறான். இந்த இரண்டும்தான் உயிரை ஓடவைக்கும் சக்திகள். ஆப்பிரிக்க ஆவணங்களைப் பார்த்தால் உணவிற்காக பல்லாயிரம் மைல்கள் நடக்க, பறக்க விலங்குகள் தயாராயுள்ளன. எத்தனையோ இடர்களுக்கிடையில் வலசை போகின்றன! இந்த இரண்டிற்கும் இடையில்தான் உயிரெனும் நாடகமே! "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்பது மனித மொழியும் கூட!

இப்படத்தில் காட்டெருமைக்கூட்டம் போகும் வழியில் சிங்கங்கள் இருக்கின்றன. எருமைகள் சேர்ந்து திமு, திமுவென வந்திருந்தால் சிங்கம் விலகியிருக்கும். ஆனால் முதலில் ஒரு குடும்பம் வருகிறது. சும்மா வம்பிற்கிழுக்க சிங்கங்கள் பாய்கின்றன. அதாவது இது என் இருப்பு. இதைத்தாண்டிப் போகும் உரிமை உனக்கில்லை என்பது போல். இந்தியருள் சில சாதிக்காரர்கள் வாழும் தெருவில் சில சாதிக்காரர்கள் போனால் இப்படித்தான் வம்பாகிவிடும்!

சிங்கம் பெரிய வேட்டையை விட்டு கன்றைப் பிடிக்கிறது. ஏனெனில் கன்று பாதுகாப்பற்றது. வேட்டை எளிது. நாமும் பலவீனமானவர்களைத்தானே தாக்குகிறோம். உம். குழந்தைகளை, பெண்களை, சோணிகளை!

எருமைக் கன்று முதலை வாயில் ஒருபுறம், சிங்கத்தின் வாயில் ஒருபுறமென இழுபடுகிறது. நாம் நினைப்போம் அது நாராய்க்கிழிந்து, இரத்தமாய் போயிருக்குமென்று. ஆனால், அப்படி நடக்கவில்லை! எருமைக்கூட்டம் வருமளவும் கன்று தாக்குப்பிடித்து தப்பிவிடுகிறது! இந்த பலத்தை வழங்கியவன் எவன்?

எருமைக்கும், சிங்கத்திற்கும் பகை என்று யார் நிர்ணயம் செய்தது? எருமைகள் சிங்கங்களைக் கொல்வதுமுண்டு. குறிப்பாக சிங்கக்குட்டிகளை! சிங்கம் வீராப்பான மிருகமெனினும் அது கழுதைப் புலிகளுக்கு பயப்படுவதுண்டு. எனவே, தனியாக ஒரு கழுதைப்புலி மாட்டினாலோ, குட்டிகள் கிடைத்தாலோ சிங்கம் இரக்கமின்றி கொன்றுவிடும். இந்த உணர்வு எப்படித் தங்கியது?

பகை உணர்வின் அடிப்படை என்ன? ஏன் மனிதர்களுக்கு இத்தகைய பகை உணர்வு உள்ளது?

விலங்கு மனத்தை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும். அதன் பின்தான், மாணிக்கவாசகர் என்ன பேச வருகிறார் என்பது புரியும்!

3 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் 10/30/2008 01:19:00 PM

நீங்கள் இதே படத்துக்கான செய்தியை முன்பே வேறு விதமாக எழுதி இருக்கிறீர்கள் !

:)

வடுவூர் குமார் 10/30/2008 04:16:00 PM

நாமும் பலவீனமானவர்களைத்தானே தாக்குகிறோம். உம். குழந்தைகளை, பெண்களை, சோணிகளை!

அன்று பார்த்தேன்,இன்றும் பார்க்கிறேன் - இப்படிப்பட்ட நிகழ்வுகளை.

நா.கண்ணன் 10/30/2008 04:27:00 PM

பாருங்களேன்! அது கூட மறந்து விட்டது!!

இந்த வீடியோ மின்தமிழ் இடுகையாக அக்டோபர் 28 வந்தபோது மீண்டும் ரசித்து, மீண்டுமொறு பதிவு இட்டிருக்கிறேன். சில எண்ணங்கள் அப்படியே இருந்தாலும், புதிய எண்ணச் சேர்க்கை சுவாரசியமாகத்தான் உள்ளது!

மிக்க நன்றி. என்னை மீண்டும் பார்க்க வைத்ததற்கு!!