மண்மேல் மலியப் புகுந்து இசைபாடி

பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறான் மனிதன். இப்பூவுலகை முழுமையாகத் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தாகிவிட்டது. இருப்பினும்,இத்தகைய வளர்ச்சிக்கேற்ற இறையாண் குணங்களோ, பூரணத்துவமோ அவனிடம் வந்ததாகத் தெரியவில்லை. குடை சாய்ந்த வண்டி போல் உள்ளது மனித வாழ்வு. தொழில்நுட்ப வளர்ச்சி எங்கோ எட்டத்தில் நிற்கிறது. உலகு முழுமையும் செய்நிலா கொண்டு கண்காணித்து காபந்து செய்யமுடிகிறது. ஆனால் உலகம் ஓர் ஆட்சியில் இல்லை. பல்வேறு நாடுகளாக, இனங்களாக, குழுக்களாக, ஜாதிகளாகப் பிரிந்திருக்கிறோம். விவசாயத்துறையின் வளர்ச்சியில் போக, போகம் காணமுடிகிறது. ஆனால், தெரு ஓரத்தில் எச்சில் நாயைவிடக் கேவலமான வாழ்வைப் பலகோடி மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கல்வி-கேள்விகளில் உலகம் எங்கோ நிற்கிறது. எத்தனை அறிவின் வளர்ச்சி! ஆனால், படிப்பறிவு இல்லாதோர் எண்ணிக்கை இன்னும் பலகோடிதான். மனித வாழ்வு முரண்பாடுகள் கொண்ட மேருவாக நிற்கிறது.

எங்கோ தவறு நடந்திருக்கிறது! நம்மைப்பற்றிய தெளிவான புரிதல் நம்மிடம் இல்லை. நம்மைச் சுற்றியுள்ளவை பற்றிய தெளிவும் சரியாக இல்லை. இல்லையெனில், இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னமே தமிழகத்தில் வறுமையும், பசிக்கொடுமையும் இல்லாதிருந்தால் வள்ளுவன் ஏன் "இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்துகெடுக உலகு இயற்றியான்" என்று திட்டப்போகிறான். இல்லை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று ஏன் தனியாக சுட்டிக்காட்டப்போகிறான். ஆரம்பத்திலேயே தவறான பாதையில் போய் இருக்கிறோம் போலிருக்கிறது.

இருப்பதைப் பகிர்ந்துண்டு, எல்லோரையும் அன்பாகக் கண்டு, ஆனந்தமாக இருக்க நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உண்மையிலேயே நாம் இந்த உடலா? அதன் இச்சைகளா? அதன் அடையாளங்களா? உடல் காக்கும் எல்லைகளா? எல்லை காக்கும் காவல்காரன் என்பது மட்டுமே நம் அடையாளமா? இல்லை, நம் அடையாளம் வேறா?

இக்கேள்விக்கான விடையை சிலர் என்றோ கண்டுவிட்டனர். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் போது, அல்லது இப்புரிதலைப் பரவலாக்கும் போது ஏற்படும் இடர்பாடுகளால் இன்றளவும் மானுடம் துக்கசாகரத்தில் மூழ்கித்தவிக்கிறது.

எந்த வேதத்தைத் தொட்டாலும் "சர்வம் பிரம்மம்" என்பது ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கிறது. நாம் குடிசை வாசிகள் அல்ல. விபு! அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருக்கும் விபு! ஆனாலும், நமது இருப்பை ஓர் சின்ன உடலுக்குள் அடைத்து வைத்துக்கொண்டு அவதிப்படுகிறோம். மனிதனின் சமூக வாழ்வு இந்தக்கட்டுமானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவிட்டதால் இதை உடைத்தெறிந்து நம்மால் வாழமுடியாதவாறு ஓர் சிறைக்கைதி ஆகிவிட்டோம். இதிலிருந்து மீண்டு, வெளிவர எத்தனித்த சமூகங்கள் சாதுக்கள் என்று சொல்லி தேசாந்திரிகளாகவோ இல்லை காடுகளிலோ வாழத்தலைப்பட்டுவிட்டன.

எஞ்சியிருக்கும் நம்மைப்போன்ற இல்லற வாசிகளுக்கு இச்சேதியைச் சொல்ல வந்ததுதான் பாகவதமும், பகவத்கீதையும்! நாம் அடிப்படையில் வெறும் உடல் மட்டுமல்ல. அதையும் மேவிய ஆருயிர். அவ்வுயிர் எங்கும் பரந்து பட்டு, ஆனந்த மயமாக எப்போதும் உள்ளது. மாறும் உடல் வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி என்பது பயணவெளி. அது எப்போதும் மாற்றமுற்ற வண்ணமே இருக்கும். ஆனால், மாற்றமுறா வண்ணம் உடல் மீது கரந்தெங்கும் பரந்துளது ஓர் சுடர். அச்சுடர் இறைவன். அவன் அங்கமாக நாம் உளோம். ஒளி தாங்கும் அகல் போல் நாம் உள்ளோம். இந்த நினைவை நமக்கு அடிக்கடிச் சொல்ல வருவதுதான் பக்தி. எனவே நாம் காணும் குடும்பம், மனைவி மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், பல்கிப்பரவி இருக்கும் இப்பிரபஞ்சம் இவை அனைத்தும் ஓர் அன்புப் பிடிக்குள், கண்காணா கட்டுக்குள் அடைப்பட்டு இருக்கின்றன எனச் சொல்லி பரஸ்பர நட்பையும், இறைமை இடத்தில் வாஞ்சையையும் உருவாக்க வந்தவையே நம் வேதங்களும், உபநிடதங்களும், பாகவதமும்...பாரதியும்!

இச்சேதி காலம், காலமாக குருபரம்பரை வம்சாவளியாக இந்தியா முழுவதும் சொல்லப்பட்டு, வழிமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. 20ம் நூற்றாண்டில் இச்சேதி நம் மண் தாண்டி அயல்நாடு செல்கிறது. இச்சேதிக்குள் சுயமான ஓர் உந்நதம் இல்லையெனில் இன்று கோடிக்கணக்கான வெள்ளையரும், பிறரும் நம்மாழ்வாரும், புரந்தரதாசரும், அன்னமாச்சாரியரும், கிருஷ்ண சைத்தன்னியரும் வளர்த்தெடுத்த பாகவத சம்பிரதாயத்தைப் பின்பற்றுவர் என்று சொல்லமுடியாது. இச்சேதி இன்று நாடு கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து, புவியெங்கும் பரவிக் கிடக்கிறது. இதன் அறைகூவலை தென்தமிழ் நாட்டின் குக்கிராமமொன்றில், மரத்தின் பொந்திற்குள் குடிகொண்ட மாறன் சடகோபன் எனும் தமிழன் என்றோ சொல்லிவிட்டுப் போய்விட்டது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

பொலிக பொலிக பொலிக
போயிற்று வல்லுயிர்ச்சாபம்!
நலியும் நரகமும் நைந்த
நமனுக் கிங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொள்மின்!
கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி
ஆடி உழி தரக் கண்டோம்!!

0 பின்னூட்டங்கள்: