ஆரத்தழுவும்

இந்த வீடியோ சில காலமாக கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கிறது. சுவாரசியான ஒரு சேதியைச் சொல்லவிழைகிறது இக்குறும்படம். முதலில் பாருங்கள்....ஆசியர்களுக்குப் பொதுவான ஒரு வழக்கமுண்டு. முடிந்தவரை ஒருவரையொருவர் தொடாமல் இருப்பது. இந்தியாவில் கை கூப்பி விடுவோம். கொரிய, ஜப்பானியர் தலை வணங்கி விடுவர். இஸ்லாமியப் பெண்களோ முகத்தையே காட்டுவதில்லை. எந்த அங்கமும் வெளியே தெரியக் கூடாது என்பது அவர்கள் கோட்பாடு.

இந்தப் பின்னணியில் இப்படம் புதிய சேதியைச் சொல்கிறது. வாருங்கள் தழுவுவோம்! இதற்குச் செலவில்லை, இது இலவசமே! என்பது வாசகம்!

ஏன் இலவசமாக இன்னொருவரைத்தழுவ வேண்டும்? தழுவும் போது என்ன நடக்கிறது?

தழுவல் என்பது சுவாரசியமான விஷயமே! இரண்டு உடல்கள் மிக நெருங்கி வரும் தருணம். இதயம், இதயத்தோடு கூடும் தருணம். நெஞ்சொடு நெஞ்சு கலக்கும் தருணம். அப்போது காதல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

காதல் என்றால் காதலன் - காதலி சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடமுடியாது. ஒரு அப்பா பிள்ளையைத் தழுவதில்லையா? "உன்னைத் தழுவிடலோ கண்ணம்மா! உந்மத்தமாகுதடீ!" என்று பாரதி பாடவில்லையா? எனவே அதுவும் காதல்தான். நண்பர்கள் தழுவிக்கொள்ளுதல் நட்பின் முகமாக அமைவது! அடிப்படையில் காதலைச் சொல்ல வருவது தழுவல். அதுவொரு அந்நியோன்யத்தைக் கொண்டு வருகிறது. சிலருக்கு எல்லோரிடமும் அந்நியோன்யமாக இருக்கப்பிடிக்கும். பலருக்குப் பிடிப்பதில்லை. அதுவும் பொது இடத்தில் தோளொடு தோள் கோர்த்துத் தழுவுதல் என்றால்? அப்பா! சபைக்கூச்சம் வேறு!!

நம்மாழ்வார் இங்கொரு தழுவலைப்பற்றிப் பேசுகிறார். காதலி, காதலன் ஞாபகமாக இருக்கிறாள். செந்தீ சுடுமென்று அறியாது (அல்லது அறிந்தே!) அதைத்தழுவி அது அச்சுதனைத் தழுவியது போல் இருக்கிறது என்கிறாள். குளிர் காற்றைத்தழுவி விட்டு கோவிந்தனைத் தழுவியது போலுள்ளது என்கிறாள்.


அறியும்செந் தீயைத் தழுவி
அச்சுதன் என்னும்மெய் வேவாள்,
எறியும்தண் காற்றைத் தழுவி
என்னுடைக் கோவிந்தன் என்னும்,
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே
. 4.4.3


தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! உன்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதய்யே நந்தலாலா! எனும் வரிகளுக்கு ஆதர்சனம் திருவாய்மொழி என்று தெரிகிறது!

நம்மாழ்வார் பேசும் தழுவலில் எவ்வளவு காதல் தெரிகிறது! ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

4 பின்னூட்டங்கள்:

Satheesh kumar R 11/22/2008 01:07:00 PM

ஆரத்தழுவல் அபரிமித இன்பம்தான், இறுகத் தழுவினால் இறைவனும் நம்முள்ளே உறைவான்.

நம்மூரில் இப்படி ஒரு பலகையை எழுதிவைத்து நின்றால் என் கதி அதோகதிதான்.. ;-)

நா.கண்ணன் 11/22/2008 01:13:00 PM

கொரியாவிலும் எவ்வளவு கூச்சம் என்று பாருங்கள்! ஐரோப்பாவில் கன்னத்தில் கன்னம் வைத்து முத்தம் (வெறும் வாயசைப்பே) கொடுப்பது வழக்கம். அதிலும் வட ஐரோப்பியர்கள் கை குலுக்கலுடன் கதையை முடித்துவிடுவர் :-)

குமரன் (Kumaran) 11/22/2008 11:15:00 PM

நான் இன்னும் என் குடும்பத்தவரைத் தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தழுவிக் கொண்டிருக்கிறேன். குடும்பத்தைத் தாண்டி தழுவல்கள் இன்னும் செல்லவில்லை. :-)

நா.கண்ணன் 11/23/2008 09:26:00 AM

குமரன்: லியோ புஸ்காலியா மீட்டிங்குகளுக்குப் போனால் ஆரத்தழுவும் வாய்ப்புக் கூடும்!