அபியும் நானும் (சினிமா)

வன்முறை, கவர்ச்சி இவைதான் தமிழ் சினிமாவை இயக்கும் சக்திகள் என்று பரவலாக நம்பப்பட்டாலும் அவ்வப்போது அப்படி இல்லை என்று சொல்லுமாற்போல் சில படங்கள் வரத்தான் செய்கின்றன. உண்மையில் 'சுப்பிரமணியபுரம்' படம் பார்த்த பின் அபியும் நானும் பார்த்தது பெரிய ஆறுதல். நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படும் சமயங்கள் தமிழகத்தின் சமூக வன்முறைகளைக் காணும் போதுதான். ஒரு காட்டுமிராண்டி சமூகத்தின் எச்சங்கள் அவை என்றிருக்க, அவைகளுக்கு வேண்டாத பூச்சல் கொடுத்து, 'மறம், வீரம்' என்று காட்டமுற்படுத்துவது என்னை வெறுப்பேத்தும். ஆனால், அதே சமூகம்தான் ஆண்டாள் பாடல்களையும் தந்துள்ளது, வள்ளலாரையும் உருவாக்கியுள்ளது. எனவே எதையும் குற்றமெனக் கொள்ளாது, இவை எல்லாமே மனித இயல்புகள், இக்குணங்களில் எது நம் தேர்விற்கு வருகிறது என்பதே வாழ்வில் முக்கியம் என்று கொள்ள வேண்டியுள்ளது. சரி, படத்திற்கு வருவோம்.பிரகாஷ்ராஜ் பற்றி எனக்குள் பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. ஆனால் ஒன்று உருவாகி வருவதை உணர்கிறேன். அவரைப் பற்றிய பரவலான சினிமா பிம்பத்தை அவரே உடைத்து வெளியே வருவது ஒரு பரிணாமத்தின் வெளிப்பாடாக எனக்குப் படுகிறது. வில்லத்தனமான பாத்திரங்களில் நடித்து அடிமனத்தில் ஆத்திரமூட்டக்கூடிய சுபாவத்தை வெளிக்கொண்டு வந்த ஒருவர், 'அதெல்லாம் அப்படித்தான் என்று இல்லை, இதோ பாருங்கள்' என்று குணசித்திரப் பாத்திரங்களை உருவாக்கி, நடித்து வருவது தமிழக சினிமாவின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. மேலும் பழியை எல்லாம் "ரசிகர் அப்படித்தான், அவர்கள் ரசனைக்குத்தக்கவாறுதானே படம் எடுக்க முடியும்" என்று நம் தலையில் கட்டும் போக்கு உண்மை இல்லை என்பதைக் காட்டுவது போல் இவர் மாற்றுப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்று வருவது ஆறுதலாக இருக்கிறது. உதாரணமாக மொழி, காஞ்சீவரம், வெள்ளித்திரை போன்ற படங்கள். மொழி படக்குழுதான் அபியும் நானும் படத்தையும் இயக்கி இருக்கிறது!மக்கட்பேறு என்பதைக் காலம் காலமாக தமிழினம் உயர்வாக தூக்கிப்பிடித்துதான் வருகிறது, வள்ளுவர் காலத்திலிருந்து. இன்றைய நமது மழலை அழகியல் என்பது 2000 வருடப் பழசு என்பதைக் "குழல் இனிது, யானிது என்பர், தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்" எனும் அற்புதமான குறள் செப்பும். இப்படம் அப்பா - மகள் உறவு பற்றியது. உளவியல் ரீதியாக அப்பாவிற்குப் பெண்ணின் மீதும், அம்மாவிற்கு பையன் மீதும் பாசம் வளர்வது கண்காணிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பெண்ணின் மீது அபாரப் பாசம் வைத்து அவள் மூலம் அறிவுத்தெளிவு பெறும் ஒரு தந்தையின் கதை சொல்லப்படுகிறது. அயர்ச்சி ஊட்டாத நல்ல நடை, நல்ல நகைச்சுவை, நல்ல பாடல்கள், மிகை இல்லாத நடிப்பு. குடும்பதோடு காணலாம். படத்தின் கடைசியில் ஒரு வசனம். ஒரு குழந்தை பிறப்பதுடன் ஒரு தந்தையின் வளர்ச்சி இடம் பெறுகிறது. இதைச் சரியாக கவனிக்கவில்லையெனில் தந்தை வளர்வதே இல்லை என்று. முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் Bringing up father என்றொரு கேலிச்சித்திரம் வரும்! அதுகூட ஒரு தந்தையின் வளர்ச்சி பற்றியதுதான்.குழந்தை பிறப்பு என்பது சாதாரண நிகழ்வு அல்ல. அதுவொரு அதிசயம். அதை முறையாகக் கற்றால் எல்லோரும் வளரலாம்.

இப்படம், தெற்கு, வடக்கு இணைப்புப் பாலமாக செயல்படுகிறது. உண்மையில் சீக்கியர்களை மட்டும்தான் நாம் இப்படியொரு தேசிய உதாரணமாக எடுக்கமுடியும். பிச்சைக்காரன் இல்லாத ஒரு சமூகம்! ஐயமிட்டு உண் என்றும், இரந்தும் உயிர்வாழ்தல் நேரின் பரந்து கெடுக உலகு இயற்றியான் என்றும், தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றும் அன்று தொட்டு இன்றுவரை நாம் சூளுரைத்துக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் ஒரு வள்ளுவன் இல்லாமல், பாரதி இல்லாமல் சீக்கியம் அதை சாதித்து உள்ளது! நமக்கு நல்லதொரு படிப்பிணை.

சரி, எல்லோரும் போய் பாருங்கள்! தமிழ்நாட்டுக்காரங்க, இந்தப்படம் நல்லா ஓடுதான்னு பின்னூட்டம் போடுங்க!

2 பின்னூட்டங்கள்:

திகழ்மிளிர் 1/20/2009 09:03:00 PM

எனக்கு ஒரு நல்ல படத்தைப் பார்த்த
மன நிறைவு

அதுவும் நீண்ட நாளுக்குப் பிறகு

மீனாமுத்து 1/23/2009 02:56:00 AM

அழகான படத்தில் அற்புதமாக நடித்திருக்கும்

அப்பா பிரகாஷ்ராஜையா?
அம்மா ஐஸ்வர்யாவையா?
மகள் திரிஷாவையா?

இங்கு விமர்சனம் எழுதிய
உங்களையா?

யாரைப்பாராட்டுவது? :))

(என்ன.. என்னமோ எழுதிகிட்டு இருக்கீய போல இருக்கே?

இல்லைல்லை பாடிகிட்டுருக்கேன்

அப்படியா பாடுங்க பாடுங்க..

:))))