என் சினிமா (இது சினிமா அல்ல)

நான் நிறைய சினிமாப் பார்ப்பேன். இப்போதெல்லாம் என் வலைப்பூவில் ஒரே சினிமா விமர்சனமாப் போச்சு. அதே போல் நிறையக் கனவு காண்பேன். இவை என் வாழ்வை இவ்வளவு ஆக்கிரமிப்பதால் அது பற்றி ஆழ யோசிப்பதுண்டு. சில நேரம் கனவிலேயே யோசித்து கனவின் பொருளை உணர்ந்து கொள்வேன். பரனூர் பெரியவரும் அடிக்கடி கனவு நிலையை உதாரணமாக எடுத்தாள்வார். எனவே வேதாந்தத்தை நன்குணர இவை எனக்கு உதவுகின்றன.

ஆதியில் மண்ணோடு, மண்ணாக ஆத்துமா 'சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து முடிவில் பெரும் பாழாய்' கிடந்தது. ஜீவனின் மேல் இறக்கம் கொண்டு இவனுக்குக் கொஞ்சம் சினிமாக்காட்டலாமென்று இறைவன் பிரபஞ்சத்தை உருவாக்குகிறான். ஒரு நீண்ட பரிணாமத்திற்குப் பின் ஜீவனுக்குதன்னுணர்ச்சி வருகிறது? தான் யார் என்ற கேள்வி வருகிறது? தான் காண்பது நிஜமா? இல்லை கனவா? எனும் கேள்வி. கனவில் காண்பதை நிஜம் என்பதா? இல்லை நிஜத்தில் காண்பதைக் கனவென்பதா? கனவு நிஜத்தின் நீட்சியா? இல்லை நிஜம் கனவின் நீட்சியா?

காண்கின்ற கனவு நிஜமில்லை என்றாலும் கனவில் படும் அவஸ்தையை உண்மை என்றே உணர்கிறோம்.கனவு எனும் சினிமாவை யார் ஓட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. கனவு நிஜத்தின் பிரதிபலிப்பு என்று கொண்டாலும் நிஜத்தில் காணாத் பல காட்சியில் கனவில் வந்து நிற்கின்றன. கனவின் பரிமாணம் நிஜத்தை விட அகலமாய் உள்ளது. நிஜத்தின் நியதிகள் கனவில் பலிப்பதில்லை. எனவேதான் கனவு சுவாரசியமாக உள்ளது.

கனவுச் சினிமாவை நான் ஓட்டவில்லை என்றால், நிஜ வாழ்வின் சினிமாவை மட்டும் நான் ஓட்டுகிறேன் என்று ஏன் நம்பவேண்டும்? நாம் எண்ணிச் சில காரியம் செய்கிறோம். நல்ல பலனும் வருகிறது, தீய பலனும் வருகிறது. நல்லது வந்தால் அது நான் செய்தது என்று சொல்லும் நாம் கெட்டது நடக்கும் போது இறைவனை ஏன் பழிக்கிறோம் என்று தெரிவதில்லை. ஈழத்துப்பிரச்சனை ஆரம்பித்த காலத்திலிருந்து நண்பர்கள் கேட்கும் கேள்வி இது? ஏன் இன்னும் ஓர் அவதாரம் நிகழவில்லை? என்று! ஏன் நிகழ வேண்டும்? என்றும் கேட்கலாம்தான். நாம் செய்யும் செய்கைகளின் முழுப்பொறுப்பை ஏற்கும் திடம் நமக்கு இல்லாதவாறு வாழ்வு சிக்கலாக (complex) உள்ளது. ஒரு சின்ன வேதியல் சேர்க்கைகூட ஏன்
அவ்வாறு நிகழ்கிறது என்று விளக்கமுடியாத அளவு வாழ்வு சிக்கலாய் உள்ளது. இந்நிலையில் நான் செய்யும் காரியங்கள் என்னால் நடந்தது என்று எண்ணுவதைவிட
அதுவாக நடந்தது, நான் ஓர் உபகரணமாக இருந்தேன் எனும் போது வாழ்வின் பாரம் குறைகிறது. எத்தனை பேர் தீக்குளித்துச் சாகின்றனர்? எவ்வளவு அவலம்? இந்த பாரத்தைத்தாங்கும் திறன் நமகுள்ளதா? என்றால் இல்லை என்பதே உண்மை. புனரபி மரணம், புனரபி ஜனனம். தன் மகனைக் கொடுத்த தாய் அடுத்த வேளை சோறு உண்ணாமல் இருக்க முடியவில்லை. துக்கம் ஒரு பக்கம், வாழ்வு ஒரு பக்கம் என ஓடிக்கொண்டே இருக்கிறது. பார்த்துக் கொண்டே இருந்த நாம் திடீரென்று ஒரு நாள் போய்விடுகிறோம். ஆனால் கனவு தொடர்கிறது. என் கனவு, உன் கனவு என்றில்லை. பொதுவாய் கனவு தொடருகிறது. சினிமாவில் பாதியில் எழுத்து போனவனுக்காக சினிமா நிற்பதில்லை, என்பது போல்.

பார்த்தன் பெரிய சைதன்யத்தைக் கண்ட போது மிரண்டு போய் நான் கொல்ல மாட்டேன், நான் கொல்ல மாட்டேன் என்றான். அட அசடே! நீ என்று உருவாக்கினாய், இன்று கொல்ல? நான் உருவாக்கினேன் நான் கொல்கிறேன். நீ சும்மா உட்கார்ந்து வேடிக்கை பாரு! என்கிறான் கண்ணன்.

வாழ்வே ஓர் வேடிக்கைதான். அண்டப்பெரும் பாழில் ஆழ்ந்து கிடந்த ஜீவனுக்கு இறைவன் நடத்தும் சினிமா, நம் வாழ்வு. நம் வாழ்வில் அன்னை வருகிறாள், போகிறாள், தந்தை வருகிறார் போகிறார், உறவு, நண்பர்கள்..இப்படி..ஆயிரமாயிரம்..வந்து போகின்றனர். நாமும் பலர் வாழ்வில் வந்து போகிறோம். எல்லாம் நடத்தும் இயக்குநர் எங்கோ மறைவில்.

நாம் நாடகமாடுகிறோம் என்று தெரியாமலே நடிக்கும் நடிகர்கள் நாம். ஒரு நடிகை நாடகம் பார்ப்பது போல். நடிப்பிற்குள் நடிப்பு, நாடகத்துள் நாடகம். நிஜத்துள் கனவு, கனவுள் கனவு. அடுக்கடுக்கு வாழ்வில் ஒன்றில் விழுந்தால் இன்னொன்றில் எழுகிறோம். என்ன அதிசயம்?

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு


சபாஷ்!

0 பின்னூட்டங்கள்: