மின்னனைய நுண்ணிடையாள்!

நந்து கோயில்ல இன்னிக்கி ஒரு பெரியவர் தேவாரப் பொருளுரை சொல்லறாராம் வரேயா? என்று முத்து கேட்டாள்.

நேரமிருக்குமோ தெரியலை. கணக்குப் பரிட்சை நாளைக்கு. படிக்கிறதுக்கு நிறைய இருக்கேடீ! என்றான் நந்து.

டேய்! ரொம்பத்தான் பண்ணிக்காதேடா, எனக்கும்தான் நாளைக்கொரு பரிட்சை இருக்கு. நான் போகலையா?

சரிதான், உனக்கு சுப்பையா வாத்தியார் கணக்கு சொல்லிக்கொடுக்க வந்திருந்தால் நீ இப்படி 'அசால்டா' பேச

மாட்டே! போனவாரம் கிள்ளின வடு இன்னும் இருக்கு பார், என்று சொல்லி தொடையைக் காண்பித்தான் நந்து.

ஐயையோ! என்னடா இப்படி கன்னிப்போயிருக்கு. ஒத்தடம் கொடுத்தோயோ?

ம்..ம்.. பங்கஜம் கொடுத்தா. நாளைக்கு பரிட்சையிலே சரியா பண்ணாட்ட திரும்ப அதே இடத்திலே கிள்ளுவார்.

இந்தத் திருப்பூவண நாதனின் பூதங்கள் எல்லாம் மொத்த உருவாய் சுப்பைய்யா வாத்தியாரா வந்து பொறந்திருக்கு எனும் போது நந்துவின் கண்கள் கலங்கின.

சரி..சரி..அழுதுடாதே. வருவயோன்னு கேட்டேன்! என்றாள் முத்து வாடிய முகத்துடன்.

நந்துவிற்கு யார் வாடினாலும் தாங்காது. 'இருடீ வரேன். கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துடறேன். சரியா?' என்றதும்

முத்துவின் முகம் மலர்ந்தது. இருவரும் கோயிலுக்குள் நுழைந்தனர்.

திருவாச்சி மண்டபத்தில் ஒரு பெரியவர் பேசிக்கொண்டிருந்தார். இவர்கள் போகும் நேரம் திருதாண்டகத்திலிருந்து ஒரு பாடல் சொன்னார்.

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றுந்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பெருமான் தயாளு! தன்னடியார் எனும் போது எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கி வருவான். முன்னைய பாடல்களில்தான் பார்த்தோமே, அவன் ஈசன் என்பதை மறந்து பிச்சைப் பாத்திரமேந்தி நம்மிடம் வரக்கூடத் தயங்குவதில்லை என்று. அவன் நம்மிடம் என்ன பிச்சை கேட்கிறான்? நாம் அவன் பொருள். ஆனால் நாம் அதை மறந்து நாம் நமக்குச் சொந்தம் என்று வாழ்கிறோம். அவன் வந்து அவன் சொத்தை பிச்சை போல் கேட்டாலும் 'அல்பங்களான' நாம் அவனுக்கு பிச்சை போடுவதில்லை. இதனால் அவன் சில நேரம் திருவிளையாடல் செய்வதுண்டு. சுந்தரப்பெருமான் தனக்கடிமை என்று ஓலை ஒன்றை உருவாக்கி கல்யாண சமயத்தில் வந்து சுந்தரரை ஆட்கொண்டான். அவனுக்கு நாம் அடிமை என்பது தன்னியல்பாக நமக்குப் புரிந்திருக்க வேண்டும். ஆனால், நாம் இகவாழ்வில் துய்த்து அதை மறந்துவிடுகிறோம். அவன் அடிமை போல் வந்து நம்மிடம் பிச்சை கேட்டு அதைப் பெற முயல்கிறான். இதுவே அவன் தகவு.

முதல் முத்தேவர்களுக்கும் குறையுண்டு. ஏனெனில் அவர்கள் சுயம்பு இல்லை. உருவாக்கப்பட்டவர்கள். எனவே சிவனையோ, விஷ்ணுவையோ முதற் கிழங்கு, சுயம்பு என்று குறியிடும் போது, முத்தேவர்களின் குறைபாடுகள் பேசப்படும். அவர்களும் நம் போல் சம்சாரிகள் என்று சுட்ட. அவ்வகையில்தான் இங்கு பிரம்மாவின் தலையரிதல் பேசப்படுகிறது. இங்கு தலை என்பது உண்மையான தலை அல்ல. அவை தத்துவங்கள். பிரம்மாவின் பஞ்சமுகத்தில் ஒன்றை ஈசன் குறைக்கிறான் என்றால், ஒரு இலாக்கா கை மாறுகிறது என்று பொருள்! என்ற போது எல்லோரும் சிரித்தனர்.

இத்திருப்பதியில் அம்பாளுக்கு தனி சந்நிதி. அவளுக்கு தனி வாகனம். அவளை சுதந்திராதேவி என்கின்றனர் சிவாச்சாரியர்கள். ஆனாலும், மின்னல் போன்ற இடையுடைய ஈஸ்வரி இவனது ஒரு பாகத்தில் தோன்றுவது போல்தான் இங்கு காட்சி, அப்பர் பெருமானுக்கு. இதைச் சொல்லும் போது அங்கிருக்கும் பட்டர் பெருமக்களைப் பார்த்து பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்களும் ஆமோதித்து தலையாட்டினர்.

அகல கில்லேன் இறையும் என்
றலர்மேல் மங்கை யுறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன்
றுடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே!
புகலொன் றில்லா அடியேனுன்
அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே

என்றுதான் நம்மாழ்வரும் சாதிக்கின்றார். இறைவனும், இறைவியும் ஒன்றுடன் ஒன்று கலந்தவர்கள். அவள் அவனை விட்டு அகலகில்லேன் என்று இருப்பதே அழகு, மரபு. அம்மரபின் படியே இங்கும் உமையொருபாகனாக காட்சி தருகின்றார்.

வேழமுக அசுரனை வதைத்து, அவனது தோலையே ஆடை போல் புனைந்த அவ்வரிய காட்சியும் உடன் தோன்றும்.

அவனது செஞ்சடை மீது அழகிய பிறைச் சந்திரனும், தூய கங்கை ஆறும், அரவும் தோன்றும் படி காட்சி அருளுகிறார். அவரது திருமேனியோ பொன்போன்றது. அவ்வடிவழகிலேயே இங்கும் தோற்றம். இத்தனை அரிய காட்சிகளும் பொழில் திகழும் திருப்பூவணத்தில் திருநாவுக்கரசருக்கு கிட்டுகிறது!

இப்படிச் சொல்லி முடித்து அடுத்த பாடலுக்குள் புகுவதற்குள் சொம்பிலிருந்து நீர் பருகினார் பெரியவர். நந்து இந்த இடைவெளியில் கிளம்ப ஆயத்தமானவுடன் முத்துவும் ஒட்டிக்கொண்டாள்.

நானும் உன்னோடையே வரேன். எனக்கும் படிக்க நிறைய இருக்கு என்று சொல்ல இருவரும் சடுதியில் நழுவி கோயில் புற வாசலுக்கு வந்து சேர்ந்தனர்.

கடல் தாமரையன்ன பாதம்?

நந்துவின் சகோதரிகள் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, வெள்ளைத்துண்டை ஈரத்தலையில் சுற்றிப்பிழிந்த வண்ணம் கொல்லைக் கிணற்றடியிலிருந்து வரும் அழகை நந்து ரசித்துக் கொண்டிருந்தான். உலர்ந்து, உலராத தலை. முற்றும் ஈரமாகிவிட்ட துண்டு நனைந்து மெல்ல நீர் சொட்டும் அழகு நந்துவிற்கு பிடிக்கும். அதைவிட அத்தலையை துவட்டிய பின் நுறும்புகைச் சாம்பிராணி போடும் போது வீடே வாசம் பெறும்! ஒரே நேரத்தில் இரண்டு தமக்கைகள் குளித்து விட்டால் போதும் வீடே புகை இருளில் மூழ்கிவிடும். அத்தகைய பொழுது அது. நந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தான்.

'என்னடா எழுதறே?' என்று கேட்டாள் பட்டு!

வீட்டுப்பாடம்!

ஓ! வாசிச்சுக்காட்டேன் பாப்போம் என்றாள்.

சரி, இதோ, என்று பலக்க வாசித்தான் நந்து!

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பட்டு சிரித்துக்கொண்டே, 'நம்ம வீட்டில் சாம்பிராணிப் புகை போடுவது நாவுக்கரசருக்கு எப்படித்தெரிந்தது? என்றாள்.

உனக்கு இந்தப்பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா? சொல்லேன் என்றான் நந்து.

உங்க தமிழ் வாத்தியார் சொல்லற மாதிரி வராது, ஆனாலும் சொல்லிப்பார்க்கிறேன், என்று இழுத்தவாறு பேச ஆரம்பித்தாள் பட்டு,

"நந்து நம்ம ஆழி வட்டம்ன்னு ஒரு ஆட்டம் ஆடுவோம் பாரு! அது போல இவரொரு ஆழி வட்டம் சொல்லறார்.

ஆழின்னா கடல். கடல் சூழ்ந்த வட்டம்? ம்ம்..பூமி. பாரேன்! நாம கலிலியோ பூமி உருண்டைன்னு கண்டு பிடிச்சார்ன்னு படிச்சிட்டு இருக்கோம், அப்பர் சுவாமிகள் பூமி உருண்டை, வட்டம்ன்னு எப்பவோ சொல்லிட்டார்! ஆச்சர்யம்தான். இத ஏன் நம்ம பாடத்திலே சொல்லித்தரதில்லே?"

"அம்மா தாயே! ஆலோசனை அப்புறமா இருக்கட்டும். பாட்டுக்கு பொழிப்புரை சொல்லு!" என்றான் நந்து.

"டேய்! நீ எனக்கு சின்னவன்தானேடா. அக்கா சொல்லறவரைக்கும் பொறுமையா இருக்கனும். உங்க சயின்ஸ் டீச்சர்ட்டே நீயே கேளு, ஏன் அப்பர் சொன்னதை பாடத்திலே சேக்கலேன்னு. சரியா?"

"தலையாட்டாவிட்டால் மேலே போக மாட்டாள் என்று தெரியும். நந்து தலையாட்டினான். 'ம்..இப்ப சொல்லு.."

"ம்..ம்ம் இந்த ஆழிசூழ்ந்த உலகத்தார்...பாரேன்! 'ஆழி சூழ் உலகையெல்லாம் பரதனே ஆள!' ன்னு கம்பன் சொல்லறாரு. இவங்க எல்லோருக்கும் பூமி ஒரு நீர்க்கிரகம் என்று தெரிந்திருக்கிறது. உலகம் சுற்றி வந்தார்களா? இல்ல, அப்பவே உலக வரைபடம் இருந்துதா?"

"அக்கா! நீ இப்ப மேலே சொல்லப்போறயா? இல்லையா?" என்றான் நந்து. இவன் பட்டுவை அக்கா என்று கூப்பிட்டதே கிடையாது. இவனைவிட சில மாதங்களே (ஒரு வருடம் என்று அவள் சொல்லுவாள்!) மூத்தவள். ஒரு
கிளாஸ் முந்தி. இப்படிக் கூப்பிட்டால் அவள் வழிக்கு வருவாள் என்று தெரியும்.

"ம்..ம்..எங்க விட்டேன்..ம்ம் ஆழிசூழ் உலகில் வசிக்கும் மாந்தரெல்லாம் மிக இஷ்டத்துடனும், அன்புடனும் இட்ட வண்ண, சுகந்த மலர்கள், தூபங்கள், அதாவது ஊதுவத்தி போன்ற நறும்புகை அங்கு தோன்றும். பாரேன்! தமிழ்நாட்டுப் பேர்களெல்லாம் என்று அப்பர் சொல்லவில்லை. உலகில் உள்ள மக்களெல்லாம் என்கிறார். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று சொல்வது எவ்வளவு சாலப்
பொருந்தும்!

அப்போது சித்தப்பா உள்ளே நுழைந்தார். என்ன காலங்கார்த்தாலே சிவமயமா இருக்கு வீடு. பெருமாள் கோயில்லே ஆளே இல்லே. அங்க வந்து இரண்டு பாசுரம் சொல்லக்கூடாதோ? என்றார். அவர் பெருமாள் கோயில் டிரஸ்டி.

"அப்பா! இதை முடுச்சுட்டு அங்க வரேன். இவன் வீட்டுப்பாடம்!" என்றாள்.

"சரி..சரி..இவன் படிப்பை நான் ஏன் கெடுப்பானேன்" என்று சித்தப்பா கொல்லைப்புறம் போய்விட்டார்.

"டேய்! தலையைச் சொறியாதே! அடுத்து இன்னொரு விஷயம் சொல்லறார், இதுபோல் யாரும் சொன்னதே இல்ல."

"அப்படி என்ன சொல்லறார்?"

"தாமரை எங்க பூக்கும்?"

"குளத்திலே"

"கடல்ல பூக்குமோ?"

"ஙே? கடல்ல தாமரையா? கேள்விப்பட்டதே இல்லையே!"

"இப்ப கேட்டுக்கோ! சீராழித் தாமரையின் மலர்களன்ன திருந்திய மாநிறத்த சேவடிகள் தோன்றும் என்கிறார்.

திருப்பூவணத்து நாதனின் அழகிய திருவடி கடலில் பூத்த தாமரையை ஒத்த அழகுடன் இருக்கும் என்கிறார். என்ன இது? இவர் பொய்கை ஆழ்வார் போல பேசறார்? அவர்தான்,

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
"

பேசுபவர். இந்த வையத்தையே ஒரு அகல் விளக்கு என்று சொல்லி, வார் கடலே நெய்யென்று சொல்லி, சுடர்மிகு சூரியனே திரியில் எரியும் விளக்கு! என்பார். அப்படியானதொரு பெரிய விளக்கு. பிரபஞ்ச விளக்கு. அப்படி ஏற்றினால்தான் காரிருள் வண்ணனான கண்ணன் புலப்படுவானாம். அது போல் அப்பர், சீராழித்தாமரையின் மலர் என்ன பொற்பாதம் என்கிறார். இரண்டு பேருமே ஏதோவொரு விஸ்வரூப தரிசனம் பற்றிப் பேசுகின்றனர் என்று தெரிகிறது.

அடுத்து தனது பக்தனான இராவணனுக்கு அருள் செய்ததை நினைவு கூர்கிறார். சீதையை வான மார்க்கத்தில் தூக்கிக்கொண்டு போன தேர் வட்ட வடிவமானதாம். நமக்கென்ன தெரியும்? அப்பருக்கு தெரியுது!

"அப்பா! அப்பர் ஏன், 'போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்' என்று சொல்கிறார்? பெருமாளுக்கு சிவனா ஆழி தந்தது?

"அப்படி அவருக்குத்தோற்றம் அவ்வளவுதான். வலது கரம் இடது கரத்திற்கு கொடுக்கற மாதிரிதான் இது. ஏன்னா?

'ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
இமையவர் தந் திருவுருவே றென்ண்ணும் போது
ஓருருவம் பொன்னுருவம்; ஒன்று செந்தீ;
ஒன்றுமா கடலுருவம்'


என்பது திருநெடுந்தாண்டகம். மூவரும் அவன்தான். ஒரு பக்கம் மாகடல் வண்ணம், மறுபக்கம் செந்தீ போன்ற சிவன் வடிவம்..அப்படீன்னா, ஒரு கையிலேர்ந்து இன்னொரு கைக்கு கொடுக்கறது போலத்தானே? என்றார் சித்தப்பா.

இருவரும் தலையாட்டினர். 'பட்டு, சீக்கிரம் முடி, நேரமாயிடுத்தில்லே?' என்றான் நந்து.

அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு. இந்த அழகெல்லாம் உடைய சிவன், பொழில் திகழும் நம்ம ஊரிலே இருக்கார்ன்னு அப்பர் சொல்லறார். சரி! ஓடு! டேய், தலையை நல்லா வாரிட்டுப்போடா. கலைஞ்சு கிடக்கு!' என்று

அவள் சொல்லி முடிக்கும் முன் நந்து ஒரே ஓட்டமாக பள்ளி நோக்கி ஓடிவிட்டான்.

ஆகாய கங்கையும் அப்பர் சுவாமியும்!

கோடை விடுமுறையின் போது சில சமயம் விருந்தாளிகள் வருவதுண்டு. அந்த ஆண்டுஇவனது நண்பனான புஷ்பவனம் வீட்டிற்கு ஒரு கல்யாணமாகாத இளையன்வந்திருந்தான். சாமா என்று பெயர். அவன் மும்பாயில் பெரிய கம்பெனி ஒன்றில்வேலை பார்க்கிறான். விடுமுறைக்கு திருப்பூவணம் கிராமத்திற்குவந்திருந்தான்.

மாலையில் ஆற்று ஓடையில் குளிக்க நந்து போன போது சாமாவைப் பார்த்தான்.சாமாவிற்கு காத்திரமான உடம்பு. குளித்து எழுந்த போது நந்துவைப்பார்த்தான். "ஏய்! நீ பக்கத்து வீடுதானே? உன் பெயர் என்ன? என்றான்?"

"நந்து. நீங்க புஷ்பவனம் வீட்டுக்குத்தானே வந்திருக்கீங்க. பார்த்தேன்.மும்பாய் ரொம்பப் பெரிசா? " என்று கேட்டான் நந்து. அதற்கு சாமா பதில்சொல்ல, இவன் மேலும் கேள்வி கேட்க என்று நண்பர்களாகிப் போயினர். இருவரும்கோயிலுக்குள் வந்தனர். மாலை பூஜை வழக்கம் போல் ஆகிக்கொண்டிருந்தது.இவர்கள் வரும் போது ஓதுவார் பாடிக்கொண்டிருந்தார்:

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

ஆகா! என்ன அருமையான பாட்டு! என்றான் சாமா?

நந்துவிற்கு ஆச்சர்யம். "அண்ணா! உங்களுக்கு அப்பர் பாடல்களெல்லாம்தெரியுமா?" என்றான்.

"டேய் நந்து! நானும் ஒரு காலத்திலே உன்னைப் போல மாணவன்தானடா!" என்றான்சிரித்துக்கொண்டே! கூடவே இப்பாடலுக்கு பொருள் தெரியுமா உனக்கு? என்றான்.

நந்துவிற்கு வெட்கம் வந்துவிட்டது. சாமா ரொம்பவும் படித்திருப்பான்போலருக்கு. எனவே அதிகம் அலட்டக்கூடாது என்று எண்ணிக்கொண்டான்.

"என்ன மௌனம்? தெரிந்ததைச் சொல்லு. நானும் சொல்லறேன்" என்றான் சாமா.

"அப்படின்னா, சரி!" என்று சொல்ல ஆரம்பித்தான் நந்து!

ஈசன் மேல் மையல் கொண்டு காதல் செய்வாருக்கு எப்போதும் "இல்லையென்னாது"அருள் தோன்றும்!மாசு இல்லாத அழகிய சடை மீது பிறைச்சந்திரன் தோன்றும்வருந்தி பிச்சையெனாமல் தன் இயல்பால் பிச்சை ஏந்தும் குணம் தோன்றும்பாற்கடல் கடைந்த போது எழுந்த ஆலகால நஞ்சை உண்டதனால் ஏற்பட்ட கண்டம் தோன்றும்மீன் போன்ற அழகிய கண்களையுடைய கங்கையெனும் நங்கை ஆயிரம் வதனங்களோடு வானில் தோன்றும்அக்கங்கையை தன் விரிசடையில் வாங்கிக்கொண்ட அழகு தோன்றும்இவையெல்லாம் நாம் கண்டுகொண்டிருக்கும் இத்திருப்பூவணத்து எம்பிரானிடம்பொலியத்தோன்றும்

என்று முடித்தான் நந்து.

"வெரி குட், வெரி குட்! நன்றாகச் சொன்னாய். அப்பர் எப்படியானதொருபிரபஞ்சக்காட்சியைக் காட்டுகிறார் பார்த்தாயா? என்றான் சாமா?

"எதைச் சொல்கிறாய்? அண்ணா?" என்றான் நந்து.

சிவனை விஸ்வநாதனாகப் பார்! அவன் பார்மேல் பரவி, பிரபஞ்சத்தில்நிற்கிறான். அப்போது இளமதியம் அவனுக்கு கொண்டைப்பூ போல் ஆகிறது.மகாவிஷ்ணு திருவிக்கிரம அவதாரம் எடுத்த போது விண்ணையும், மண்ணையும்கடந்து நின்ற அவன் எழில் பாதங்களுக்கு பிரம்மா அபிஷேகம் செய்தார்.அதுவொரு ஆறுபோல் பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. இதைச் சொல்லும்போது எனக்கு நாசா விண்கலங்கள் எடுத்த பிரபஞ்சக்காட்சி நினைவிற்குவருகிறது. பல படங்களில் இத்தகைய ஆகாச கங்கையை உருவகிக்கும் வண்ணமுள்ளபடங்களுண்டு. அவைகளை Star dust என்பர். அவை அடர்த்தியால் அடங்கும் போதுஸ்தூலப் பிரபஞ்சம் உருவாகிறது. நட்சத்திரங்கள், கோளங்கள் இப்படி!அப்படிப் பாய்ந்து பூமியை நோக்கி வந்த அண்டத்துகள்களை சிவன் தன் தலையில்வாங்கிக் கொள்கிறார். ஆலகால விஷம் என்பது கூட இப்படிப்பட்ட கொடிய விஷவாயுக்களாக இருக்கலாம். பூமி உருவாகும் போது ஏற்பட்ட பேரழிவுகளாகஇருக்கலாம். இறைவன் நம்மை ரக்ஷிப்பவன் என்பதைச் சுட்ட அந்த நிகழ்வுஉதவுகிறது. இன்னொரு முறையில் கூட ஆகாய கங்கையைப் புரிந்து கொள்ளலாம். மழைஎன்பது ஆகாய கங்கைதானே! தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்கு பருவக்காற்றுஇவைகளை இமயமலை வாங்கிக்கொள்கிறது. கைலாயத்தில் யார் இருக்கிறார்கள்?சிவன்தானே! எனவே அதை சிவன் வாங்கி, பூமிக்கு அளிக்கிறான் என்றுசொல்வதிலும் தவறில்லைதானே! கங்கைக்கு ஏன் ஆயிரமாயிரம் முகம்? நாசாப்படங்கள் பார்த்தால் இந்த star dust மின்னும் போது ஆயிரம் முகம் இருப்பதுபோல் தோன்றும்! எப்படி வானியல் நம் கவிதையில் புழங்குகிறது பார்த்தியா?என்றான் சாமா!


"அண்ணா! ஈதெல்லாம் எனக்குப் புதிது. சுவாரசியமா இருக்கு!" என்று சொல்லும்போது நடராஜ பட்டர் எதிரே வந்தார்.

"என்னடா நந்து? இவர் யாரு?" என்று கேட்டுக்கொண்டே தன் மடியிலிருந்தவிபூதிப் பொட்டலத்திலிருந்து இருவருக்கும் திருநீறு கொடுத்தார்.

"இவர் புஷ்பவனம் வீட்டிற்கு வந்திருக்கார். மும்மாய் பட்டணம்!" என்றான்.

"சரி, சரி..நாலு நாள் இருப்பாரோ?" என்று கேட்டுக்கொண்டே அர்ச்சனைக்குக்காத்திருக்கும் அன்பரை நோக்கி நடராஜ பட்டர் நகர்ந்துவிட்டார்.

பொழில்திகழும் பூவணத்து புனிதார் உள்ளே ஜெகஜ்ஜோதியாக காட்சியளித்தார்.

பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்!

பூவணத்து எம் புனிதனார் - 6

வைகையின் ஆற்றுப்பெருக்கு மட்டுப்பட்டு நிறைய ஓடைகள் இங்குமங்கும் திகழ,ஆற்றுப்பக்கம் போனாலே ஜிலு, ஜிலுவென்றிருந்தது. அன்று நந்துவுடன்ஆற்றங்கரைக்கு குமரகுரு வந்திருந்தான். மிகவும் சூட்டிகையான பையன்.பள்ளியில் நந்துவிற்கும் இவனுக்கும் எப்போதும் போட்டா போட்டி! ஆனாலும்இருவரும் நண்பர்கள். மாலையில் ஆற்றுப்படுகைக்கு காலாற நடந்து போவதுஎன்றுமே நந்துவிற்குப் பிடிக்கும். ஆற்றில் செருப்பில்லாமல் நடக்கும்சுகமே தனி. இப்போது ஆறு கொஞ்சம் ஈரமாக இருப்பதால் நடப்பதும் அவ்வளவுகடினமல்ல. வெய்யில் காலங்களில் ஆற்றில் கால் வைக்க முடியாது.

குமரகுரு திடீரென்று அப்பர் இயற்றிய திருத்தாண்டகத்திலிருந்து ஒரு பாடல் சொன்னான்.

படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று
மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே!

இந்தப்பாட்டு உனக்கு மனப்பாடமா? என்று கேட்டான் குமரகுரு. நந்துவிற்கு,சாவால் விடுகிறான் என்று புரிந்தது.

ஏனில்லாமல்? என்று நந்து அப்பாடலை அப்படியே ஒப்புவித்தான்.

சரி! முதலில் சிவபெருமானின் ஆயுதங்களைச் சொல்லிவிட்டு, அடுத்ததாக சுப்ரமணியரை ஏன் நினைக்கிறார் அப்பர்? என்றான் குமரகுரு.

உனக்கு சரியாத்தான் பேர் வச்சிருக்காங்க! கேக்கறான் பாரு கேள்வியை! என்றுசிரித்துக்கொண்டே பதில் சொன்னான் நந்து. "உன் பேரு வருதுன்னுதானே இப்படிக் கேக்கற?"

தெரியலேன்னா, தெரியலைன்னு சொல்லு, என்றான் குமரகுரு.

தெரியாமலென்ன, அப்பருக்கு முதலில் படைமலிந்த வாள் தோன்றுகிறது.பெரியாழ்வாருக்கு பாஞ்சஜன்யம் தோன்றினார் போல, "படைபோர் புக்கு முழங்கும்அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!" என்பது போல். படை என்றவுடன்தேவசேநாதிபதியான குமரனின் ஞாபகம் வந்துவிடுகிறது நாவுக்கரசருக்கு.அதுதான், கையோடு, "பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்" என்கிறார்.சண்டை என்று வரும் போது இரண்டிற்கு பன்னிரண்டு எவ்வளவோ மேல் இல்லையா?என்றான் நந்து.

சரிதான்! தெரிந்திருக்கிறது! அப்படியானால் கொடி என்று சொல்லிவிட்டுநான்கு வேதங்களைப்பற்றி அப்பர் ஏன் சொல்கிறார்?

"நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்"

வேதம் என்பதே நமக்கு ஆதிமறையாக உள்ளது. அதில் சொல்லப்படும் நாயகன்,பாடுபொருள் யார் என்பதில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் போட்டிபோடுகிறார்கள். ஏனெனில் வேத சம்ரோக்ஷணம் என்பது காலம், காலமாகதமிழகத்தில் நடந்து வந்திருக்கிறது. இப்பூவணத் திருப்பதியிலேயே பாண்டியமன்னர்கள் வேத கொடை செய்துள்ளனர். குலசேகரதேவன் தனது 25 ஆம்ஆட்சியாண்டில் தினந்தோறும் வேத பாராயணஞ் செய்ய 1008 பிராமணர்களுக்குஉணவிற்காக நிலம் அளித்தான் என்று ஒரு செப்பேடு ராஜகெம்பீர சதுர்வேதிமங்கல சபைக்கு 25 காசுகள் வழங்கியதை அறிவிக்கிறது. ஆக, திருப்பூவணத்தில்நான்மறையின் ஒலி தோன்றுவது அதிசயமில்லை. நீ இங்குள்ள வேதபாடசாலைபார்த்திருக்கிறாயோ? பொதுப்பள்ளிகள் வந்தபிறகு வேதம் படிக்க ஆளில்லைஎன்று கனபாடிகள் நேற்றுதான் சொன்னார்.

சிவன் விடைப்பாகன், எனவே விடை தோன்றுவதும் அதிசயமில்லை. கோயிலில் கொடிஇருப்பது இயல்பு. முதலில் வருவதே கொடிமரம்தானே!

"பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
நீனிற வுருவி நேமி யோனுமென்
றிருபெருந் தெய்வ முமுனின் றாஅங்கு"

என்பது புறநானூறு இல்லையா?

ஓ! காரிக்கண்ணனார் பாட்டுதானே! ஞாபகம் இருக்கு. சரி இதை எதுக்கு சொல்லற?

இல்ல, அப்பருக்கு விடையோன் கோயில் தெரிகிறது (கொடி), கோயிலென்றவுடன்வேதமுழக்கம் காதில் கேட்கிறது. இதுதானே சங்கம் தொட்டுவரும் நம் மரபு?

சரி! சரி! முக்கியமான விஷயங்களைச் சொல்லிவிட்டாய். அடுத்து வருவதுவடிவழகு பேசுவது, இல்லையா?

ஆம்! "உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்று மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே!"

சிவபெருமான் ஏழ்மையைத் தவமாய் பூண்பவர். அதனால் அவருக்கு பட்டுபீதாம்பரமெல்லாம் கிடையாது. வெறும் கோமணம்தான். அதையும், இடுப்பில்கொஞ்சம், கீழே கொஞ்சம் என்று வாகாக உடுத்தியிருக்கிறாராம். யார் மாதிரிசொல்லு?

வேற யாரு இப்படி உடுத்துவா?

இருக்காரு ஒருத்தர்!

டேய்! நந்து நீயே சொல்லு!

அப்படி வா! வழிக்கு!! வேற யாரு நம்ம ராஜமன்னார்தான். தெரியலை?ராஜகோபாலன்தான். நீண்ட துணியை தலைப்பாகையாகவும், கொஞ்சம் இடுப்பிலும்கட்டுகின்ற அழகு அவனுக்குத்தானே வரும்! சிவபெருமானுக்கும் இது பொருந்திஇருப்பதால் அப்பருக்கு அப்படியொரு காட்சி.

ஆனால்? ஏனோ இந்த கபால மாலையை அப்பர் விடமாட்டேன் என்கிறார். அதுவும்ஈரமுள்ள கபாலமென்றும் சொல்லுகிறார். ஒரு மாதிரி இருக்கு!

ஆ! ஆ! என்று சிரித்து, குமரகுரு, பார் அதைச் சொன்னவுடன், பூதங்களைப்பற்றியும் பேசுகிறார்! இப்பாடலில் ஜோடி, ஜோடியாக அவருக்கு வருணனை வந்துவிழுகிறது!!

ஆமாம்! "பொழில்திகழும் பூவணம்" என்கிறாரே! எங்கே இருக்கு பொழில்? என்றான் நந்து.

இருக்கே! அக்கரையில் தெரியும் நாணல்காடு, தென்னந்தோப்பு, நெல்வயல்,கன்னல் காடு....இவையெல்லாம் திருப்பூவணத்தின் பொழில்தானே!

உண்மைதான். பொழில் திகழும் பூவணம்! அங்கு குடியிருக்கும் புனிதனார்!!என்று சொல்லிக்கொண்டே இருவரும் கோயிலுக்குள் கால் வைத்தனர். மாலை பூஜைக்கான மணி ஒலித்துக் கொண்டிருந்தது. தூரத்தே ருத்ரம், சமுக்கம் ஓதுவதும் காதில் விழுந்தது.

நந்துவும் கல்லாலமர் தேவனும்

நந்து இன்னும் குளிக்கலை? எல்லோரும் கோயிலுக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள் பார்! என்ற அன்னையின் குரல் கேட்டு, படிப்பில் ஆழ்ந்திருந்த நந்து எழுந்து கொல்லைப்புறம் ஓடினான். அங்குதான் கிணறு இருக்கிறது. ஆற்றங்கரைக்கு அருகில் வீடு என்பதால் கிணற்றில் நீர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தேர்வுக் காலம் வந்துவிட்டது. நந்து காலை 4.30 மணிக்கே எழுந்துவிடுவான், படிக்க! பிரம்மமுகூர்த்ததில் படித்தால் படித்தது மனதில் நிற்கும் என்பது பாட்டியின் அறிவுரை! நந்து அரிக்கன் விளக்கு வைத்துதான் படிப்பான். 5 மணிக்கெல்லாம் பொல, பொல என விடிய ஆரம்பித்துவிடும். வீட்டின் முற்றத்தில் இருந்து கொண்டு படித்தால் வெளிச்சம் தெரியும்.

நந்து வேக, வேகமாக குளித்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு கோயிலுக்கு ஓடினான். சீக்கிரம் வந்துடு, இன்னக்கி உனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு என்று அக்கா நினைவூட்டினாள். 'மாணவர் மன்றம்' தேர்வுகள் வருகின்றன. இவை பள்ளிப்பரீட்சை தவிர விருப்பப்பட்டு மாணவர்கள் பங்குகொள்ளும் தமிழ்த்தேர்வுகள். நந்து வீட்டில் படிக்கும் குழைந்தைகள் 'மாணவர் மன்றத்தேர்வுகளுக்கு' போவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் தமிழ்க்கல்வி அவ்வீட்டில் நிலைத்து நின்றது.

எவ்வளவு வேகம் என்றாலும் நந்து தக்ஷிணாமூர்த்தி சந்நிதி என்றால் இரண்டு நிமிடம் இருந்து வணங்கிவிட்டுப் போவது வழக்கம். அது ஏனோ, அவனுக்கு அவரின் அழகு பிடிக்கும். அரச மரத்தின் கீழ் அமர்ந்து மௌனகுருவாக அவர் வெறும் சின்முத்திரை காட்டி, குமிழ் சிரிப்புடன் இருக்கும் அழகு அவனைக் கவர்ந்தது. உள்ளே இருக்கும் லிங்கம் எல்லாவற்றிற்கும் வெறும் சாட்சியாக ரூபமற்று, குணமற்று இருக்கும். இவனுக்கு குணமுள்ள இறைமையே பிடித்தது.

வேக, வேகமாக கோயிலை வலம், வந்துவிட்டு பள்ளிக்கு ஓடிவிட்டான், நந்து. நெஞ்செல்லாம் ஒரே பர, பரப்பு. பள்ளி ஆரம்பிக்கும் முன் இவர்களுக்கான பரீட்சை. ஒரு மணி நேரம் நடக்கும். பரீட்சையில் தேர்வுற்றோருக்கு 'மாணவர் மன்றம்' சிறப்புப் பரிசுகள் வழங்கும். பள்ளித் தலைமை ஆசிரியர் வருட இறுதி விழாவில் பொதுச்சபையில் அதை மாணவர்களுக்கு வழங்குவார். நந்துவின் சகோதரி எப்போதும் மன்றத்தேர்வுகளில் நிறைய மதிப்பெண்ணுடன் தேர்வுற்று பரிசு வாங்குவது வழக்கம். நந்து அந்த வழியில் இப்போது முதன்முறையாக தேர்வு எழுதுகிறான்.

முதலில் 'ஏ' பார்ட்டு கேள்விகள். அவை எளியவை. 'பி' பார்ட்டு கேள்விகள், யோசிக்க வைப்பவை. நிறைய எழுத வேண்டும். மட, மடவென 'ஏ' பார்ட்டு முடித்துவிட்டு, 'பி' பார்ட்டுக்கு வந்தால், அப்பர் தேவாரப்பாடலொன்று கொடுக்கப்பட்டு பொருளுரை கேட்கப்பட்டிருந்தது!

கல்லாலின் நீழலிற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்
சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே!

நந்துவிற்கு இரட்டை மகிழ்ச்சி. ஒன்று, இப்பாடல் தனது ஊரான திருப்பூவணம் பற்றிய பாடல். இரண்டாவது, இது தக்ஷிணாமூர்த்தி பற்றிய பாடல். மிக உற்சாகத்துடன் எழுதத்தொடங்கினான்.

அப்பர் பெருமான் முதலில் தமிழ் மறைகள் வழியன்றி மாற்று சமயங்களில் காலம் கழித்தவர். பின் அவரை தடுதாட்கொள்ளும் எண்ணம் கொண்டு இறைவன் பல திருவிளையாடல்கள் செய்து அவரை சைவநெறிக்கு அழைத்து வருகிறான். அப்படி இறைவன் தன்பால் ஆதரவு காட்டியதை நினைத்தவுடன், அப்பருக்கு கவின் மறையோர் நால்வருக்கு ஈசன் மிக்க அருள்கொண்டு கல்லால் மரத்தின் நிழலில் உபதேசம் செய்தது நினைவிற்கு வருகிறது. உபநிஷதம் சொல்வது போல் ஆத்மஞானிகள் பேசுவதே இல்லை. அவர்கள் 'மலர்மிசை ஏகி' நிற்கும் இறைத்தியானத்தில் எப்போதும் மூழ்கி இருப்பதால் வாய், வார்த்தை என்பது அற்றுப்போயிருப்பர். அந்நிலையில், இறைமையின் அடிஆழத்திலிருந்து முத்தெடுத்து நன்நெறிகள் வழங்குவர். கேட்பவரும் மகாஞானிகளாக இருப்பதால், பேசாப்பொருளாக சைகைகள் மூலமே இவைகளை அறிந்து கொள்ளும் திறனுடையோராய் இருப்பர். இதைக்காட்டும் முகமாய், இறைவன் மௌனகுருவாக, கல்லால் மரத்தமர் நன்கு வேதமறிந்த நான்கு சீடர்களுக்கு சிவநெறி காட்டியருளுகிறார். இக்காட்சி அப்பர் பெருமானுக்கு திருப்பூவணம் எனும் புண்ணித தலத்தில் கிட்டுகிறது. அப்பர், 'சொல்லாமல் சொல்லுதல்' எனும் அழகான பதப்பிரயோகம் செய்கிறார். இன்னாளைய கண்ணதாசன் எனும் கவி இதையே "சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை" என்கிறான்.

தக்ஷிணாமூர்த்தியின் கழுத்தில் 'காமத்தை' வென்று நிற்பதின் அடையாளமாக அரவும், கையில் துள்ளியோடும் மானும் நிற்பதும் அப்பருக்குத் தெரிகிறது. ஐம்புலன் கொண்ட வாழ்வின் கதிக்கு ஓடிவிடாமல் ஐம்புலனும் அவன் பால் நிற்க மனலயம் வாய்த்தவர்களுக்கு அருளும் காட்சியும் தோன்றுகிறது. உபநிஷதம் சொல்கிறது, இறைவன் 'கிருஷ்ண பிங்கலமாக' இருக்கிறான் என்று. கண்டதே காட்சி என்று இருப்போருக்கு வெளியே தெரியா வண்ணம் 'மறைந்தும்' (கிருஷ்ண), ஐம்புலன் மறந்தோர் தமக்கு காணும் காட்சியெல்லாம் அவனாக 'தோற்றமாகவும்' (பிங்கலம்) இருக்கிறான் என்று சொல்லுகிறது. இங்கு அப்பர் பெருமான் போன்ற ஆதமஞானிகளுக்கு காணும் காட்சியெல்லாம் சிவமயமாகத்தோன்றும் வண்ணமும், ஐம்புலன் காட்டும் காட்சியே என்று இருப்போருக்கு உலகின் இயற்கையான காட்சிகளைக்க்காட்டிக்கொண்டும் விஸ்வரூபமாக இறைமை இருக்கிறது என்று உபநிஷதம் (முண்டாக உபநிஷதம்) சொல்கிறது. பொழில் திகழும் திருப்பூவணத்து புனிதனார் அப்பருக்கு பொல்லாத புலால்,எலும்பு இவைகளைப் பூணாய் அணிந்து நிற்கும் காட்சியும் தோன்றுவதாக இத்தேவாரப்பாடல் அமைகிறது.

இப்படி எழுதிவிட்டு நந்து நிம்மதிப் பெருமூச்சுவிட, தமிழாசிரியர், "நல்லது பிள்ளைகளே தேர்வுக்காலம் முடிந்தது. நீங்கள் உங்கள் விடைத்தாள்களை மேசையில் வைத்துவிட்டு எழுந்திருக்கலாம் என்று சொல்லவும் சரியாக இருந்தது.

நந்துவிற்கு தேர்வில் வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கை வலுத்தது.நன்றி சொல்ல மாலையில் கோயிலுக்கு கட்டாயம் போகவேண்டுமென நினைத்துக் கொண்டு வழக்கமான பள்ளிப்பாடங்களைப் படிக்க தனது வகுப்பிற்குப் போனான்.

நாராயணா எனும் நமச்சிவாயம்!

அன்று ஞாயிறு. காலையில் குளித்துவிட்டு நந்து கோயிலுக்குப் போனான்.பூஜைக்காலம் என்பதைக் குறிக்க பெரிய கண்டாமணி அடித்துக்கொண்டு இருந்தது.கோயில் யானை தலையைத்தலையை ஆட்டி நின்று கொண்டு இருந்தது. ஓதுவார் அழகாணபண்களில் தேவாரம் பாடிக்கொண்டிருந்தார். சந்நிதிக்குள் நுழையும் முன்பேஇத்தனை காட்சிகள்!

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

அட! நம்ம தாத்தா சொல்லிக்கொடுத்த பாட்டு. நந்து ஊன்றிக்கேட்டுக்கொண்டான். பின் கோயிலுக்குள் சென்று வழிபடலானான். அப்பர்சுவாமிக்கு மட்டும் எப்படி இந்த வெறும் லிங்கம் பல்வேறு வடிவில்'தோன்றும், தோன்றும்' என்று காட்சியளிக்கிறது? யோசித்துக்கொண்டே பிரகாரம்சுற்றி வரும் போது, ஒரு புதியவர் நெற்றியில் திருநீரும், கழுத்தில்உருத்திராட்சமுமாக கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார். அடியாரைக் கண்டால்வணங்க வேண்டுமென்று தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்து இருக்கிறார்நந்துவிற்கு. எனவே வணங்கினான். அவரும் முகமலர்ச்சியுடன் வணங்கிவிட்டு,'தம்பிக்கு உள்ளூரா?' என்றார்.

ஆம! ஐயா! பக்கத்திலேதான் வீடு! என்றான்.

நான் யாத்திரீகன். சிவ ஸ்தலங்கள் சுற்றிவருகிறேன். திருப்பூவணம் பாடல்பெற்ற ஸ்தலமாயிற்றே! எவ்வளவு அருமை, அருமையான பாடல்கள். ஆகா! எனும் போதுஅவருக்கு மெய்சிலிர்ப்பதைக் கண்டான் நந்து. சரி, இவரிடம் இன்று பாடம்கேட்டுக்கொள்ளலாமென மனதில் எண்ணிக்கொண்டு, வெளிப்பிரகாரம் வரும்வரைகாத்திருந்தான்.

இன்று ஓதுவார், ஒரு அருமையான பாடல் ஓதினார். அதன் பொருள் உங்களிடம்கேட்டுத்தெரிந்து கொள்ள் ஆசை.

'ஓ! கவனித்தாயா! அப்பர் ஸ்வாமிகளின் திருமுறைகள். அற்புதமாகதிருத்தாண்டகம்.'வடிவேறு திரிசூலம்' பாடலைக் கேட்கிறாயா?

அப்பாடலுக்கு பொருள் விளக்கி இதே பிரகாரத்தில் உளவாரப்பணி செய்துகொண்டிருந்த ஒரு பெரியவர் விளக்கினார்! என்று நந்து சொன்னவுடன் அந்தயாத்ரீகர் ஒரு நிமிடம் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி,

தம்பி அப்பர் ஸ்வாமிகளின் இஷ்டமான தொண்டு உளவாரப்பணிதான். அம்மாதிரிதொண்டெல்லாம் இப்போதும் இங்கு செய்கிறார்களா? நல்லது! நல்லது! என்றார்.

ஓ! எங்க பண்டாரம் செய்யும். ஆனா! அன்னக்கி ஒரு தாத்தா செய்தார். அவரும்ஒரு யாத்ரீகர் போலும். அதற்குப்பிறகு காணவில்லை. என்றான் நந்து.

'தோன்றும், தோன்றும்' என்று இந்தப்புண்ணிய ஸ்தலத்தில் பாடியதால், அப்பரேஉனக்கு முன் தோன்றியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவ்வளவு புனிதமண் இது. சரி, எந்தப்பாடல் பொருள் கேட்டாய்?

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி ஊர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

இப்பாடலில் இறைவனின் வடிவழகு சொல்லி, அவன் எவ்வாறு அடியார்க்குஇன்னமுதமாக இருக்கிறான் என்று சொல்லி, அடியார்தம் மனத்திலுள்ளமும்மலங்களை அகற்றுவதில் அவன் எவ்வளவு குறியாக இருக்கிறான் என்று சொல்லி,மீண்டும் அவன் வடிவழகில் வந்து நிற்கிறார் அப்பர்.

சரி, இங்க உட்காருவோம். என்று மூலையிலிருந்த கல்யாண மண்டபத்தில் அமர்ந்தனர்.

ஆண், பெண் என்று இரு உருவங்கள். ஆண் உக்கிரத்தின் தோற்றம். பெண்கருணையின் தோற்றம். ஒன்று நீதி பரிபாலனம் செய்வது. மற்றொன்று நீதிஎன்பதையும் விட கருணையை மட்டுமே செய்வது. எனவே நாம் முதலில் அம்பாளின்முன்தான் கைகூப்பி நிற்க வேண்டும். அவள் அன்னை. நம்மை மன்னித்து இறைவனின்அருளுக்கு பாத்திரமாக்கச் செய்வாள். நாம் அப்படிச் செய்யவில்லையெனில்நாம் செய்திருக்கின்ற பாவங்களுக்கு நம்மை ஒரே நாணால் அழிப்பதைத்தவிரஇறைவனுக்கு வேறு வழியில்லை, என்று சிரித்தார் பெரியவர்.

இறைவன் நம்மை அழிப்பவனா? அது காக்கும் சக்தி இல்லையா?

ஆமாம், ஆமாம். பயம் வேண்டாம். பற்றார் தம்மேல் சேணாக வரைவில்லால்எரித்தார் என்றுதான் அப்பர் பாடுகிறார். இறைவனிடம் பற்று இல்லாமல், தான்எனும் அகந்தையுடன் உழலும் ஜீவன்களை அவர் களைவார் என்கிறார். மேலும்,ஒவ்வொரு ஆன்மாவிலும் ஜென்ம, ஜென்மமாக வந்த அழுக்குகள்மண்டிக்கிடக்கின்றன. 'ஆண்டாள் பேசுவது போல் 'தீ' கொண்டுதான் அவைகளைஅழிக்க வேண்டும். அதைத்தான் இறைவன் செய்கிறான்.

"அவர் ஏன் எலும்பு மாலை போட்டுக்கொண்டு இருக்கிறார்? அது அழகா? பயமாகஇருக்கு!" என்றான் நந்து.

"ஓ! மிக நன்றாகத்தான் பாடம் கேட்கிறாய். உங்கள் தமிழ்வாத்தியாரைப்பாராட்ட வேண்டும். இறப்பைக் குறிப்பது எலும்பு. இறைவன்இறப்பு சூழ்ந்து வாழ்வு இருப்பதைக் காட்ட எலும்பு போர்த்தி இருக்கிறான்.இப்பிரபஞ்சம் முழுவதும் சூழ்ந்திருக்கும் மித்ரு. மித்ருவிலிருந்து ஜீவன்உருவாகிறான், மீண்டும் அங்கேயே சங்கமிக்கிறான். ஆனால் இந்தசுழற்சியிலிருந்து நம்மை விடுவித்து கையாலத்தில் வைத்து தம்திருவிளையாடல் காட்டும் திறன் இறைவனுக்கு மட்டுமே உண்டு. சிவன் காலனைக்காலால் உதைத்தான் என்பது இச்சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கத்தக்கவன்என்பதைச் சொல்லுவதே! பெரிய பாடமாகக் கேட்கிறாய், குழந்தாய். உனக்கெதற்குஇது? நீ வாழ வேண்டிய பிள்ளை. ஆயினும் உனக்கு வயதிற்கு மீறிய ஞானம்இருக்கிறது. உன் பெயர் என்ன?

என் பெயர் நந்தகுமார்.

ஓ! நீ கோகுலத்து சிறுவனா? அதுதான் இந்த ஞானம்! உனக்கு பெரியதிருமொழிதெரியுமோ? திருமங்கை ஆழ்வார் நிலையாமை பற்றி நிறையப் பேசுகிறார்.'இடும்பை இடும் பை' என கர்ப்பவாசத்தைச் சொல்கிறார். கேட்கிறாயா? அப்பாடலைஎன்றார், பெரியவர்.

சொல்லுங்கள், அரங்கன் கோயிலில் நாலாயிரம் பாடமும் கேட்கிறேன் என்றான் நந்து.

"சபாஷ்! ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் விட நமக்கு வேறொரு ஆசான்வேண்டுமோ?" என்று சொல்லிவிட்டு பெரிய திருமொழி சொல்லத் தொடங்கினார்பெரியவர்.

வாடினேன்! வாடி, வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன்: கூடி யிளையவர் தம்மோ
டவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி யுய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து
நாடினேன்; நாடி, நான்கண்டு கொண்டேன் -
நாராய ணாவென்னும் நாமம்.

எப்படி அழகாக நமது துயர்மிகு வாழ்வை, அது கொண்டிருக்கும் அபாயங்களைக்கண்டு சொல்கிறார் ஆழ்வார்? ஆனால், ஓடி உய்ய வேண்டிய பொருள் என்னவென்றும்தெளிவாகக் காட்டுகிறார். உணர்வெனும் பெரும் பதம் என்றொரு பெரிய வார்த்தைபோடுகிறார், ஆழ்வார்! இறைவன் உணர்வின் மூர்த்தி என்கிறார் இன்னொருஆழ்வார். அவனை நாம் உணர்வு பூர்வமாகத்தான் உணரமுடியும். எவ்வளவுவாதங்களும், எதிர் வாதங்களும் செய்து அறியக்கூடிய பொருளல்ல அவன். உணர்வுஎனும் பெரும் பதமே அவன்தான்.

"அவனை நாராயணா! என்றுதானே ஆழ்வார் சொல்கிறார்?" என்றான் நந்து.

பெரியவர் சிரித்துக்கொண்டு, நாராயணா! என்றால் என்ன? நமச்சிவாயா என்றால்என்ன? இரண்டும் ஒன்றைதானே குறிக்கிறது குழந்தாய்! என்று சொல்லும் போதுகோயில் பிரசாதம் தட்டிலேந்த ஜடாதர ஐயர் நின்று கொண்டிருந்தார்.

அவனுக்கு அன்று கொஞ்சம் அதிகமாகவே பிரசாதம் கிடைத்தது.

நந்துவும் இராவண வாகனமும்!

நந்துவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. திருப்புவனம் கோயிலில் பங்குனி உற்சவம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் தினம் சுவாமி புறப்பாடுதான். நாளுக்கொரு வாகனமென்று வரும். இந்த வாகனங்களெல்லாம் பொதுவாக அம்பாள் சந்நிதி உள் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும். நந்துவிற்கு ஒவ்வொரு வாகனமாய் போய் பார்க்கப்பிடிக்கும். அன்ன வாகனம், மயில் வாகனம், மூஞ்சூறு, காளை வாகனம் இப்படி. இதனூடே இராவண வாகனமொன்று இருக்கும். இருப்பதிலேயே குழந்தைகளைப் பயமுறுத்தும் வாகனம்! பத்துத்தலை, இருபது கைகளுடன், பெரிய கதாயுதமும் கையுமாக, கோரைப்பற்களுடன்!! நந்துவிற்கு காளை வாகனம் பிடிக்கும், அன்னவாகனமும் அழகாக இருக்கும்.

உற்சவத்தின் போது, சீர்வாதாங்கிகள் திண்தோளுடன் வந்து நிற்பர். வாகனம் தூக்கித்தூகியே சிலர் தோள்களில் தழும்பேறிப்போயிருக்கும். வண்டி மாட்டிற்கு கழுத்தில் தமிழ்பேறியது போல். இந்த இளைஞர்கள் வந்துவிட்டால் உற்சவம் களைகட்டிவிட்டதென்று பொருள்.

நந்துவிற்கு, குதிரை வண்டியில் போகும் போதே குதிரையை சாட்டையால் அடித்தால் பிடிக்காது. ஒருமுறை வண்டிக்காரன் சாட்டையை இவன் பிடிங்கிக்கொள்ள, வண்டி நடுவழியில் நின்று போய் பெரிய களேபரமாகிவிட்டது. அப்படிப்பட்ட நந்துவிற்கு காளை வாகனம் தூக்கும் சீர்வாதாங்கிகளின் தோள் தழும்பேறிப்போயிருப்பது பார்க்க வருத்தமாக இருந்தது. அவர்களிடமெல்லாம் போய் பேசும் வயதல்ல. அவர்கள் வாகனங்களை அல்லாக்காக தூக்கிக்கொண்டு போகும் வேகத்தில் காலில் யாராவது விழுந்து வைத்தால் நசுங்கிச் சாக வேண்டியதுதான். அப்படியொரு நிலை. ஒரு உன்மத்தம் பிடித்த நிலை. பங்குனியில் பல விழாக்கள் வரும். அதில் காளி கோயில் அக்கினிச்சட்டி எடுத்துவரும் பழக்கமும் நந்துவிற்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கும். தமிழர்களால் இது எப்படி முடிகிறது? கையில் தீச்சுடாதா? வாத்தியார் சொல்லித்தரும் "தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா! நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதய்யா!" எனும் பாவமா? இது எப்படி சாத்தியப்படுகிறது?

கோயில் உற்சவத்தில் எல்லா வாகனங்களுக்கும் முன்னால் முந்திரிக்கொட்டை போல் ஓடி வருவது மூஞ்சூறு வாகனம்தான். நந்துவிற்கு இது பிடிக்கும். குட்டியாக, அழகாக. ஆனால் எப்போதும் ஒரே ஒட்டம்தான். அடுத்து குட்டி மயில் வாகனத்தில் முருகன் வருவார். இவையிரண்டையும் பெரும்பாலும் இளஞ்சிறார்களே தூக்கி சமாளிப்பர். அடுத்து, ஒரு காளை மாட்டில் இரண்டு பக்கமும் முரசு கட்டி, அடித்துக்கொண்டு வருவார்கள். நந்துவிற்கு, கையில், காலில் விழுந்து ஓசி வாங்கி முரசு அடிப்பது பிடிக்கும். பெரும்பாலும் இதற்கு போட்டி அதிகமாகவே இருக்கும். வெறும் உற்சாகம் மட்டுமிருந்தால் போதாது. தோதாக அடிக்க வேண்டும். ரொம்பவும் பலமாக அடித்தலோ, நகரும் காளையின் நடைக்கேற்ப நடக்கத்தெரியாமல் முரசை விட்டு, காளை மாட்டின் மீது பலமாக குச்சியைத்தட்டிவிட்டாலோ, முடிந்தது கதை! ஒன்று காளை பக்கத்திலிருக்கும் நபரைக் கொம்பால் குத்திவிடும். அல்லது மிரண்டு ஓடத்துவங்கும். அது உற்சவத்தைக்கெடுத்துவிடும். எனவே பழக்கப்படாத பசங்களிடம் தம்பட்டமடிக்க குச்சியைத்தர மாட்டார்கள். மிகச் சில சமயங்களிலேயே நந்துவிற்கு இந்த வாய்ப்புக் கிடைப்பதுண்டு.

முரசிற்குப் பின் சுவாமி வாகனம் வரும், கம்பீரமாக! அன்று இராவணவாகனம். திண்தோள் படைத்த சீர்வாதாங்கிகளே விழிபிதுங்கிக்கொண்டிருந்தனர். நந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தது, ஏனென்று? அருகிலிருந்த அக்காவிடம், "ஏங்க்கா? இவ்வளவு கஷ்டப்படறாங்க? ரொம்ப கனமோ?" என்றான் நந்து. "ஆமாம், கனம்தான். இமயமலை இல்லையா? அதை இராவணன் தன் பலத்தால் தூக்கப்பார்க்கிறான். அவன் அகந்தையை அடக்க சிவபெருமான் பெருவிரலால் நசுக்கிறார். அதனால், போகப்போக கனம் கூடும். தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே இந்த வாகனத்தைக் கிளப்பி நிலைக்குக் கொண்டுவர முடியும்" என்றாள் செல்லம்மா!

நந்து அந்த வாகனத்தையும் அதில் எழுந்தருளியிருக்கும் சுவாமி, அம்பாளையும் பார்த்த விழி மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் பள்ளியில் தமிழ் வகுப்பு. ஸ்ரீநிவாசன் சார், "டேய் நந்து, ஏழாம் திருமுறை சுந்தரர் தேவாரம் படி!" என்றார். நந்து உரத்த குரலில் பாடினான்.

மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!

'சரி! உட்கார். பொருள் சொல்லுகிறேன்' என்றார் ஆசிரியர்.

"உங்க எல்லோருக்கும் இராமாயணம் கதை தெரிஞ்சிருக்கும். அதிலே முக்கிய கதாபாத்திரம் இராவணன். இவன் பெரிய சிவபக்தன். வெறும் பக்தனா இருந்தால்மட்டும் போதுமா? அதற்கேற்ற பணிவு வேண்டும். இராவணனுக்கு தான் பெரிய பக்தன் என்ற அகந்தை.ஒருமுறை கையால மலையையே தன் தோள்வலியால் தூக்க முற்பட்டான் இராவணன். தூக்கியும் விட்டான்.கைலாயம் ஆடியது.அங்குள்ளோர் எல்லோரும் ஆடினர். தேவி,இது என்ன புதுக்கூத்து என்று ஐயனைப் பார்த்தாள். ஒன்றுமில்லை நம் இராவணன் பலப்பரீட்சை செய்து கொண்டிருக்கிறான், என்று சொல்லி தன் கட்டைவிரலால் ஒரு அழுத்தம் கொடுத்தார்.கைலாயத்தின் கனம் பல மடங்கு கூடியது. இராவணனால் தூக்கமுடியவில்லை.அப்படியே சாய்ந்துவிட்டான்.

பக்தி என்பது சாதனமல்ல. பக்தி செய்வதால் மட்டும் இறைவன் அகப்பட்டுவான் என்று சட்டமில்லை. பக்தியுடன் அன்பு வேண்டும்.நெக்குருகி இறை அருளை எண்ணி கண்ணீர் விடும் தன்மை வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இறைவன் செவி சாய்ப்பான். அப்படிப்பட்ட அடியார்கள் உள்ளத்தில் எப்போதும் ஈசன் குடியிருப்பான். அந்த உயர்ந்த குணமுடைய ஈசனுறையும் ஊர் திருப்பூவணம்" என்கிறார் சுந்தரப்பெருமான்" புரிகிறதா? என்றார் ஆசிரியர்.

எல்லோரும்,'ஆமாம் ஐயா!' என்றனர்.

நந்துவின் கை பாடப்புத்தகத்தைப் புரட்டும் போது திருவாய்மொழிப்பாடலொன்று கண்ணில் பட்டது. சார்! அடியார் எப்படி இருப்பார்ன்னு நம்மாழ்வார் சொல்கிறார்,சார்" என்றான். ஆசிரியர் சிரித்துக்கொண்டே,'அழுவன்,தொழுவன்' பாடல்தானே! சரி அதையும் வாசி என்றார்.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்.
செந்தா மரைக்கண்ணா,
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
வகையே சூழ்கண்டாய்.

பின் ஆசிரியர் தொடர்ந்தார், " இறையருள் நினைந்து நெக்குருகி அழுவன், இறை இருக்கும் திசை நோக்கித்தொழுவன், இன்னிசை பாடி அலற்றுவன், தன் வினை நினைத்து நாணத்தால் தலை கவிழ்ந்திருப்பன். இப்படியான அடியார்கள் கூட்டம் கும்பகோணம் ஆராவமுதன் கோயிலில் கூடியிருக்குமாம். அங்குள்ள செந்தாமரைக் கண்ணனைத் தொழுது, உன் தாள் சேரும் நாள் என்னாளோ?" என்று விளிக்கிறார் நம்மாழ்வார்."

"நல்ல பாட்டு இல்லையா? நீங்களெல்லாம் இந்தப்பெரியவர்கள் சொல்வது போல் அன்புடனும், பண்புடனும், பக்தியுடனும் இருக்க வேண்டும். சரியா?" என்றார் ஆசிரியர்.

"அப்படியே இருப்போம் சார்" என்று எல்லோரும் கூவும் போது மணி அடித்தது. ரீசஸ் பீரியட். எல்லோரும் பள்ளியை விட்டு வெளியே ஓடினர் குதூகலமாக.

நந்துவும், சம்பந்தனும்

நந்து மெல்ல கோவிலுக்குப் போனான்.

பண்டாரம் நின்றிருந்தார். 'என்னடா! பையா! குளிக்க வந்திருக்கையா?' என்றார்.

நந்துவிற்கு மறந்துவிட்டது, ஏன் பண்டாரம் இப்படிக் கேட்கிறாரென்று.
'அதெல்லாமில்லை, வீட்டிலே குளிச்சிட்டுத்தான் வரேன்' என்றான் விறைப்பாக.
'எம்பா கோவிச்சுக்கறே! அன்னிக்கு நீ தண்ணி விட்ட ரோஜா பூத்திருக்கு பாரு!
என்று காண்பித்தார்'. மிக அழகான சிவப்பு ரோஜா. பண்டாரம் கைப்பட்டு அந்த
நந்தவனத்தில் நந்தியாவட்டை, அரளி, முல்லை, மல்லிகை என்று ஒரே பூக்காடு.

'சாமி! இவ்வளவு பூ பூத்தா, பாம்பு வராதா? உங்களுக்கு பயமில்லையா?' என்று
நந்து பண்டாரத்திடம் கேட்டான்.

'ஓ! நல்ல பாம்பைச் சொல்லறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது. நான்தான்
சிவ நாமத்தைச் சொல்லிக்கிட்டுதானே பூப்பறிக்கிறேன். ஒண்ணும் பண்ணாது
என்றார்.

நந்து பிரகாரத்தைப் பார்பதைக் கண்டு கொண்டு, பண்டாரம் கேட்டது, 'என்ன பாக்கறே?'.

'இல்ல, அன்னிக்கு ஒரு தாத்தா! இங்க நெருஞ்சிமுள் பிடிங்கிட்டு இருந்தாரு.
நல்ல தாத்தா! இருக்காரான்னு பாக்கறேன்'.

'எந்தத் தாத்தாவச்சொல்லறே? நம்ம மடப்பள்ளி ஐயரையா?'

'இல்ல சாமி. இவரு வேற மாதிரி இருந்தாரு. உளவாரப்பணின்னு சொன்னாரு'

'உளவாரப்பணியா? அதெல்லாம் நான்தானே தம்பி இங்க செய்யறேன். வேற யாரும்
நம்மக்கேக்காம அதை இந்தக் கோயில்ல செஞ்சிடமுடியும்?'

நந்து குழம்பிவிட்டான். அன்றைக்கு பார்த்த தாத்தா யாரு?

பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றிவிட்டு சுவாமி சந்நிக்குள் நுழைந்தான்.
அவனுக்குப்பிடித்த லாந்தர் விளக்கு அழகாக தொங்கிக்கொண்டிருந்தது.
உள்பிரகாரத்திற்குள் நுழைந்தான். கொஞ்சம் இருட்டாக இருந்தது. ஆள்
நடமாட்டம் இல்லை.

கையில் ஜால்ராவை வைத்துக்கொண்டு ஒரு சிறுவன் நின்றிருந்தான். இவனைப்
பார்த்தவுடன் பாடத்தொடங்கினான்.

நன்றுதீது என்று ஒன்றிலாத நான்மறையோன் கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர் பிரான் இடமாம்
குன்றில் ஒன்றியோங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே (சம்பந்தர்)

நந்து அச்சிறுவனையே பார்த்துக் கொண்டிருந்தான். எதிரே குறைவெளிச்சத்தில்
தட்சிணாமூர்த்தி. இப்பையன் வந்ததால் அங்கு கொஞ்சம் ஒளிகூடியது போன்ற ஓர்
பிரமை.

பாட்டை முடித்துவிட்டு, 'நமச்சிவாய வாழ்க! நமச்சிவாய வாழ்க' என்றான். 'ஏ
பையா! நீயும் சொல்லு!' என்று நந்துவைப் பார்த்து ஆணையிட்டான்.

நந்து அவனை வச்ச கண் வாங்கவில்லை.

'என்ன அப்படி பார்க்கிறாய்? உன் பெயர் என்ன?' என்றான் சிவச்சிறுவன்.

'நந்தகுமார். நந்துன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க!'

'ஓ! படிக்கிறாயா? நான் பாடிய பாட்டு புரிந்ததா? என்றான்.

ஓ! என்றான் நந்து.

'நன்றுதீது என்று ஒன்றிலாத நான்மறையோன் கழலே
சென்று பேணி ஏத்த நின்ற தேவர் பிரான் இடமாம்!"

யாரைச் சொல்கிறேன் புரிகிறதா? என்றான் சிறுவன்.

'நந்து, ஓ புரிகிறதே. பெருமாளைச் சொல்கிறாய்! என்றான்.

சிவச்சிறுவன் நகைத்து, ஓ, அப்படியா! ஏனப்படி சொல்கிறாய்?' என்றான்.

புண்ணியம் பாவம் புணர்ச்சிபிரி வென்றிவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மயாயல்லனாய்,
திண்ணமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
கண்ணனின் னருளேகண்டு கொண்மின்கள் கைதவமே.

என்பதுதானே இறைவன் இயல்பு என்றான் நந்து!

'சபாஷ்! அதை விளக்கு இப்போது எனக்கு!' என்றான் சிவச்சிறுவன்.

நந்துவிற்கு இப்பத்தும் மனப்பாடம். ஒப்பில்லா அப்பன் சந்நிதியில்தான்
அவனுக்கு காதுகுத்து. நம்மாழ்வார் ஒப்பில்லா அப்பன் மீது பாடிய பத்துப்
பாடல்களுமே துருவம் கொண்டு இயங்கும் மனதை ஒருமைப்படுத்தும் பாடல்கள்.
எனவே மகிழ்வுடன் விளக்கினான்,

புண்ணியம், பாவம், சேர்தல், பிரிதல், எனும் இவ்வகையாய்; நினைத்தல்,
மறத்தல், இருத்தல், இல்லாதிருத்தல் எனும் தன்மையனாய்; பெரிய மாடங்கள்
சூழ்ந்த திருவிண்ணகரத்தைச் சேர்ந்த பிரான் கண்ணன். அவன் இன்னருள்
கண்டுகொண்டு இவ்வுலக மாயையை நீக்குவோமாக! என்பது பொருள் என்றான் நந்து.

ஆகா! ஆகா! ஆனந்தம்! அந்தப்பிரான் இங்குதான் இருக்கிறான், வா!
காட்டுகிறேன் என்றான் சிவச்சிறுவன்.

'என்ன இந்தக் கோயிலிலா? நான் அப்படியொரு சந்நிதி பார்த்ததில்லையே?'

'ஆம்!

'குன்றில் ஒன்றியோங்க மல்கு குளிர் பொழில் சூழ் மலர்மேல்
தென்றல் ஒன்றி முன்றிலாருந் தென்திருப் பூவணமே!!

என்றான் சிவச்சிறுவன். இப்ப நீ அந்த வனம் பார்த்தாய். பழையூருக்குப்
போனால் பெரிய பூங்கா உண்டு. இவன் புஷ்பவன நாதன் தானே! மலர்மேல் மருவும்
அப்பன், வா, வா..காட்டுகிறேன்.

பொறு, பொறு! உன் பாட்டிற்கு நீ இன்னும் பொருள் சொல்லவில்லையே? என்றான் நந்து.

'எல்லாப்பொருளும் ஒன்றுதான் நந்து! நல்லது, கெட்டது எனும் பகுப்பில்லாத
பரம் உறையும் இடம் இங்குதான் உள்ளது என்கிறது என்பாடல். அது எட்டடி
தூரத்தில்தான் உள்ளது வா! என்றான் சிறுவன்.

அவன் அழைக்க, இவன் தொடர, 'ஓம்! நமசிவாய..ஓம் நமசிவாய' எனும் ஓங்காரம்
என்கிருந்தோ எங்கும் நிரம்ப, இவர்கள் சந்நிதிக்குள் நுழைய...'ஆதியாய்,
அநாதியாய், அங்கு இங்கு என்றில்லாத ஒரே பரம்' நந்துவிற்கு கண்ணனாகவும்,
சிவச்சிறுவனுக்கு வடிவேறு திரிசூலம் கொண்ட சிவனாகவும் காட்சியளித்து,
சுடராக மின்னி மறைந்தது.

கூசிய ஒளி கண்டு, கண்மூடி கண் திறக்கும் போது, சந்நிதியில் நந்து மட்டும்
நின்றிருந்தான். ஏகாந்தமாக.

அவனுக்குத்தெரியும் நாளை தமிழ் வாத்தியார் இதைத்தான் பாடமெடுப்பாரென்று.

நந்துவும் நாவுக்கரசும்

திருப்புவனம்.

வைகைக்கரையில் மதுரைக்குக் கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள ஊர்.
மிகத்தொன்மையான சிவஸ்தலம். பாண்டியர்கள் ஆண்டாண்டு காலம் ஆண்ட நிலம். குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல்முடிக்கரை என்ற பெயருண்டாயிற்று. கோனேரின்மை கொண்டான் குலசேகரதேவன் காலத்திய கல்வெட்டுக்கள் இத்தலத்திற்கு வேதபாராயணத்திற்கும், விழாக்களுக்கும் நிவந்தங்கள் அளித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

கோவிலைப் பார்த்த மாதிரி வீடு. 'பத்ம நிலையம்'. வீட்டில் ஒரே குதூகலம்.
சிறுவர்கள், சிறுமியர் நிரம்பிய வீடாக உள்ளது. குதூகலத்திற்குக் காரணம்?
வைகை கரை புரண்டு ஓடுகிறதாம். ஊரெல்லாம் பேச்சு. நந்துவிற்கு கால்
கொள்ளவில்லை. அம்மாவின் அதட்டல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு' ஏழு பொட்டைகளுக்குப் பின்னால பொறந்திருக்கான், இவனை ஆத்திலே விடவா பெத்தேன்?' என்று அம்மா சுவரைப்பார்த்து பேசிக்கொண்டிருக்கிறாள். இவனுக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. வாசலில் வைகையை நோக்கி ஓடும் சிறுவர்களின் கூச்சல் நிற்க விடமாட்டேன் என்கிறது. கடைசியில் அம்மா, கொல்லைப்புரம் போனவுடன் இவன் ஆற்றை நோக்கி ஓடிவிட்டான்.

நொப்பும் நுரையுமாக வெள்ளம். கரையைக் காணவில்லை. அரசமரத்துப் பிள்ளையார் கோயில் சுவரளவிற்கு நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. பலர் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். நிறைய சிறுவர், சிறுமியர். அதில் தைர்யமான சிறுவர்கள் கோயிலுக்குள் போய் சுவர் வழியாக, தொம், தொம்மென்று ஆற்றில் குதித்துக்கரையேறுகின்றனர். நந்துவுக்கும் ஆசை. கொஞ்சம் பயம் கொஞ்சம் ஆசை. மீண்டும் பயம். ஏதோ ஒரு தைர்யத்தில் குதித்துவிட்டான். அந்த ஆற்றிற்கு இவ்வளவு பலமுண்டு என்று இவன் அறிந்ததில்லை. இவன் நீந்தாமலே ஆறு இவனை அள்ளிக்கொண்டு சென்றது. கரையில் தள்ளியது. மீண்டும் குதித்தால் அள்ளிக்கொண்டு போய் ஆசை காட்டிவிட்டு கரையில் தள்ளியது. இப்படியே அடிவிட்டு கண்கள் சிவக்க, உடல் நடு, நடுங்க கரைக்கு ஒருவழியாக வந்தான். வீட்டுக்குஇப்படியே போனால் உதை விழும், எனவே கோயில் கிணறில் குளித்து உலர்த்திவிட்டுப் போகலாமென 'பெரிய' கோயிலுக்கு வந்தான்.

கோயில் கிணற்றை ஒட்டி நந்தவனம். ஒரு பண்டாரம் பூ பறித்துக்கொண்டிருந்தார். என்ன தம்பி! குளிக்கணுமா? நல்லா குளி! தண்ணி அப்படியே இந்த ரோஜா செடிக்குப்பாயும். இப்பதான் வகுத்துவிட்டேன்! என்றார். சரி, குளித்தால் ரோஜா செடி வளரும் என்று பண்டாரம் சொல்கிறாரென்று இவன் இன்னும் ரெண்டு வாளித் தண்ணீரை தலையில் ஊற்றினான்.

குளித்து முடித்து, ஆடைகளைப் பிழிந்து உணர்த்தி (கோவணம் உதவி -
பண்டாரம்), காலாற ஒரு சின்ன ஆண்டி போல் கோயில் பிரகாரத்தில் உலாவரத் தொடங்கினான். அப்போதுதான் பார்த்தான் ஒரு கிழவர் உளவாரப்பணி செய்து கொண்டு மூலையில் வானத்தைப்பார்ப்பதும், கண்ணீர் உகப்பதுமாக இருந்தார். மெல்ல இவன் அவரிடம் போனான். இவனைப் பார்த்தமும் அவர், 'குமரா! பழனியாண்டவா!' என்று வணங்கினார். இவனைக் கோகுலத்தில் திரியும் இடையன் என்றுதான் எல்லோரும் கொஞ்சுவார்கள். இந்தக்கிழவர் முருகன் என்கிறாரே! என்றெண்ணி, "தாத்தா! என்ன பண்ணறீங்க? என்றான். "உன்னை மாதிரி சின்னக் குழந்தைகள்,பிரகாரம் சுற்றும் போது நெருஞ்சி முள் குத்தாம நான் களையெடுக்கிறேனப்பா!' என்றார். "தாத்தா, வடக்கு வீதியிலே நடக்கவே முடியலே! ஒரே முள்ளு!' என்றான் கண்ணன். 'ஓ! அப்படியா! காட்டு, எனக்கு' என்று இவன் கையைப் பிடித்துக்கொண்டு கிழவர் வந்தார்.

அங்கு வந்து, உளவாரப்பணி செய்து கொண்டு இருக்கும் போதே, குமரா! பாத்தியா? இதைப்பாத்தியா? என்றார். எதைத் தாத்தா? என்றான் சிறுவன். என்னப்பன், பூவணநாதன் வந்து நிற்கும் அழகை? என்றார். தெரியலையே தாத்தா! நீங்க எப்படி இருப்பார்ன்னு சொல்லுங்க! என்றான் நந்து. பெரியவர் பாடத்தொடங்கிவிட்டார்.

வடிவேறு திரிசூலந்தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திரு முடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.


(அப்பர்)

அவர் கண்ணீரும், உவப்பும் சேரக்கொண்டு அனுபவிப்பது இவனுக்கு புது
அனுபவமாக இருந்தது. இவன் பார்த்த சனிக்கிழமை பஜனை போல் இல்லை அது! ஆனாலும், இவர் பாட்டிலும் தன்னிசைவாக இசை வந்தது. இவனும் தாத்தாவோடு குதித்துக்கொண்டு ஆடினான்.

இதுவெல்லாம் முடிந்த போது இவன் தலை உலர்ந்திருந்திருந்தது. அப்போதுதான் இவனுக்கு, வீட்டு ஞாபகம் வந்தது. "தாத்தா! வீட்டுக்குப் போகணும், இல்லாட்டி திட்டுவாங்க!' என்று நழுவினான். "போய்ட்டு வா! நல்லாயிரு!" என்று தாத்தா ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

இவன் வீட்டிற்கு வந்து, அடிவாங்காமல் உண்டு, உறங்கும் போது, தாத்தா சொன்ன காட்சி நினைவில் வந்தது. மீனாட்சி கோயிலில் சிற்பி வடித்த சிற்பம் போன்றதொரு காட்சியைப் பெரியவர் சொல்லியிருக்கிறார்.

அழகிய வடிவான திரிசூலம் கையில் கொண்டு, பிறைச் சந்திரன் சடைமுடியில் தோன்ற நிற்கிறான் ஈசன். காதில் ஒருபுறம் தோடு, ஒரு புறம் குழை. ஓ! அம்மாவும் கூட இருக்காங்க போல. அதான் தோடு! இவன் சுந்தரன் என்பது போல் இருந்தாலும் கோபமென வந்துவிட்டால் யானைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொள்பவன். இல்லை, குளிருக்கு போர்வையாக்குபவன். இவன் சடைமுடி இத்தருணத்திலும் எழிலாகத் தோன்றும். நெற்றியில் அழகிய திருநீறு. இப்படி அழகிய தோற்றத்தை திருப்பூவணநாதன் தருகிறான்.

நந்து முணு, முணுத்துக்கொண்டே உறங்கிவிட்டான்.

காலையில் பள்ளிக்குப்போனால் ஆசிரியர் இந்தப்பாட்டை இவனை வாசிக்கச்
சொல்லி, பொருள் விளக்கச் சொல்கிறார். இவன் பாவத்துடனும், இசையுடனும் அதை வாசித்துப் பொருள் சொன்னபோது ஆசிரியரே மயங்கிவிட்டார். "எங்கேடா! கத்துக்கிட்டே! இப்படி? ஓதுவார் சொல்லித்தந்தாரா? என்றார் ஆசிரியர். "இல்லே சார், ஒரு தாத்தா சொல்லித்தந்தார் என்றான்.

வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டான். "ஏண்டி,
பங்கஜம், இவன் சொல்லற கிழவரை நம்ம கோயில்லே முன்னப்பின்னே
பாத்திருக்கியோ?" என்றாள். 'இல்லேம்மா! நான் பாத்ததே இல்லே! இவன் ஏதோ
கனாக்கண்டிருக்கான்!' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

கனவா? இப்படி, அச்சுப்பதித்தாற்போல் சொல்லறானேடி! என்ன அதிசயம்?

என்று அவர்கள் வியந்து கொண்டு இருக்கும் போது இவன் கோயிலை நோக்கி.....