நந்துவும் நாவுக்கரசும்

திருப்புவனம்.

வைகைக்கரையில் மதுரைக்குக் கிழக்கே 12 மைல் தொலைவில் உள்ள ஊர்.
மிகத்தொன்மையான சிவஸ்தலம். பாண்டியர்கள் ஆண்டாண்டு காலம் ஆண்ட நிலம். குலசேகர பாண்டியன் இந்நகரில் முடிசூட்டிக் கொண்ட விழாவில் நெற்கதிரை முடியாகச் சூடிக்கொண்டான். எனவே இத்தலத்திற்கு நெல்முடிக்கரை என்ற பெயருண்டாயிற்று. கோனேரின்மை கொண்டான் குலசேகரதேவன் காலத்திய கல்வெட்டுக்கள் இத்தலத்திற்கு வேதபாராயணத்திற்கும், விழாக்களுக்கும் நிவந்தங்கள் அளித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.

கோவிலைப் பார்த்த மாதிரி வீடு. 'பத்ம நிலையம்'. வீட்டில் ஒரே குதூகலம்.
சிறுவர்கள், சிறுமியர் நிரம்பிய வீடாக உள்ளது. குதூகலத்திற்குக் காரணம்?
வைகை கரை புரண்டு ஓடுகிறதாம். ஊரெல்லாம் பேச்சு. நந்துவிற்கு கால்
கொள்ளவில்லை. அம்மாவின் அதட்டல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு' ஏழு பொட்டைகளுக்குப் பின்னால பொறந்திருக்கான், இவனை ஆத்திலே விடவா பெத்தேன்?' என்று அம்மா சுவரைப்பார்த்து பேசிக்கொண்டிருக்கிறாள். இவனுக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. வாசலில் வைகையை நோக்கி ஓடும் சிறுவர்களின் கூச்சல் நிற்க விடமாட்டேன் என்கிறது. கடைசியில் அம்மா, கொல்லைப்புரம் போனவுடன் இவன் ஆற்றை நோக்கி ஓடிவிட்டான்.

நொப்பும் நுரையுமாக வெள்ளம். கரையைக் காணவில்லை. அரசமரத்துப் பிள்ளையார் கோயில் சுவரளவிற்கு நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. பலர் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். நிறைய சிறுவர், சிறுமியர். அதில் தைர்யமான சிறுவர்கள் கோயிலுக்குள் போய் சுவர் வழியாக, தொம், தொம்மென்று ஆற்றில் குதித்துக்கரையேறுகின்றனர். நந்துவுக்கும் ஆசை. கொஞ்சம் பயம் கொஞ்சம் ஆசை. மீண்டும் பயம். ஏதோ ஒரு தைர்யத்தில் குதித்துவிட்டான். அந்த ஆற்றிற்கு இவ்வளவு பலமுண்டு என்று இவன் அறிந்ததில்லை. இவன் நீந்தாமலே ஆறு இவனை அள்ளிக்கொண்டு சென்றது. கரையில் தள்ளியது. மீண்டும் குதித்தால் அள்ளிக்கொண்டு போய் ஆசை காட்டிவிட்டு கரையில் தள்ளியது. இப்படியே அடிவிட்டு கண்கள் சிவக்க, உடல் நடு, நடுங்க கரைக்கு ஒருவழியாக வந்தான். வீட்டுக்குஇப்படியே போனால் உதை விழும், எனவே கோயில் கிணறில் குளித்து உலர்த்திவிட்டுப் போகலாமென 'பெரிய' கோயிலுக்கு வந்தான்.

கோயில் கிணற்றை ஒட்டி நந்தவனம். ஒரு பண்டாரம் பூ பறித்துக்கொண்டிருந்தார். என்ன தம்பி! குளிக்கணுமா? நல்லா குளி! தண்ணி அப்படியே இந்த ரோஜா செடிக்குப்பாயும். இப்பதான் வகுத்துவிட்டேன்! என்றார். சரி, குளித்தால் ரோஜா செடி வளரும் என்று பண்டாரம் சொல்கிறாரென்று இவன் இன்னும் ரெண்டு வாளித் தண்ணீரை தலையில் ஊற்றினான்.

குளித்து முடித்து, ஆடைகளைப் பிழிந்து உணர்த்தி (கோவணம் உதவி -
பண்டாரம்), காலாற ஒரு சின்ன ஆண்டி போல் கோயில் பிரகாரத்தில் உலாவரத் தொடங்கினான். அப்போதுதான் பார்த்தான் ஒரு கிழவர் உளவாரப்பணி செய்து கொண்டு மூலையில் வானத்தைப்பார்ப்பதும், கண்ணீர் உகப்பதுமாக இருந்தார். மெல்ல இவன் அவரிடம் போனான். இவனைப் பார்த்தமும் அவர், 'குமரா! பழனியாண்டவா!' என்று வணங்கினார். இவனைக் கோகுலத்தில் திரியும் இடையன் என்றுதான் எல்லோரும் கொஞ்சுவார்கள். இந்தக்கிழவர் முருகன் என்கிறாரே! என்றெண்ணி, "தாத்தா! என்ன பண்ணறீங்க? என்றான். "உன்னை மாதிரி சின்னக் குழந்தைகள்,பிரகாரம் சுற்றும் போது நெருஞ்சி முள் குத்தாம நான் களையெடுக்கிறேனப்பா!' என்றார். "தாத்தா, வடக்கு வீதியிலே நடக்கவே முடியலே! ஒரே முள்ளு!' என்றான் கண்ணன். 'ஓ! அப்படியா! காட்டு, எனக்கு' என்று இவன் கையைப் பிடித்துக்கொண்டு கிழவர் வந்தார்.

அங்கு வந்து, உளவாரப்பணி செய்து கொண்டு இருக்கும் போதே, குமரா! பாத்தியா? இதைப்பாத்தியா? என்றார். எதைத் தாத்தா? என்றான் சிறுவன். என்னப்பன், பூவணநாதன் வந்து நிற்கும் அழகை? என்றார். தெரியலையே தாத்தா! நீங்க எப்படி இருப்பார்ன்னு சொல்லுங்க! என்றான் நந்து. பெரியவர் பாடத்தொடங்கிவிட்டார்.

வடிவேறு திரிசூலந்தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திரு முடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.


(அப்பர்)

அவர் கண்ணீரும், உவப்பும் சேரக்கொண்டு அனுபவிப்பது இவனுக்கு புது
அனுபவமாக இருந்தது. இவன் பார்த்த சனிக்கிழமை பஜனை போல் இல்லை அது! ஆனாலும், இவர் பாட்டிலும் தன்னிசைவாக இசை வந்தது. இவனும் தாத்தாவோடு குதித்துக்கொண்டு ஆடினான்.

இதுவெல்லாம் முடிந்த போது இவன் தலை உலர்ந்திருந்திருந்தது. அப்போதுதான் இவனுக்கு, வீட்டு ஞாபகம் வந்தது. "தாத்தா! வீட்டுக்குப் போகணும், இல்லாட்டி திட்டுவாங்க!' என்று நழுவினான். "போய்ட்டு வா! நல்லாயிரு!" என்று தாத்தா ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

இவன் வீட்டிற்கு வந்து, அடிவாங்காமல் உண்டு, உறங்கும் போது, தாத்தா சொன்ன காட்சி நினைவில் வந்தது. மீனாட்சி கோயிலில் சிற்பி வடித்த சிற்பம் போன்றதொரு காட்சியைப் பெரியவர் சொல்லியிருக்கிறார்.

அழகிய வடிவான திரிசூலம் கையில் கொண்டு, பிறைச் சந்திரன் சடைமுடியில் தோன்ற நிற்கிறான் ஈசன். காதில் ஒருபுறம் தோடு, ஒரு புறம் குழை. ஓ! அம்மாவும் கூட இருக்காங்க போல. அதான் தோடு! இவன் சுந்தரன் என்பது போல் இருந்தாலும் கோபமென வந்துவிட்டால் யானைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொள்பவன். இல்லை, குளிருக்கு போர்வையாக்குபவன். இவன் சடைமுடி இத்தருணத்திலும் எழிலாகத் தோன்றும். நெற்றியில் அழகிய திருநீறு. இப்படி அழகிய தோற்றத்தை திருப்பூவணநாதன் தருகிறான்.

நந்து முணு, முணுத்துக்கொண்டே உறங்கிவிட்டான்.

காலையில் பள்ளிக்குப்போனால் ஆசிரியர் இந்தப்பாட்டை இவனை வாசிக்கச்
சொல்லி, பொருள் விளக்கச் சொல்கிறார். இவன் பாவத்துடனும், இசையுடனும் அதை வாசித்துப் பொருள் சொன்னபோது ஆசிரியரே மயங்கிவிட்டார். "எங்கேடா! கத்துக்கிட்டே! இப்படி? ஓதுவார் சொல்லித்தந்தாரா? என்றார் ஆசிரியர். "இல்லே சார், ஒரு தாத்தா சொல்லித்தந்தார் என்றான்.

வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டான். "ஏண்டி,
பங்கஜம், இவன் சொல்லற கிழவரை நம்ம கோயில்லே முன்னப்பின்னே
பாத்திருக்கியோ?" என்றாள். 'இல்லேம்மா! நான் பாத்ததே இல்லே! இவன் ஏதோ
கனாக்கண்டிருக்கான்!' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

கனவா? இப்படி, அச்சுப்பதித்தாற்போல் சொல்லறானேடி! என்ன அதிசயம்?

என்று அவர்கள் வியந்து கொண்டு இருக்கும் போது இவன் கோயிலை நோக்கி.....

2 பின்னூட்டங்கள்:

அறிவன்#11802717200764379909 3/20/2009 01:14:00 AM

புனைவுக்குள் என்ன ஒரு அழகு !

இந்தப் பாடலும் அழகான திருமுறைப் பாடல்களில் ஒன்று...

மூவர்கள் திருமுறையில் பக்தியுடன் அழகியலையும் சேர்த்தே வளர்த்தார்கள் என்பதற்கான அழகான சான்றுகளில் இந்தப் பாடலும் ஒன்று..

கல்கியின் சிவகாமியின் சபதத்தில் இந்தப் பாடலின் பிரயோகம் அந்த நாவலுக்கும் சிவகாமியின் நடனத்திற்குமே ஒரு புதிய அழகு சேர்த்ததும் நினைவுக்கு வருகிறது...

நன்றி பல.

மதுரையம்பதி 3/20/2009 03:50:00 PM

மிக அருமை சார். பாடலுக்கேற்ற சூழலை அழகாக அமைத்துள்ளீர்கள்...