நந்துவும் இராவண வாகனமும்!

நந்துவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. திருப்புவனம் கோயிலில் பங்குனி உற்சவம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் தினம் சுவாமி புறப்பாடுதான். நாளுக்கொரு வாகனமென்று வரும். இந்த வாகனங்களெல்லாம் பொதுவாக அம்பாள் சந்நிதி உள் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும். நந்துவிற்கு ஒவ்வொரு வாகனமாய் போய் பார்க்கப்பிடிக்கும். அன்ன வாகனம், மயில் வாகனம், மூஞ்சூறு, காளை வாகனம் இப்படி. இதனூடே இராவண வாகனமொன்று இருக்கும். இருப்பதிலேயே குழந்தைகளைப் பயமுறுத்தும் வாகனம்! பத்துத்தலை, இருபது கைகளுடன், பெரிய கதாயுதமும் கையுமாக, கோரைப்பற்களுடன்!! நந்துவிற்கு காளை வாகனம் பிடிக்கும், அன்னவாகனமும் அழகாக இருக்கும்.

உற்சவத்தின் போது, சீர்வாதாங்கிகள் திண்தோளுடன் வந்து நிற்பர். வாகனம் தூக்கித்தூகியே சிலர் தோள்களில் தழும்பேறிப்போயிருக்கும். வண்டி மாட்டிற்கு கழுத்தில் தமிழ்பேறியது போல். இந்த இளைஞர்கள் வந்துவிட்டால் உற்சவம் களைகட்டிவிட்டதென்று பொருள்.

நந்துவிற்கு, குதிரை வண்டியில் போகும் போதே குதிரையை சாட்டையால் அடித்தால் பிடிக்காது. ஒருமுறை வண்டிக்காரன் சாட்டையை இவன் பிடிங்கிக்கொள்ள, வண்டி நடுவழியில் நின்று போய் பெரிய களேபரமாகிவிட்டது. அப்படிப்பட்ட நந்துவிற்கு காளை வாகனம் தூக்கும் சீர்வாதாங்கிகளின் தோள் தழும்பேறிப்போயிருப்பது பார்க்க வருத்தமாக இருந்தது. அவர்களிடமெல்லாம் போய் பேசும் வயதல்ல. அவர்கள் வாகனங்களை அல்லாக்காக தூக்கிக்கொண்டு போகும் வேகத்தில் காலில் யாராவது விழுந்து வைத்தால் நசுங்கிச் சாக வேண்டியதுதான். அப்படியொரு நிலை. ஒரு உன்மத்தம் பிடித்த நிலை. பங்குனியில் பல விழாக்கள் வரும். அதில் காளி கோயில் அக்கினிச்சட்டி எடுத்துவரும் பழக்கமும் நந்துவிற்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கும். தமிழர்களால் இது எப்படி முடிகிறது? கையில் தீச்சுடாதா? வாத்தியார் சொல்லித்தரும் "தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா! நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதய்யா!" எனும் பாவமா? இது எப்படி சாத்தியப்படுகிறது?

கோயில் உற்சவத்தில் எல்லா வாகனங்களுக்கும் முன்னால் முந்திரிக்கொட்டை போல் ஓடி வருவது மூஞ்சூறு வாகனம்தான். நந்துவிற்கு இது பிடிக்கும். குட்டியாக, அழகாக. ஆனால் எப்போதும் ஒரே ஒட்டம்தான். அடுத்து குட்டி மயில் வாகனத்தில் முருகன் வருவார். இவையிரண்டையும் பெரும்பாலும் இளஞ்சிறார்களே தூக்கி சமாளிப்பர். அடுத்து, ஒரு காளை மாட்டில் இரண்டு பக்கமும் முரசு கட்டி, அடித்துக்கொண்டு வருவார்கள். நந்துவிற்கு, கையில், காலில் விழுந்து ஓசி வாங்கி முரசு அடிப்பது பிடிக்கும். பெரும்பாலும் இதற்கு போட்டி அதிகமாகவே இருக்கும். வெறும் உற்சாகம் மட்டுமிருந்தால் போதாது. தோதாக அடிக்க வேண்டும். ரொம்பவும் பலமாக அடித்தலோ, நகரும் காளையின் நடைக்கேற்ப நடக்கத்தெரியாமல் முரசை விட்டு, காளை மாட்டின் மீது பலமாக குச்சியைத்தட்டிவிட்டாலோ, முடிந்தது கதை! ஒன்று காளை பக்கத்திலிருக்கும் நபரைக் கொம்பால் குத்திவிடும். அல்லது மிரண்டு ஓடத்துவங்கும். அது உற்சவத்தைக்கெடுத்துவிடும். எனவே பழக்கப்படாத பசங்களிடம் தம்பட்டமடிக்க குச்சியைத்தர மாட்டார்கள். மிகச் சில சமயங்களிலேயே நந்துவிற்கு இந்த வாய்ப்புக் கிடைப்பதுண்டு.

முரசிற்குப் பின் சுவாமி வாகனம் வரும், கம்பீரமாக! அன்று இராவணவாகனம். திண்தோள் படைத்த சீர்வாதாங்கிகளே விழிபிதுங்கிக்கொண்டிருந்தனர். நந்துவிற்கு ஆச்சர்யமாக இருந்தது, ஏனென்று? அருகிலிருந்த அக்காவிடம், "ஏங்க்கா? இவ்வளவு கஷ்டப்படறாங்க? ரொம்ப கனமோ?" என்றான் நந்து. "ஆமாம், கனம்தான். இமயமலை இல்லையா? அதை இராவணன் தன் பலத்தால் தூக்கப்பார்க்கிறான். அவன் அகந்தையை அடக்க சிவபெருமான் பெருவிரலால் நசுக்கிறார். அதனால், போகப்போக கனம் கூடும். தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே இந்த வாகனத்தைக் கிளப்பி நிலைக்குக் கொண்டுவர முடியும்" என்றாள் செல்லம்மா!

நந்து அந்த வாகனத்தையும் அதில் எழுந்தருளியிருக்கும் சுவாமி, அம்பாளையும் பார்த்த விழி மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் பள்ளியில் தமிழ் வகுப்பு. ஸ்ரீநிவாசன் சார், "டேய் நந்து, ஏழாம் திருமுறை சுந்தரர் தேவாரம் படி!" என்றார். நந்து உரத்த குரலில் பாடினான்.

மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட
நக்கிறை யேவிர லாலிற வூன்றி
நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்
புக்குறை வான்உறை பூவணம் ஈதோ!

'சரி! உட்கார். பொருள் சொல்லுகிறேன்' என்றார் ஆசிரியர்.

"உங்க எல்லோருக்கும் இராமாயணம் கதை தெரிஞ்சிருக்கும். அதிலே முக்கிய கதாபாத்திரம் இராவணன். இவன் பெரிய சிவபக்தன். வெறும் பக்தனா இருந்தால்மட்டும் போதுமா? அதற்கேற்ற பணிவு வேண்டும். இராவணனுக்கு தான் பெரிய பக்தன் என்ற அகந்தை.ஒருமுறை கையால மலையையே தன் தோள்வலியால் தூக்க முற்பட்டான் இராவணன். தூக்கியும் விட்டான்.கைலாயம் ஆடியது.அங்குள்ளோர் எல்லோரும் ஆடினர். தேவி,இது என்ன புதுக்கூத்து என்று ஐயனைப் பார்த்தாள். ஒன்றுமில்லை நம் இராவணன் பலப்பரீட்சை செய்து கொண்டிருக்கிறான், என்று சொல்லி தன் கட்டைவிரலால் ஒரு அழுத்தம் கொடுத்தார்.கைலாயத்தின் கனம் பல மடங்கு கூடியது. இராவணனால் தூக்கமுடியவில்லை.அப்படியே சாய்ந்துவிட்டான்.

பக்தி என்பது சாதனமல்ல. பக்தி செய்வதால் மட்டும் இறைவன் அகப்பட்டுவான் என்று சட்டமில்லை. பக்தியுடன் அன்பு வேண்டும்.நெக்குருகி இறை அருளை எண்ணி கண்ணீர் விடும் தன்மை வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே இறைவன் செவி சாய்ப்பான். அப்படிப்பட்ட அடியார்கள் உள்ளத்தில் எப்போதும் ஈசன் குடியிருப்பான். அந்த உயர்ந்த குணமுடைய ஈசனுறையும் ஊர் திருப்பூவணம்" என்கிறார் சுந்தரப்பெருமான்" புரிகிறதா? என்றார் ஆசிரியர்.

எல்லோரும்,'ஆமாம் ஐயா!' என்றனர்.

நந்துவின் கை பாடப்புத்தகத்தைப் புரட்டும் போது திருவாய்மொழிப்பாடலொன்று கண்ணில் பட்டது. சார்! அடியார் எப்படி இருப்பார்ன்னு நம்மாழ்வார் சொல்கிறார்,சார்" என்றான். ஆசிரியர் சிரித்துக்கொண்டே,'அழுவன்,தொழுவன்' பாடல்தானே! சரி அதையும் வாசி என்றார்.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்.
செந்தா மரைக்கண்ணா,
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
வகையே சூழ்கண்டாய்.

பின் ஆசிரியர் தொடர்ந்தார், " இறையருள் நினைந்து நெக்குருகி அழுவன், இறை இருக்கும் திசை நோக்கித்தொழுவன், இன்னிசை பாடி அலற்றுவன், தன் வினை நினைத்து நாணத்தால் தலை கவிழ்ந்திருப்பன். இப்படியான அடியார்கள் கூட்டம் கும்பகோணம் ஆராவமுதன் கோயிலில் கூடியிருக்குமாம். அங்குள்ள செந்தாமரைக் கண்ணனைத் தொழுது, உன் தாள் சேரும் நாள் என்னாளோ?" என்று விளிக்கிறார் நம்மாழ்வார்."

"நல்ல பாட்டு இல்லையா? நீங்களெல்லாம் இந்தப்பெரியவர்கள் சொல்வது போல் அன்புடனும், பண்புடனும், பக்தியுடனும் இருக்க வேண்டும். சரியா?" என்றார் ஆசிரியர்.

"அப்படியே இருப்போம் சார்" என்று எல்லோரும் கூவும் போது மணி அடித்தது. ரீசஸ் பீரியட். எல்லோரும் பள்ளியை விட்டு வெளியே ஓடினர் குதூகலமாக.

2 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் 3/21/2009 05:27:00 PM

தேவாரமும் திருவாய் மொழியும் ஒரே விஷயத்தைச் சொல்லுகிறது என்று புரிந்து கொள்கிறேன். நன்றி கண்ணன் சார்.

நா.கண்ணன் 3/21/2009 06:31:00 PM

நன்றி. எனது பிறந்த ஊரான திருப்பூவணம் பற்றிய நனவிடையூர்தல். பக்தி என்று வரும்போது ஒரே கணக்கைத்தான் இருவரும் கொள்கின்றனர். ஆச்சர்யர்கள் அதற்கு தத்துவ விளக்கம் அளித்தது பொருள் கூட்டுகிறது. ஆன்மாவின் இயல்பே சேஷபூதணாக இருத்தல் எனும் சூத்திரம் ஆச்சார்யர்கள் இன்றி அறிந்து கொள்வது கடினம்.