கடல் தாமரையன்ன பாதம்?

நந்துவின் சகோதரிகள் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, வெள்ளைத்துண்டை ஈரத்தலையில் சுற்றிப்பிழிந்த வண்ணம் கொல்லைக் கிணற்றடியிலிருந்து வரும் அழகை நந்து ரசித்துக் கொண்டிருந்தான். உலர்ந்து, உலராத தலை. முற்றும் ஈரமாகிவிட்ட துண்டு நனைந்து மெல்ல நீர் சொட்டும் அழகு நந்துவிற்கு பிடிக்கும். அதைவிட அத்தலையை துவட்டிய பின் நுறும்புகைச் சாம்பிராணி போடும் போது வீடே வாசம் பெறும்! ஒரே நேரத்தில் இரண்டு தமக்கைகள் குளித்து விட்டால் போதும் வீடே புகை இருளில் மூழ்கிவிடும். அத்தகைய பொழுது அது. நந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தான்.

'என்னடா எழுதறே?' என்று கேட்டாள் பட்டு!

வீட்டுப்பாடம்!

ஓ! வாசிச்சுக்காட்டேன் பாப்போம் என்றாள்.

சரி, இதோ, என்று பலக்க வாசித்தான் நந்து!

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றுஞ்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

பட்டு சிரித்துக்கொண்டே, 'நம்ம வீட்டில் சாம்பிராணிப் புகை போடுவது நாவுக்கரசருக்கு எப்படித்தெரிந்தது? என்றாள்.

உனக்கு இந்தப்பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா? சொல்லேன் என்றான் நந்து.

உங்க தமிழ் வாத்தியார் சொல்லற மாதிரி வராது, ஆனாலும் சொல்லிப்பார்க்கிறேன், என்று இழுத்தவாறு பேச ஆரம்பித்தாள் பட்டு,

"நந்து நம்ம ஆழி வட்டம்ன்னு ஒரு ஆட்டம் ஆடுவோம் பாரு! அது போல இவரொரு ஆழி வட்டம் சொல்லறார்.

ஆழின்னா கடல். கடல் சூழ்ந்த வட்டம்? ம்ம்..பூமி. பாரேன்! நாம கலிலியோ பூமி உருண்டைன்னு கண்டு பிடிச்சார்ன்னு படிச்சிட்டு இருக்கோம், அப்பர் சுவாமிகள் பூமி உருண்டை, வட்டம்ன்னு எப்பவோ சொல்லிட்டார்! ஆச்சர்யம்தான். இத ஏன் நம்ம பாடத்திலே சொல்லித்தரதில்லே?"

"அம்மா தாயே! ஆலோசனை அப்புறமா இருக்கட்டும். பாட்டுக்கு பொழிப்புரை சொல்லு!" என்றான் நந்து.

"டேய்! நீ எனக்கு சின்னவன்தானேடா. அக்கா சொல்லறவரைக்கும் பொறுமையா இருக்கனும். உங்க சயின்ஸ் டீச்சர்ட்டே நீயே கேளு, ஏன் அப்பர் சொன்னதை பாடத்திலே சேக்கலேன்னு. சரியா?"

"தலையாட்டாவிட்டால் மேலே போக மாட்டாள் என்று தெரியும். நந்து தலையாட்டினான். 'ம்..இப்ப சொல்லு.."

"ம்..ம்ம் இந்த ஆழிசூழ்ந்த உலகத்தார்...பாரேன்! 'ஆழி சூழ் உலகையெல்லாம் பரதனே ஆள!' ன்னு கம்பன் சொல்லறாரு. இவங்க எல்லோருக்கும் பூமி ஒரு நீர்க்கிரகம் என்று தெரிந்திருக்கிறது. உலகம் சுற்றி வந்தார்களா? இல்ல, அப்பவே உலக வரைபடம் இருந்துதா?"

"அக்கா! நீ இப்ப மேலே சொல்லப்போறயா? இல்லையா?" என்றான் நந்து. இவன் பட்டுவை அக்கா என்று கூப்பிட்டதே கிடையாது. இவனைவிட சில மாதங்களே (ஒரு வருடம் என்று அவள் சொல்லுவாள்!) மூத்தவள். ஒரு
கிளாஸ் முந்தி. இப்படிக் கூப்பிட்டால் அவள் வழிக்கு வருவாள் என்று தெரியும்.

"ம்..ம்..எங்க விட்டேன்..ம்ம் ஆழிசூழ் உலகில் வசிக்கும் மாந்தரெல்லாம் மிக இஷ்டத்துடனும், அன்புடனும் இட்ட வண்ண, சுகந்த மலர்கள், தூபங்கள், அதாவது ஊதுவத்தி போன்ற நறும்புகை அங்கு தோன்றும். பாரேன்! தமிழ்நாட்டுப் பேர்களெல்லாம் என்று அப்பர் சொல்லவில்லை. உலகில் உள்ள மக்களெல்லாம் என்கிறார். "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று சொல்வது எவ்வளவு சாலப்
பொருந்தும்!

அப்போது சித்தப்பா உள்ளே நுழைந்தார். என்ன காலங்கார்த்தாலே சிவமயமா இருக்கு வீடு. பெருமாள் கோயில்லே ஆளே இல்லே. அங்க வந்து இரண்டு பாசுரம் சொல்லக்கூடாதோ? என்றார். அவர் பெருமாள் கோயில் டிரஸ்டி.

"அப்பா! இதை முடுச்சுட்டு அங்க வரேன். இவன் வீட்டுப்பாடம்!" என்றாள்.

"சரி..சரி..இவன் படிப்பை நான் ஏன் கெடுப்பானேன்" என்று சித்தப்பா கொல்லைப்புறம் போய்விட்டார்.

"டேய்! தலையைச் சொறியாதே! அடுத்து இன்னொரு விஷயம் சொல்லறார், இதுபோல் யாரும் சொன்னதே இல்ல."

"அப்படி என்ன சொல்லறார்?"

"தாமரை எங்க பூக்கும்?"

"குளத்திலே"

"கடல்ல பூக்குமோ?"

"ஙே? கடல்ல தாமரையா? கேள்விப்பட்டதே இல்லையே!"

"இப்ப கேட்டுக்கோ! சீராழித் தாமரையின் மலர்களன்ன திருந்திய மாநிறத்த சேவடிகள் தோன்றும் என்கிறார்.

திருப்பூவணத்து நாதனின் அழகிய திருவடி கடலில் பூத்த தாமரையை ஒத்த அழகுடன் இருக்கும் என்கிறார். என்ன இது? இவர் பொய்கை ஆழ்வார் போல பேசறார்? அவர்தான்,

"வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
"

பேசுபவர். இந்த வையத்தையே ஒரு அகல் விளக்கு என்று சொல்லி, வார் கடலே நெய்யென்று சொல்லி, சுடர்மிகு சூரியனே திரியில் எரியும் விளக்கு! என்பார். அப்படியானதொரு பெரிய விளக்கு. பிரபஞ்ச விளக்கு. அப்படி ஏற்றினால்தான் காரிருள் வண்ணனான கண்ணன் புலப்படுவானாம். அது போல் அப்பர், சீராழித்தாமரையின் மலர் என்ன பொற்பாதம் என்கிறார். இரண்டு பேருமே ஏதோவொரு விஸ்வரூப தரிசனம் பற்றிப் பேசுகின்றனர் என்று தெரிகிறது.

அடுத்து தனது பக்தனான இராவணனுக்கு அருள் செய்ததை நினைவு கூர்கிறார். சீதையை வான மார்க்கத்தில் தூக்கிக்கொண்டு போன தேர் வட்ட வடிவமானதாம். நமக்கென்ன தெரியும்? அப்பருக்கு தெரியுது!

"அப்பா! அப்பர் ஏன், 'போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்' என்று சொல்கிறார்? பெருமாளுக்கு சிவனா ஆழி தந்தது?

"அப்படி அவருக்குத்தோற்றம் அவ்வளவுதான். வலது கரம் இடது கரத்திற்கு கொடுக்கற மாதிரிதான் இது. ஏன்னா?

'ஏருருவில் மூவருமே யென்ன நின்ற
இமையவர் தந் திருவுருவே றென்ண்ணும் போது
ஓருருவம் பொன்னுருவம்; ஒன்று செந்தீ;
ஒன்றுமா கடலுருவம்'


என்பது திருநெடுந்தாண்டகம். மூவரும் அவன்தான். ஒரு பக்கம் மாகடல் வண்ணம், மறுபக்கம் செந்தீ போன்ற சிவன் வடிவம்..அப்படீன்னா, ஒரு கையிலேர்ந்து இன்னொரு கைக்கு கொடுக்கறது போலத்தானே? என்றார் சித்தப்பா.

இருவரும் தலையாட்டினர். 'பட்டு, சீக்கிரம் முடி, நேரமாயிடுத்தில்லே?' என்றான் நந்து.

அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு. இந்த அழகெல்லாம் உடைய சிவன், பொழில் திகழும் நம்ம ஊரிலே இருக்கார்ன்னு அப்பர் சொல்லறார். சரி! ஓடு! டேய், தலையை நல்லா வாரிட்டுப்போடா. கலைஞ்சு கிடக்கு!' என்று

அவள் சொல்லி முடிக்கும் முன் நந்து ஒரே ஓட்டமாக பள்ளி நோக்கி ஓடிவிட்டான்.

0 பின்னூட்டங்கள்: