திருவடித்தோற்றம்

அன்று நந்து வீட்டிற்கு தமிழாசிரியர் வந்திருந்தார். கோயிலுக்குப் போய் கொண்டிருந்தவரை நந்துவின் சகோதரி பார்த்துவிட்டு ‘ஒரு வாய் காப்பி அருந்திவிட்டுப் போகுமாறு’ அழைக்க, ‘சரி’ என்று வந்திருந்தார். திடுதிப்பென்று யாராவது வந்துவிட்டால் வீடே அமர்க்களப்படும். அநேகமாக எல்லோருமே மாணவர்கள் என்பதால் சகோதர, சகோதரிகளுக்கு மரியாதை கலந்த அச்சம். நாணம்! ஆசிரியர்களெல்லாம் பொதுவாக மாணவர் வீடுகளூக்கு வருவதில்லை. இருந்தாலும் இந்த வீட்டு மாணவர்கள், பள்ளி அறிந்த மாணவர்கள். முதல்தர மாணவர்கள் என்பதால் ஆசிரியர் வந்திருந்தார். அம்மாவிற்கு முன் எச்சரிக்கை இல்லாமல் ஒரு விருந்து! ‘டீ! கொல்லையில் மாடு கட்டியிருக்கு பாரு! கோவிந்தன் இருக்கானா? ஓடிப்போய் கொஞ்சம் பால் கறந்துட்டு வா! காப்பி போடப் பால் இல்லை. ஏண்டி கழுதை, அவர் தெருக்கோடியில் வரும் போதே கூப்பிடப்போறேன்னு சொல்ல மாட்டியோ?’ அம்மா கோபம் கலந்த குரலில் அடுக்களைக்குள் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது கேஸ் அடுப்பெல்லாம் கிடையாது. விறகு அடுப்புத்தான். ஈர விறகாகப் போய்விட்டால், புகைதான் வரும், நெருப்பு வராது. அம்மா புடவையில் எப்போதும் ஒரு கரி ஒட்டியிருக்கும். அம்மாவைக் கட்டிக்கொண்டால் ‘நெருப்பு வாடை’ எப்போதும். அம்மாதான் பாரதி பேசும் அக்னிக்குஞ்சு போலும்! கனற்பாவை போலும்!

'சார்! உக்காருங்க. அம்மா காப்பி போடறாங்க. இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்க!` என்றாள் பெரியவள் பங்கஜம். வாத்தியாருக்கும் அதிக வயதில்லை. கல்யாணம் கூட ஆகவில்லை, எனவே அவரும் நெளிந்தார். அப்போது அவருக்கிருந்த ஒரே ஆண் துணை நந்துதான். எனவே அவனுடன் பேசத் தொடங்கினார்.

`என்ன நந்து? எப்போதும் புத்தகமும் கையும்தான் போலும்! நல்லது, நல்லது. படிக்கிற பையன்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்` என்று சொன்னபோது அடுக்களையிலிருந்து அம்மா முகம் எட்டிப்பார்த்தது. அதில் கொஞ்சம் பெருமிதம் இருந்தது. `பிள்ளையை எப்படி வளர்த்திருக்கிறேன், பார்!` எனும் பெருமிதம். அம்மாவிற்கு கல்விதான் கண். குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னேற வேண்டுமென்பதில் அவளுக்கு குறி. அதனால்தான் இப்போதும் பேர் தெரியாத ஒரு ஆசிரியருக்கு காப்பி போட்டுக்கொண்டிருக்கிறாள்.

`ஆமாம் சார்! நாவுக்கரசர் எழுதிய திருத்தாண்டகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். ஒரேயொரு சின்ன லிங்கம் அவருக்கு எப்படி, எப்படியெல்லாம் தோற்றம் தருகிறது! என்பது அதிசயமாக உள்ளது` என்றான் நந்து.

`உண்மைதான். இருக்கும் பொருள் ஒன்றுதான். அதுவே வேண்டுவோருக்கு ஏற்றவிதம், அவர்கள் ஆத்ம பரிபக்குவத்திற்கு ஏற்றவிதம் பரிமளிக்கிறது'

'அது எப்படி சார்?` என்றான் நந்து.

`நந்து, அருளுடையாருக்கு அவன் அருள்பாலிக்கும் போது அத்தனை தோற்றமும் வந்து நிற்கிறது. இவை புறக்காட்சி அல்ல. அகக்காட்சி மட்டுமே. இதை எம்பெருமானார் எடுத்துச் சொல்லியிருக்காரே. உனக்குத் தெரியுமே?'

'அதாவது, `தோன்றும்! தோன்றும்!` என்பது புறக்காட்சி அல்ல. அகக்காட்சி. `கண்டேன், கண்டேன்` என்று ஆழ்வார்களும், அன்னமய்யாவும் சொல்வதும் இத்தகையதே. அப்படித்தானே சார்?`

`ஆம்! அவை உள்வயப்பட்ட அகக்காட்சிகள். நிர்குண பரப்பிரம்மம், தன் குண நலன்களை அடியார்க்கு காட்டும் முகமாக இப்படித் தோற்றம் தருவதுண்டு. ஒன்றுமே இல்லாதது போல் இருக்கும். பார்த்தால் அதில் சகலமும் இருக்கும். லிங்கம், வெறும் உருண்டைக்கல். ஆனால் அதற்குள் உலகமே அடங்கியிருக்கிறது. ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு மாதிரி` என்று சொல்லிச் சிரித்தார் ஸ்ரீநிவாசன் சார்!

`சரி! என்ன பாட்டு?` என்றார் ஆசிரியர்.

நந்து வாசித்தான்.

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்
திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே!

`ஆகா! அற்புதமான பாடல். பொருள் தெரியும்தானே?` என்றார் ஸ்ரீநிவாசன். அதற்குள் செல்லம்மாள் உட்புகுந்து, `சார்! நீங்க அவனுக்கு பாடம் நடத்தியிருப்பீங்க. நாங்களும் கேட்க வேண்டாமா? எங்களுக்கும் நீங்களே பொருள் சொல்லி விளக்குங்களே?` என்றாள். அவளுக்கு எப்போது வாய்ப்புக்கிடைத்தாலும் தமிழைச் சுவைக்காமல் இருக்க மாட்டாள். மேலும் கோவிந்தக் கோனாருக்கு இப்போதுதான் பால் கறக்க சேதி போயிருக்கிறது. அவர் சொம்பு, விளக்கெண்ணெயுடன் கிளம்பி வர பத்து நிமிடமாகும்!

`ஓ அப்படியா? இங்கு தமிழ்ச்சுவை தும்பிகள் இருப்பது தெரியாமல் போய்விட்டதே?` என்று சிரித்தபடி ஆசிரியர் விளக்கம் சொல்லப்புகுந்தார்.

`இது வைணவக் குடும்பம். என் பின்புலமும் அதுவே. எனவே ஆழ்வார்களையும் சேர்த்துக்கொண்டு அனுபவிப்போம். கோயிலுக்கு போவதற்கு முன் என் மனோநிலையை எப்படி மாற்றுகிறான் பார் இறைவன். இதுதான் அருட்செயல் என்பது. அவன் பெருமை அறிந்து பக்தி செய்ய வேண்டும். சும்மா நானும் கோயிலுக்குப் போனேன் என்று இருந்தால் எப்படி?` என்று சொன்னார் ஆசிரியர்.

`அப்பருக்கு முதலில் திருவடி தோன்றுகிறது. அடியார்களுக்கு இறைவனின் திருவடித்துணை போதும். முக மண்டலமெல்லாம் காணும் அளவிற்கு தாங்காது. மூர்ச்சித்து விழுந்து விடுவர். பெரிய பக்தனான பரதன், இதனால்தான் `பாதுகை` அரசாளட்டும் என்றும் இராமனின் திருவடிப்பாதுகை பெற்றான். இக்கருத்தில்தான் மலேசிய மன்னர்கள் இன்றும் `பாதுகா` என்றழைத்துக்கொள்கின்றனர். அவர் இப்ராஹிம் சுல்தானாக இருப்பார். ஆனால் மரபுப்படி அவர் இராமனின் பாதுகை. எவ்வளவு பெரிய இராமாயணப் பாதிப்பு பாருங்கள்!!` என்ற போது எல்லோருக்கும் ஆச்சர்யம். அம்மாவும் அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்தாள். இப்போது ஒரு மாணவி போல்!

”செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றும்”

என்று ஆரம்பிக்கிறார். `கண்ணன் கழலடி எண்ணுக மனமே` என்கிறான் பாரதி. நம்மாழ்வார், 'கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்கிறார். இறைவனின் கழலிணை எண்ணினாலே போதும், அவன் அருளுக்கு திண்ணமாய் ஆட்படுவோம் என்கிறார் இங்கு. திருவரங்கனின் அழகைப்பாட வருகிறார் திருப்பாணாழ்வார். நீண்டு நெடிய கண் கொண்டவன் திருமால். ஆனால் ஆழ்வார் கண்ணில் முதலில் படுவது கழல்கள்தான்.

அமல னாதிபிரா னடியார்க்
கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை
யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன்,
நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி
னுள்ளன வொக்கின்றதே.


இவர் ஒன்றும் செய்யவில்லை. அத்திருப்பாதம் நேராக வந்து இவர் கண்களில் ஒட்டிக்கொண்டதாம். பக்தி என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். எனவே அப்பர் பெருமானுக்கும் முதலில் படுவது அவன் கழல்களே.

அடுத்து, “திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்” என்கிறார். சிலை என்றால் வில்லென்று பொருள். சிலை வடிவினன் இராமன். அதுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கு சிவன் வில்லுடன் இருப்பதுபோல் தோற்றம். திரிபுரம் எறித்த கைகளோடு அவர் வில்லுக்கோர் விஜயன் என்று சொல்வது போல் நிற்கிறார். இங்கு கலியனைச் சொல்லாமல் போனால் தமிழ் படித்ததற்கு அர்த்தமில்லை. அவரது திருநெடுந்தாண்டகத்தில் வரும் ஓர் அற்புதமான பாடல்!

மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.


காதலி காத்திருக்கிறாள்! (இதைச் சொல்லும் போது மறந்தும் இவர் கண்கள் பெண்கள் மேல் பட்டுவிடக்கூடாது என்று குனிந்த தலையாகச் சொல்லுகிறார். இதை அம்மாவும் கவனித்துக்கொண்டு உள்ளுக்குள் பாராட்டிக்கொண்டிருக்கிறாள்!). மை வண்ணக் குழல் அழகனாக வருகிறான் இறைவன். அது பின்னால் தாழ்ந்து கிடக்கிறது. காதுகளில் போட்டிருக்கும் மகர குண்டலங்கள் இருபுறமும் ஆடுகின்றன. வந்து சேர்ந்தவன் வெறும் கையோடு வரக்கூடாதோ? வில்லும் கையுமாக வருகிறான். அதுவும் எய்ந்த கோலத்தில் இருக்கும் வெஞ்சிலை என்கிறார். அப்பருக்கும் அதே காட்சி. திரிபுரம் எரித்த வெஞ்சிலை. அம்பு போய், போய் சிலையே அனல் பறக்கும் போலுள்ளது! ஒரு மடமங்கை முன் இப்படி கோபாக்கினியுடன் வந்தால் தாங்குமா? அத்தோடு போனால் போகிறது. தனியாக வரவில்லை. வில்லுடன் வருகிறான். தம்பியுடனும் வருகிறான். நல்லவேளை பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியாக கை வண்ணம் தாமரை, அழகிய அதரமும் தாமரை, கண்களோ அரவிந்தம், பாதமோ கமலம். இவ்வளவு அழகு கொண்ட ஒரு ஆடவன் முன்னே வந்து நிற்கும் போது, இவன் காதலன் அல்ல, ஏதோ தேவன், கந்தர்வன் போலும் என்று எண்ணிவிடுகிறாள் காதலி. எவ்வளவு அழகாக இங்கு பாதமும், சிலையும் வருணிக்கப்படுகிறது பாருங்கள். திருப்பூவண நாதன் அப்பருக்கு வில்லுடன் வந்து காட்சி தந்த திருத்தலம் நம்மவூர்! என்று ஆசிரியர் சொல்லும் போதும் எல்லோருக்கும் பெருமிதம்.

திரிபுரம் எறித்தான் என்று சொன்னவுடன் இறைவனின் நேர்மை தோன்றுகிறது அப்பருக்கு! “நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்” நேர்மை எப்படி கண் முன்னால் தோன்றும்? இதிலிருந்தே இது அகக்காட்சி என்று கொள்ள வேண்டியுள்ளது. மேலும், பூவணநாதன் இவருக்கு தட்சிணாமூர்த்தியாக பலமுறை தோற்றம் தருகிறான். சைவ நெறியை உலகிற்குச் சொல்லும் அந்த மௌனகுருவின் நேர்மை இவருக்குத் தோன்றுகிறது.

”நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்” திரிபுரம் எரித்த போது நெற்றிக்கனல் பறந்திருக்கும். அக்கண்களும் அப்பருக்குத் தோன்றுகிறது!

”மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்” இக்காட்சிகளின் பயன் யாது? நமது பிறவிச் சங்கிலி அறுபடுகிறது! என்கிறார் அப்பர். இறையுணர்வு அற்று கோடி, கோடி ஜென்மங்கள் எடுத்து, பிறவித்துயர் தரும் இடும்பைப்பையில் பிறந்து, பிறந்து இளைத்துப் போனோருக்கு, திருப்பூவணம் வந்தால் பிறவித்துயர் அறுபடுகிறது என்கிறார் அப்பர் பெருமான். அதுதானே இந்த ஊரின் சிறப்பு. இல்லையா? என்றார் ஆசிரியர்.

‘ஆமாம், அஸ்தி கரைக்க வந்த பெரியோருக்கு அச்சாம்பல் பூவாக மலர்ந்த திருத்தலம் அல்லவோ திருப்பூவணம்’ என்றாள் பங்கஜம் பின்னாலிருந்து. ஆசிரியர் ஆமோதித்து, தலையசைத்தார்.

”மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்”. தேவி புருஷாகாரம் என்கிறது வைணவம். சைவத்திலும் அதுதான். அதனால்தான் பிறவித்துயர் அறுக்கும் குணம் என்றவுடன் அம்பாள் ஞாபகம் வருகிறது அப்பருக்கு. ஒன்றுக்கு இரண்டு தேவிகள் தோன்றுகின்றனர். ஒன்று மலைமகளான உமையவள். மற்றது, சகல பாவங்களையும் போக்கும் புண்ணிய கங்கை. பிறகென்ன? ஆன்மாவின் மலங்கள் அகன்று, புனிதமடைந்து, பிறவிப்பெருந்துயரிலிருந்து விடுபடுகிறான் பக்தன்.

”பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே!”


அப்பருக்கு மீண்டும், மீண்டும் திருப்பூவணநாதன் சந்திரசேகரனாகக் காட்சியளிக்கிறான். அந்த அழகிய இளமதி, கழுத்தில் புரளும் அரவம் இவை உடன் சேரப் பொலியும் காட்சி! பூவணத்து புனிதனார் நமக்குத்தரும் காட்சி!!

அடடா! என்ன அழகான திருப்பதிகம்! என்று அவர் கண்ணை மூடிக் கண் திறக்கையில் மணம் கழழும் நரசூஸ்* காப்பி அவர் அருகில் இருந்தது.

(* மதுரைக்காரர்களுக்கு மட்டும் தெரியும் காப்பி அது!)

4 பின்னூட்டங்கள்:

Natural Dyed Garments 4/11/2009 10:06:00 PM

இன்றுதான் முதல்முறையாக உங்களது வலைப்பூவிற்குள் வந்துள்ளேன்.அற்புதம்.

நா.கண்ணன் 4/11/2009 10:38:00 PM

மிக்க நன்றி.

BALAJI K 4/26/2009 12:44:00 PM

Its really wonderful! I had been wanting to know the mening of this PATHIKAM for a long time. I enjoyed this . Thank you so much.(Feel bad to write this in English, as I am still in the process of installing Tamil fonts in my PC!)

நா.கண்ணன் 4/26/2009 01:28:00 PM

நன்றி. அடுத்த பதிகமும் வாசித்துவிட்டு உங்கள் கருத்துச் சொல்லுங்கள்!