உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய்!

நந்து பாடங்களை மனப்பாடம் செய்வது வேடிக்கையாயிருக்கும். பள்ளியில் அதை உருப்போடுதல் என்பர். உருப்போடுதலில் பலவகையுண்டு. ஒப்பாரி வைப்பது போல் நெஞ்சில் அடித்து, அடித்து உருப்போடுதலுண்டு. சத்தமே போடாமல் பக்கங்களில் மேலும் கீழும் வருடி, வருடி உருப்போடுதலுண்டு. சில பையன்கள் தொண்டைகிழிய சத்தம் போட்டு உருப்போடுதலுண்டு. நந்து மத்திமவகை. சத்தம் போட்டுத்தான் படிப்பான், ஆனால் காட்டுக்கத்தலாக அல்ல. ஒவ்வொருவரியாக சொல்லிச்சொல்லி உருப்போடுவான். அன்றும் அப்படித்தான். “அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்...அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்...அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்...அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்...” என்று உருப்போட்டுக்கொண்டிருந்தான். அப்போது கிளுக்கென்று சிரிப்பொலி கேட்டது.

கொல்லைப்புரத்தில்! இவன், கன்றுக்குட்டி, பசுமாடு, இவை தவிர ஒரு முருங்கை மரம். பின்ன யாரு சிரிப்பது? என்று சுற்றும், முற்றும் பார்த்தான். குட்டிச்சுவருக்குப் பின்னால் பிருந்தா நின்று கொண்டு இவனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினாள். `என்னடீ? இப்ப இங்க சிரிக்கிறதுக்கு இருக்கு?` என்றான் நந்து கடுப்போடு.

’இல்ல, நீ உருப்போடற வரி....` என்று சொல்லி மீண்டும் சிரித்தாள். `ஏண்டீ! கழுத்தறுக்கற! அர்த்தத்தைச் சொல்லிட்டு சிரியேன்?` என்றான் நந்து. “ஓ! அப்ப நீ அர்த்தம் புரியாமத்தான் திரும்பத்திரும்ப சொல்லிட்டு இருக்கியா?” என்றும் மீண்டும் சிரித்தாள். “டீ! இன்னொருமுறை சிரிச்சே, கழுத்தை அருத்துருவேன்!` என்றான் நந்து. “அருப்பே, அருப்பே! அர்த்தம் புரியாம
பாடம் படிக்கிற புள்ளயப்பாரு!” என்று மீண்டும் சீண்டினாள். `சரி நீதான் அர்த்தம் சொல்லேன்?` என்றான் நந்து. “சீ! இதுக்கெல்லாம் நான் அர்த்தம் சொல்ல மாட்டேன்! உங்க தமிழ் வாத்தியார் கிட்டயே போய் கேட்டுக்கோ!` என்று சொல்லிவிட்டு வந்தது போல் மறைந்துவிட்டாள். நந்து மகாகடுப்போடு அடுத்த வரிக்குப் போக முயன்றான் முடியவில்லை. இந்த வரியிலே அப்படி என்ன இருக்கு. சீண்டிட்டுப் போறாளே? என்று யோசித்துக்கொண்டே இருந்தான்.

அன்று இவர்கள் தெருவில் ஒரு கல்யாணம். எல்லோருக்கும் விருந்துண்ண அழைப்பு. மதிய விருந்திற்குப் போக முடியாமல் பள்ளி, எனவே மாலை விருந்திற்குத்தான் போக முடிந்தது. ஆற்றங்கரை தாண்டி அக்கரையில் கல்யாணச்சத்திரம். எனவே போய்விட்டு இரவு திரும்ப முடியாது. அங்கேயே தங்குவதாக ஏற்பாடு. சாப்பாடு முடிய இரவு 9 மணியாகிவிட்டது. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை தாம்பூலம் என்று குழு, குழுவாக உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். செட்டியார் விடுதியின் (கல்யாணச்சத்திரம்) திண்ணையில் நந்து படுத்திருந்தான். அங்கும் ஒரு குழு உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்தான்.

“என்ன மணி! புஷ்பவனேஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டு வந்தியா?” என்று ஒருவர்.

“வந்ததும் முதல் வேலை அதுதானேப்பா! கோயில் சுவரிலே திருப்பூவணப்பதிகங்கள் எழுதியிருந்தன. அதில் அப்பர் பாடிய ஒரு பாடல் என் நெஞ்சில் நிற்கிறது, அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும் என்று ஆரம்பிக்கும்”

சட்டென நந்துவிற்கு, `அட! நாம் மனப்பாடம் செய்த பாடல். இவர்களாவது பொருள் சொல்லுகிறார்களா? பார்ப்போம்!` என்று காதைத்தீட்டிக்கொண்டான்.

“பாத்தியா! மணின்னா, மணிதான் எந்தப்பாட்டை புடிச்சிருக்கான் பாரு” என்றார் இன்னொருவர்.

“ஆமாம்! நம் கவிகளுக்கு பெண்ணென்று வந்துவிட்டால் வருணனைக்குப் பஞ்சமிருக்காது. அப்பர் என்ன சொல்லறார், அம்பாளோட முலை அரும் மொட்டு போல் அழகாக இருக்கிறதாம். அதன் மென்மை கண்டு மலர்களே நாணுமாம்”

“டேய் இத கல்யாணப் பையனிடம் போய் சொல்லுடா!” என்று இன்னொருத்தர்.

அப்போதுதான் பிருந்தா சிரித்த சிரிப்பின் அர்த்தம் நந்துவிற்குப் புரிந்தது.

அப்போது பார்த்தசாரதி என்பவர், “டேய் வாயைக் கழுவுங்கடா! அம்பாள் பற்றிப் பேசும் பாடலடா அது! சங்கரர் கூடத்தான் சௌந்தர்யலகரியில் அம்பாளை வருணிக்கிறார்”

“அதைத்தானே சொல்லறோம் நாங்களும். உனக்கேன் பொத்துக்கிட்டு வருது?” என்றார் இன்னொருவர்.

“சரி, சரி..சாமி விஷயம் விளையாடமப் பேசுவோம். அப்பருக்கு இறைவன் பல்வேறு வடிவில் காட்சி தருகின்றான். அவன் உமையொரு பாகன் என்பதால் அம்பாளும் கண்ணுக்குப்படுகிறாள். பார்த்ததை அப்படியே சொல்கிறார் அப்பர். ஏன் அம்பாளுக்கு மொட்டு போன்ற மென்முலை? ஏன்னா? இறைவனுக்கும், இறைவிக்கும் வயதே ஆவதில்லை. வைகுந்தத்தில் எல்லோருக்கும் 25 வயது என்று ஒரு கணக்குச் சொல்வார்கள். மேலும், வடக்கிலே பாபா என்றொரு சித்தர். அவருக்கு வயதே ஆவதில்லையாம். எப்போதும் இளமையாகவே இருப்பாராம். அதைத்தான் சொல்ல வருகிறார் அப்பர். என்ன சரியா? சாரதி” என்றார் ஒருவர்.

”சரியாச் சொன்னாய் ஜெயக்கொடி. அதிலேயும் பார், சுவாமியைப் பார்க்கும் முன் அம்பாள்தான் கண்ணில் படுகிறாள். முதல் மூன்று ஆழ்வார்களுக்குப் பட்ட மாதிரி. பொய்கையார் “வையம் தகளியாய்” என்று பாடுகிறார், பூதத்தார், “அன்பே தகளியா” என்று பாடுகிறார். அப்ப பெருமாள்தானே காட்சி கொடுக்கணும். ஆனால் பேயாழ்வார் என்ன சொல்கிறார், “திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்” என்கிறார். அதே போல்தான் இங்கும் “அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்” என்று காட்சி.

”சபாஷ்! சாரதி! மணி, மண்டபத்திலே படிச்ச முழுப்பாட்டையும் சொல்லு, கேட்போம்” என்று ஜெயக்கொடி சொல்ல, மணி மனப்பாடமாக தாண்டகம் சொன்னார்.

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.


“அடடா! அம்பாள் தோன்றியவுடன் அடுத்து யார் வருகிறார் பார்?”

“பெருமாள்தானே?” என்றார் பார்த்தசாரதி.

“கரெக்ட். நேரே வராக அவதாரம் காட்சிக்கு வருகிறது. வராக அவதாரம் ஆழ்வார்களால் மிகவும் சிலாகித்துப் பேசப்படும் அவதாரம். ஏனெனில் அந்த அவதாரத்தில்தான் பெருமாள் பூமியைக் காத்து, ரட்சித்தது. பொய்கையாழ்வார் இதையே எப்படிப் பாடுகிறார் பார்?

தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,
கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
பெண்ணகலம் காதல் பெரிது.

மீளாது என்றிருந்த பாருலகத்தை கேழலாய் (பன்றியாய்) வந்து கீண்டெடுத்தான் என்று சொல்கிறார். அப்போது அந்த வெண்பற்கள் எப்படி இருந்தன என்பதை

அப்பர் சொல்லித்தான் கேட்கவேண்டும்!

அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்


அந்த வெண்பற்கள் வயிரம் போல் ஜொலித்தனவாம்.

“அது சரி, சிவனையும், பார்வதியையும் பத்திப்பாடிக்கொண்டிருக்கும் போது பெருமாள் எங்கே உள்ளே புகுந்தார்? மூன்று ஆழ்வார்களுக்கும் இடையில் புகுந்த மாதிரி?”

“நல்ல கேள்வி. ஆனால் காட்சி அப்படித்தான் வருது. சிவனைப் பரனெனக்கொள்ளும் போது ‘அகலகில்லேன் உறை மார்பா’ என்பது போல் ஒரு பாகத்தில் விஷ்ணு வந்து விடுகிறார். சரி விஷ்ணுவைப் பரம் என்றால், “முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா!” என்று சிவன் உள்ளே வந்துவிடுகிறார்.

நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத் திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே


என்பது திருவாய்மொழி. சந்திரசேகரனாகிய ‘மதியம் சேர் சடையானை’ பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே என்று தெளிவாகச் சொல்லுகிறார். எனவே இருக்கும் ஒன்றைக் காட்சிப் படுத்துவதில்தான் வேறுபாடு. சைவத்திலே விஷ்ணுவை அம்பாளாய், பெண்ணாய் பார்க்கிறார்கள். வைஷ்ணவத்தில் பெருமாளை ஆணாகப்பார்க்கின்றனர். ஆனால் வேதம் இருப்பது ஒரே புருஷன் என்றுதான் சொல்லுகிறது.

மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்


சிவன் என்றவுடன் நம் எல்லோருக்கும் நடராஜ மூர்த்தம்தான் நினைவிற்கு வரும். அவன் ஆடலரசன். திருப்பூவணத்திலும் அதே காட்சி. மிக அழகிய நடன சுந்தரப்பெருமானாக, வைகைக்கரை திருக்கோட்டமாகிய திருப்பூவணத்தில் இறைவன் நிற்கிறான் என்கிறார் அப்பர்.

செக்கர்வான் ஒளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.

நடராஜப்பெருமானின் தோள் கண்டு மயங்குகிறார் அப்பர் பெருமான். செக்கச்சிவந்த ஒளி மிகுந்த ஜோதியாய் அவரின் புஜங்கள் தோன்றுகின்றனவாம். இப்படியெல்லாம் பொழில்திகழும் பூவணத்தில் இறைவன் காட்சி அளிக்கின்றானாம். ரொம்ப நல்ல பாட்டுத்தான் மணி. ஆமாம்! சாரதி என்ன யோசிச்சுக்கிடே இருக்கே?

“இல்ல, இவருக்கு ஏன் வராகப் பெருமாள் வந்து தோன்றினார் என்று யோசிக்கிறேன். திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள் அப்படின்னு ஒரு சங்கப்பாடல். கடுவன் இளவெயினனார் என்பவர் பாடியிருக்கிறார். நல்ல பாட்டு, கொஞ்சம் பெரிசு, கேட்கறீங்களா?”

“சொல்லு, சொல்லு, சுவாரசியமா இருக்கு. உனக்கு பரிபாடலெல்லாம் பரிட்சயம்ன்னு இப்பதானே எனக்கே தெரியுது!”

மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,

திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்

மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.

முனிவரும் தேவரும் பாடும் வகை

‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்,

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;

தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்

சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை.

இதிலே சகலமும் திருமாலின் திருவயிற்றில் உதித்தது என்று பட்டியிலிடுகிறார். அதில் அரன், பிரம்மா, முருகன், மற்றைத் தெய்வங்கள், மக்கள், மாக்கள், என்று எல்லாமும் வருகின்றன. ”உரு கெழு கேழலாய் மருப்பின் உழுதோய்‘ என்று வராக அவதாரத்தையும் சொல்கிறார். இதே சொல்லாட்சி அப்பரிடம் காண்பது இவர்கள் அனைவரும் சங்கத்தின் வழி கவி செய்த பெருமக்கள் என்பது புலனாகிறது.

இதில் பாதிதான் நந்துவின் காதில் விழுந்தது. ஏனெனில் அவன் அதற்குள்
நன்றாகத் தூங்கிவிட்டான்.

0 பின்னூட்டங்கள்: