எரி எண்ணெய் குகைக்குழி!

பி.பி.சி தொலைக்காட்சியில் ‘நட்சத்திரங்களுடன் நடனம்’ என்றொரு நிகழ்ச்சியுண்டு. அதில் பிரபல நட்சத்திரங்களுக்கு உண்மையான ஆடற்பயிற்சி சொல்லிக்கொடுத்து பல வாரங்களுக்கு ஆட வைத்து இறுதியில் ஒருவருக்கு கோப்பை தருவர். நட்சத்திரமென்றால் சினிமா நட்சத்திரமென்றில்லை. எத்துறையிலும் ‘நட்சத்திரமாக’ விளங்குபவராக இருக்கலாம்! அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பில்லியனர் (கோடீஸ்வரர்) ஒருவர் கலந்து கொண்டார். சுமாராகத்தான் ஆடினார். ஆனால், மற்றோருடன் போட்டியில் குறைவில்லாமலிருக்க மாடாக உழைத்து ஆடினார். அப்போது அவரிடம் கேட்ட கேள்வி, “உங்களை இதுவரை இந்நிகழ்ச்சியில் நிறுத்தியிறுக்கும் சக்தி எது?” என்பது.

அவர் சொன்ன பதில், என்னை யோசிக்க வைத்தது!

அவர் பதில், “பயம்”.

தோற்றுவிடக்கூடாதே என்ற பயத்தில் மனிதர் மாடாக உழைத்திருக்கிறார். அவரது பொருளாதார வெற்றிக்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

ஆக, பயம் என்பது, சில நேரங்களில் அதிசயக்கத்தக்க செயல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

நான் படிக்கின்ற காலத்தில் அடிக்கடி கேட்கும் வசனம், ‘மனசிலே ஏதாவது பயமிருந்தால் அல்லவோ இவன் படித்து முன்னுக்கு வருவான்!’ என்பது. பயப்பட்டால் எப்படிப் படிக்கமுடியும் என்று நினைப்பதுண்டு. ஆனால் ஒவ்வொருவர் வெற்றிக்குப்பின்னும் தோற்றுவிடக்கூடாது என்ற பயம் உந்து சக்தியாக இருப்பது புலப்படும்!

இன்று நான் கண்ட ஒரு நிகழ்வு இதை நிரூபித்தது.


கிடங்கில் எண்ணேய் கொட்ட நிற்கும் கப்பல்கள்


நான் வாழும் கோஜே எனும் தீவு கப்பல் கட்டும் தொழிலுக்கு மிகவும் பேரு பெற்றது. உலகில் முதல் ஐந்து மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்கள் கொரியாவிலுள்ளன. அவற்றில் இரண்டு எங்கள் தீவில். சிங்கப்பூரைவிட பெரிய தீவான கோஜேயின் அமைப்பு இதற்கு உதவுகிறது. அதாவது, துறைமுகங்கள் கட்டும் வசதி.

ஆனால், இங்கு ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில், மலையை பல மைல்கள் குடைந்து எண்ணெய் சேகரிக்கும் குழாய்களையும், குழிகளையும் தயார் செய்து வைத்திருப்பர் என்று கனவிலும் எண்ணமுடியாது. மலையைக் குடைவது சாதாரண விஷயமில்லை. அதுவும் பல கிலோ மீட்டர் தூரம் குடைவது கடினம். அது மட்டுமல்ல, அப்படிக்குடைந்த குகையின் உள்ளே 75 மீட்டர் கிணறுகளை வேறு வெட்டி வைத்திருக்கின்றனர். இன்று உள்ளே போய் வந்தது ஏதோ பாதாள லோகத்திற்கு போய் வந்தது போலிருந்தது.

என்னடா இது! ஏன் எண்ணெயை வெளியே பெரிய டாங்கில் வைக்கக்கூடாது? என்றால், அதற்குப் பதில், “பயம்”.

ஆம், தென்கொரியர்களுக்கு வடகொரியர்களைக்கண்டு பயம். பனிப்போர் காலங்களில் இவர்களுக்குள் நடந்த உள்நாட்டுப்போரில் இறந்தவர் எண்ணிக்கை அதிகம். இந்தக் குகை, குழி வெட்டுதலிலும் பலர் இறந்திருக்கின்றனர். ஆயினும், தேசிய பதுகாப்பை நோக்கி இந்த உயிர்த்தியாகம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அதாவது, தென்கொரியா முற்றுகையிடப்பட்டால், 14 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் அளவிற்கான எண்ணெய் இங்கு சேமிக்கப்படுகிறது.

இந்த பயத்திற்குக் காரணம், கொரியா முன்பு ஜப்பானின் காலனியாக இருந்தது (பொது எதிரி நம்பர் 1), பின்பு உள்நாட்டுப்போர், பிரிவினை, பகைமை.

எங்கள் ஆய்வகம் ஏற்பாடு செய்ததால் இதைக்காணும் வாய்ப்புக் கிடைத்தது. இங்குள்ள பலருக்கே இவ்வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது உண்மை. இம்மாதிரி இன்னும் இரண்டு குகைகுழிகள் உள்ளனவாம்!

பயம் வந்தால் பத்தும் பறந்து போகும் போல!!

5 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 5/15/2009 07:57:00 PM

அதே மாதிரி என்ணெய் சேகரிக்கும் வசதியை இங்கும் கட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

நா.கண்ணன் 5/15/2009 08:01:00 PM

அமெரிக்கர்களுக்கு எதிரிகள் அதிகமாகிவிட்டதை அது காட்டுகிறது ;-)

வன்பாக்கம் விஜயராகவன் 5/16/2009 09:20:00 PM

'நட்சத்திரங்களுடன் நடனம்’ பிபிசி புரோகிராம் அல்ல, அது அமெரிக்காவில் நடத்தப் படும் புரோகிராம். ஆனால் அது பிபிசியின்
Strictly Come Dancing அதே ஃபார்மேட்டை எடுத்து, அதே நடுவர் குழுவால் பாயிண்ட் கொடுக்க்ப் படுகிறது.

பிபிசியின் ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் நிகழ்சி பற்றி 'ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் - மக்கள் கலவரம்?' நான் என் பிளாகில் எழுதியிருந்தேன்

விஜயராகவன்

நா.கண்ணன் 5/16/2009 10:01:00 PM

அப்படியா. இங்கு (கொரியாவில்) அது BBC Entertaintment Channel லில் வருகிறது. பிபிசி ஹாலிவுட் என்று. அதன் நடுவர்கள் அனைவரும் ஆங்கிலேயர். பங்கேற்பவரில் சிலர் ஆங்கிலேயர் (உம்.Spice girls).

வன்பாக்கம் விஜயராகவன் 5/16/2009 10:24:00 PM

இப்போ பல நாடுகளில் டான்ஸிங் வித் த ஸ்டார்ஸ் பிரபலமாகிவிட்டது.

http://en.wikipedia.org/wiki/Dancing_with_the_Stars

இதுக்கெல்லாம் ஃபார்மேட் பிபிசியின் ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் தான். இந்த ஃபார்மேட்டை பிபிசி காபிரைட்டாக போட்டு, மற்ற டெலிவிஷன் கம்பெனிகளிடமிருந்து பணம் வசூல் செய்கிறார்கள். (Who Wants to be a Millionaire போல )ஒவ்வொரு நாட்டிலேயும் அநத ஊர் ஜட்ஜுகள்.

விஜயராகவன்