மின்னிலக்கிய திசை ஏது?

இலக்கியம் என்றால் அது அச்சு ஊடகத்தில் வந்தால்தான் என்று இருக்கிறது தமிழக இலக்கிய சூழல். பாரதியார் கவிதை யாத்த காலம், மெல்ல, மெல்ல தமிழகம், ஏட்டு ஊடகத்திலிருந்து அச்சு ஊடகத்திற்கு மாறிய காலம். எனவே பாரதியின் கவிதைகள் பனையோலையில் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. அதுவொரு கௌரவம், அப்போது!


இம்மாதிரியான ஒரு ஊடுபாயும் நிலையில் (transitional) தமிழகம் இப்போதுள்ளது. இலக்கியம் என்றால் அது புத்தக வடிவில் வந்து, தமிழ் மண்ணில் விமர்சிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது ஒரு எழுதா விதி.

ஆனால், இணையம் வந்த பின், இதுவரை நம் இலக்கியம் கண்டிராத ஒரு புதிய இலக்கியப்பரப்பு தமிழனுக்குக் கிடைத்திருக்கிறது. அதைத்தமிழின் ஆறாம் திணை என்கிறோம். அத்திணை வெகுவாக முன்னேறி பல்வகை சாத்தியப்படுகளை அளித்த வண்ணமுள்ளது.

பல்லூடகத்தன்மையுள்ள எழுத்து. அதாவது எழுத்து, பேச்சு, ஓவியம், ஒளிப்படமென்று பல்லூடக வெளிப்பாடாக நம் ஆக்கத்தைக் கொண்டுவர முடிகிறது. இதன் அழகான வெளிப்பாடுதான் இந்த வலைப்பதிவே. ஆயினும் வலைப்பதிவு என்பது கூட இரண்டாம் நிலைதான்.

முதலில் வலைப்பக்கம், பின் வலைப்பதிவு, இப்போது சிட்டி (நுண்பதிவு micro blogging).

அதாவது வலைப்பக்கத்தில் காவியம் செய்யலாம்.
வலைப்பதிவில் சிறுகதை எழுதலாம்
சிட்டியில் சூத்திரம் எழுதலாம். அதுவொரு குறட்பதிவு. இதை micro-content என்கின்றனர். நுண்தரவு!


சரி, ஈதெல்லாம் இலக்கியமாகுமா? நல்ல கேள்வி!

பின்னூட்டத்தை எங்கு சேர்ப்பது?
அரட்டையில் (messenger) அடிபடும் எழுத்து
?

இவைகளுக்கு இலக்கிய முத்திரை கிடைக்காதா?

மின்னெழுத்து என்பதற்கான வரைவிலக்கணம் விரைவில் உருவாகும். இலக்கியவாதிகள் செய்கிறார்களோ இல்லையோ, காலம் இதை இலக்கியம் என்று சொல்லும். ஆறாம்திணையின் இலக்கியம் இனி அச்சு ஏறாது.

சூழல் பிரக்ஞை கூடும் போது மின்னிலக்கியம் கூடுதல் கவனம் பெறும். வரும் காலம் நமது ஆக்கங்கள் புத்தகத்தில் இருக்கிறதா? எனத்தேடாது! ஆயின் தேடுபொறிக்குள் அகப்படுகிறதா? என்பதைப் பொறுத்தே சாகா இலக்கியங்கள் படைக்கப்படும்!

3 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) 7/02/2009 07:35:00 AM

அதனால் தான் ஐயா தேடுபொறிக்குள் அகப்படும் சாகா இலக்கியங்களையே படைத்துக் கொண்டிருக்கிறேன். :-) இணையத்தில் எழுதியவற்றை அச்சில் இட முயலுமாறு சொன்ன நண்பர்களின் கருத்திற்கு செவி சாய்க்காமல் இருக்கிறேன். :-)

நா.கண்ணன் 7/02/2009 08:19:00 AM

அப்ப்பா! இப்பவாவது ஒரு பதில்! இந்த நூற்றாண்டின் முக்கியமான இலக்கிய சர்ச்சை இது என்று நினைத்தேன். சர்ச்சசையே இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இது கிடப்பதைப் பார்த்தால் தேடு பொறிகளையும் தாண்டி, தேடும் மனம் என்பது வேண்டுமென்று தெறிகிறது. அது இல்லையெனில் இலக்கியம் இல்லை!

கிருஷ்ணமூர்த்தி 7/03/2009 12:29:00 PM

ஊடகம் எது என்பது அல்ல, எது இலக்கியம், எது காலத்தையும் வென்று நிற்கும் என்பதையே உங்கள் கேள்வி சுட்டுவதாகக் கருதுகிறேன்.

/வரும் காலம் நமது ஆக்கங்கள் புத்தகத்தில் இருக்கிறதா? எனத்தேடாது! /

அறிவிற்குப் பொருந்துகிறமாதிரி, இதயத்தின் உணர்வுகளுக்கு இசைந்து வருகிற மாதிரி இருப்பவையே, அவை என்ன வடிவில், ஒட்டகத்தில் இருந்தாலும் சரி தேடப்படும், அவை மின் எழுத்துக்களாய் இருப்பது மட்டுமே தனித் தகுதியாகிவிடாது என்றே எனக்குப் படுகிறது.

சாகா இலக்கியங்களைத் தேடுபொறிகள் நிர்ணயிப்பதில்லை, மனித இயல்பின் தேடலே நிர்ணயிக்கிறது!