மின்மினிச்சிட்டி(Twitter)

மலேசியா போயிருந்த போது முத்து நெடுமாறன் Micro-content (குறுந்தரவு) பற்றிப்பேசினார். அதுபோது குறட்பதிவு (140 எழுத்து) பற்றிச் சொன்னார். நான் கேள்விப்பட்டிருந்தாலும் இதற்கு மெனக்கிட நேரமில்லை. புதிய புகுதல் என்பது வாயு வேகம், மனோ வேகத்தில் மின்னுலகில் நடைபெறுகிறது! அதில் புதிதாக வந்தது இந்த `மின்மினிச்சிட்டி` அல்லது Twitter. இது என்னவென்று யோசித்துப் பார்த்தேன். குறட்பா போல் அலகு (meter) உடையது. ஹைக்கூ போல் அட்சரக்கணக்கு வேறு. Blog வந்தபோது அதை வலைப்பூ என்றோம். இதுவென்ன ஹைப்பூ (ஹைக்கூ)? ஆம், இதுவொரு குறட்பதிவுதான். மற்றவர்க்கு எப்படியோ, எனக்கு அப்படித்தான் படுகிறது. வலைப்பதிவில் குறுஞ்சேதி வெளியிட மனம் வருவதில்லை. தோதாக வந்திருக்கிறது இந்த ஹைப்பூ (`ஹைடெக்` பூ!). தினம் நாலு வரியாவது எழுத வேண்டும். அது உள ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹைப்பூ அதற்கு உதவும் என்று தோன்றுகிறது! புதிதாகத் தொடங்கியிருக்கும் என் குறும்பதிவுகளை இப்பதிவுடன் இணைத்துள்ளேன் (வலது மேலே). ஹைப்பூவில் தேன் குடிக்க வேண்டுமெனில் நா.கண்ணன் (nakannan) என்று தேடுங்கள். கொரியாவிற்கு செல்பேசிச்சேதி வாராதாம். எனவே இப்போதைக்கு twitter வழியாகத்தான் பரிமாறல் நடைபெற வேண்டும். ஒருநாள் வெறுமே யோசித்தாலே அது பதிவாகிவிடும் வாய்ப்பும் வரும். அப்போது அதற்கு ”யோசிப்பூ” என்று பேர் வைப்போம்!!

0 பின்னூட்டங்கள்: