நான் கடவுளைக் கண்டேன்!

நேற்று உலகின் இரண்டாவது ஆகப்பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலைக்குப் போயிருந்தோம்.


இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பெரும் தொழிற்சாலைகள் இந்தியாவில் உருவாக வேண்டுமென்று கனாக்கண்ட நேரு, “தொழிற்சாலைகளே இந்தியாவின் நவீன கோயில்கள்” என்றார். ஏனப்படிச் சொன்னார் என்பது நேற்று புரிந்தது.

இறைச்சந்நிதானத்தில் நின்று இறைச்செயல்களை எண்ணி விக்கி, வியந்து போய்விடுகிறோம். அதுதான் நிகழ்ந்தது இந்த மாபெரும் இராட்சச தொழிற்சாலையில் நின்ற போது. எத்தனை வகையான கப்பல்கள்!
கச்சா எண்ணெய் கொண்டு போகும் கப்பல்கள்.
சரக்கேற்றும் கப்பல்கள்
உல்லாசப்பயணக்கப்பல்கள்
காரேற்றும் கப்பல்கள்
கடற்படைக்கப்பல்கள்
கடலோரப்பகுதிகளில் எண்ணெய் கண்டுபிடித்து வடித்தெடுக்கும் கப்பல்கள்.

இக்கப்பல்களெல்லாம் ஏதோ ஓடம் போல் என்று எண்ணிவிடக்கூடாது. ஒவ்வொன்றும் 5-6 மாடிக்கட்டடம் உயரம். பெரிய வீதியின் அகலம் (உம்.அண்ணா சாலை).
இக்கப்பல்கள் ஆயிரக்கணக்கான உருக்கு உதிரிப்பாகங்கள் கொண்டு கட்டப்படுகின்றன.

இரும்பை நீரில் போட்டால் மூழ்கிவிடும். ஆனால் மூழ்காத இரும்பு கப்பல். எப்படி முடிகிறது? அறிவியல்!

இரும்பு மூழ்கும் என்பது மட்டுமல்ல, சரக்கேற்றிய இரும்பு மிதக்கவா செய்யும்? இல்லையே! அதுவும் மூழ்குமே! ஆனால் மிதப்பது அதிசயம்! அறிவியல்.

கட்டப்படும் கப்பல் தரையில் இருக்கிறது. அதை மெதுவாக கடலுக்கு நகர்த்த வேண்டும். பின் கடலில் வைத்து சில நிர்மாண வேலைகள் செய்ய வேண்டும். இம்மாம் பெரிய கப்பலைத்தாங்கும் மிதவைக் கப்பல்கள் இதைச் செய்கின்றன. இரும்புக்கப்பல் மூழ்குமெனில், இரும்புக்கப்பலைத்தாங்கும் இரும்பு மிதவை எப்படி இவ்வளவு கனத்தையும் தாங்கி மிதக்கிறது? அறிவியல்!

சும்மா 10 கிலோ எடையைக்கல்லைத் தூக்கவே பயில்வான் திறமை வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள கப்பலை எப்படி நகர்த்துவது? முதலில் உதிரிப்பாகங்கள் நகர்த்தப்படுகின்றன. பல 100 டன் எடையுள்ள உதிரிப்பாகத்தை நகர்த்துவது காற்றடைத்த டயர் கொண்ட இராட்சச ஊர்த்திகள். காற்று உலகிலேயே மெல்லிய பொருள். ஆனால், அக்காற்று எப்படி பல லடசம் கிலோகிராம் எடையுள்ள கப்பல் பாகங்களைத்தாங்கி நகர்த்துகிறது? அறிவியல்!
கப்பலை நகர்த்தும் பொறி! ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள கப்பலை நகர்த்தப் பயன்படும் பொறி வலுவுள்ளதாக இருக்க வேண்டும் இல்லையா? அதற்கும் ஒரு எடையுண்டே! அந்த எடையைத்தாங்கிக்கொண்டும் கப்பல் நகர வேண்டும்! அறிவியல்!

இப்பொறி இயங்க எரிசக்தி வேண்டும். இவ்வெரி எண்ணெய்க்கும் எடையுண்டே! அந்த எடையைத்தாங்கிக்கொண்டும் கப்பல் நகர வேண்டும்! அறிவியல்!

ஒரே நேரத்தில் பல்வேறு வகையான கப்பல்கள் உருவாகிக்கொண்டிருந்தன. எந்த உதிரி எங்கு போய் எத்துடன் ஒட்ட வேண்டும்? ஒரே சமயத்தில் 25,000 ஊழியர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபடுகின்றனர். 24 மணி நேரம், 7 நாட்கள், 365 நாட்கள்! இத்தொழில் ஒரு நாள் கூட நிற்பதில்லை. இத்தனை ஊழியர்களின் கணக்கு வழக்கைப் பார்த்து, வேலைப்பணி கொடுத்து, குழப்பமில்லாமல் வழி நடத்த வேண்டுமே? எப்படி செயல்படுகிறது? இதற்குப்பின்னுள்ள பிரம்மாண்ட மூளை எது? அறிவியல்!
அந்தப்பெரும் கப்பல் முன் மனிதன் கடுகு போல் நிற்கிறான். எப்படி இச்சிறு மனிதனால், இப்பெரும் கப்பலைக் கட்டமுடிகிறது? அறிவியல்!

To err is human! தவறுகள் சகஜம். ஒரு சிறு தவறு. சிறு ஓட்டை! கப்பலையே கவிழ்த்துவிடும். ஆயிரம் உதிரிகள். பல பாகங்கள் எங்கெங்கோ உருவாக்கப்பட்டு இங்கு வருகின்றன. கொரியாவின் பிற நகரங்கள் என்றில்லாமல், சீனா, தைவான் போன்ற நாடுகளிலிருந்தும் உதிரிப்பாகங்கள் வருகின்றன. அவையவை தகுதித்தறம் கொண்டவையா என்று யார் கண்காணிப்பது? அறிவியல்!
கப்பல் காட்டியபின் ஓட்ட வேண்டும். வெள்ளோட்டம் செய்யும் முன்னமே மெய்நிகராக பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சிகளை உருவாக்குவது பிரம்மாண்ட கணிகள். இக்கணினிகளுக்கு ப்யிற்சி அளிப்பது யார்? அறிவியல்!!

கடல் பரந்து விரிந்து கிடக்கிறது. எங்கு எப்படிப் போவது? திசை காட்டும் வழிகாட்டி யார்? அதுவேறு அறிவியல்!

கடல் எப்போதும் அமைதியாய் இருப்பதில்லை. மாபெரும் கப்பலுக்கு முன் மனிதன் கொசுறு என்றால், மாபெரும் கடலின் முன் கப்பல் கொசுறு. ஆயினும், எல்லாச் சூழலிலும் கப்பல் சமாளிக்கும் படி திட்டமிட்டு கப்பல் செய்வது யார்? எப்படி? அறிவியல்!

அன்று அக்கப்பல் தொழிற்சாலையில் நின்ற இரண்டு மணி நேர அனுபவம், மெய்சிலிர்க்கும் அனுபவம். அந்த தொழிற்சாலை ஒரு macrocosm ஆக இயங்கிக் கொண்டிருந்தது.

எப்படி மனித ஆக்கசக்தி இத்தகு செய்லகளை செய்ய முடிகிறது? நான் முதன் முதலாகக் கொரியா வந்த போது உலகின் முதல் மூன்று பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் அங்கிருந்தன. இரண்டு வருடங்களில் உலகின் ஆகப்பெரிய 5 தொழிற்சாலைகளும் கொரியாவிலிருந்தன. இன்று உலகின் முதல் 7 பெரிய தொழிற்சாலைகள் கொரியாவிலுள்ளன. ஹியூந்தே (Hundai), தேவு (Daewoo), சாம்சுங் (Samsung)! இப்பெயர்களை அறியாதோர் அரிது. கப்ப்ல் தொழிலில் ஈடுபட்டவுடன், அதற்குத்தேவையான கச்சா இரும்புத் தொழிற்சாலைகள் வேண்டியிருந்தன. அவை தோன்றின. உதிரிப்பாகங்கள் கட்டும் தொழிற்சாலைகள் தேவைப்பட்டன. அவை தோன்றின. இதிலிருந்து கிளைத்ததுதான் கார் செய்யும் தொழில். அடுத்து, கணினித் தொழில்நுட்பம். அடுத்து மெய்நிகர் தொழில்நுட்பம். இப்படி, ஒரு தொழில் செய்யப்போய் படிப்படியாய் பல தொழில்கள் இந்த நாட்டில் பெருகிவிட்டன. முதலில் இத்தகு பெருஞ்செயல் செய்யும் கனவு கொரியர்களுக்கு வந்திருக்கிறது. பின் இதற்கான முதலை அரசும், வங்கிகளும் வழங்கியுள்ளன. இன்று கப்பல் கட்டும் தொழில் என்பது கொரியப்பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் நிற்கிறது.

இந்தியாவால் இதைச் செய்யமுடியாதா? 20 ஆண்டுகளுக்கு முன் கொரியா ஏழை நாடு. பிச்சைக்காரர்கள் மிகுந்த நாடு. இன்று உலகின் 11வது பெரிய பொருளாதார வளமுள்ள நாடு. 20 ஆண்டுகளுக்குள் இந்த அதிசயம். இந்தியாவால் முடியாதா?

நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:

செயற்கரிய செயல்களும் எளிய கனவுகளில் தொடங்குகின்றன! எனவே கனவு கான வேண்டும்.

கனவு மெய்பட மெய்வருத்தம் பாராது உழைக்க வேண்டும்.

சாதி, மத வேறுபாடுகள் பார்க்காது ஒற்றுமையுடன் தேசிய முன்னேற்றத்தை மனதில் கொண்டு உழைக்க வேண்டும்.

வரப்புயர நீர் உயரும் என்பது போல், ஒரு தொழில், இன்னொரு தொழிலுக்கு வித்தாகி, மொத்தப் பொருளாதாரமும் உயரும்.

எப்போதும் அந்நிய தொழில்நுட்பத்தை நம்பி இராமல் நாமே சுயமாக தொழில் செய்ய முற்படும் போதுதான், புதிய தொழில்நுட்பங்கள் நம் நாட்டில் வளரும்!

நேரு சொன்னது உண்மை!

பெரிய, பெரிய தொழிற்சாலைகளே நவ இந்தியாவின் கோயில்கள். கோயில்கள் செய்யும் அதே பணியை இவையும் செய்கின்றன. இறைத்தரிசனம் என்பதை எவ்வளவு விளக்கினாலும், அவரவர்க்கு சுயானுபவம் கிட்டும்வரை உணரமுடியாது. அதுபோல்தான் இதுவும். இங்கு வந்து இந்த பிரம்மாண்டத்தைப்பார்த்து, அனுபவித்து, விக்கித்துப்போய் நின்றால்தான் தெரியும், அறிவே தெய்வமென்று!!