தமிழ்மணம்! 5 ஆண்டு நிறைவு. காசியின் கேள்விகளுக்குப் பதில்

தமிழ்மணம் காசியை அறியாதோர் யார் உளர்? புதியோருக்கு ஒரு தொடுப்பு!

காசி "அண்ணா" என்று என்னை எழுத்தில் விளிக்கும் போதே நெஞ்சில் அன்பு ஊறும். நேரில் கேட்டால் எப்படி இருக்குமோ? நான் இன்னும் அவரைப் பார்த்ததில்லை. பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்புகள் இப்போது வலையில் பின்னிப்பினவெடுக்கின்றன ;-)

காசி நுட்பமான ஆசாமி. கோவைத்தமிழர்களுக்கே உரிய தொழில்நுட்பம்! அவர் ஆரம்பித்து வைத்த 'தமிழ்மணம்' இன்று 5 ஆண்டுச்சேவையை நிறைவு செய்கிறது! மகிழ்வான சேதி.

இதையொட்டி நட்சத்திர பதிவாளராக வலம் வரும், காசி ஆறுமுகம் என்னிடம் கேட்ட கேள்விகளை என் பதிவில் இடச்சொல்லியிருக்கிறார். அவரது ஆசைப்படி, அவரது கேள்விகளும், என் பதிலும்:


1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?


ஆங்கிலத்தை நோக்கும் போதோ இல்லை ஆசிய மொழிகளான கொரியன், ஜப்பானிஸ்,சீனத்தை நோக்கும் போதோ நாம் பின் தங்கியுள்ளோம் என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் தமிழர்களுக்கு அடிப்படை தமிழ் கல்வி இல்லாததால் தமிழில் உள்ளீடு செய்வோர் குறைவு. இணையத்தில் "தமிழர்களின்" பங்களிப்பு என்றால் ஆங்கிலத்தில் கணிசமான அளவு உண்டு.

இப்போது தமிழில் உள்ளீடு செய்யும் படித்த தமிழர்கள் தொழில்முறையில் வேறு ஏதோ தொழில் செய்து கொண்டு மாபெரும் முயற்சிகளை யெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல உதாரணம் நீங்களே. தமிழ்மணம் உருவாவதற்கு எத்தனை மணித்தியாலங்கள் தாங்கள் உழைத்திருப்பீர்கள்? அதன் பொருளாதார மதிப்பு எத்தனை லட்சம் பெறும்? ஆயின் சுயநலம் கருதாமல் செய்து இருக்கிறீர்கள். இது மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற இணைய முயற்சிகளுக்கும் பொருந்தும். இந்தப் பதில் கூட என் வேலை நேரத்தில் எழுதுவதே. இதை ஸ்பான்சர் செய்வது கொரிய அரசு என்று சொல்லலாம். தமிழ் இன்னும் இப்படியான ஒட்டுண்ணி வாழ்வில்தான் காலம் ஓட்டுகிறது!

முதலில் கணினித்துறை பற்றிய தெளிவை கல்லூரியில் எல்லாத்துறையினருக்கும் அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் துறைக்கு. இது குறித்து நான் கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரியிலும், பேரூர் தமிழ் கல்லூரியிலும், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியிலும் எடுத்துரைத்திருக்கிறேன்.

விஷயமுள்ள தமிழர்கள் தமிழில் எழுதுதல் அவ்வளவு கேவலமில்லை என்று உணர வேண்டும். ஆங்கிலத்தில் எழுதத்தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே! தமிழ் பதிவுகளுக்கு நல்ல கவன ஈர்ப்பைத் தந்து இதை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்மணம் இதைச் செய்திருக்கிறது.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).


வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் என்னால் இதற்கான முழுப்பதிலையும் சரியாக அளிக்க முடியுமா எனத்தெரியவில்லை.

மடலாடற்குழுக்களில் வரும் சேதிகளைப் பார்த்தால் மின் - இறையாண்மை என்பது தமிழகத்தில் செயல்படுவது போலுள்ளது. எவ்வளவு தூரமெனத்தெரியவில்லை.

மின்னரட்டை (சாட்) தமிழில் முழுவதும் பாவிக்கப்படுகிறது. வீடியோ கான்பரன்ஸ் வசதியைத் தமிழர்கள் நன்கு பயன்படுத்துகின்றனர் என்றே கூறவேண்டும். இப்போது சென்னையில் இருந்து கொண்டு அமெரிக்க மாணவிகளுக்கு பாட்டு கிளாஸ் நடத்துவது உண்மை!


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?


தமிழ் முன்னிடுதல் என்பதில் ஜாதி அரசியல் அனாவசியமாக புகுந்துள்ளதைக் காணமுடிகிறது. உலகில் வேறெங்குமில்லாத பிரச்சனை இது. அடுத்து மொழியின் மீதான அதீதப்பற்று. இது 'இனவாதம்' எனும் அளவிற்கு நிற்பது ஆரோக்கியமானதில்லை. ஆங்கிலமொழியை விபசார மொழி என்று கூடச் சொல்வதுண்டு. ஆனால் அதன் வளத்தின் முன்னே நாம் கைகட்டி அல்லவோ நிற்கிறோம்? 'தூய்மைவாதம்' என்பது எப்படி நோக்கினும் இனவாதமே, நிறவாதமே! இதுவும் ஜாதீயம் என்று பார்த்து எப்போது நாம் முதிர்ச்சியடைகிறோமோ அப்போது நம் மொழி இடுகைகள் கூடும். இணையத்தில் மொழி வளம்பெறும்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?


முதலில் தமிழ் மனம் எப்படி செயல்படுகிறதோ, அப்படியே 'உள்ளது உள்ளபடி' அதன் வடிவத்தை மின்னுலகிற்கு மாற்றுவேன். எவ்வகை இனவாதம், மொழிவாதம், நிறவாதம் போன்றவை தலையெடுக்காமல் தடுப்பேன். மொழி என்பது மனிதர் போல்தான். எவ்வளவு தடுத்தாலும் 'கலப்பு' என்பதை நம்மால் தவிர்க்கவியலாது. மொழியும் அவ்வாறே. மேலும் தமிழகம் உலகின் பெரிய கலைடாஸ்கோப்பாக உள்ளது. Melting pot ஆக உள்ளது. அதுவே அதன் வளம். அதை அப்படியே மின்னுலகிற்கு கொண்டு வருவேன். தமிழின் முதுசொம் (பழைய சொத்து, பிதுர்ராஜ்ஜியச் சொத்து) முழுவதும் 'உள்ளது உள்ளபடி' வலையேற்றம் காண வைப்பேன். தமிழன், மேலதிகாரிகளுக்கு ஜால்ரா அடித்தே தன் சுயமரியாதையை இழந்திருக்கிறான். ஆங்கிலேயர்களுக்கு குனிந்த முதுகு, சுதந்திரமாகியும் நிமிரவே இல்லை. அடிமைக் குணமில்லாத புதிய தமிழ்மணம் மின்னுலகில் வீசச்செய்வேன்!


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?


வலைப்பதிவு எனும் தொழில்நுட்பம் பாரிய அளவில் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கிறது. தமிழின் ஆறாவது திணை இணையம் என்று இலக்கணம் சொல்லியுள்ளேன். அத்திணையின் புதிய இலக்கியம் இங்குதான் உருவாகிறது. சூழல் பாங்கான (environmental friendly) புதிய இலக்கியம் இனிமேல் மின்னிலக்கியமாகவே இருக்கும். அதன் வடிவம் தமிழ் முன்பு காணாத அளவில் இருக்கும். வலைப்பதிவு, ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம்' என்பது போன்றது!

யோசனை?

1. முதலில் மனிதனை மனிதனாக, எழுத்தை எழுத்தாகக் காணுங்கள். ஜாதீயம் மின்னுலகில் நுழைய வேண்டாம். ஒரு தலித் தேசம் விட்டு தேசம் போனால் எவ்வளவு சுதந்திரம் பெருகிறானோ அது போல்தான் மெய்யுலகிலிருந்து மெய்நிகர் உலகிற்கு வரும் எழுத்தும் உணர்கிறது. ஆனால் மெய்யுலகில் காணும் எச்சங்களை இங்கும் கொண்டுவந்து கொட்ட வேண்டுமா? யோசியுங்கள்.

2. நேரமிருப்பின் நிறைய எழுதுங்கள்.'சித்திரமும் கைப்பழக்கம்' என்பது போல் மின்னுலகில் எழுதி இன்று இலக்கிய தாரகைகளாக ஜெயந்தி சங்கர். மீனா முத்து போன்றோர் ஜொலிக்கின்றனர். இதற்கு தளம் அமைத்துக் கொடுத்தது வலைப்பதிவே!

3. பல்வேறு துறைக்கென புதிய பதிவுகளை உருவாக்குங்கள்.

4. பின்னூட்டமில்லையென்று சோம்பி விடாதீர்கள். மின்பதிவான எழுத்து ஊசிப்போவதில்லை. எப்போது வேண்டுமானாலும் பார்த்து அனுபவிக்க முடியும். என்றாவது ஒருநாள் ஆசைப்பட்ட கவன ஈர்ப்பு கிடைக்கும்!

5. மின் தாக்குதலைக் கண்டு கலங்கி விடாதீர்கள். அவை வெறும் மின்னணு என்று ஒதுக்கித்தள்ளுங்கள்.

6. நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் கொண்டு எழுதுங்கள்.

7. சொல்லும் சொல் மந்திரச் சொல்லாக இருக்கட்டும். அது நிச்சயம் வாசிப்பவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும்.

8. மேற்கோள் அதிகம் காட்டாமல் சுயமாக சிந்தித்து எழுதப் பழகுங்கள்.மேற்கோள் என்பது முதியோர் ஊன்றும் கைத்தடி போன்றது. மழலை கை கைவண்டி போன்றது. சுயமாக நடை பயிலுங்கள்.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?


தமிழ்மணம் மின்தமிழ் வளர்ச்சியில் பெரும் கிரியாஊக்கி. அதுவே மின்னுலகின் நகர மையம். அங்கு வந்தால் எல்லோரையும் பார்க்கலாம். மிக நல்ல சேவை.

தொழில்நுட்பத்தை இன்னும் முடக்கி, எல்லா வலைப்பதிவு தளங்களிலும் தமிழ்மணம் பொறி செயல்படுமாறு செய்யுங்கள். தமிழ்மணம் நாலுவகை வலைப்பதிவாளர் நிருவனத்திற்கு மட்டும் செயல்படும் என்றால், ஒருவகையில் புளோக்கர், வேர்டுபிரஸ் இவைகளை மட்டும் ஆதரிப்பது எனும் நிலைக்கு தமிழனைத் தள்ளும்.

வலைப்பூ! என்று ஆரம்பித்த காலத்திலிருந்து உங்களுடன் பயணப்படும் எனக்கு இவ்வளர்ச்சி பேருவகை தருகிறது. வாழ்க வளமுடன்!

10 பின்னூட்டங்கள்:

jerry eshananda. 8/26/2009 11:23:00 AM

வழி மொழிகிறேன்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் 8/27/2009 01:34:00 AM

தமிழ்மணமும், காசியும், நீங்களும் வாழ்க வளமுடன்!

துளசி கோபால் 8/27/2009 11:15:00 AM

ரொம்பச் சரி.

//சுயமாக நடை பயிலுங்கள்.//

இதைத்தான் நானும் அப்பப்பச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

நாலு வரி.....நாலே வரின்னாலும் சொந்தமா இருக்கணும்.

காப்பி & பேஸ்ட் வேலை வேணாம்.

என்ன நாஞ்சொல்றது?

நா.கண்ணன் 8/27/2009 11:51:00 AM

டீச்சர் சொன்ன பிறகு மறு பேச்சுண்டோ?

கிருஷ்ணமூர்த்தி 8/27/2009 03:23:00 PM

காசி ஆறுமுகம் எழுப்பிய ஆறு கேள்விகளுக்கு உருப்படியாக பதில் எழுத முனைந்த ஒரே பதிவு என்று உங்களுடைய பதிவைச் சுட்ட முடியும்.

காசியின் பதிவில் இருந்த பின்னூட்டங்களைப் பார்த்தபின் எனக்கு வந்த எண்ணம் இது.

கிருஷ்ணமூர்த்தி 8/27/2009 03:40:00 PM

உங்களுக்குப் போட்டியாக, கொஞ்சம் விவரங்களோடு இன்னொரு பதிவைப் இப்போது தான் படித்தேன்.

http://www.payanangal.in/2009/08/blog-post_26.html

நா.கண்ணன் 8/27/2009 04:05:00 PM

வாங்க கிருஷ்ணமூர்த்தி! உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி. மற்றொரு வலைப்பதிவை கண்ணுறுகிறேன். மின்தமிழ் பக்கம் வாருங்கள். 8வது ஆண்டுவிழா நடந்து கொண்டு இருக்கிறது!

gnani 8/27/2009 05:11:00 PM

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

நா.கண்ணன் 8/27/2009 05:28:00 PM

ஞானி: Count on me! காசோலை அனுப்பி வைக்கிறேன்.

கலைமகன் 10/04/2009 02:52:00 AM

தமிழின்று மின்றமிழிலும் அழகுமிக்கதாய்
திமிரின்றி தமிழ்வளர்க்க நல்லவழி
தமியராய்நின்று நல்லதமிழ்வளர்த்திட
தமிழர்நாம் கரமிணைப்போம் - சாலவே!

கொச்சைத்தமிழினை நிறுத்தி நல்ல
கொஞ்சுதமிழில் பணிசெய்வோம் -நம்
இச்சையாயுள்ள தமிழணங்கு மனம்மகிழ
இகத்திலே நல்லதமிழ்வளர்ப்போமிணைந்து

பயனுள்ள கருத்துக்கள் காசியுந்தன்
பின்னூட்டமிலையென சோம்பவிலை நானும்
நேயமானோருண்டு கலையுலகில் -ஒருநாள்
நானிலத்தில் நாமும் தவழலாமேசீராய்

தமிழ்மணம் கமழந்திட வலைப்பூக்கள்
தரமாய் வரணும் தமிழ்தரணும்
நிமிர்ந்துநடைபயில்வோம் புளோக்கரில்
நல்லதமிழ்படைப்போம் நிமிர்ந்தே