உன்னைப்போல் ஒருவன்

இப்படியொரு படமெடுக்க கமலை எது தூண்டியிருக்குமென்று யோசிக்கிறேன்? விக்ரம் நடித்து வெற்றிவாகை சூடிய `அந்நியன்`? கமலுக்கு எப்போதும் தொழில்முறை சவால் பிடிக்கும். விக்ரம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பது கூட கமலின் பாதிப்பு என்று சொல்லலாம். ஆக இருவரும் ஒரு ஆரோக்கியமான போட்டியில் உள்ளனர் என்று சொல்லலாமா?

அந்த நாள் படத்திற்குப் பிறகு பாட்டே இல்லாத ஒரு படம். ஸ்ருதி ஹாசன் முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். கமல், 'அந்நியன்' போல ஒரு படம் எடுக்கிறார் என்றால் அவரது முத்திரையைக் காட்ட வேண்டாமா? (ஆமாம், விக்ரம் பெயர் இராமானுஜம், கமலுக்கும் அதே பெயர்!). வித்தியாசமாக எடுத்திருக்கிறார். ஹாலிவுட் படத்தின் தரம் மெல்ல, மெல்ல தமிழ்திரைக்குள் வருவது வளர்ச்சி. அவர் காலத்திற்குள் கமலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தால் நல்லது!தமிழகம் அமெரிக்கமயமாகி வருவதை சமீபத்திய ஐடி வளர்ச்சி இன்னும் ஊக்குவிக்கிறது என்பதை இப்படம் மெய்ப்பிக்கிறது. `ரொம்பப் பழைய கம்யூட்டர் சார்! அபிவாதயே! சொல்லிட்டுத் தொடறேன்` எனும் வசனம்! அது சரி இப்போதெல்லாம் யார் அபிவாதயே சொல்லி சேவிக்கிறார்கள்?

ஓ! அது இரா.முருகன் வசனம் என்பதாலோ? சில இடங்களில் இரா.முருகனின் முத்திரையும் தெரிகிறது. காமன் மேன் என்பதற்கு தரும் விளக்கம்! அச்சாக முருக தரிசனம்!

இது லோ பட்ஜெட் படம்தான். ஆனால், நல்ல முறையில் எடுக்கப்பட்ட படம். ஆனால், தெனாலி போல் இரண்டு, மூன்றுமுறை பார்க்கத்தூண்டும் படமல்ல (ஓ! தெனாலி படச் சாயல் கூட இப்படத்தில் உண்டு).