அவதாரம்! (சினிமா விமர்சனம்)

இதுவொரு மெகா ஹிட். வெளியான ஆறுவாரங்களுக்குள் 2 பில்லியன் டாலர்கள் வசூலாம், ஐரோப்பாவில். இதன் முக்கிய வருமானம் இது தரும் முப்பரிமாண அனுபவம் என்பதைக் கருத்து தெரிவிப்பு சொல்கிறது. உண்மைதான். அந்தப் பண்டோரா கிரகத்தில் வாழ நம் எல்லோருக்கும் ஆசை வரும் படி எடுத்து இருக்கிறார்கள். மெய்நிகர் அனுபவம் என்பது சமகால வாழ்வியலில் ஒரு கூடுதல் அனுபவச் செறிவு என்றே சொல்ல வேண்டும். கணினி சார் தொழில் நுட்பத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதைக் காட்டும் வீடியோ கீழே!இதன் சிறப்பு என்னவெனில் நடிக,நடிகைகளின் முகபாவத்தையெல்லாம் குறிப்பாக எடுத்து கணினி மூலம் ஒரு திரைச்சித்திரத்தை உருவாக்குவது. இதை நான் நேரடியாக சென்னையிலுள்ள பெண்டாஃபோர், ட்ரீம் மீடியா ஸ்டூடியோவில் பார்த்திருக்கிறேன். நடிக/நடிகையர்கள் நடித்து முடித்தவுடன் சுடச்சுட அவர்களது மின் அவதாரம், உருவாக்கப்பட்ட பண்டோரா கிரகத்தில் ஒட்ட வைத்துக் காட்டப்படும் போது மெல்ல, மெல்ல நடிக, நடிகையர் அவர்கள் அவதாரமாக வாழத்தலைப்படுகின்றனர். அதன் மூலம் திரைச்சித்திரத்திற்கு மனித குணநலம் இயல்பாக ஒட்டிக்கொள்கிறது. எனவே இது வெறும் வால்ட் டிஸ்னி கார்ட்டூன் படமல்ல. உண்மையான அவதாரம்.அதுவே இப்படத்தின் வெற்றிக்கான பார்முலா.

மற்றபடி இதில் கதை என்று ஏதுமில்லை. 14 வருடத்திற்கு முன்பே கதையை உருவாக்கிவிட்டேன் என்கிறார் இயக்குநர். ஆனால் அதற்குள் எத்தனையோ முன்னோடிப்படங்கள் வந்து நமக்கு இப்படம் ஒரு மசாலா என்பது போன்ற பிரம்மையைத் தருகிறது. சூப்பர் ஹிட் எனப்படும் எல்லாப்படத்தின் அம்சங்களையும் இதில் காண முடிகிறது. மாட்ரிக்ஸ், ஹேரிபாட்டர், லார்டு ஆப் தி கிங்க்ஸ், ஈடி, ஸ்டார் வார்ஸ், பிற வால்ஸ்டிஸ்னி படங்கள்.

ஆயினும் இது சொல்லும் சேதி முக்கியம். இது சூழல் அன்பு பேசும் படம். கண்மூடித்தனமான சூழல் சூறையாடல் என்பது அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பது முக்கிய சேதி. எனவே பண்டோராவின் ஆதிக்குடிகளைக் காட்ட ஆப்பிரிக்க, அமேசான் போன்ற இடங்களில் உள்ள பழம் குடிகளின் தோற்றத்தை, நடவடிக்கைகளை காப்பி அடித்துள்ளனர். லாரி கிங் ஷோவில் பேசும் போது இப்படத்தை எடுத்த எல்லோரும் வெளிகிரகங்களில் உயிரினம் வாழ்வது உறுதி என்றே சொல்கின்றனர்.

இக்கதையைப் பற்றிப் பேசும் கிறிஸ்தவ தேவாலய மதகுரு (போப் ஆண்டவர்) இது shamanistic என்று ஒதுக்க வேண்டிய கருத்து என்று சொல்லியிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான். இது கிறிஸ்தவத்திற்கு எதிரான போக்கு என்று அவர் காண்கிறார். ஆனால், வழக்கம் போல் இப்படம் இந்தியக் கண்ணோட்டத்தில் மிகவும் பழக்கப்பட்ட தீம் என்றே தோன்றுகிறது. நமக்குதான் தேவர்கள், அசுரர்கள், பாதளலோகம் இவையெல்லாம் பழக்கப்பட்ட சிந்தனைகள்தானே! உயிர்களின் தொடர்ச்சி பற்றிய இப்படத்தின் சித்திரம் வெகுவாக இந்தியப்பின்புலம் கொண்டுள்ளது. கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பதை நாம் சித்தி என்கிறோம். அது அறிவியல் சாத்தியம் என்பது போல் காட்டுகிறது படம். இதே தீமில் வேறொரு ஹாலிவுட் படம் பார்த்த ஞாபகம். இது அறிவியல் புதினம். ஆனால், மசாலா அறிவியல் புதினம். ஒன்று கூட புதிய கருத்தில்லை. எல்லாம் பேசப்பட்டு, படமாக்கப்பட்டவையே! அப்படி இருந்தும் இப்படம் சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது என்றால் நம் கற்பனைக்கு அது சோறு போடுகிறது என்றே பொருள்.

நல்ல படம். எல்லோரும் குடும்பத்துடன் காண வேண்டிய படம். முப்பரிமாணக் காட்சி கூடுதல் விலை. ஏனெனில் அதற்கென தனி உபகரணங்கள் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறதாம். ஐமேக்ஸில் பார்க்க முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். முப்பரிமாண அனுபவத்திற்கு ஊர் விட்டு, ஊர் போய் பார்த்தேன். அதுவே இப்போதைக்கு திருப்தி!நமக்கு மகாபாரதம், இராமாயணம் போன்ற பிரம்மாண்டமான கதைக்கருவூலங்கள் இருப்பினும் நம்மால் அவைகளை இம்மாதிரிப் படங்களாக உருமாற்றும் முன், பிறரால் அவை எடுக்கப்பட்டு விடுகின்றன. எனவே இம்மாதிரிப் படங்களைப் பார்த்து, நமக்குத்தெரிந்த கற்பனைப் பின்புலத்தில் வைத்து ரசிக்க வேண்டியதுதான்.

ஹார்மொனி கொரியன் சினிமா (விமர்சனம்)

புதுவருட (சீன) வெளியீடாக வந்திருக்கும் ஒரு நெகிழ்வான கொரியப்படம் ஹார்மொனி என்பது. இப்படம் தன் கணவனைக் கொன்ற ஒரு இளம் கர்ப்பவதியின் கதையுடன் தொடங்கிறது. பெண் குற்றவாளிகளுக்காகவே உள்ள பிரத்தியேக சிறையில், இப்படிப் பல குற்றவாளிகள். இவர்கள் எல்லோரும் குடும்ப வன்முறை, பொறாமை (காதல்) போன்ற காரணங்களினால் தற்காப்பிற்காக ஏதோ செய்யப்போய் அது கொலைக் குற்றமாக ஆகி சிறையில் வைக்கப்படுகின்றனர். கதை ஒரு கர்ப்பவதி (நடிகை கிம் ஜோன் ஜின்), ஒரு வயதான தாய் (நே மூன் ஹி) இவர்களைச் சுற்றியும், அங்குள்ள மற்ற பெண் கைதிகளைச் சுற்றியும் போகிறது. சிறைச்சாலை விதியின் படி இவள் சிறையில் பிரசவிக்கும் பிள்ளையை 18 மாதங்களே கட்டிக்காக்க முடியும். இவளது தண்டனையோ 10 ஆண்டுகள். எனவே குழந்தையை தத்து என்று தாரை வார்க்க வேண்டும்.இப்படத்தைப் பார்த்துவிட்டு நெஞ்சு நெகிழவில்லையெனில் ஒன்று நாம் அரக்கனாக இருக்க வேண்டும் இல்லை நெஞ்சே இல்லாதவராக இருக்க வேண்டும்.இப்படம் பார்த்தபிறகு மனிதனது சட்டங்களும், குற்றவியல் துறையும் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற வேண்டியுள்ளது என்பது புலனாகிறது. சிறைக்கைதிகளுக்கு வாய்ப்புகள் அதிகமில்லை, அக்கம்பிகளை விட்டு வெளியே வர. ஆயினும், கதாநாயகி, சிறையில் காணும் ஒரு இசைக்கச்சேரியைப் பார்த்துவிட்டு நாங்களும் பாடுவோம் என்று சொல்லப்போய் கதை அதைச் சுற்றி நீள்கிறது. இறுதியில் அபஸ்வரங்கள் எல்லாம் ஸ்வரப்படுத்தப்பட்டு ஒரு அற்புத கச்சேரியைச் செய்து விடுவதுவதான் ஹார்மோனி.கொரிய சினிமா மிகப்பெரிய அளவில் உலக அரங்கில் வளர்ந்து வருகிறது. இது பற்றி எனது விமர்சனங்களில் மீண்டும், மீண்டும் சொல்லிவருகிறேன். இப்படம் என் நம்பிக்கைக்கு மீண்டும் உரம் சேர்த்திருக்கிறது. கொரிய சினிமாவின் தரத்தை நோக்கும் போது நமது படங்களெல்லாம் வெறும் ஜுஜூபி என்று எண்ணத்தோன்றுகிறது. இளம் நடிகைகள் எல்லாம் சாவித்திரி, சிவாஜியை தூக்கி சாப்பிட்டு விடுகின்றனர். என்ன நடிப்பு. சத்யஜித்ரே படத்தின் மந்திரம் போல் இவர்கள் படங்களில் குழந்தைகள் (1 வயதுக்குழந்தை) கூட நடிக்கின்றனர். நாம் இன்னும் கும்பல், கும்பலாக வெளிநாட்டுத் தெருக்களில் பாட்டுப்பாடி காதலித்துக் கொண்டிருக்கிறோம், நமது சினிமாக்களில். கொரியன் நடிகையான கிம் யுன் ஜின் உண்மையிலேயே ஒரு திறமை வாய்ந்த நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில், குறிப்பாக Lost, Seven days போன்ற தொடர் சித்திரங்களில் பிரபலமாகி இருக்கிறார்.

Kim Yun-jin Sings in 'Harmony' Onscreen

இவர் ஹாலிவுட்டில் தன் திறமையால் முன்னேறிய பின் மெல்ல, மெல்லப் பல கொரிய நடிக, நடிகையர்கள் முயல்கின்றனர்.கொரிய சினிமா உலகை அதிசயக்க வைக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை. நம் பாலிவுட், கோலிவுட் தமது மடத்தனமான கனவுலகை விட்டு வெளியே வந்து முன்னேறும் ஆசிய சினிமாவைக் கண்டு, கற்றுக்கொள்வதாக!

கொரியா செல்லும் தமிழ் வழக்கம்ஆச்சர்யமாக இருக்கிறதா? கொரியாவில் பொன்னாடை போர்த்துவதா?

ஆம! கொரியக் கடலாய்வு மையத்தில் இன்று காலை நடந்த ஒரு நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த பேரா.டாக்டர் தொங்வாங் லீ இவ்வாறு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டார்! கொரிய நாட்டில் இம்மாதிரி சிறப்பு நடைபெறுவது இதுவே முதல்முறை.
சிறப்பு விருந்தினருடன் பிற கொரிய விஞ்ஞானிகள் (இடமிருந்து வலம்): டாக்டர் கிம், பேரா.பாக், டாக்டர் லீ, டாக்டர் இம், டாக்டர் ஹாங்க்.

아바타 - அவதாரம் (சினிமா)

இந்த அவதாரம் எனும் பதம் இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பார்த்தால் இவர்களைத் திருத்த ஒரு அவதாரம் எடுத்தால் தேவலை என்றிருக்கிறது :-)ஹாலிவுட்டில் இதைப் பெயரிட்டவர்கள் 'அவடார்', 'அவடார்' என்றுதான் சொல்கின்றனர். அங்கு 'த' ஒலி இல்லையென்றில்லை. Bath எனும் போது 'த' என்று ஒலிக்கிறார்கள். ஆனால் நாம் பத்மா என்பதை Badma என்று சொல்வது போல், பூரி என்பதை Buri என்று சொல்வது போல் அவதார் என்பதை மண்டையில் அடிக்குமாறு அவடார் என்கின்றனர்.

கொரியாவில் இவர்களுக்கு 'வ' வராது. எனவே அவதார் 'அபதா (아바타)' என்றாகிவிட்டது. நல்லவேளை 'அப்பத்தா' என்று அழைக்காமல் விட்டார்களே!

முப்பரிமாணத்தில் இப்படத்தைப் பார்த்த 43 வயது தைவான் சீனர் இதயம் நின்று போய் இறந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. அதன் பின் சீனாவில் அப்பத்தா பார்க்க பயப்படுகிறார்களாம். நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு விமர்சிக்கிறேன்.