ஹார்மொனி கொரியன் சினிமா (விமர்சனம்)

புதுவருட (சீன) வெளியீடாக வந்திருக்கும் ஒரு நெகிழ்வான கொரியப்படம் ஹார்மொனி என்பது. இப்படம் தன் கணவனைக் கொன்ற ஒரு இளம் கர்ப்பவதியின் கதையுடன் தொடங்கிறது. பெண் குற்றவாளிகளுக்காகவே உள்ள பிரத்தியேக சிறையில், இப்படிப் பல குற்றவாளிகள். இவர்கள் எல்லோரும் குடும்ப வன்முறை, பொறாமை (காதல்) போன்ற காரணங்களினால் தற்காப்பிற்காக ஏதோ செய்யப்போய் அது கொலைக் குற்றமாக ஆகி சிறையில் வைக்கப்படுகின்றனர். கதை ஒரு கர்ப்பவதி (நடிகை கிம் ஜோன் ஜின்), ஒரு வயதான தாய் (நே மூன் ஹி) இவர்களைச் சுற்றியும், அங்குள்ள மற்ற பெண் கைதிகளைச் சுற்றியும் போகிறது. சிறைச்சாலை விதியின் படி இவள் சிறையில் பிரசவிக்கும் பிள்ளையை 18 மாதங்களே கட்டிக்காக்க முடியும். இவளது தண்டனையோ 10 ஆண்டுகள். எனவே குழந்தையை தத்து என்று தாரை வார்க்க வேண்டும்.இப்படத்தைப் பார்த்துவிட்டு நெஞ்சு நெகிழவில்லையெனில் ஒன்று நாம் அரக்கனாக இருக்க வேண்டும் இல்லை நெஞ்சே இல்லாதவராக இருக்க வேண்டும்.இப்படம் பார்த்தபிறகு மனிதனது சட்டங்களும், குற்றவியல் துறையும் இன்னும் எவ்வளவு தூரம் முன்னேற வேண்டியுள்ளது என்பது புலனாகிறது. சிறைக்கைதிகளுக்கு வாய்ப்புகள் அதிகமில்லை, அக்கம்பிகளை விட்டு வெளியே வர. ஆயினும், கதாநாயகி, சிறையில் காணும் ஒரு இசைக்கச்சேரியைப் பார்த்துவிட்டு நாங்களும் பாடுவோம் என்று சொல்லப்போய் கதை அதைச் சுற்றி நீள்கிறது. இறுதியில் அபஸ்வரங்கள் எல்லாம் ஸ்வரப்படுத்தப்பட்டு ஒரு அற்புத கச்சேரியைச் செய்து விடுவதுவதான் ஹார்மோனி.கொரிய சினிமா மிகப்பெரிய அளவில் உலக அரங்கில் வளர்ந்து வருகிறது. இது பற்றி எனது விமர்சனங்களில் மீண்டும், மீண்டும் சொல்லிவருகிறேன். இப்படம் என் நம்பிக்கைக்கு மீண்டும் உரம் சேர்த்திருக்கிறது. கொரிய சினிமாவின் தரத்தை நோக்கும் போது நமது படங்களெல்லாம் வெறும் ஜுஜூபி என்று எண்ணத்தோன்றுகிறது. இளம் நடிகைகள் எல்லாம் சாவித்திரி, சிவாஜியை தூக்கி சாப்பிட்டு விடுகின்றனர். என்ன நடிப்பு. சத்யஜித்ரே படத்தின் மந்திரம் போல் இவர்கள் படங்களில் குழந்தைகள் (1 வயதுக்குழந்தை) கூட நடிக்கின்றனர். நாம் இன்னும் கும்பல், கும்பலாக வெளிநாட்டுத் தெருக்களில் பாட்டுப்பாடி காதலித்துக் கொண்டிருக்கிறோம், நமது சினிமாக்களில். கொரியன் நடிகையான கிம் யுன் ஜின் உண்மையிலேயே ஒரு திறமை வாய்ந்த நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களில், குறிப்பாக Lost, Seven days போன்ற தொடர் சித்திரங்களில் பிரபலமாகி இருக்கிறார்.

Kim Yun-jin Sings in 'Harmony' Onscreen

இவர் ஹாலிவுட்டில் தன் திறமையால் முன்னேறிய பின் மெல்ல, மெல்லப் பல கொரிய நடிக, நடிகையர்கள் முயல்கின்றனர்.கொரிய சினிமா உலகை அதிசயக்க வைக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை. நம் பாலிவுட், கோலிவுட் தமது மடத்தனமான கனவுலகை விட்டு வெளியே வந்து முன்னேறும் ஆசிய சினிமாவைக் கண்டு, கற்றுக்கொள்வதாக!

0 பின்னூட்டங்கள்: