அவதாரம்! (சினிமா விமர்சனம்)

இதுவொரு மெகா ஹிட். வெளியான ஆறுவாரங்களுக்குள் 2 பில்லியன் டாலர்கள் வசூலாம், ஐரோப்பாவில். இதன் முக்கிய வருமானம் இது தரும் முப்பரிமாண அனுபவம் என்பதைக் கருத்து தெரிவிப்பு சொல்கிறது. உண்மைதான். அந்தப் பண்டோரா கிரகத்தில் வாழ நம் எல்லோருக்கும் ஆசை வரும் படி எடுத்து இருக்கிறார்கள். மெய்நிகர் அனுபவம் என்பது சமகால வாழ்வியலில் ஒரு கூடுதல் அனுபவச் செறிவு என்றே சொல்ல வேண்டும். கணினி சார் தொழில் நுட்பத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இப்படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதைக் காட்டும் வீடியோ கீழே!இதன் சிறப்பு என்னவெனில் நடிக,நடிகைகளின் முகபாவத்தையெல்லாம் குறிப்பாக எடுத்து கணினி மூலம் ஒரு திரைச்சித்திரத்தை உருவாக்குவது. இதை நான் நேரடியாக சென்னையிலுள்ள பெண்டாஃபோர், ட்ரீம் மீடியா ஸ்டூடியோவில் பார்த்திருக்கிறேன். நடிக/நடிகையர்கள் நடித்து முடித்தவுடன் சுடச்சுட அவர்களது மின் அவதாரம், உருவாக்கப்பட்ட பண்டோரா கிரகத்தில் ஒட்ட வைத்துக் காட்டப்படும் போது மெல்ல, மெல்ல நடிக, நடிகையர் அவர்கள் அவதாரமாக வாழத்தலைப்படுகின்றனர். அதன் மூலம் திரைச்சித்திரத்திற்கு மனித குணநலம் இயல்பாக ஒட்டிக்கொள்கிறது. எனவே இது வெறும் வால்ட் டிஸ்னி கார்ட்டூன் படமல்ல. உண்மையான அவதாரம்.அதுவே இப்படத்தின் வெற்றிக்கான பார்முலா.

மற்றபடி இதில் கதை என்று ஏதுமில்லை. 14 வருடத்திற்கு முன்பே கதையை உருவாக்கிவிட்டேன் என்கிறார் இயக்குநர். ஆனால் அதற்குள் எத்தனையோ முன்னோடிப்படங்கள் வந்து நமக்கு இப்படம் ஒரு மசாலா என்பது போன்ற பிரம்மையைத் தருகிறது. சூப்பர் ஹிட் எனப்படும் எல்லாப்படத்தின் அம்சங்களையும் இதில் காண முடிகிறது. மாட்ரிக்ஸ், ஹேரிபாட்டர், லார்டு ஆப் தி கிங்க்ஸ், ஈடி, ஸ்டார் வார்ஸ், பிற வால்ஸ்டிஸ்னி படங்கள்.

ஆயினும் இது சொல்லும் சேதி முக்கியம். இது சூழல் அன்பு பேசும் படம். கண்மூடித்தனமான சூழல் சூறையாடல் என்பது அழிவிற்கு இட்டுச் செல்லும் என்பது முக்கிய சேதி. எனவே பண்டோராவின் ஆதிக்குடிகளைக் காட்ட ஆப்பிரிக்க, அமேசான் போன்ற இடங்களில் உள்ள பழம் குடிகளின் தோற்றத்தை, நடவடிக்கைகளை காப்பி அடித்துள்ளனர். லாரி கிங் ஷோவில் பேசும் போது இப்படத்தை எடுத்த எல்லோரும் வெளிகிரகங்களில் உயிரினம் வாழ்வது உறுதி என்றே சொல்கின்றனர்.

இக்கதையைப் பற்றிப் பேசும் கிறிஸ்தவ தேவாலய மதகுரு (போப் ஆண்டவர்) இது shamanistic என்று ஒதுக்க வேண்டிய கருத்து என்று சொல்லியிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான். இது கிறிஸ்தவத்திற்கு எதிரான போக்கு என்று அவர் காண்கிறார். ஆனால், வழக்கம் போல் இப்படம் இந்தியக் கண்ணோட்டத்தில் மிகவும் பழக்கப்பட்ட தீம் என்றே தோன்றுகிறது. நமக்குதான் தேவர்கள், அசுரர்கள், பாதளலோகம் இவையெல்லாம் பழக்கப்பட்ட சிந்தனைகள்தானே! உயிர்களின் தொடர்ச்சி பற்றிய இப்படத்தின் சித்திரம் வெகுவாக இந்தியப்பின்புலம் கொண்டுள்ளது. கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்பதை நாம் சித்தி என்கிறோம். அது அறிவியல் சாத்தியம் என்பது போல் காட்டுகிறது படம். இதே தீமில் வேறொரு ஹாலிவுட் படம் பார்த்த ஞாபகம். இது அறிவியல் புதினம். ஆனால், மசாலா அறிவியல் புதினம். ஒன்று கூட புதிய கருத்தில்லை. எல்லாம் பேசப்பட்டு, படமாக்கப்பட்டவையே! அப்படி இருந்தும் இப்படம் சூப்பர்ஹிட் ஆகியிருக்கிறது என்றால் நம் கற்பனைக்கு அது சோறு போடுகிறது என்றே பொருள்.

நல்ல படம். எல்லோரும் குடும்பத்துடன் காண வேண்டிய படம். முப்பரிமாணக் காட்சி கூடுதல் விலை. ஏனெனில் அதற்கென தனி உபகரணங்கள் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறதாம். ஐமேக்ஸில் பார்க்க முடிந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். முப்பரிமாண அனுபவத்திற்கு ஊர் விட்டு, ஊர் போய் பார்த்தேன். அதுவே இப்போதைக்கு திருப்தி!நமக்கு மகாபாரதம், இராமாயணம் போன்ற பிரம்மாண்டமான கதைக்கருவூலங்கள் இருப்பினும் நம்மால் அவைகளை இம்மாதிரிப் படங்களாக உருமாற்றும் முன், பிறரால் அவை எடுக்கப்பட்டு விடுகின்றன. எனவே இம்மாதிரிப் படங்களைப் பார்த்து, நமக்குத்தெரிந்த கற்பனைப் பின்புலத்தில் வைத்து ரசிக்க வேண்டியதுதான்.

0 பின்னூட்டங்கள்: