ஆலவட்டம் 2

2.


நந்துவின் கிராமத்தில் ஜே.கேயை அறியாதோர் அதிகமிருந்தது ஆச்சர்யமில்லை. ஏனெனில் அது சாதாரண குக்கிராமம். விவசாயம்தான் பிரதானம். ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடமுண்டு. எஸ்.எஸ்.எல்.சி பரீட்சை எழுத மானாமதுரை போக வேண்டும். எவன் மானாமதுரைவரை போய் பரிட்சை எழுதுவான்? அக்கிரகாரத்திலாவது அறிவுஜீவிகள் உண்டா எனில்? அங்கும் கிடையாது. திருநெல்வேலி பிராமணரான கிருஷ்ண அய்யர் திருப்புவனம் வந்து ஹோட்டல் வைத்தார். ஸ்ரீகிருஷ்ணா பவன் என்று பெயர் வைத்தார். நல்லபடியாக ஓடியது. அவரது உறவுக்காரர்கள் எல்லோரும் அவருக்கு ஒத்தாசையாக அங்கு வந்துவிட்டனர். நில, புலமென அதிகமான போது விவசாயத்தைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள தனது மச்சினனை அனுப்பினார். அன்றிலிருந்து கோபாலய்யர் விவசாயி ஆகிவிட்டார். அவர் பேச்சு, நடை உடை எதிலும் பிராமணத்துவம் பார்க்கமுடியாது. எப்போதாவது ஆவணியாவிட்டம் வந்தால் இவரைப் பூணூல் மாற்றிக் கொள்ளப் பார்க்கலாம். அவ்வளவுதான். சரி, பஞ்சாங்க ஐயங்கார் வீடு எப்படி? அவருக்கும் நில புலன்கள் உண்டே. அவர் விவரமாக பெரிய பையனை வக்கீல் படிக்க வைத்தார். சின்னவனை விவசாயி ஆக்கிவிட்டார். நாராயணன் ஆவிணியாவிட்டம் என்றால் கூட வர மாட்டான். கேட்டால், ‘ஆமா! என்னை எவன் பிராமணன் என்பான்?’ என்று சொல்லி வெட்கப்பட்டு சிரிப்பான். கோவிந்த ஐயங்கார் மட்டும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே விவசாயம் பார்ப்பார். அதை அப்படியே அவர் பிள்ளை காளமேகமும் செய்தான். அது எப்படி சாத்தியப்பட்டது என்றறியும் திறன் நந்துவிற்கு இல்லை.


சரி, இந்தப் பிராமணப்பசங்களுக்கு வேதம் சொல்லிக்கொடுக்கலாமென்று மதுரையிலிருந்து ஒரு கனபாடிகள் வந்தார். அப்படியாவது இன்னொரு மொழி இவர்களுக்கு பரிட்சயமாகட்டுமென்று. ஆனால் எவனாவது போனால்தானே! அவர் ஒரு மாதம் பார்த்துவிட்டு ‘இது ஒண்ணும் சரிப்படாது’ என்று போய்விட்டார். நந்துவிற்கு அந்த மாமாவின் முகத்தில் ஒரு தேஜஸ் இருப்பதாக புலப்படும். அதற்காக சமிஸ்கிருதம் படிக்கவா முடியும்?


ஆனால் அங்கிருந்த பள்ளிக்கூடம் இவர்களுக்கு மாற்று மொழி சொல்லிக்கொடுக்க ஒரு திட்டம் போட்டது! அதாவது, மாலை நேரங்களில் ஆங்கிலம் வந்து கற்றுக்கொள்ளும் சிறார்களுக்கு உச்சிக்குடுமி ஐயர் கடையிலிருந்து ஒரு லட்டு, ஒரு மிக்சர் பொட்டலம் தரப்படும் என்று அறிவித்தது. நந்துவிற்கு இதுவொரு நல்ல திட்டமாகப்பட்டது. ஏனெனில் உச்சிக்குடுமி ஐயர் கடைக்குப் போய் சாப்பிட தனியாகக் காசு வேண்டும். இவன் தந்தையை வேண்டிய நேரத்தில் காண்பதரிது. சித்தியாவோ கோபக்காரர். காசு நிச்சயம் தருவார். ஆனால் அது சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு அருள் செய்வதற்கு ஒப்பானது. நந்துவிற்கு தீக்காயம் பட்டுப் பழகிவிட்டது. இந்த நிலையில் ஆங்கிலம் கற்றுக் கொண்டால் கசக்கவா செய்யும்? ஆனாலும், அங்கும் கூட்டமில்லை. கிராமத்துப் பசங்களை லட்டு, மிக்சர் கொடுத்தெல்லாம் அவ்வளவு எளிதில் மயக்கிவிட முடியுமா என்ன? ஆனாலும், நாலு பேர் இருந்ததால் அந்த வகுப்பு ஓடியது.


இவன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த போது, இந்தி வாத்தியார் ஒருவர் இருந்தார். மகாலிங்கமென்று பெயர். அவரை ஹிந்தி பண்டிட் என்றுதான் சொல்லுவார்கள். அவர் பள்ளியில் சொல்லிக்கொடுத்தது போதாது என்று மாலை வேளைகளில் வீட்டிற்கும் வந்துவிடுவார். பசங்களின் தொல்லை தாங்காத பெற்றோர்கள் சிறுவர்களை மாலைப் பாடத்திற்கு உட்கார வைத்து விடுவர். ஆத்திரம் தாங்காத நந்து பண்டிட் உட்காரும் ஈசிசேர் கம்பைக் கழட்டிவிட்டு அப்படியே வைத்துவிடுவான். அவர் பாடம் ஆரம்பிக்கவந்து உட்கார, ஈசிசேர் படுதா நழுவிக்கொள்ள ‘படார்’ என்று பின் மண்டை ஈசிசேர் கட்டையில் மோத..மூட் அவுட்டாகி பாடம் நடத்தாமல் போய்விடுவார். ஆனால் நந்துவிற்கு பேருதவி செய்தது சில கட்சிகள். அவை இந்தியை எதிர்த்தால் பள்ளிக்கூடமே மூடப்படும் எனும் நற்செய்தியை மாணவர்களிடம் பரவ விட்டது. இந்தத் தேனினும் இனிய சேதி கேட்டு நந்து போன்ற மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். எதற்குச் செய்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் ஜாலியாக மாணவர்கள் வகுப்பைப் பகீஷ்கரித்தனர். ஒருநாள் பள்ளி கேட்டுக்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு ‘இந்தி ஒழிக!’ என்று கத்திக் கொண்டிருந்த போது (விடுமுறை நாளில்) ஒரு லாரி நிறைய ‘சட்டி போலீஸ்’ வந்திறங்கி லத்தியைக் கொண்டு மாணவர்களை வாங்கு, வாங்கு என்று வாங்கி விட்டது. நந்து இரண்டு அடியில் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டான். இவன் அண்ணன் மறவன். நின்று அடி வாங்கி. லாக் அப்பில் வைக்கப்பட்டான். இவன் வந்துதான் வீட்டிற்குச் சேதி சொன்னான்.


அது தவிரவும் அந்த ஊர் முரட்டு ஊர். நினைத்தால் வெட்டு. நினைத்தால் குத்து. இவன் தாத்தா கூட சுருள் கத்தி வைத்திருந்தார். வாக்கிங் ஸ்டிக்கில் ஒரு பட்டாக்கத்தி மறைந்திருக்கும். கேட்டால் தற்காப்பிற்கு என்பார். இவன் பள்ளிக்கூடம் போகும் போது இரண்டு கொலைகள் பார்த்திருக்கிறான். முதற்கொலை கோரக்கன் கோயிலில் ஒரு ஆட்டின் தலை வெட்டப்படுவது. இரண்டாவது இவன் அக்கா கிளாஸ்மேட் பொரிகடலைக்காரப் பையன் அந்த ஊர் பெரிய ரவுடியை வயிற்றில் குத்தி சாய்ததை. முதல் கொலையைக் கண்டு விட்டு வகுப்பில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது வாந்தி எடுத்தான். இரண்டாவது கொலையை ஊரே பார்த்தது. ஆனாலும் வீட்டிற்கு ஓடி வந்து, வரும் போதே டவுசரெல்லாம் நனைந்து போய், இரண்டு நாள் கடும் ஜுரத்தில் வீழ்ந்து விட்டான். இந்த அழகில் அந்த ஊரில் எப்படி அறிவு ஜீவிகளைக் காணமுடியும்?


ஆனாலும், அங்கு அறிவு ஜொலித்த ஒரே இடம் பார்பர் ஷாப்தான். அங்கு போனால் வரிசையாக படம் தொங்கிக்கொண்டிருக்கும். ஸ்டாலின், மார்க்ஸ், இங்கர்சால், அம்பேத்கார் என்று. இவர்களெல்லாம் யார் என்று யாரும் இவனுக்கு விளக்கிச் சொன்னதில்லை. சவரக்கடையில் கிடக்கும் நாளிதழ்களைக் கூட தைர்யமாக எடுத்துப் படித்துவிட முடியாது. எவனாது முரடன், மிலிட்டரிக்காரன் வந்து விட்டான் எனில். படிக்கும் பேப்பரை அறைந்து வாங்கிப் படிப்பான். அங்கு என்றும் வாய் பேசியதில்லை. எடுத்தவுடன் கைதான் பேசும்.


இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் உள்ள ஊரில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை எப்படி அறிந்திருக்க முடியும்?


Knowledge is always accompanied by ignorance


A great many scientists in the West have gone into the question of the
brain. They say that we are using only a very small part of the whole brain.
We can observe whether this is so in ourselves, for it is part of meditation
to find out—for ourselves—whether the whole brain or only a very small part
is operating. Now, thought is the response of memory which has been stored
through knowledge; knowledge is gathered through experience. That is,
experience, knowledge, memory stored in the brain, then thought, then
action. This is our pattern of living, and the whole process is based on
this movement. Man has done this for the last million years. He has been
caught in the cycle, which is the movement of thought. And within this area
he has choice. He can go from one corner to the other and say, “This is my
choice, this is my movement of freedom”—but it is always within the limited
field of the known. And knowledge is always accompanied by ignorance because
there is no complete knowledge about anything. So we are always in this
contradictory state: knowledge and ignorance.


*A Timeless Spring, p 163*

0 பின்னூட்டங்கள்: