ஆலவட்டம் 3

“When the mind is acute, then it begins to question the environment,
the conditions, and in that questioning, intelligence is functioning;
and it is only intelligence that will lead man to the fullness of life
and to the discovery of the significance of sorrow" J.Krishnamurti


அந்த ஊரில் யாரும் கேள்வி கேட்பதில்லை. வீட்டில் கேள்வி கேட்டால் அறை விழும். நந்துவின் சகோதரி இப்படி அம்மாவிடம் கேள்வி கேட்டு அடி வாங்குவாள். அது பெரும்பாலும் நந்துவிற்கு மட்டும் வீட்டில் ஏன் சலுகைகள் அதிகம் என்பது போன்ற கேள்விகள். அம்மா பதில் சொல்ல மாட்டாள் அறைதான் விடுவாள். சித்திதான் பதில் சொல்லுவாள். ‘டீ! ஏண்டி அக்காவைத் தொந்தரவு செய்யறே! ஏழுக்குப் பிறகு கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு ஆம்பிளைப் பையன் பிறந்திருக்கான். அதுதான்’ என்பாள். சித்திக்கும் திட்டுவிழும்.

‘ஆமாம்! இவ பெருசாக் கண்டா!’.

‘அப்படிச் சொல்லாதே அக்கா! நந்து மாதிரி ஒரு குழந்தை கிடைக்கணுமே’

என்று! சௌந்திரம் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்காமல் கூடுதலாக நந்து மேல் எல்லோரும் பாசம் பொழிவதால் சௌந்திரம் இன்னும் கூடுதல் எரிச்சலடைந்து அந்த இடத்தை விட்டு அழுது கொண்டே போய்விடுவாள். நந்துவிற்கு சித்தியென்றால் உயிர். சித்திக்கும் அப்படியே. ஆனால் நந்துவின் அம்மாவிற்கு எல்லோரையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் குறி. நந்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது சேட்டை செய்து கொண்டிருக்கும்போது அடுப்படியில் இருக்கும் அம்மாவிற்கு அது எப்படித் தெரியும் என்பது ஒரு மர்மம். ஆனால் அடுப்படியிலிருந்து அவள் குறி பார்த்து வீசும் சின்ன டம்பளர் நந்துவைப் பதம் பார்ப்பதுண்டு. நந்து அழுதால் சித்திதான் பதறி அடித்துக் கொண்டு ஓடிவருவாள்.


பள்ளியில் கேள்வி கேட்டால் பிரம்படி கிடைக்கும். அதுவும் வாத்தியாருக்குத் தெரியாத கேள்விகளைக் கேட்டுவிடக் கூடாது! ஐரோப்பிய வரலாறு என்று பாடம் இருக்கும். நெல்சன் எப்படி பிரெஞ்சுக் கடற்படையைத் தோற்கடித்தான் என்று இந்திய மாணவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பாடம் இருக்கும். டென்மார்க் பற்றி பூகோளம் பேசும். தமிழகத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து வரும் வாத்தியாருக்கு மாணவனுக்குப் புரியும் அளவிற்குத்தான் இந்த வெளிநாட்டுச் சமாச்சாரமெல்லாம் புரியும். அவரைப்போய் ஏடாகூடமாக ஐரோப்பிய சரித்திர நுணுக்கங்களைக் கேட்டால் பிரம்படி விழும். தமிழ்ப் பாடமென்றாலும் அடிவிழும். அங்கொரு நொண்டிக்கை வாத்தியார் இருந்தார். சோத்துக்கை முடம். எனவே "எல்லாம்" இடது கையில்தான். இதை மாணவர்களும், மற்றவர்களும் அவருக்கு எப்படியோ உணர்த்திய வண்ணம் இருப்பதாக ஆசிரியர் உணர்வார். அதனால் எப்போதும் ஓர் கொதி நிலை.


சட்டியிலே பாதி அந்தச்
சட்டுவத்தில் பாதி இட்டிருக்க
இட்டமுடன் நாடி வந்த சோனேசர்
இங்கு வா! என்றழைத்தவுடன்


பிள்ளை ஓடி வந்தது எவ்வாறு உரை!?


என்று இருக்கும் கேள்வி. முதலில் கேள்வி புரியும் படியாக இருக்க வேண்டும். கேள்விக்கே பொருளுரை தேவைப்படும் போது பதில் எப்படி எதிர்பார்க்கமுடியும்? பதில் சொல்லவில்லை எனில் பின்னி எடுத்துவிடுவார். அவருக்கு மாற்றுத்திறனாளர்களை தமிழ் சமூகம் நடத்தும் அவநிலைக்கு தான் கொடுக்கும் பரிசு என்பது போல் அவர் தரும் அடிகள் ஒன்றுமறியா மாணவர்களின் மீது மழையாய் பொழியும்!


சமூகத்தில் கேள்வி கேட்டால் கொலைதான் விழும்! அந்த ஊரில் சேர்வார்களுக்கு செல்வாக்கு. அந்த ஊரின் பெரிய ரௌடி சேர்வார் வீட்டு ஆளு! தலித்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஊரின் மையப்பகுதிவிட்டு விளிம்புப் பரப்புகளில் வாழ்வர். அங்கு கொலை விழுந்தால் கூட இரண்டு நாள் கழித்துதான் தெரியும். பல்வேறு வகையில் கொலை விழும். ஒரு நாள் எல்லோரும் கிசு, கிசு என்று பேசிக்கொண்டிருந்தார்கள். முனீஸ்வரர் ஆல மரத்தில் ஒருவன் தூக்கிட்டுத் தொங்குகிறான் என்று. நந்து தன் கோஷ்டியுடன் உடனே ஆற்றை நோக்கி ஓடினான். இவனுக்கு ஆச்சர்யம் என்னவெனில் அந்த ஆலமரம் மிகவும் சிக்கலான அமைப்புக் கொண்டது. மதிலைத்தாண்டி விழுதுகளை மண்மீது பாய விட்டு சாய்ந்து நிற்கும் மரமிது. மதிலுக்கு உள்ளே, மரத்தடியில் முனீஸ்வரர் சந்நிதி. மிகவும் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் என்று பெயர். அவரை மிதித்து மரத்தில் ஏறி, இவன் தொங்கும் இடத்திற்கு வருவதற்குள் குளவி, தேள், தேனீ இவை கொட்டி கீழே விழ வேண்டியிருக்கும் அல்லது கரடு முரடான வழுக்கு மரத்தில் ஏறமுடியாமல் கீழே விழ வேண்டியிருக்கும். இவ்வளவு சிக்கலையும் தாண்டி அவன் நடு மரத்திற்கு வந்து தூக்குப்போட்டுத் தொங்குகிறான் எனில் அதுவொரு சாதனை என்று பாராட்டுப்பெற வேண்டியிருக்க ஏன் சாக வேண்டும்? நந்து செத்தவனைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்க ஊர்ப்பெரிசுகள் சிறுவர்களை விரட்டினர். பிறகுதான் தெரிந்தது அது தூக்கு அல்ல, கொலை என்று. போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது தெரிந்தது இறந்தவனின் கொட்டைகள் நசுக்கப்பட்டு இறந்திருக்கிறான் என்று. இப்படி விநோதமாகக் கொலை விழும் கிராமம் அது.


ஆனால் அச்சமூகத்தைக் கேள்விக்குறியாக்கி நின்றன கழகச் சுவரொட்டிகள். ‘கடவுளை நம்புகிறவன் முட்டாள்! கடவுள் இல்லை. இல்லவே இல்லை!’ என்று. இதைப் பெரிய கரிகொண்டு சண்முகபட்டர் வீட்டுச் சுவரில் வேண்டுமென்றே எழுதிவிட்டான். அவரும் வெள்ளையடிக்க, இவன்களும் மீண்டும் எழுத என்று ஒரு யுத்தமே அங்கு நடந்து கொண்டு இருந்தது. எனவே சொல்லாமலே இரண்டுபட்டிருக்கும் ஊரில் இதுவொரு பெரிய பிரிவினையை, ஒரு நிழல் யுத்தத்தை கிளப்பி விட்டிருந்தது.


இப்படி அடிவிழாமல் கேள்வி கேட்கப்படும் ஒரே இடம் பார்பர் ஷாப்பாக இருந்தது. அதுவே அந்த ஊரின் அறிவாலயமாக இருந்தது. கழகத்தின் பாசறை என்று பார்பர்ஷாப்பைச் சொல்லலாம். அங்குதான் புரட்சியின் கனல்கள் பொத்தி பொத்தி காக்கப்பட்டன. அங்கும் அடிதடி நிகழும் வண்ணம் சூடு பரக்கும் விவாதங்கள் நிகழ்தாலும் பார்பர் கையில் கத்தி இருப்பதால் எல்லோரும் கொஞ்சம் அடக்கியே வாசிப்பதுண்டு.


ஆனால் இப்படிக் கேட்கப்பட்ட கேள்விகள் அச்சமூகத்தை முற்றும் முழுவதுமாக மாற்றிவிடவில்லை. எல்லாம் அரைகுறை சாமாதானமாக, அச்சமூக அமைப்பில் நிகழ்ந்த வரப்பு மாற்று உத்திகளாக மட்டுமே நிகழ்ந்தன. அம்மக்களை அச்சமூகம் போட்டிருந்த தளைகளிலிருந்து முற்றும் முழுதுமாக விடுதலை செய்யும் கேள்விகளை கேட்கும் திறனுள்ள அறிவாளி அந்த ஊரில் யாரும் இல்லை.


நந்துவைப் பொறுத்த மட்டில் அந்த ஊரின் ஒரே அறிவாளி அவன் அக்காள் செல்லம்மாள்தான். அவள்தான் எல்லாப் பரீட்சையிலும் முதல் மார்க் வாங்கினாள். இருக்கும் பரீட்சைகள் போதாதென்று தமிழ் மன்றப் பரீட்சையென்று மானாமதுரை போயும், ஹிந்தி பிராத்மிக் பரீட்சையென்று மதுரை போயும் எழுதிக் குவித்தாள். பாட்டுப் போட்டிகளில் வேறு கலந்து கொள்வாள். அந்த ஊருக்கு யாராவது முக்கியப் பிரமுகர்கள் வந்து நடத்தும் விழாக்களில் இவளும், இவள் தங்கையும்தான் இறை வணக்கம் பாடுவர். கயிற்றில் நடப்பது போன்ற அருணகிரியாரின் பாடல்களையெல்லாம் அவர்கள் சரளமாகப்பாடுவர். மார்கழி மாதத்தில் காலை நேரங்களில் பெரியகோயில் போய் திருப்பாவை பாடுவர். செல்லம்மாள்தான் அந்த ஊரில் நடந்த எஸ்.எஸ்/எல்.சி பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தாள். அவளே முதன்முறையாக கல்லூரி வாசலையும் எட்டினாள். பாத்திமா கல்லூரி தந்த மேலைநாட்டு கிறிஸ்தவ மேனர்ஸ் மெல்ல, மெல்ல நந்து வீட்டிற்கும் வந்தது. ஒரு கோடை விடுமுறையில் எப்படி ஒருவர் உதவி செய்தால் ‘நன்றி’ சொல்வது என்று சொல்லிக்கொடுத்தாள். வீட்டிற்குள் ஒருவருக்கொருவர் நன்றி சொல்வதா? அது யாரும் கேள்விப்படாத வழக்கமாக இருந்தது. அது நல்ல பழக்கம் என்றாள்.


அவளுக்குப் பரிசாகக் கிடைக்கும் வியாசர் விருந்து, சக்கிரவர்த்தித் திருமகன், பாரதியார் பாடல்கள், தாகூரின் கீதாஞ்சலி போன்ற புத்தகங்களெல்லாம் நந்துவிற்கும் விருந்தாக அமைந்தன. அந்த ஊரில் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் ஒரு நூலகமுண்டு. அதுவே நந்துவின் அறிவாலயமாக செயல்பட்டது. அங்குதான் வெளி உலகம் இவனுள் புகுந்தது. கலைக்கதிர் எனும் நூல் அவனை மிகவும் ஈர்த்தது. ஆழிப்பேரலை பற்றியெல்லாம் அறியும் போது வியப்பு மேலிட்டது.


ஆயினும் அந்த ஊர் நூலகத்திலும் ஜே.கே பற்றிய நூல்கள் இல்லை!


J. KRISHNAMURTI 6 biographie
Uploaded by jiddu-krishnamurti. - Discover more webcam videos and video blogs.

0 பின்னூட்டங்கள்: