ஆலவட்டம் 1

பள்ளிக்காலங்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நந்து அறிந்திருக்கவில்லை. வள்ளலாரைப் பற்றி ம.பொ.சி எழுதிய புத்தகம் இருந்தது (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) போல், ஸ்வாமி அண்ட் பிரண்ட்ஸ் என்று ஆர்.கே.நாராயணன் புத்தகம் இருந்தது போல் ஜே.கிருஷ்ணமூர்த்தி பற்றி யாரும் அறிமுகம் செய்யவில்லை. அவன் வளர்ந்த கிராமம் ஒரு சிவஸ்தலம். காமகோடி பீடம் ஆச்சார்யர் வந்த போது எல்லோரும் விழுந்து சேவிக்கச் சொன்னார்கள். நந்து மகிழ்வுடன் விழுந்து சேவித்தான். ஏனெனில், காலில் விழுந்து சேவிப்பது என்பது குழந்தையிலிருந்து அவனுக்குக் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் பெரியவர்கள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் நாம் மரியாதையாக தரையில் அமரவேண்டும் என்ற நாசூக்கும் நந்து கற்றிருந்தான். ஆனால், அந்த ஊரிலேயே யாரும் ஜே.கே பற்றி அவனிடம் சொன்னதில்லை. கிராமத்து வாழ்க்கையில் அரசமரத்துப் பிள்ளையார் உண்டு, ஆற்றோர முனீஸ்வரர் உண்டு, முருகன் உண்டு, சிவனுண்டு, பெருமாளுண்டு. சங்கரர் உண்டு, இராமானுஜர் உண்டு, பெரியாருண்டு, அண்ணா உண்டு ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி கிடையாது. யாரும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.


கல்லூரி வந்து சேர்ந்தது ஒரு பெரிய திருப்பம். இவன் அரைக்கால் சட்டையுடன் கல்லூரியில் சேர மனு வாங்கப் போனபோது உதட்டோர ஆங்கிலத்தில் பேசி இவனைக் கேலி செய்த விடலையர் கூட ஜே.கே பற்றி இவனுக்குச் சொன்னதில்லை. இவனது ஆங்கில வாத்தியார் அப்படியே தன்னை ஆங்கிலேயன் போல் பாவித்து நடத்துவார் ஆனால் அவருக்கும் ஜே.கேயின் இருப்பு தெரிந்திருக்கவில்லை. அது ஏன்? இவரது நாத்திகப் பேராசிரியர் எல்லா நாத்திக சிந்தனையாளர்கள் பற்றியும் பேசுவார். பரீட்சைப் பேப்பரில் ‘ஓம்’ என்று எழுதும் சந்திரசேகரனைக் கிண்டல் அடிப்பார். இவனை தன்னுடைய சிந்தனைப்போக்கில் வழி நடத்த எண்ணிய அவர் கூட ஜே.கே பற்றிச் சொன்னதில்லை. கல்லூரி சேப்பலில் இலவசமாக பைபிள் புத்தகம் தருவார்கள். இவன் வாங்கிக்கொள்ளமாட்டான். ஸ்வாமி (Swami and Friends)யின் நினைவு உடனே வந்துவிடும். தன்னை மதம் மாற்றிவிடுவார்கள் என்று அம்மாதிரிப் புத்தகங்களை வாங்கிக்கொள்ளமாட்டான். அக்கல்லூரியில் விவேகாநந்தர் பற்றிய முழு வால்யூமும் இருந்தது. இவனுக்கு விவேகாநந்தர் பிடித்திருந்தது. அவரது நெஞ்சு நிமிர்த்திய போட்டோ பிடித்திருந்தது. ஆனால் அக்கல்லூரி நூலகத்தில் ஜே.கே பற்றி எந்தப் புத்தகமும் இவன் கண்டதில்லை. இவனை எப்படியும் சிவாநந்தர் வழியில் கொண்டு வந்துவிட வேண்டுமென்று வேதியியல் ஆசிரியருக்கு ஆசை. ஆனால் இவனோ நாத்திகம் பாதி, ஆத்திகம் பாதி என்று இருந்தான். ஆப்ரகாம் சொல்வதை நம்புவதா? ஐயங்கார் சொல்வதை நம்புவதா? என்ற குழப்பம். ஐயங்கார் வாத்தியார் இவனை முதன் முதல் நெருங்கி வந்த போது தோள் மீது கை போட்டு முதுகில் ஏதோ தேடினார். இவனுக்கு பயம். வாத்தியார் எதுக்கு தோள் மீது கை போடுகிறாரென்று! சரி! ஆத்திகமா! நாத்திகமா என்று இவர்கள் இருவரையும் மோதவிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் இவன் வகுப்பு மாணவர்களுக்காக ஆப்ரகாமையும், ஐயங்காரையும் மோதவிட்டுப் பார்த்தான். எல்லோருக்கும் ஒரே வேடிக்கை. ஐயங்கார் பேசினால் சாமி இருப்பது போல் தோன்றும். ஆப்ரகாம் பேசும் போது அது இல்லாதது போல் தோன்றும். ஆக, அந்த டிபேட் பெரிய குழப்பத்தில் இவனை கொண்டு போய் விட்டது. ஆனால் ஐயங்கார் ஸ்வாமிகள் எப்படியும் இவனை சிவாநந்தர் வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். மீனாட்சி கோயில் ஆடி வீதிக்கு வாரா, வாரம் போக வேண்டியதாய் போய் விட்டது. புதிய, புதிய வாயில் நுழையாத பஜன்களையெல்லாம் பாட வைத்தார்கள். இவனுக்கு கோரக்கன் கோயில் பலிக்கு முன் கட்டிய ஆடுதான் நினைவிற்கு வந்தது. அவ்வளவு பெரிய கல்லூரியில் யாரும் இவனுக்கு ஜே.கே பற்றிச் சொன்னதில்லை.


கல்லூரி முடிந்து ஆய்வகம் வந்த போது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தான்.அங்குள்ள நூலகம் இவன் அதுவரை பார்த்த நூலகங்களிலேயே பெரிதான நூலகமாக இருந்தது. இவன் புத்தகப்புழு அல்லன். ஆனாலும் நூலகம் எப்போதும் இவனைக் கவர்ந்தது. ஒருநாள் இவன் கண்ணில் கிருஷ்ணமூர்த்தி பட்டார்.

புத்தகத்தை கையில் எடுத்து படித்துப் பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று புத்தகத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டு நகர்ந்தவன் தான். இவன் கல்யாணம் ஆகும்வரை யாரும் ஜே.கே பற்றி இவனிடம் பேசியதே இல்லை.


Jiddu Krishnamurti

"If I may I would like to point out we are not entertaining you. We are not
indulging in some kind of intellectual game, or trying to point out what
kind of belief you should have; or to seek a leader to solve our problems.
We are not doing any kind of propaganda to persuade you to think in a
particular direction, or to convince you of a particular point of view. But
we are thinking together, observing together the problems, the crisis, that
we are facing, the war, destruction, corruption, and the superstitions in
the name of religion; all that nonsense that goes on in the name of
religion, god and so on ..."

Jiddu Krishnamurti, Madras 1st public talk 26th December 1981

0 பின்னூட்டங்கள்: