ஆலவட்டம் 10

முன்கதைச் சுருக்கம்:

நந்து ஒரு கிராமத்துச் சிறுவன். அவனது வாழ்வு மெல்ல, மெல்ல, கிராமம் தாண்டி நகரம் வந்து, பின் நாடு தாண்டி, கண்டங்கள் தாண்டி பயணப்பட்டபோது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனும் சிந்தனையாளரை அறிந்து கொள்கிறான். அந்த அறிதல் அவன் வாழ்விற்கு பொருள் சொல்லியது. அவனது தேடலை உச்சப்படுத்தியது. இத்தொடர்பு தற்செயலாக நடந்ததா? இல்லை பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின் ஒரு மறை தொடர்பு உள்ளதா? எனக்காண விழையும் தொடர் இது. 60 களில் ஆரம்பித்து 2010 வரை நீளும் கதை. அக்காலக்கட்டத்தின் பதிவாக மலர்கிறது. அக, புறப் போராட்டங்கள் பதிவாகின்றன. துணை போகும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் விழியங்கள், நேர்காணல்கள், புத்தக மேற்கோள்கள் இம்முயற்சியில், இத்தேடுதலில் ஈடுபடும் வாசகனை நந்து அடைந்த புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. நமக்குத்துணை நாமே. ஏனெனில் இங்கு ஆராயப்படும் பொருளும், ஆராய்பவனும் ஒன்றே. இத்தொகுப்பு ‘கவினுலகம்’ வலைப்பதிவில் தொடர்ந்து வலையேறுகிறது.

ஆலவட்டம் 10

Most of us are frightened of dying because we don't know what it means to live. We don't know how to live, therefore we don't know how to die. As long as we are frightened of life we shall be frightened of death. The man who is not frightened of life is not frightened of being completely insecure for he understands that inwardly, psychologically, there is no security. When there is no security there is an endless movement and then life and death are the same. The man who lives without conflict, who lives with beauty and love, is not frightened of death because to love is to die.


From: p. 75-77, Jiddu Krishnamurti, Freedom from the known, 1969


நந்து போன்ற ஆய்வாளர்களின் கனவு அக்காலத்தில் அமெரிக்காவாக இருந்தது. நந்து படித்த கல்லூரி அமெரிக்கப் பாதிரிகள் ஆரம்பித்து வைத்த கல்லூரி. இவனது ஆங்கில விரிவுரையாளர் ஒரு அமெரிக்கர். இளைஞர். தனது மனைவியுடன் இவன் வாழ்ந்த கோசாகுளம் புதூரில் குடியிருந்தார். இருந்த காலங்களில் அவர் தமிழ் கற்று தினத்தந்தி வாசிக்கும் அளவிற்கு முன்னேறியிருந்தார். அறிவியல் புலத்தின் மேலாண்மையும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரிடமே இருந்தது. எனவே அமெரிக்கக்கனவு என்பது நந்துவிற்குப் புதிதல்ல. இந்திய சமுதாயம் மிகவும் கட்டுபெட்டித்தனமாக இருந்ததாக இவனும், இவனது சகாக்களும் கருதினர். அமெரிக்கா இவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை வழங்குமென்று நம்பினர். சுவாமிநாதன் அவ்வாழ்வின் இன்னோரு கோணத்தை இப்படிக் காண்பான். ‘நந்து, சும்மா அமெரிக்காவில் போஸ்ட்டாக்காக இரண்டு வருடம் இருந்து ஒரு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டு, இந்தியா திரும்பிவிட வேண்டும்’ என்பான். ஆனால், அமெரிக்கா போன இவன் சகாக்கள் யாரும் அப்படித் திரும்பவில்லை. காரணம் அமெரிக்காவின் வளமும், சௌகர்யமும் நம்மை இந்தியாவிற்கு மீட்டுவிடாது. சுஜாதா சொன்னது போன்று அமெரிக்கா எளிதாக ஒருவனைக் கடனாளியாக்கிவிடும். அங்கு கடன் வாங்குவது எளிது. வாங்கிய கடனைக் கட்ட ஒரு வாழ்நாள் போதாது. இப்படி அங்கு போய் கடன் வலையில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள்தான் அதிகம். ஆயினும் மோகம் என்பது குருடு. நந்துவின் கனவும் அமெரிக்கா செல்வதிலேயே இருந்தது.

ஆயினும் அமெரிக்கா செல்வதற்கு குறைந்த பட்ச தகுதியாக முனைவர் பட்டம் அக்காலத்தில் இருந்தது. இங்குள்ள முதுகலைப் பட்டம் அங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அங்கு போய் மீண்டும் முதுகலை வகுப்பில் உட்கார நந்துவின் செட்டில் யாருக்கும் விருப்பமில்லை. எனவே கஷ்டமோ, நஷ்டமோ இந்தியாவில் எப்படியாவது ஒரு டிகிரியை வாங்கிவிட்டுப் பறந்துவிட வேண்டும் என்பதே எல்லோரின் கனவாக இருந்தது. இது முதல் பெரும் தடை. ஏனெனில் முனைவர் பட்டம் வாங்குவது சில துறைகளில் எளிதாக இருந்தது. பேராசிரியரின் பல்துறை செல்வாக்கு அதற்கு வெகுவாக உதவியது. செல்வாக்கில்லாத பேராசிரியர்களிடம் மாட்டிக்கொண்டவர்கள் படித்துப் படித்து தலை வழுக்கையாகி முதுமையுற்றதுதான் மிச்சம். எனவே, அநேக குடும்பங்கள் இப்படி முனைவர் பட்டம் வாங்கப் போகும் பிள்ளைகளுக்கு மணமுடிக்க முடியாத பெரிய சிக்கலில் இருந்தன. நந்துவின் குடும்பத்திலும் இப்பேச்சு தலை தூக்கினாலும், அதற்கு முன் நந்து தாண்ட வேண்டிய பெரிய தடங்களாக அவனது சகோதரிகள் திருமணம் இருந்தது. பெற்றோர் அற்ற, பிராமண குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு வரன் பார்த்து மணம் முடிப்பது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. நந்துவோ வீட்டின் இளைய பிள்ளை. படிப்பு தவிர வேறு அறிவு அற்றவன். ஆனால் அதற்காகப் பொறுப்பைத் தட்டவும் முடியாது. எனவே நந்து அமெரிக்கக் கனவை ஒத்தி போட வேண்டியிருந்தது. நூறு பேருக்கு எழுதினால் இரண்டு பேரிடமிருந்து பதில் வரும். அதில் பெரும் நம்பிக்கை வைத்து அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கடிதங்கள் பேராசிரியர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு உழைக்கும் ஒரு கை குறைந்துவிடும் என்ற அச்சமுண்டு. எனவே போர்க்கால ரகசிய நடவடிக்கை போல் எல்லாம் கச்சிதமாக முடிய வேண்டும். ஆனாலும் காட்டிக் கொடுத்துவிடும் ஒரு அபாயம் அமெரிக்க கான்சுலேட்டிடம் இருந்து வரும். நேர்காணலுக்குச் சென்னை செல்ல வேண்டும். சில நேரங்களில் பட்டமேற்படிப்பு செய்யும் பேராசிரியரின் சான்றிதழ் கேட்கும் வழக்கமும் உண்டு! அமெரிக்கன் கான்சுலேட்டில் போய் மனுப்படிவம் வாங்குவதே பெரிய வேலை. காலை 5 மணிக்கெல்லாம் வாசலில் வரிசையிருக்கும். அலுவலகம் திறப்பதோ 10 மணி. இவ்வளவு கஷ்டப்பட்டு மனுவெல்லாம் கொடுத்தாலும் விசாக் கிடைக்குமென்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. இந்தியர்களை அமெரிக்காவின் சுமை என்றே அவ்வரசாங்கம் கருதியது. இங்கிருந்து வருபவன் எவனும் திரும்ப இந்தியா போகமாட்டான் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே விசா தட்டிக் கழிக்கப்படுவதே அக்காலக்கட்ட வழக்கம்.

நாட்சி வதை முகாமில் கஷ்டங்களுடன் வாழ்ந்த எல்லோருக்குள்ளும் ஒரு பரஸ்பர நட்புறவு இருந்தது. அது எல்லோரும் சாகப்போகிறோம் எனும் உணர்வால் வந்ததல்ல. விடிவு நிச்சயம் ஒரு நாள் வரும் எனும் நம்பிக்கையால் வந்தது. வதை முகாம்களில் திருமணங்கள் கூட நடந்து முடிந்தன. நந்துவின் சகாக்களுக்குள் இப்படியான ஒரு பரஸ்பர நட்பு இருந்ததற்கு அடிப்படைக் காரணம், இத்தனை கஷ்டங்களுக்கும் விடிவாக அமெரிக்க விசா ஒரு நாள் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கைதான்.

ஆனால் கொத்தடிமை வாழ்வு இவர்களைச் சுண்டக் காய்ச்சியது. நந்து எவ்வளவு ரகசியமாக நடந்து கொண்டாலும், பேராசிரியர்களுக்குத் தெரியாமல் அங்கு ஒரு காரியமும் நடப்பதில்லை. எனவே, பட்டம் இன்னும் பெறாத நிலையில், கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில் நந்து தொடர்பு கொண்ட அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றின் முகவரியை இவன் பேராசிரியர் பெற்றுவிட்டார். அந்த வெளிநாட்டுப் பேராசிரியர் இவரிடம் நந்து பற்றி நற்சான்றிதழ் கேட்டிருந்தார். இவர் சான்றிதழ் வழங்காமல், அவனுக்கு பட்டம் கிடைக்க நாளாகும், ஆனால் தன்னால் அங்கு ஒரு வருடம் வரமுடியும் என்று எழுதிப் போட்டு, இவன் வாயில் மண்ணைப் போட்டுவிட்டு அவர் அமெரிக்கா பறந்துவிட்டார். நந்து மிகப்பின்னால்தான் காரியரதரிசி ராதா மூலம் அறிந்து கொண்டான். அவன் பட்ட மனக்கஷ்டத்தை சொல்லி மாளாது. ஆனால், பல்கலைக்கழகம் என்பது ஆப்பிரிக்க சிரங்கட்டி வனவிலங்கு சரணாலயம் போல் இருந்தது. வல்லமை உடையதும், ரகசியமாக தாக்காக்கூடியதும், நயவஞ்சகம் நிரம்பியதும் எப்போதும் வென்று கொண்டே இருந்தன. நந்து போன்ற வெள்ளந்திகள் மாடு போல் உழைத்துக் கொண்டு இருந்தனர்.

இந்தக் காலக்கட்டத்தை நந்து வேறொரு வகையில் பயனுள்ளதாக மாற்றினான். தனது சகோதரிகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தான். கிராமப்புறத்தில், ‘முன்னப்பின்ன செத்து இருந்தாத்தானே சுடுகாடு தெரியும்!’ என்பார்கள். அது போல் முன்னப் பின்ன கல்யாணம் செய்வித்திருந்தால் அல்லவோ இவனுக்கு முன் அனுபவம் இருக்கும். இவனோ வாயில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவன். பெற்றோராலும், சகோதரிகளாலும் சீராட்டப் பெற்றவன். இவன் அறிந்த கல்யாணம் இவனது இரண்டாவது பெரிய சகோதரியின் கல்யாணம். அப்போது தாய், தந்தையர் இருந்தனர். கவலையற்ற வயது. செட்டியார் விடுதியில்தான் நடந்தது. மூன்று நாள் கல்யாணம். வெளியூரிலிருந்து உறவுகளெல்லாம் வந்திருந்தனர். ஊரார் வீட்டுக் கல்யாணம் போல் தயங்கித் தயங்கி கேட்க வேண்டியதில்லை. நேரடியாக அடுப்பறைக்குள் போய் வேண்டிய பக்ஷணங்கள் தயாராகும் போதே சாம்பிள் பார்க்க முடிந்தது. கூம்பு, கூம்பாக வைத்து அதன் சுவை எப்படியிருக்கும் என்றறியாத பக்ஷணவகையின் சுவையெல்லாம் அறிய முடிந்த கல்யாணம். அதிலும் கொஞ்சம் டென்ஷன் இருந்தது. லஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு யாரோ வேண்டாத தகவல்கள் தந்துவிட கல்யாணச் செலவுகள் பற்றிய தகவல்களை தந்தையார் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம். அக்காலத்தில் நேர்மை இன்னும் கொஞ்சம் இருந்தது. அரசு லஞ்ச ஊழல் பற்றி கவலைப்பட்டது. ஆயினும் அவையெல்லாம் பெரியோர் விஷயங்கள். அவை நந்துவை பாதிக்கவில்லை. நந்து முதன் முறையாக மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் வேடிக்கை பார்த்து, மாப்பிள்ளை ஊர்வலக் காரின் பின்னால் ஓடும் சிறுவனாக இல்லாமல், அந்தக் காரில் மாப்பிள்ளைக்கு அருகில் பயணிக்கும் ஒருவனாக அமர்ந்திருந்து அனுபவித்த காலம்.

அவையெல்லாம் வெறும் கனவாய் பழம் கதையாய் போனது இப்போது! யார் கண்கள் பட்டதோ! சீரும், சிறப்புமாக இருந்த குடும்பம் குலைந்து போனது! மகளைக்கண்டுவரச் சென்ற தந்தை மீண்டும் உயிருடன் திரும்பவில்லை! ஆஸ்பத்திரியிலிருந்து அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து சேர்ந்த இரவை நந்துவால் எப்படி மறக்க முடியும்? இரவெல்லாம் தூங்காமல், அண்ணா முழித்துவிடுவார் என்று அவர் கண்களையே பார்த்துக் கொண்டிருந்த மணித்துளிகள் மறக்குமா? அடிக்கொருதரம் கக்கத்துள் கை வைத்து ‘இன்னும் சூடு இருக்கு! தூங்கறது போலத்தானே இருக்கார், முழித்துவிடுவார்!’ என்று சகோதரிகள் சொல்லச் சொல்லச் குடும்பமே காத்திருந்தது, அண்ணா முழித்துக் கொள்வார் என்று. அவரது பயணம் மீண்டும் விழித்துக் கொள்ளாத பயணமென்று அவர்கள் அறியவில்லை. அந்த வீட்டில் விழுந்த முதல் சாவு அது. யாருக்கும் அனுபவமே இல்லை. இதை எப்படி எதிர் கொள்வது என்று! வனவிலங்குகளிலிருந்து மனிதன் வரை, சாவு என்பதை எப்படி எதிர்கொள்வது என்று எவையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இறந்து போன குரங்குக்குட்டி தோல் அழிந்து எலும்பாகிப் போகும்வரை தூக்கி அலைந்த குரங்கின் கதையை பின்னால் நந்து அறியப்போகிறான். ஆனால் அன்று அறியவில்லை. அன்று இரவுதான் அழுதான் என்றில்லை. நாட்கணக்காக அழுதான். வருடக்கணக்காக அழுதான். கண்ணீர் வற்றும்வரை அழுதான். ஒரே ஆறுதல் இவன் மட்டும் அழவில்லை. இவன் குடும்பமே கூட அழுதது. ஒரு சில நாட்கள் ஊர் கூட அழுதது! அவ்வளவு நல்ல மனிதர். இப்படி திடீரென்று போய்விட்டாரே! என்று. ‘இன்னும் நிலைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் இந்தக் குடும்பத்திற்கு இப்படி ஆகிவிட்டதே!’ என்று.

அதன் பின் மரணம் என்பது நந்துவிற்குப் பழகிப்போனது. இவனது தாத்தாவை எல்லோரும் கரிச்சுக்கொட்டியே அனுப்பி வைத்தனர். பின் சகோர பக்ஷி போல், சகாவின் பிரிவு தாங்காமல் தாய், பின் சிறிய தந்தை என்று ஒவ்வொருவராக போய்ச்சேர, மங்களம் நிரம்பி வழிந்த வீடு, அமங்கலமாகிப்போனது! அந்த வீட்டில் வாழ யாருக்கும் பிடிக்கவில்லை. மெல்ல, மெல்ல பெரிய அக்காவுடன் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். கிராமத்து நந்துவின் நகர நந்துவாக மாறிய காலக்கட்டம். அதுவரை ஆங்கிலம் பேசாத நந்து, முதன்முறை ஆங்கிலம் பேசப்பழகிய காலம். நான்கு தெருவிற்கு மேல் அறிந்திராத நந்து பெரிய நகரத்திற்குள் உலா வந்து, பெரிய கனவுகள் காணத் தொடங்கிய காலம். ஒரு தந்தையின் பொறுப்பில் இரு சகோதரிகளுக்கு திருமணம் செய்வித்தான். அப்போதுதான் தெரிந்தது, ‘வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் நடத்திப்பார்!’ எனும் பழமொழியின் பொருள். கல்யாணம் என்பது எளிதான செயல் அல்ல. அது மனித ஊடகத்தின் புரியாத பல பரிமாணங்களுள் புகுந்து புறப்படும் சிக்கலான பயணம். நந்து முதன் முறையாக ஊர், ஊராக அலைந்தான். விசித்திர மனிதர்களைக் கண்டான். விசித்திரமான பேரங்களைப் பேசினான். கல்யாணம் என்பது சற்றேறக்குறைய ஒரு வியாபாரம் போல் நடைபெறும் தமிழக முறைமை கண்டு விசித்து நின்றான். இப்படிக் கூட மனிதர்கள் இருப்பார்களா? என்று முதன்முறையாக அறிந்து கொண்ட அனுபவங்கள். இரண்டு கல்யாணமும் முடிந்த போது நந்துவுள் வாழ்ந்து வந்த சிறுவன் காணாமல் போயிருந்தான். கண்ணாடி முன் பார்த்த போது தலையெல்லாம் நரைத்து அறுபது வயது கிழவன் போல் தோன்றினான்.

அவையெல்லாம் கிருஷ்ணமூர்த்தி அவனுடன் இல்லாத காலங்கள்.

2 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 10/03/2010 01:36:00 PM

கிடப்பில் போட்டுருந்ததை மீண்டும் தூசிதட்டி வெளியில் எடுத்தாச்சு போலிருக்கே!

சிலசமயம் இப்படித்தான் எழுத ஆரம்பிச்சது பாதியில் அப்படியே நின்னுபோய் அதைத் தொடர வேளை வருவதில்லை.

நந்துவில் பார்வையில் வாழ்க்கைப் பயணம் எப்படிப்போச்சுன்றதை கவனிச்சுக்கிட்டு வர்றேன்.

இனிய வாழ்த்து(க்)கள்.

நா.கண்ணன் 10/03/2010 02:01:00 PM

நன்றி. இது ஸ்ரீரங்கம் மோகனரங்கன் மின்தமிழில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத ஆரம்பித்தது. ஒருவகையில் வைகைக்கரை காற்றே! தொடரின் தொடர்ச்சி எனலாம். ஆயினும் இது ஜே.கே சுற்றி வரும் கதை.