பன்மொழி பேசும் தமிழரும் பண்பட வேண்டிய தருணங்களும்!

நான் அதிகமாக தமிழகத்தின் தொ(ல்)லைக்காட்சிகளைக் கண்ணுறுவதில்லை. ஆக்கம் என்பது சுத்தமும் இல்லாத கழுத்தறுப்பு நிகழ்ச்சிகளே அதிகம் அங்கு என்பதால்! ஆயினும் அவ்வப்போது நெஞ்சுக்கு நீதி போல் சில நிகழ்ச்சிகள் அமைவதுண்டு. அப்படி அமையும் ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சி நடத்தும் `சீர்மிகு பாடகர்கள்` (சூப்பர் சிங்கர்ஸ்) எனும் நிகழ்ச்சி. ஆங்கிலம் இனியும் அந்நியமொழி அல்ல, தமிழ் ஜீரணித்துவிட்ட மொழி என்பதை சூப்பர் சிங்கர்ஸ் எனும் தலைப்பே சொல்கிறது. அதைத் தனியாகத் தமிழ் பட்டுத்த வேண்டாம் எனும் மனநிலை. அதாவது சூப்பர் என்பது தமிழ்! சிங்கர்ஸ் என்பது தமிழ்! இதை நான் விமர்சிக்கவில்லை. தமிழ் வளர்ச்சியின் ஒரு கட்டமாகக் காண்கிறேன். மணிப்பிரவாளம் என்பது தமிழுக்குப் புதிதல்ல.

இந்த நிகழ்ச்சியின் மிக சுவாரசியமான விஷயம் என்னவெனில் உலகத்தமிழர்கள் முதன்முறையாகக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. தமிழனின் உலகப்பரவல் என்பது ஈழத்தமிழர் இடப்பெயர்விற்குப் பிறகுதான் தமிழகத்தமிழர்களின் கவனத்தைப் பெறுகிறது. இராமேஸ்வரத்திலிருந்து தடிக்கி விழுந்தால் இலங்கை. ஆனாலும் ஈழத்து இலக்கியம் தமிழகத்தில் கவனம் பெற்றது அவர்கள் அயலகம் போன பின்னரே! அதே போல்தான் இப்போது நடக்கிறது. தமிழர்களின் திறமை எங்கெங்கலாமோ மின்னுகிறது என்ற உணர்வு இப்போதுதான் இங்கு (தமிழகத்தில்) தலை தூக்கி இருக்கிறது. முதன்முறையாக தமிழகம் ஈழத்தமிழர் பற்றிப் பெருமைப்படுகிறது. அவர்களும் சம அளவில் பங்கேற்கும் நிகழ்ச்சியாக சீர்மிகு பாடகர்கள் நிகழ்ச்சி அமைகிறது. ஆயினும் இது உண்மையான சமநிலையில் அமையும் நிகழ்வல்ல. ஈழத்தமிழர்கள் வெளிநாடு போன பின்னரும் தமிழ் பேசி, தமிழைத் தக்க வைத்து, தமிழ்ப் பண்பாட்டைப் பேணி, கோயில் கட்டி வழிபாடு செய்து, எளிதாக தமிழை மறந்துவிடக்கூடிய சூழலில் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவித்து இன்னும் தமிழராய் நிற்பது எவ்வளவு கடினமான செயல். ஆனால் தமிழகத்தில் சௌகர்யமான சூழலில் தமிழ் கற்று, பேசி, தமிழ்ப் பாடல் பாடி வருகின்ற குழந்தைகளுடன் வெளிநாட்டு ஈழத்தமிழர் போட்டி போட வேண்டுமெனில் அது சமனில்லாத போட்டி. ஆயினும் தமிழக ஊடகங்களின் ஏகபோக ரசிகர்களாக இன்று உலா வருவது வெளிநாட்டு ஈழத்தமிழர்களே. எனவே அவர்களும் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்படுவதில் ஆச்சர்யமில்லை. அதற்கொரு தளம் அமைத்துக்கொடுக்கும் விஜய் தொலைக்காட்சியைப் பாராட்ட வேண்டும். இதில் இன்னொரு சமனற்ற நிலையையும் காணலாம். வண்ணாரப்பேட்டையிலிருந்து ஸ்டூடியோவிற்கு வருவதற்கும் உலகின் வடகோடியில் இருக்கும் நார்வேயிலிருந்து வருவதற்கும் ஆகும் செலவு வித்தியாசம் கணக்கிடமுடியாதது. ஆயினும் ஈழத்துத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து போட்டியில் கலந்து கொள்வதை எப்படிப் பாராட்டினாலும் தகும்!

இத்தனை ஈழத்தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் ஒரு சர்வதேசச் சூழலை உருவாக்க பிறமொழிப்பாடல்கள் என்றொரு பிரிவை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். தமிழ்நாட்டவர்க்கு பிறமொழி என்றால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி அவ்வளவுதான். ஆனால் தமிழின் reach இப்போது எங்கோ உள்ளது. அவனால் சரளமாக பிரென்ச், ஜெர்மன், டேனிஷ், நார்வீஜியன் பேசமுடிகிறது. அப்பாடலைப் பாடமுடிகிறது. ஆயினும் நீதிபதிகள் தமிழ்நாட்டுக்காரர்கள். அவர்களுக்கு இதே reach கிடையாது. எனவே கட்டாயம் இந்திய மொழிப்பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆயினும், டைட்டானிக் படப்பாடலை ஆங்கிலத்தில் பாட அனுமதித்துள்ளனர். ஏனெனில் நான் முன்பு எழுதியமாதிரி ஆங்கிலம் அந்நியமொழி அல்ல. அது இந்திய மொழி அல்லது ஜீரணிக்கப்பட்ட கலப்பு மொழி.ஆயினும், இப்பாடலைப்பாடும் இலங்கைப்பெண் பிரான்சில் பிறந்து பிரென்ச் மொழியை முதன்மொழியாகக் கொண்டு வளர்ந்த பெண் என்பதால், இப்பாடலை பிரென்ச் மொழியிலும் பாடுகிறாள். நம்மவர்க்கு ஆங்கிலத்திற்குப் பிறகு கொஞ்சம் பிரென்ச் தெரியுமே! அதனால் பாராட்ட முடிகிறது. சூட்டிகையாயுள்ள ஐரோப்பிய குழந்தைகளுக்கேயுரிய திறமையுடன் இப்பெண் பல ஐரோப்பிய மொழிகள் பேசுகிறாள். இப்பெண்ணிற்கு ஸ்பானிஷ் மொழியும் வருகிறது. இதைப் பெருமையாகச் சொல்லும் அதே வேளையில் க்ஷீணித்துப்போன தமிழக நிலைமையும் எண்ணாமால் இருக்கமுடியவில்லை. ஒரு காலத்தில் வைணவக்குடும்பங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சகஜமாகப் புழங்கும். ஆழ்வார்களின் பாடல்களும் ஆச்சார்ய உரைகளும் தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்கு போயிருக்கின்றன. தமிழ் மொழித்தூய்மை எனும் ஒரு போக்கு வந்த பின் மொழி வெறுப்பு என்பது தமிழனின் குணமாகிப் போய்விட்டது நம் வறட்சி.பன்மொழி பேசும் தமிழ்க் குமுகாயத்தின் பன்முகப் பரிமாணமாக இந்நிகழ்ச்சி நடப்பதற்கு இன்னொரு உதாரணம், ஹிந்தியில் பாடி நீதிபதிகளிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டு (பாவம் இந்தப் பெண்ணிற்கு ஹிந்தி தெரிய வாய்ப்பே இல்லை!) பின் நார்வீஜியன் மொழியில் பாடும் போது அங்குள்ள எல்லோரும் ஆடிப்போய் விடுகிறார்கள். ஏனெனில் ஆங்கிலக் காலனித்து மனநிலை கொண்ட தமிழனுக்கு நார்வீஜீயன் பழக்கமில்லாத மொழி! ஒருங்கமைப்பாளர் ஒரே போடாக நார்வீஜீயன், ஸ்பானிஷ், பிரென்ச் எல்லாமே ஒரே மாதிரி ஒலிப்பதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், இதில் ஆங்கிலத்தைச் சேர்த்துக்கொள்வதில்லை. ஏனெனில் ஆங்கிலம் நமக்கு அந்நியமில்லை!! (ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் எல்லாம் ஒரே மாதிரி ஒலிப்பதாக அக்குழந்தைகள் சொன்னால் நாம் ஒப்புக்கொள்வோமா? என்றும் யோசிக்க வேண்டும்!)

நாம் விரும்பியோ, விரும்பாமலோ தமிழன் வாயில் இன்று உலக மொழிகள் எல்லாம் வருகின்றன. அவைகளைச் சரளமாகப் பேசுகிறான். அவன் நார்வீஜீயன் பேசிவிடுவதால், அதே வாயால் தமிழ் பேசும் போது தமிழின் தூய்மை கெடுவதாக நாம் நம்புவதில்லை. மாறாக வெளிநாட்டுக்குழந்தைகள் தமிழ் பேசினால் கேட்டு மகிழ்கிறோம், ஊக்குவிக்கிறோம். ஆனால், முரண்நகை போல் தமிழ் எழுதும் போது ஐந்தே, ஐந்து கிரந்த எழுத்துச் சேரும் போது குய்யோ, முறையோ என்று கதறுகிறோம். தமிழ் மொழியின் புனிதம்கெட்டுவிட்டது என்கிறோம். இது எவ்வகையில் நியாயம் என்று புரியவே இல்லை. இவ்வளவிற்கும் கிரந்தம் எனும் எழுத்துக் குறியீட்டை உருவாக்கியவர்கள் தமிழர்கள். அதனாலேயே கிரந்தம் ‘திராவிட லிபி’ (dravidian script) என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழன் இன்று `airport hoppers' எனும் சொலவிடைக்கு ஏற்ப நாடு விட்டு இயல்பாகத் தாண்டி ஓடும் நிலையில் உள்ளான். ஆனால் இதன் முழுப்பரிமாணமும் அறிய முடியாமல் பலர் இன்னும் கிணற்றுத் தவளைகளாகவே வாழ்கிறார்கள். இந்த இடைவெளி என்று சமனுறும்?