சூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணி

சிறப்புப்பாடகர் 3வது பருவத்தின் அரையிறுதிப் போட்டியின் முடிவுகள் வெளி வந்து விட்டன. எதிர்பார்த்தது போல் சத்யப்பிரகாஷும், பூஜாவும் தேர்வாகியுள்ளனர். ஒரு பெண் இறுதிவரை தாக்குப்பிடித்து நிற்பது இசை போன்ற கலைகளை இந்தியாவில் தக்க வைத்துக் காப்பவள் பெண் என்பதை ஊர்ஜிதம் செய்வதாக உள்ளது. மேலும் பூஜா தவறுகள் அதிகம் செய்யாத நிதானமான பெண். எப்பவும் முதல் மார்க்கை விட்டுக் கீழே இறங்காத மாணவியின் கவனத்தைச் சினிமாப்பாடல் பாடுவதிலும் காட்டுவது சிறப்பு. இப்போட்டியில் மிக அதிக தூரம் பயணப்படுபவர் பூஜா. ஹைதராபாத் எங்கிருக்கிறது, சென்னை எங்கிருக்கிறது? எப்படித்தான் இவர்களால் இதையெல்லாம் சாதிக்க முடிகிறதோ?

இந்தப் போட்டி, எவ்வளவுதூரம் பெண், பிள்ளை களுக்கான போட்டியோ அந்த அளவிற்கு அவர்கள் பெற்றோருக்கான போட்டி என்பதும் தெரிகிறது. பெற்றோர் என்றாலும் அங்கு தந்தையின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. சத்யப்பிரகாஷின் தந்தை அரையிறுதிப்போட்டி முடிவு கண்டு நெகிழ்ந்து கண்ணீர் சிந்துவது ஒன்றுதான், தந்தையின் சீரிய பங்களிப்பாகப் பதிவாகிறது. அதில் கூட ஒரு அத்தையின் ஊக்கப்படுத்தல் தேவைப்படுகிறது. மேலும் சத்யாவின் வெற்றிக்குப்பின் அவன் நண்பர்கள் இருப்பதாக அவன் தந்தை கூறுகிறார். ஆக இது ஒன்றைத் தவிர மற்ற முதல் மூன்று போட்டியளர்களுக்குப் பின்னும், கௌசிக்கிற்குப் பின்னும் தாய்மார்களே நிற்கின்றனர். அதுவும் தந்தையின் ஆதரவு இல்லாத நிலையில் இப்பெண்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி பெறும் கனவுடன் உலவ விடுவது ஒரு காவியம் போல உள்ளது. (சக்திக்குப் பின் யாருமே இல்லாததும் வருத்தமளிக்கிறது)சத்யா, சாய் வெற்றி கழுத்திற்குகழுத்துப் போட்டியாக அமைந்துவிட்டது. உண்மையில் சாய்சரணை விட சத்யாவிற்கு இயற்கையான பாடும் திறனும், குரலும் அமைந்திருந்தாலும் இப்போட்டி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவர் த்ன்னையே இறக்கிக் கொண்டுவிட்டார். போட்டி உச்சத்தை நெருங்க நெருங்க சொதப்பல்கள் அதிகமாவதை அவதானிக்க முடிகிறது. எந்தப் போட்டியாளரும் தன் சுபாவத்தில், இயற்கையாகப் பாடவில்லை! ஏதோ போட்டிக்குப் பாடுகிற மனோநிலையே நிற்கிறது. ஒரு பாட்டில் சாய் ஒரு வரியை மறந்துவிடுகிறார். முன்பு போல இருந்தால் நீதிபதிகள் ‘சலம்பி’ இருப்பர். ஆனால் அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எரிகின்ற கொள்ளியில் எண்ணை வார்ப்பது போல் கோபியும், திவ்யாவும் அவ்வப்போது போட்டியாளர்களை பயமுறுத்துகின்றனர். அந்த 40 லட்ச முதல் பரிசிற்குப் பின் இத்தனை கஷ்டம் இருக்கிறது!

இசை என்பது இயல்பாக வெளிவரும் ஆத்மாவனுபவம். அதைப் போட்டுக் கசக்கிப் பிழிந்து இவர்கள் படுத்தும் பாடு பாவமாக உள்ளது. அதுதான் கர்நாடக இசைக்கும், சினிமாவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். கர்நாடக இசை தனக்காக, தன் ரசிகர்களுக்காகப் பாடுவது. சினிமா இசை காசுக்காக, புகழுக்காகப் பாடுவது! இப்போது கர்நாடக இசையும் இந்த இழுப்பில் அவதிப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. எல்லோருக்கும் ஒரு ஐரோப்பா டூர், அமெரிக்கா டூர் போய் சம்பாதிக்க ஆசை வந்துவிட்டது. முன்பு போல், ஒரு ஜி. என். பி யோ, மணக்கால் ரங்கராஜனோ சமகால இசை உலகில் இல்லாததற்குக் காரணம் இசைக்குள் மூழ்கி முத்தெடுக்க வேண்டுமென்ற ஆசை தற்போது இல்லை. ஏதோ நாலு கீர்த்தனைகளைத் தெரிந்துவைத்துக் கொண்டு அதையே எல்லா இடங்களிலும் பாடிக்கொண்டு அலைகின்றனர். ரசிகர்களுக்கும் ரசிப்புத்தன்மை குறைந்து விட்டது. கேட்டால்தானே கிடைக்கும்?

சாய்சரணை விட இப்போட்டியில் தோல்வியுற்றதில் அவன் அன்னைக்கே இழப்பு அதிகமென்று தெரிகிறது. சாய்க்கு குரல் வளமில்லையென்றாலும் கடுமையான உழைப்பாளி. இருப்பதிலேயே நீதிபதிகள் சொல்வதை ஊன்றிக்கவனித்து பாடம் கற்றுக்கொள்வதில் சாய்க்கு நிகர் சாய்தான். வெறும் பாடகர் எனும் நிலைதாண்டி, இசை நிகழ்த்துபவர் எனும் நிலைக்குக் கற்றுக்கொண்டு உயர்ந்திருக்கிறார். எல்லோராலும் இது முடியவில்லை. குத்துப் பாட்டில் சாய் - பூஜா போட்டி போடும் போது இது தெளிவாகத் தெரிந்தது. பூஜா படித்து ஒப்பிப்பது போல் குத்துப்பாட்டைப் பாடினார். சாய் அனுபவித்துப் பாடினார்.

ஒருவகையில் இது அன்னையர் அணி. பூஜாவின் வெற்றிக்குப் பின் தந்தையின் ஆசீர்வாதம் இருப்பதாக அவர் தாய் சொல்கிறார். சாய்யின் வெற்றிக்குப் பின் அவர் தாயின் கடின உழைப்பு இருக்கிறது. கௌசிக் முழுக்க, முழுக்க அம்மா பிள்ளை. பச்சைப்புடவை இராசி நேற்று கைகொடுத்து மாளவிகா காட்டட்டை (wild card என்பதை எப்படிச் சொல்வது :-)யில் தேர்வாகியுள்ளார்.

ஆக சூப்பர் சிங்கர் 3 என்பது இரண்டு நிலைகளில் கடும் போட்டியாக உள்ளது. முன்னணியில் போட்டியாளர்களும், பின்னணியில் அவர்கள் தாய்மார்களும் கலந்து கொள்கின்றனர். எனவே வெற்றி தோல்வியின் முடிவில் அன்னையர் வருந்துவது நமக்கு வருத்தமாக உள்ளது. சாய் சரண் அம்மா, இப்போட்டி அவனுக்கு இல்லாத `தந்தையை` அனந்த வைத்யநாதன், ஸ்ரீநிவாஸ் மூலம் அளித்தது என்று சொன்னது முள்ளாய் குத்தியது. எவ்வளவு வேதனையான சொற்கள் அவை. அன்னையர் எவ்வளவு தூரம் அவதிப்படுகின்றனர்!

3 பின்னூட்டங்கள்:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 8/26/2011 11:46:00 AM

ஸ்ரீநிவாஸ் மூலம் அளித்தது என்று சொன்னது முள்ளாய் குத்தியது. எவ்வளவு வேதனையான சொற்கள் அவை. அன்னையர் எவ்வளவு தூரம் அவதிப்படுகின்றனர்! மனிதம்.....

மீதமெல்லாம் என்னாச்சு.. கமெண்ட் போகவில்லையே?

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 8/28/2011 05:40:00 PM

நல்ல இசை என்பது மனதிற்கு இதமான இன்பத்தை அளிக்கக் கூடியதன்றோ......எத்துனை தான் பிசியாகவும், டென்சனாகவும் இருந்தாலும், நல்ல, மனதிற்குப் பிடித்த இசையை சில நிமிடங்கள் கேட்டாலே போதுமே கவலை, சலிப்பு எல்லாம் பறந்து போய் உற்சாகம் தானாக வந்துவிடாதோ......

அந்த வகையில் அருமையான ரசனை உங்களுக்கு! வெறும் பாட்டுப் போட்டி என்று பார்க்காமல், அதை அக்கு வேறு, ஆணி வேறாக அலசி ஆய்ந்திருப்பதால், தற்கால கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்தையும் காட்டும் காலக்கண்ணாடி ஆக்கிவிட்டார், இந்த விமர்சனத்தை!

//ஹைதராபாத் எங்கிருக்கிறது, சென்னை எங்கிருக்கிறது? எப்படித்தான் இவர்களால் இதையெல்லாம் சாதிக்க முடிகிறதோ? // எல்லாம் 40 லட்ச ரூபாய் வீடும் புகழும் செய்கிற வேலைதான்!

//தந்தை அரையிறுதிப்போட்டி முடிவு கண்டு நெகிழ்ந்து கண்ணீர் சிந்துவது ஒன்றுதான், தந்தையின் சீரிய பங்களிப்பாகப் பதிவாகிறது. // அதுவும் வெற்றிகுப் பிறகுதான்.
//போட்டி உச்சத்தை நெருங்க நெருங்க சொதப்பல்கள் அதிகமாவதை அவதானிக்க முடிகிறது. // ஆம். போட்டியாளர்கள் மிகுந்த மன அழுத்தம் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. நல்ல உளவியல் ஆலோசனையும் கொடுத்தால் பயனளிக்கலாம்.
//முன்பு போல இருந்தால் நீதிபதிகள் ‘சலம்பி’ இருப்பர். // சலம்பி புதிய வார்த்தையாக இருக்கிறது. அர்த்தம் சொல்லுங்கள்.
//கோபியும், திவ்யாவும் அவ்வப்போது போட்டியாளர்களை பயமுறுத்துகின்றனர். // ஆம் கொஞ்சம் ஓவர்தான் சில நேரங்களில்!
//ஏதோ நாலு கீர்த்தனைகளைத் தெரிந்துவைத்துக் கொண்டு அதையே எல்லா இடங்களிலும் பாடிக்கொண்டு அலைகின்றனர். ரசிகர்களுக்கும் ரசிப்புத்தன்மை குறைந்து விட்டது. கேட்டால்தானே கிடைக்கும்? // ஹ..ஹா...வெறும் கீர்த்தனைகள் மட்டும் பாடிக் கொண்டிருந்தால் இப்படி பணமும் , புகழும் கிடைக்குமா?
//மாளவிகா காட்டட்டை (wild card என்பதை எப்படிச் சொல்வது :-)யில் தேர்வாகியுள்ளார். // தரச் சுற்று என்று சொல்லலாமோ? நாளை இன்னும் சுவையான போட்டி......உயிரைக் கொடுத்துப் பாடியிருக்கிறார்களாம்?
//அனந்த வைத்யநாதன், ஸ்ரீநிவாஸ் மூலம் அளித்தது என்று சொன்னது முள்ளாய் குத்தியது. எவ்வளவு வேதனையான சொற்கள் அவை. அன்னையர் எவ்வளவு தூரம் அவதிப்படுகின்றனர்!// மனிதம் மிளிரும் நல்லதொரு விமர்சனம்...வாழ்த்துகள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 8/28/2011 05:41:00 PM

சார், ப்ரிவ்யூ போட்டுவிட்டு அனுப்பினால் மட்டுமே கமெண்ட் போகிறது.......நேரடியாக போட்டால் போகவில்லை.நன்றி