ஏர்டெல் சிறந்த பாடகர் மேல்தேர்வு 5

ஏர்டெல் சிறந்த பாடகருக்கான தேர்வு கடை ஆறிலிருந்து ஐந்திற்கு நழுவும் காட்சி! 6 பேரும் மாற்றி, மாற்றி ஒவ்வொருவருடன் மோதி இறுதியாக கௌசிக் அல்லது மாளவிக்கா என்ற கேள்வியுடன் இந்த வாரம் முடிந்துள்ளது. இந்த அறுவரில் நிச்சயம் மாளவிகா வெளியேறிவிடுவார் என்று எண்ணியிருந்தது பொய்த்துப் போனது. அதற்கான காரணங்கள் தெரிந்த போது பெரிய மனித நாடகவே கட்டவிழ்ந்தது. நட்பு, திறமை, பயிற்சி, தாய்ப்பாசம், நடுவர் தேர்வு என்ற பல அங்கங்கள் கொண்ட ஒரு நாடகம் மேடையிருக்கிறது. இந்த வாரம் முழுமையும் காணப் போக வேண்டிய சுட்டி இங்கே!

இறுதிச் சுற்றில் கௌசிக்கும் மாளவிக்காவும் மோதும் காட்சி:கலைவாணி மீது நெஞ்சுருக ஒரு பாட்டுப்பாடி பூஜாவைத் தோற்கடித்துவிட்டார் மாளவிக்கா! இது எப்படி நடந்தது என்பதைத்தொடர்ந்து பார்த்து வந்தால்தான் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்! பூஜாவும், மாளவிகாவும் இணை பிரியாத் தோழிகள். பூஜாவின் நிலையோ முதல் நிலை! எனவே இச்சுற்றில் தோற்றாலும் பாதகமில்லை. இதை நான் எதிர்பார்த்தேன். நடுவர் ஸ்ரீநிவாஸ்ஸும் இதையே சொன்னார். பூஜாவின் நிலையிலிருந்து பார்த்தால் இதுவொரு அழகான புரிதல் சார்ந்த விட்டுக்கொடுப்பு.

இதற்குத்தோதாக கௌசிக் தனது கடைசி இரண்டு பாடல் தேர்வில் கோட்டை விட்டுவிட்டார். முதல்முறையாக நடுவர் ஸ்ரீநிவாஸ் சுட்டிக்காட்டினார். மிகவும் இராகம் சார்ந்த ஒரு பாடலை எடுத்துக் கொண்டு புரியாமல் தவிப்பதாக. கௌசிக் விழித்துக் கொள்ளாமல் அடுத்த பாடலையும் இது போன்ற இராகம் சார்ந்த பாடலாக எடுத்துக் கொண்டுவிட்டார். நடுவர்கள் சொல்லாவிடினும் பாடல் முழுவதும் உச்சரிப்புப் பிழைகள். அது முழுக்க, முழுக்க சமிஸ்கிருத மந்திரம் சார்ந்த பாடல் (ஓம்! சிவவோகம், ருத்ர நாமம் பஜே). இப்பாடலை இதே போட்டியில் முன்பு சாய் சரண், ஹரிஹரசுதன், ஸ்ரீநிவாஸ் மூவரும் தங்கள் கணீனென்ற குரலிலும் சுத்தமான உச்சரிப்பிலும் நடுவர்களுக்குக் காட்டி அசத்தியுள்ளனர். கௌசிக் அற்புதமான பாடகர். மாளவிகா சமமே இல்லை. ஆயினும் தோல்வியைத் தழுவிவிட்டார். எத்தனையோ எளிதான பழைய காலத்துப் பாடல்கள் உள்ளன. இவரது பாடல் தேர்வில் இவரது அன்னை பெரும் பங்கு வகிக்கிறார் என்பது உண்மை என்றாலும் ஒருமுறை அல்ல, இருமுறை அவரும் பிழை செய்து இருக்கிறார் என்றே தோன்றுகிறது!

கடைசிக் காட்சி. இதுவும் சுவாரசியமானது!இது பாடகர்களின் போட்டி மட்டுமல்ல. அம்மாக்களின் கனவுகளின் போட்டியும் கூட!எல்லோருமே, ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ தாய்மார்கள். ஈழத்துத் தாய்மார்கள் வந்த போது நடுவர்களுடன் சண்டையே போட்டிருக்கின்றனர். என் பெண் நோர்வே வந்த போது எஸ்.பி.பியோடேயே பாடியிருக்கிறாள் அவளை எப்படி வெளியேற்றப் போயிற்று என்று. இன்னொரு அம்மா, ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் தீர்ப்பளியுங்கள்@ என் கருத்தில் சிறந்த பாடகி என் பெண் மட்டுமே! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். வேடிக்கையாக இவ்விழியத்தில் தன் மகனின் தேர்வில் இரண்டறக்கலந்து அனுபவிக்கும் ஒரு தாய்க்கும், இராசியான கலர் என்பதால் பச்சைப் புடவையோடும், மனது நிறை பிரார்த்தனைகளோடும் ஒவ்வொருமுறையும் வரும் ஒரு எளிய தாய்க்கும் போட்டி. இறுதியில் எளிய தாயின் பிரார்த்தனை வென்று விட்டது. வாணி உன்னைச் சரண் அடைந்தேன்! என்று கலைவாணி காலை கடைசியாகப் பிடித்த மாளவிக்கா வென்று விட்டார்.

3 பின்னூட்டங்கள்:

ராம்ஜி_யாஹூ 8/06/2011 10:44:00 PM

malavika is great

Anonymous 8/07/2011 02:35:00 AM

Please read these posts

http://thinathee.blogspot.com/2011/07/blog-post_19.html

http://thinathee.blogspot.com/2011/08/blog-post_874.html

http://thinathee.blogspot.com/2011/08/blog-post_06.html

நா.கண்ணன் 8/07/2011 07:25:00 AM

மாளவிகா நல்ல பாடகி என்பதில் சந்தேகமில்லை. சூட்டிகையான பெண். முழுக்க, முழுக்க சாஸ்திரீய சங்கீதம் என்றிருந்த சூழலிருந்து மாறி குத்து, ராப், ஃபோல்க் என்று மாறுவது எளிதல்ல. மிகக்கடுமையாக உழைக்கிறாள். அவள் அன்னை சொல்வது போல் அவளுக்கு வேறு துணை இல்லை. மற்ற போட்டியாளர்களும், பயிற்சியளிக்கும் அனந்த்வைத்யநாதனும்தான் அவளுக்கு காப்பு. அவளது பலவீனம் அவளது குரல். இக்குரலை வைத்துக் கொண்டு கர்நாடக சங்கீதம் பாடிவிடலாம். ஆனால் நிரந்தர சினிமாப்பாடகியாக வரமுடியாது. சினிமாப்பாடல் பாடுவதற்குரிய குரலமைந்த அற்புதமான பாடகர்களெல்லாம் பயிற்சியின்றி வெளியேறிவிட்டனர். மாளவிகாக்குக்கூட இறுதியாக இப்போட்டி கேடுதான். இனிமேல் அவள் தியாகராஜர் கிருதியைத் தியானிக்கும் போது குத்தும், ரேப்பும் வந்து நிற்கும். இதுவொரு கேளிக்கை தரும் போட்டி அவ்வளவுதான். அவள் அன்னை சொல்வது போல் மாளவிக்கா அடுத்த ரவுண்டில் வெளியேறிவிட வாய்ப்புகள் அதிகம்.அதுவே ரசிகர்களுக்கும், அவளுக்கும் நல்லது.