ஏர்டெல் சிறந்த பாடகர்கள் நால்வர்

ஏர்டெல் சிறந்த பாடர்கள் 3ம் பருவத்தின் இறுதி வாரங்கள்! ஆயிரக்கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசி 20 ஆகி, கடைசிப் பத்து ஆகி, அதுவும் குறைந்து கடைசி 5 ஆகி அதுவும் சுருங்கும் காலமிது. இவ்வாரச்சுற்றில் மாளவிகா வெளியேறுகிறார். வருத்தமாகத்தான் இருக்கிறது! மாளவிகா இறுதி 5 வரை வந்ததே பெரிய காரியம். மிகக்கடின உழைப்பாளி. முற்றும் முழுக்க கர்நாடக இசை என்று இருந்த பெண் இப்போது குத்து, பேட்டை ராப் என்றாகிவிட்டது. மடிசாரும் அதுவுமாக இருந்த தமிழ்ப்பெண் இப்போது ஸ்கர்ட், Prairie, Western Yoke Dress என்று மாறிவிட்டது. இசை மாறுவது போல்தானே மனிதர்களும். தொலைக்காட்சி தரும் கவன ஈர்ப்பு இப்போது உலகமெங்கும் மாளவிகா என்றால் யார் என்று தெரிகிறது! திரை இசை வாய்ப்பு வர வாய்ப்புள்ளது. கர்நாடக இசைக் கச்சேரிகளில் கூட இரண்டு சினிமாப்பாட்டு பாடியிருந்தால்தான் மதிப்பு என்றாகிவிட்டது. கடைசிச் சுற்றில் பாடிய ’ஆடாத மனமும் உண்டோ!’ அருமையான பாடல். அக்ஷரசுத்தமாக, தாள லயத்துடன் பாடுகிறார்.மாளவிகா ஏன் இறுதிவரை வர முடியவில்லை?

1. அவர் குரல் சினிமாக்குரல் இல்லை. மெல்லிசை பாடும் குரல் இல்லை. கொஞ்சம் கோவை சரளா போன்ற குரல். அது, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஓர் கனவு கண்டேன் தோழி!’ போன்ற பாடலுக்கு ஒத்துவராது. ‘நாக்க, முக்கா’ வகை குத்துப் பாடல்களுக்கு சரிப்பட்டு வரும். ஆனால் அதைப்பாடுவதற்கு இத்தனை அருமையான கர்நாடக இசைப்பயிற்சி தேவை இல்லை.

2. இவரது தோழியும், சக போட்டியாளருமான பூஜாவுடன் ஒப்பிடும் போது இவரது குரலில் அழகில்லை. அவரைப் போல் இவர் தொடர்ந்து ஒரே தரமாகப் பாட முடியவில்லை.

3. இசை என்பதே மனிதனைப் போட்டா போட்டிகளிருந்து தளர்த்தி மெய் ஞானத்துள் செலுத்த வேண்டிய கருவி. அதையே போட்டா போட்டிக்குப் பயன் படுத்தும் போது சிலரால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிகிறது. திரும்பத்திரும்பச் சொன்னாலும், 40 லட்சம் வீடுதான் இவர்களை ஓட்டிக்கொண்டு போகிறது என்று சொல்ல முடியாது. போட்டியில் கிடைக்கும் புதிய உறவுகள், தோழமை, அவ்வப்போது கிடைக்கும் பரிசுகள், பாராட்டுகள், பெரிய இடத்து அறிமுகங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக தொலைக்காட்சி தரும் ‘உலகக் கவனம்’ இவையே போட்டியாளர்களை தொடர்ந்து ஓடவைத்துக் கொண்டிருக்கும் காரணிகள்.

முதல் 5 வரையாவது வந்துவிட்டால் போதும் என்பதே அவர் அன்னையின் கனவாக இருந்திருக்கிறது. அதை மாளவிகா நிறைவேற்றி விட்டார். நீதிபதிகளுக்குள்ளும் ஒரு குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மையுண்டு. அது அவர்கள் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையெனும் ஆதங்கம். இது உன்னி, நித்யஸ்ரீக்கு இருக்க நியாயமில்லை. ஆனால் ஸ்ரீநிவாசுக்கும், சுஜாதாவிற்கும் இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப கட்டங்களில் மாளவிகா தேர்வாக அது நிச்சயம் உதவி இருக்கிறது. அதே நேரத்தில், சினிமாப்பாடகர்களுக்கே உரிய ஓர் உயர்வு நவிற்சிப் போக்கு இறுதியில் கர்நாடக சங்கீதத்தைக் கீழே வைத்துவிடும். அதுதான் நடக்கிறது. நல்ல மாட்டுப்பெண் மாமியாரிடம் மாட்டிக்கொள்வது போன்ற நிலை. எப்போது பார்த்தாலும் ஏதாவது குற்றம் காணும் மாமியார் போலவே நீதிபதிகள் தொடர்ந்து அவளது கர்நாடக இசைப்பின்னணியை வம்பிற்கு இழுத்துக்கொண்டே இருந்தது பதிவாகி உள்ளது.

200 சொச்சம் மார்க்கில் தீர்வுகள் நடந்திருக்கின்றன. அது என்னவென்று புரியவில்லை. நாள் 1 என்பதிலிருந்து கணக்கில்லை. அவ்வளவுதூரம் கவனமாக உருவான நிகழ்ச்சியல்ல இது. அவ்வப்போது நீதிபதிகள் மாறிய வண்ணம் இருந்தனர். யாரும் கணக்கு வைத்ததாகத் தெரியவில்லை. சென்ற வருடத்தில் 45 முழு வாரங்கள். வாரத்திற்கு 10 என்றாலும் 450 மார்க்குகள் கணக்கில் வர வேண்டும் (ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிக்கொண்டு இருக்கிறது). முதல் 20 லிருந்து கணக்கு என்றால் இன்னும் குறையும். இவர்கள் கொடுக்கும் கணக்கு ரெண்டு கெட்டானாக உள்ளது! ஏதோவொரு கணக்கு. தமிழகத்தில் எதற்கும்கணக்குக் கேட்டால் வம்பு :-)

ஆனால் ஒரு போக்கு தெரிகிறது. 5ல் முதலில் வெளியேறுபவர் மாளவிகா. அடுத்து சந்தோஷ். அடுத்து சத்யா. இறுதியாக சாய் சரணும், பூஜாவும் மோதுவர். அப்படி அமைந்தால் பூஜா வெல்வதற்கு வாய்ப்பு அதிகம். அதற்குப் பதில் பூஜாவும் சத்யப் பிரகாஷுமென்றால் சத்யா வெல்வதற்கு வாய்ப்புகள் அதிக. கர்நாடக சங்கீதக் காழ்ப்பு என்பது பின்னால் வேலை செய்தால் பூஜாவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஏனெனில் சத்யாவும், சாய் சரணும் கர்நாடக இசை பயில்பவர்கள். சரி பொறுத்திருந்து பார்ப்போம்.

கூட்டம் அதிகமிருந்த போது ஜாலியாகக் கூத்தடிக்க முடிந்தது. நாலைந்து பேரை வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்தும் போது கேளிக்கை காட்ட வலிந்து பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அது விஜய் தொலைக்காட்சியின் ஆக்கசக்திக்கு சவால். எப்படியோ இதுவரை சமாளித்து இருக்கிறார்கள். இனிமேலும் சமாளிப்பார்கள். ஆங்கிலமும், தமிழும் கலந்தடிக்கும் திவ்யா கூட இப்போதெல்லாம் முதலில் இறை வணக்கம் சொல்லும் பௌயத்துடன் நாலு நல்ல தமிழ் பேசுவது காதிற்கு குளிர்ச்சியாக உள்ளது. தமிழைத் தெய்வம் போல் இனிக் கோயிலில்தான் காண வேண்டும் போல! நல்லவேளையாக கோயில் குருக்கள் இன்னும் ஆங்கிலத்தில் பூஜை செய்யவில்லை. அதுவும் ஒருநாள் வரலாம்!!

3 பின்னூட்டங்கள்:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 8/14/2011 09:51:00 AM

அன்பின் திரு கண்ணன்,

ஆகா, என்ன ஆழ்ந்த பார்வை! தேர்ந்த விமர்சனம். ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து கவனித்து அழகாக ஒவ்வொரு பாடகரின் தனித்தன்மையும் கூட கவனித்து விமர்சித்திருக்கும் பாங்கு பாராட்டிற்குரியது. இசையின் ஞானமும் தெளிவாகிறது....

மாளவிகா பற்றிய தங்கள் கணிப்பு எனக்கும் ஏற்புடையதே. ஆனால் பூஜாவின் தரமும் அதே அளவுதான் என்று தோன்றுகிறது. காரணம் இது கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்த போட்டி இல்லை அல்லவா. குரல் வளம் மற்றும் பாடும் திறன் இவைகளே முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.மற்றபடி தாங்கள் கூறியது போல இறுதி முடிவு, நீதிபதிகள் மதிப்பெண் கொடுக்கும் முறை இதற்கெல்லாம் ஒரு வரைமுறை இல்லாதது பெருங் குறைதான்!

/இவர்கள் கொடுக்கும் கணக்கு ரெண்டு கெட்டானாக உள்ளது! ஏதோவொரு கணக்கு. தமிழகத்தில் எதற்கும்கணக்குக் கேட்டால் வம்பு :) //

மிகச் சரிதான்........

சகாதேவன் 8/14/2011 11:36:00 AM

அன்று டிவி ரிமோட் என் கைக்கு கிடைத்ததும் விஜய் டிவிக்கு மாறினேன். மாளவிகா பாடிய அந்த அழகான பாடலின் கடைசி சரணம்தான் கேட்க முடிந்தது. மிஸ் பண்ணிட்டோமே என்று நினைத்தேன். உங்கள் பதிவில் முழுதும் கேட்டேன். நன்றி. ரசித்து பாடினார்.
தேர்ந்தெடுத்த பாட்டை அவர் எப்படி பாடுகிறார் என்றுதான் பார்க்க வேண்டும்.
அதென்ன கோவை சரளா குரல்? வடிவேல் எத்தனை அழகாக பாடுகிறார். பாராட்டும் பரிசும் பெர்பார்மன்ஸுக்குத் தான். என்னைக்கேட்டால் பரிசு மாளவிகாவுக்கு தான்.

சகாதேவன்

நா.கண்ணன் 8/14/2011 12:12:00 PM

மாளவிகாவின் வீக் பாயிண்ட் அவர் குரல். அதில் இனிமை இல்லை. அவர் திறமையாவர், உழைப்பாளி, சவாலை எதிர்கொள்பவர்..எல்லாம் சரிதான். ஆனால், தேன் போன்ற குரல் அல்ல அவருடையது. நீங்கள் சொல்வது சரிதான், ஒரு பாடலை நெட்டுருப்போட்டு திருப்பிப்பாடினால் போதும்தான். அதற்குத்தானே இந்தப் போட்டியே! குழந்தைகள் திருக்குறள் 1330 சொல்வது போல் :-) அதில் கூட வாய்ஸ் டைனமிக்ஸ் ராணி என்ற பட்டம் பூஜாவிற்கு போயிருக்கிறது. இப்பயிற்சி மாளவிகாவிற்கு பின்னால் உதவும். அவர் குரல் நுணுக்கங்களை வைத்யநாதனிடம் மேலும் அறிந்து கொள்ளப்போவதாகச் சொல்லியிருக்கிறாரே!