சூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணி மீண்டும்!

சூப்பர் சிங்கர் எனும் தமிழகத்தின் சிறந்த பாடகர் தேர்வின் மூன்றாம் பருவம் அரையிறுதியை எட்டிய தருணத்தில் போட்டியை மீண்டும் சுவாரசியமாக்க முதல் பல சுற்றில் தோற்றுப்போன ஆகச்சிறந்த பாடகர்களை மீண்டும் உலவவிட்டு இருக்கிறார்கள். இது விஜய் டிவியின் நேயர்களுக்கு கூடுதல் கேளிக்கையை அளிக்க உருவான திட்டம் என்று சொன்னாலும் இதன் பின்னாலொரு அழகான குடும்ப உணர்வு இருப்பதை அவதானிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த உணர்வு கலந்து கொண்டுள்ள பங்களிப்பாளர்களிடமிருந்து உருவானதா? இல்லை ஒவ்வொரு போட்டியாளரும் போகும் போது அழும் திவ்யாவின் பாசத்த்தால் உருவானதா? இல்லை, பங்களிப்போருக்காக உரிமையோடு பேசும் ஷைலஜா போன்ற அன்பான நீதிபதிகளிடமிருந்து உருவானதா? இல்லை விஜய் தொலைக்காட்சி இத்திட்டத்தை உருவாக்கிய போதே இதை எதிர்பார்த்தா? என்றால், என்னளவில் போட்டியாளர்களுக்குள் இருக்கும் தோழமை உணர்வை வேறு எந்த தேசத்திலும் இம்மாதிரியான போட்டிகளில் காண முடியாது என்றே சொல்வேன். தமிழ் மக்களிடம் இன்றும், இந்த 21ம் நூற்றாண்டிலும் நட்பு, அன்பு, அடக்கம், குரு மரியாதை என்பவை அப்படியே அழியாமல் இருக்கின்றன என்பதை சிறந்த பாடகர் 3 இன்று நமக்குக் காட்டுகிறது! பாருங்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவு தேடும் தாய்மார்களும் நண்பர்களும் மிகவும் நடு நிலையோடு, ‘உங்களுக்குப் பிடித்திருந்தால், என் பிள்ளைக்கு வாக்களியுங்க:” என்று சொல்வது இந்தியாவில் மட்டுமே நிகழக்கூடியது.

இதைவிட வேடிக்கை! இறுதிப்போட்டிக்கு தேர்வாகி பீடத்தில் இருக்கும் பூஜா கீழே ஓடி வந்து தன்யஸ்ரீயின் பாடலை அணைத்து ரசிப்பது. பூஜாவும், சத்யாவும் சேர்ந்து சந்தோஷுக்கு ஆதரவான அட்டையைத்தாங்கி விளம்பரம் கொடுப்பது? இது போட்டி என்பதை விட எல்லோரும் சேர்ந்து குடும்பமாக அனுபவிக்கும் ஓர் இசை நிகழ்ச்சி என்றே நிறுவுகிறது. இந்த அன்பைக் காணும் போது நம்மையறியாமல் நாமும் பங்கு கொள்கிறோம்.

ஆயிரக்கணக்கான போட்டியாளர்களிலிருந்து இன்று விரல் விட்டு எண்ணக்கூடிய போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். நீதிபதிகள் மீது என்னதான் ஓரவஞ்சனைக் குற்றச்சாட்டுகள் வைத்தாலும், அவர்களின் தேர்வு மிகச்சிறந்ததாகவே வந்துள்ளதைக்காணமுடிகிறது. ஒருமுறை ஸ்ரீநிவாஸ் சொன்னது போல் இம்மாதிரி டிரில் வேறு எந்தப்போட்டியிலும் இருக்குமா? என்பது சந்தேகமே. தங்கத்தின் அழகு புடம் போட்ட பின்தான் தெரியும். அதை உறுதி செய்கிறது இந்த Wild Card சுற்று. Wild Card என்பதை நாம் ‘ஊக்கச்சீட்டு’ என்றழைப்போம். போட்டியாளர்களுக்கு ஊக்கம் தருவதற்காக விதிகளை கொஞ்சம் தளர்த்தி உருவான குறுக்குச் சாலை இது. மேலும் நேயர்களான நமக்கு ஒருவரைத் தேர்வு செய்யும் வாய்ப்பை அளிக்கும் ‘ஊக்கப்பரிசு’ என்றும் சொல்லலாம்.

இந்த ஊக்கச்சீட்டின் மூலம் ஊக்கமிழந்து வாடிப்போன அன்னைகளுக்கு மீண்டுமொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
ஜனரஞ்சகமான பாடல் தேர்வுகளுடன் தன் பிள்ளையான கௌசிக்கை தயார் செய்யும் அன்னை!

பச்சைப்புடவை ராசியுடன் மாளவிகாவை உற்சாகப்படுத்தும் அன்னை!

தந்தையின் அன்பிற்கு ஏங்கும் சாய் சரணைப் பெற்று, போற்றும் அன்னை!

மிக அமைதியாக ஆனால் உறுதியாக தன்யஸ்ரீக்குப் பின்னால் நிற்கும் கூச்சமான அன்னை!

தமிழராகப் பிறந்துவிட்டு, தமிழ் மரபைப் பேணும் ஆனால் ஆங்கிலத்திலேயே உரையாடும் பிரவீனின் சிங்கப்பூர் அம்மா!

இவர்களுடன் இப்போது ஸ்ரீநிவாஸின் தாயும், மனைவியும் சேர்ந்து விட்டனர்!

ஒரு பெரிய அன்னையர் அணி திரண்டு இருக்கிறது.

இந்த ஊக்கச்சீட்டு சுற்றில் உண்மையிலேயே எல்லோரும் உயிரைக் கொடுத்துப் பாடுகிறார்கள்.

சாய்சரண், கௌசிக், மாளவிகா, தன்யா, பிரவீன்? இவர்களுள் ஒன்று தேறும். யார் என்பதுதான் கேள்வி!

பொதுமக்கள் எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்று கோபி சொல்கிறார். ஆனால் இணையத்தின் மூலம் மூன்று ஓட்டுகளுக்கு மேல் போட முடியவில்லை. உள்ளூரில் செல்போன் வியாபாரத்தைக் கூட்ட அப்படிச் சொல்கிறார்களோ என்னவோ? அதுவொரு அசட்டுத்தனமான முறை. யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் போடலாம் என்றால் எப்படி? அவர்களுக்கும் வேறு வழியில்லை. கள்ள ஓட்டையும் கணக்கில் எடுக்கும் உத்தி இது. ஊழலை கௌரவமாக வாழ்வியலாக மாற்றிவிட்ட தமிழனால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?

சிறந்த பாடகர் மூன்று தேர்வில் இணைய நண்பர்கள் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டும். இதுவரை பார்க்கவில்லை என்றாலும் இந்த ஒரு வாரம் மட்டுமாவது பார்த்து ஓட்டுப்போடுங்கள். இவ்வார நிகழ்ச்சியைக் காண இங்கே செல்க!

நிகழ்ச்சி பார்த்த பிறகு உங்கள் தெரிவைச் செய்ய இங்கே செல்க!. இங்கு நீங்கள் முன் பதிவு செய்த பின்னரே ஓட்டளிக்க முடியும்!

ஒருமுறை ஸ்ரீநிவாஸ் சொன்னார். தேர்வைக் கடினமாக்குங்கள்! என்று. அவர்கள் இப்போது இல்லை. ஆனால் இந்தக் கடினமான தேர்வை நம்மிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்!

1 பின்னூட்டங்கள்:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 9/02/2011 07:02:00 PM

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விமர்சனம் மூலம், தங்களுடைய தேசாபிமானம் நன்கு விளங்குகிறது. நம் தாய்த்திருநாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்பவர்க்கே நம் நாட்டின் பெருமை முழுமையாகத் தெரியும் போல இருக்கிறது. சில விசயங்கள் நம்மோடு இருக்கும் போது அதன் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அதனை விட்டு விலகியிருக்கும் போதுதான் அதன் மதிப்பு நன்கு விளங்கும்.

//இந்த அன்பைக் காணும் போது நம்மையறியாமல் நாமும் பங்கு கொள்கிறோம்.// உண்மைதான். இது நல்ல சூழலை உருவாக்குகிறது. போட்டி, பொறாமை அற்ற ஆரோக்கியமான நட்பு பாராட்டுக்குரியதுதான்.

ம்ம்...ஊக்கச் சீட்டு...இது ந்ல்லாருக்கே!

அன்னையர் அணி பற்றிய தங்களின் கனிப்பு சுவாரசியம்.

சாய்சரண், கௌசிக், மாளவிகா, தன்யா, பிரவீன் - இந்த பட்டியலில் ஸ்ரீநிவாசும் சேரலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

//அவர்களுக்கும் வேறு வழியில்லை. கள்ள ஓட்டையும் கணக்கில் எடுக்கும் உத்தி இது. ஊழலை கௌரவமாக வாழ்வியலாக மாற்றிவிட்ட தமிழனால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?// - சரிதான். பாவம் இந்த ஊக்கச் சீட்டு வெற்றி அதிர்ஷ்டத்தின் கைகளில்தானோ?

ஓட்டு போட வேண்டிய வேண்டுதலும், அதற்கான சுட்டியும் நல்ல மனிதாபிமானம். வாழ்த்துகள்.