பிரம்மிக்க வைக்கும் பாடல்கள்! (சூப்பர் சிங்கர் 3)

சூப்பர் சிங்கர் பற்றிப்பேசியது போதும் என நினைக்கும் தருணத்தில் ஒரு அற்புதமான தயாரிப்பு நேற்று (செப்டம்பர் 2 வெள்ளி).

இப்போட்டியாளர்களைக் கண்டால் வேடிக்கையாக உள்ளது. இத்தனை காலமும் கிண்டலும், வேடிக்கையும் என்று கழித்துவிட்டு இப்போது உசிரைக் கொடுத்துப் பாடி நம்ம உசிரை ஏன் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை! :-)

வெள்ளியன்று நடந்திருக்கும் அற்புதம் சூப்பர் சிங்கர் மேடையில் இன்னொருமுறை நடக்குமா? என்று தெரியவில்லை. உண்மையிலேயே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தன் முழுத்திறமையையும் காட்டியுள்ளனர் என்று தோன்றுகிறது.

உதாரணமாக சாய்சரண் தன் குரலையே பணயம் வைத்துப்பாடியிருக்கும் பாடல் இதோ!


சாய்சரண் நிறையப் பாராடும் புகழும் பெற்றுவிட்டார். அவர் இனிமேல் சூப்பர் சிங்கர் என்ற பட்டம் இவர்கள் கொடுத்துத்தான் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. அவர் சூப்பர் சிங்கர்தான். இந்த ஒரு நிகழ்வே போதும் சான்று சொல்ல!

மூன்று கட்டை ஸ்ருதியில் மேல் நிஷாதம் பாடுவது வேடிக்கை விஷயமில்லை என்று திரு.மகாராஜன், நித்யஸ்ரீ போன்ற பாடகர்களையே நிற்க வைத்து கைத்தட்டுப்பெற்ற ஸ்ரீநிவாசின் நிகழ்வு அற்புதத்திலும், அற்புதம்!


அவர் இப்போட்டிக்காக எப்படி தன் திருமண நிகழ்வில் கூடக் கலந்து கொள்ளவில்லை என அவரது இளம் மனைவி சொல்லும் போது அப்படியே பிரம்மித்துப் போகிறோம். இவர்களை இசை ஆட்கொண்டு நிற்கிறது!

ஆனால் வெறும் ஒரு அல்ப சினிமாப்பாடகன் என்ற நோக்கிற்காகவா இத்தவம்? கேள்வி எழுகிறது. அவர்களை ஆட்கொண்டிருக்கும் இசைத்தேவியே இவர்களை  நல்வழிப்படுத்தட்டும்!

வெறும் அக்ஷரங்களை வைத்தே ஒரு பாடல்! நான் முன்பு கேட்டதே இல்லை. என்னென்ன வித்தையெல்லாம் செய்கிறார்கள் இசையில்!


கோபி கடைசியில் கேட்பது போல் நானும் எங்காவது இரண்டு சேர்ந்த வரிகள், ‘ராகம், தானம், பல்லவி’ யில் வருவது போல் வருமென்று எதிர்பார்த்தேன். ஊகூம்! வெறும் அக்ஷரங்கள் அவ்வளவுதான்.

ராகங்கள் தன்னை எவ்வவ்வகைகளில் காட்டிக்கொள்கிறது என்பது பிரம்மிப்பூட்டுகிறது! நாம் ராக ஆலாபனை செய்து ராகப்பரிட்சயம் செய்து கொள்கிறோம். துருபத் எனும் ஹிந்துஸ்தாணி இசையில் ராகங்களுக்கு இடைப்பட்ட வெளியில் சஞ்சாரிக்கிறார்கள். பாரதி, ‘காற்றுவெளியிடை’ என்று சொல்வது போல். அது ராகவெளியிடை!!

இசை என்பது ஓர் அற்புத உலகம்.
1 பின்னூட்டங்கள்:

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 9/03/2011 03:51:00 PM

//ஆனால் வெறும் ஒரு அல்ப சினிமாப்பாடகன் என்ற நோக்கிற்காகவா இத்தவம்? கேள்வி எழுகிறது. அவர்களை ஆட்கொண்டிருக்கும் இசைத்தேவியே இவர்களை நல்வழிப்படுத்தட்டும்!//

நியாயமான கேள்வி.......இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்க்காவிட்டாலும், இறுதியில் வரக்கூடிய சில பகுதிகளையாவது பார்ப்பவர்களுக்குக் கூடத் தோன்றுகிற ஒரு விசயமாகவே இருக்கிறது.......

காரணம் தங்கள் குரலுக்கேற்ற பாடல் தேர்வும், நல்ல பயிற்சியும் தான்.