உனக்கும் பெப்பே! உங்கப்பனுக்கும் பெப்பே!

தமிழகத்தின் சிறந்த பாடகர் மூன்றாம் பருவம் சில உன்னதங்களைக்காட்டி இருக்கிறது.

அது என்னவெனில், யார் சிறந்த பாடகர் என்பதல்ல. யார் சிறந்த மனிதர் என்பதே! இந்த ஒரு அம்சத்தில் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உலகில் எங்குமே காணாத அதிசயத்தை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. ஆனால் இந்தப் பெருமை அவர்களை முழுக்கச் சாராது. அதுவொரு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான். அங்கு வந்து சேர்ந்த போட்டியாளர்கள் இதை மிக நன்றாகப்பயன்படுத்திக்கொண்டு தன்னை நல்ல பாடகனாக உருவாக்கிக்கொண்டு, இவர்கள் பேசும் போட்டி என்பதை ஓரங்கட்டிவிட்டு ஒரு தோழமைப் பூங்காவை அங்கு உருவாக்கிவிட்டனர். பாவம் நிருவாகம் எவ்வளவோ முயன்று ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்க முயல்கிறது. ஆனால் போட்டியாளர்கள் எல்லோருக்கும் பெப்பே சொல்லிவிட்டு படு ஜாலியாக இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியின் பெயரில் பெரிய பார்ட்டி அங்கே நடந்து கொண்டு இருப்பதுதான் உண்மை. இது நட்புணர்விற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு.

இதற்குப்பின்னால் ஸ்ரீநிவாஸ், சக்தி இவர்கள் உருவாக்கிய அறுவர் குழு முன்னுதாரணம். பக்கபலம், சௌந்தர்யா. பின்னால் பூஜாவும், மாளவிகாவும் கூட்டு சேருகின்றனர். பூஜா சில நேரங்களில் நட்பிற்காக தனது போட்டி ஸ்தானத்தை விட்டுக்கொடுக்கிறார். இவர்களின் குட்டி செல்லம் தன்யஸ்ரீ.

இல்லையெனில், உலகில் வேரெங்கும் இம்மாதிரிப்போட்டிகளில் பங்கு கொள்வோர் மற்றொரு போட்டியாளருக்கு மிக ஆதரவாக நடந்து கொள்ளவே மாட்டார்கள். பாருங்களேன், தன்யஸ்ரீ ஊக்கச் சீட்டு (வைல்ட் கார்டு) சுற்றில் மிக அற்புதமாகப் பாடியவுடன் தனது உயர்ந்த பீடத்திலிருந்து ஓடி கீழே வந்து தன்யாவைக் கட்டிக்கொள்வது நடந்திருக்காது. இவர் கீழேயிருந்து ஐ லவ் யூ சொல்ல அவர் மேலேயிருந்து ஐ லவ் யூ சொல்ல!!

இப்படிச் செய்வதற்குக் காரணம் போட்டியாளர்கள் அனைவருக்கும் இசையின் நுணுக்கங்கள் பிடிபட்டுப்போனதுதான். இசை அற்புதமாக அமையும் போது தன்னிலை மறந்து பாராட்டுகிறார்கள். பாருங்களேன், போட்டியாளர்களின் மிகச்சிறந்த ரசிகர்கள் மற்ற போட்டியாளர்கள்தான். ஒவ்வொரு நுணுக்கமான சங்கதிகளை மற்றவர் பாடும் போதும் சந்தோஷ் அனுபவிக்கும் மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது? அப்படி அனுபவிக்கிறார்கள் எல்லோரும்! அதுதான் வேண்டுவது. அதுதான் சாஸ்திரீய சங்கீதம் நமக்குத்தரும் பாடம். இசை நம் அன்னை போன்றவள். அவளின் அழகை வெவ்வேறு வகையில் ஒவ்வொருவரும் பாடும் போது ஒரு உண்மையான கலாரசிகன் ரசித்து மகிழ வேண்டும். அதை மிகச்சரியாகப் போட்டியாளர்கள் உணர்ந்து மகிழ்கிறார்கள்..

ஹரிஹரசுதனின் அண்ணன் சொல்கிறார். என் தம்பி போட்டிக்காகப்பாடவில்லை. உங்களை மகிழ்விக்கப்பாடுகிறான் என்று. அதுதான் இசையின் அடிப்படையே! அங்கு போட்டி என்பதைவிட மனிதாபிமானm வெல்வதைக் காண்கிறேன் நான்.

தன்யஸ்ரீயின் மாமா சொல்கிறார், தன்யா தனது பள்ளிப்படிப்பைகூட இந்நிகழ்ச்சிக்காக அர்ப்பணம் செய்துவிட்டு வந்து பாடுவதாக. எனவே அவள் உங்கள் வீட்டுப்பிள்ளை என்று!

என்னைப் பொறுத்தவரை இவர்கள் என்னதான் போட்டி, போட்டி என்று கூவினாலும் போட்டியாளர்கள் மிகத்தெளிந்த மதியுடன் ஒருவருக்கொருவர் மிக்க நட்புடன் கூடி வாழ்கிறார்கள் என்பதே உண்மை!. நேற்றுக்கூடப் பாருங்கள், அந்த சிங்கப்பூர் அம்மா தன்யஸ்ரீக்கு அட்டை காட்டுகிறார்கள். மேல்தளத்தில் இருந்து கொண்டு பூஜாவும், சத்யபிரகாஷும் தன்யாவிற்கு அட்டை காட்டுகின்றனர். ஒருவகையில் இந்தப் போட்டி சமாச்சாரத்தை இவர்கள் வலுவாக நக்கலடிக்கின்றனர். சந்தோஷ் முன்னமே சொல்லிவிடுகிறாரே நான் அடுத்த ரவுண்டில் அவுட்டு என்று. நீதிபதி ஸ்ரீநிவாஸ் சப்பைக்கட்டு கட்டப்பார்க்கிறார். என்ன சொல்லி என்ன பயன்?

இந்த நிகழ்ச்சியின் பலம், நீதிபதிகளோ, அமைப்பாளர்களோ அல்ல, மாறாக போட்டியாளர்கள்!! இதை நன்கறிந்து போட்டியாளர்கள் நிகழ்ச்சியைக் கடத்திக்கொண்டு போனதுதான் நடந்திருக்கிறது. உனக்கும் பெப்பே! உங்கப்பனுக்கும் பெப்பே!! என்று இளித்துக்காட்டுவது போல் படுகிறது. இல்லையெனில் ஊக்கச்சீட்டு என்று ஒன்றைக் கொண்டு வந்து அத்தனை சிறந்த பாடகர்களையும் ஏன் மீண்டும் முன்னிருத்த வேண்டும்?

என்னப்பொறுத்தவரை சத்யாவையோ, பூஜாவையோ தமிழகத்தின் ஒரு சிறந்த பாடகர் என்று முடிவெடுப்பது படுபோலித்தனம். இதைப் போட்டியாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். மிகத்தெளிவாக ஐந்து ஆறுபேர் தென்படுகின்றனர்.

பூஜா - பி.சுசீலா போன்ற குரல். எவ்வகையான பாடல் என்றாலும் சோபிக்கிறார்.

சத்யா - தேன் போன்ற குரல். எவ்வகையிலும் சோபிக்கும் பாடகர். ஆயினும் இவரை குத்து, வெட்டு என்று போட்டு அவஸ்தைப்படுத்தக்கூடாது!

கௌசிக் - அன்னையின் உந்துதலில் நல்ல பயிற்சி பெற்றுத் தேறிய மிக நல்ல பாடகர். எல்லாவகைப்பாடலையும் பாடக்கூடியவர்.

சந்தோஷ் - அற்புதமான, தோழமை உள்ளம் கொண்ட மிகச்சிறந்த பாடகர்.

பிரவீன் - ஒரு ஷோமேன். இவருக்கு நல்ல exposure சிங்கப்பூரில் கிடைப்பதால் இத்திறமையை நன்கு வளர்த்துக் கொண்டுள்ளார். இவரைக் காப்பியடித்து நம்மவர்களும் கொஞ்சம் ஷோ காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.பிரவீனின் பலவீனம் உச்சரிப்பு. அவர் வீட்டில் தமிழ் பேசினால்தானே தமிழ் உச்சரிப்பு வரும். அவர் அம்மாவிற்கே தமிழ் தடுமாறுகிறது. பிறகு தமிழ், “தாய் மொழி” என்று எப்படிச் சொல்லமுடியும்?

ஸ்ரீநிவாஸ் - நல்ல பாடகர். எல்லாவகைப்பாடலும் கைவருவதில்லை. அதுவொரு குறை இல்லை.

மாளவிகா - இவரது குரல்தான் இவரின் எதிரி. இவருக்கு மட்டும் பூஜா, சௌந்தர்யா, மதுமிதா, மாதங்கி இவர்களின் குரல் வாய்க்கப்பட்டிருந்தால் இவரை அடித்துக் கொள்ள ஆளே இருந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு கடின உழைப்பாளி.

இவர்கள் அனைவருமே நிச்சயம் மிகச்சிறந்த பாடகர்கள். எந்த அளவுகோளின் படியும்.

0 பின்னூட்டங்கள்: