இந்தியத்தனமான இசைநிகழ்ச்சி

ஏர்டெல் சூப்பர் சிங்கர் 3 ஒரு காட்டாறு போல் ஒழுங்கற்று நடக்கிறது. ஒரு போட்டி என்றால் குவாட்டர் பைனல்ஸ், செமி பைனல்ஸ், பைனல்ஸ் என்று அமைவதுதான் ஒழுங்கு. செமி பைனல்ஸ் நடத்திவிட்டு, இருவரை பைனல்ஸ்ஸுக்கு தெரிவு செய்த பின் மீண்டும், ‘உந்து அட்டை’ (வைல்ட் கார்டு) மூலம் மீண்டும் இருவரைத் தேர்ந்தெடுத்து இருப்பது போட்டியை ஒரு படி கீழே இறக்கி மீண்டும் செமி பைனல்ஸ் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதற்குப் பதில் செமிபைனல்ஸ் நிலையிலேயே நால்வரைத் தேர்ந்தெடுத்து இறுதிச்சுற்றுக்கு அனுப்பி இருக்கலாமே? எதற்கு இறக்க வேண்டும்? மீண்டும் ‘மக்கள் வாக்குகளால்’ தேர்ந்தெடுத்திருப்பது போன்று போலித்தோற்றம் தர வேண்டும். மக்கள் வாக்கு என்றால் யார், யாருக்கு எத்தனை ஓட்டு கிடைத்தது? யாருக்கும் சொல்லக்கூடாத ரகசியம் என்றால்? பொது ஓட்டு என்று ஏன் சொல்ல வேண்டும்? மக்களவைக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றார் அவர் எத்தனை ஓட்டு வித்தியாசத்தில் வென்றார் என்ற விவரம் ஒரு ஜனநாயக நாட்டில் அறிவிக்கப்பட வேண்டும். அதைச் செய்யவில்லை விஜய் டிவி! இணையம் மூலம் போட்டால் மூன்றே மூன்று ஓட்டு. ஏர்டெல் மூலம் போட்டால், ‘போட்டுக்கொண்டே’ இருக்கலாம். அடடா!!

அவர்கள் போக்கிற்கு நடுவர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்!! மக்கள் ஓட்டு என்கிறார்கள். பிறகு நடுவர்களை ஏன் உட்கார வைத்திருக்கிறார்கள்?

இதற்கிடையில் அனந்த் வைத்யநாதன் ‘நிறைய, நிறைய ஓட்டுப்போட்டு’ எல்லோரையும் தேர்ந்தெடுங்கள் என்கிறார்கள். ஆனால் திவ்யாவோ இந்த நால்வரில் ஒரே ஒருவருக்குத்தான் டைட்டில் என்று கிளிப்பிள்ளை போல சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

‘அந்த பிரம்மாண்ட மேடை’யில் பைனல்ஸ் என்று பயங்கர விளம்பரம். அதற்கு ரிகர்சல் என்று ஏதோவொரு மாலில் மாடியில் நிற்க வைத்து பாட வைப்பது கேவலமாக இருக்கிறது. மாலுக்கு சாமான் வாங்க வருபவர்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க இதன் நடுவே ஒரு போட்டி. சவுண்ட் சிஸ்டம் படு கோளாறு. இதில் பாடினால் உள்ள குரலும் போய்விடும். அதுதான் சத்யாவிற்கு நடந்தது. அவரால் பாடிய பின் பேசவே முடியவில்லை. பிரம்மாண்ட சபை நிகழ்ச்சி இப்படித்தான் இருக்குமென்றால், நிகழ்ச்சியை பார்க்காமலே/கேட்காமலே இருக்கலாம்!

எந்தவொருத்திட்டமுமின்றி இஷ்டத்திற்கு வெறி கொண்டு ஓடும் காட்டாறு போல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கேவலமாக உள்ளது. இதுதான் இந்திய நிகழ்ச்சிகளின் தரமா?

யார், யார் வரப்போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிவான ஒன்று போல் படுகிறது. எது எப்படி நடந்தாலும் இதுதான் உண்மையான வரிசை: சத்யா/பூஜா (சமநேர்), சாய் சரண், சந்தோஷ். இதே போல்தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பார்த்துக்கொண்டே இருங்கள். அது எப்படி என்று கேட்கக்கூடாது?

ஏதோ ஏர்டெல் கம்பெனிக்கு நல்ல வியாபாரமாக வேண்டும். அவர்கள் இதை வைத்து எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதைத் தொழில் ரகசியமாக வைத்திருக்க விரும்புவதால் மொத்தம் எத்தனை ஓட்டு விழுந்தது என்பது கடைசிவரைத்தெரியாது. மக்கள்தான் தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்! அது எப்படி? இது என்ன போட்டி? எவ்வகை விதிகளும் பொதுமைக்கு, நேர் பார்வைக்கு வராமல்!

ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் 3. படு சொதப்பல்!!


6 பின்னூட்டங்கள்:

Anonymous 9/23/2011 08:46:00 AM

இந்த முறையாவது ஒரு தமிழனுக்கு விருது கிடைக்குமா இல்லாவிட்டால் மீண்டும் ஒரு மலையாளியா!!!?

நா.கண்ணன் 9/23/2011 09:30:00 AM

நண்பரே! இந்த நால்வரில் யார் மலையாளி? நான் நினைத்தேன் இவர்கள் அனைவரும் தமிழர்களென்று. இல்லையா? (விவரம் தெரியவில்லை, அதனால் கேட்கிறேன். நான் தமிழகத்தில் வாழவில்லை).

நித்திலம்-சிப்பிக்குள் முத்து 9/23/2011 07:30:00 PM

ஒருவர் எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம் என்றால அது எப்படி சரியான மக்கள் தேர்வு முறை என்று தெரியவில்லை........நீங்கள்கேட்டிருக்கும அத்தனை கேள்விகளும் நியாயமானவை....ஆனால் அதற்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை. மக்களின் கருத்து கேட்கும் வழக்கமெல்லாம் நம்நாட்டிலில்லை.அவர்கள்சொல்வதை கேட்டுக் கொண்டு ஆட்டு மந்தைகள்போல்பின்னால் செல்லவேண்டியது மட்டுமே நாம்செய்யக்கூடியது.............

நா.கண்ணன் 9/23/2011 07:56:00 PM

பவளா: எல்லாம் ஏர்டெல் வியாபார உத்தி. ஒவ்வொரு ஓட்டுப்போடும் போதும் லாபமடைவது ஏர்டெல். அதுதான் எத்தனை ஓட்டுவேணாலும் போடலாங்கிறது. ஆனா இணையத்தளத்தில் மூன்றே ஓட்டு. எவ்வளவு அநியாயம், பொய்மை, பாசாங்குத்தனம்? எத்தனை ஓட்டு வேணாலும் போடலாமாம்! ஆனா எத்தனை ஓட்டு வந்ததுன்னு சொல்ல மாட்டாங்களாம். அளுகுணி விளையாட்டு. யார் எப்படி உண்மையில் தேர்வின் முடிவை தீர்மானிக்கின்றனர் என்பது பிரம்ம ரகசியம்? :-)

Anonymous 9/25/2011 08:32:00 PM

நன்கு சொன்னீர்கள்

Anonymous 9/25/2011 10:00:00 PM

sathya kavalaipadathe unakku muthal price kidaikkavittalum makkal manadhil needhan muthalil nirkkirai