தமிழ் வாழ்த்துப்பாடல்கள்

தமிழ் தமிழர்களை இணைக்கும் பாலம். எனவே இம்மொழியை பெண்ணாக உருவகப்படுத்தி வாழ்த்துப்பாடுதல் ஒருமுறை. உருவகப்படுத்தாமல் மொழியை வாழ்த்துவதுமுண்டு. பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

பொருள்: அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இப்பாடலைக் கேட்க இராகா செல்லவும்:

இப்பாடல் மிகத்தெளிவாக இந்தியாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சுட்டும் பாடலாக அமைந்துவிடுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழர்களோ இன்று 22 நாடுகளில் பரந்து விரிந்து வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் சுட்டும் வரிகள் இப்பாடலில் இல்லை.

தமிழின் பூர்வகுடிகள் இந்தியா, இலங்கை என்ற நாடுகளில் வாழ்ந்து செழித்தார்களெனில் இலங்கை பற்றிய எக்குறிப்பும் இப்பாடலில் இல்லை. எனவே இலங்கை மக்கள் தங்களுக்கென ஒரு தமிழ்மொழி வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை. அப்படித்தான் அமைகிறது புலவர் சிவநாதனின் ஒரு பாடல்.

சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!

ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோலையில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!

ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி

இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா. இப்பாடலை தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவில் கேட்கலாம்!

ஒருகுறையும் இல்லாத ஒரு தமிழ் மொழி வாழ்த்து உருவாக வேண்டும், அது அனைத்துத் தமிழர்களையும், ஏன் இணையத்துத் தமிழையும் உள் வாங்க வேண்டும் எனும் நோக்கில் மலேசிய எழுத்தாளர் சங்கம் பெருமுயற்சி எடுத்து கவிஞர் சீனி நைனா முகம்மதுவைக் கொண்டு ஒரு பாடலை இயற்றியது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் ஆர்.பி.எஸ்.ராஜூ, பாடியவர்கள்: துருவன், பாபு லோகநாதன். அப்பாடல் வரிகள்:

நிலைபெறநீ வாழியவே!

காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!

இனிய இப்பாடலைக் கேட்க தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் வலைப்பதிவிற்குச் செல்ல வேண்டும்!:

இந்தியாவிலுள்ள தமிழகம் இனிமேலும் தமிழ் மொழி மீது ஆதிக்கம் செலுத்தும் என நம்ப முடியாது. அங்கு நடக்கும் அரசியல் கோமாளித்தனத்தில் ஒரு முதல்வர் எழுதி, புத்தகங்களில் அச்சிடப்பட்ட செம்மொழிப் பாடலை அடுத்த முதல்வர் வந்தவுடன் கிழித்து விடுகிறார். மேலும் ஈழத்தமிழர்கள் துயருற்ற போது அரசியல் பலத்தை ஒருங்கிணைத்து அல்லல் படும் மக்களுக்கு ஆறுதல் செய்ய தமிழக அரசுகள் தவறிவிட்டன. எனவே உலகத் தமிழனத்தின் தானைத்தலைவன் என்றெல்லாம் இனி இந்தியாவில் யாரும் பட்டம் சூடிக்கொள்ள முடியாது. மலேசியா, சிங்கப்பூர், மொரிசீயஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நாளை ஒரு பிரச்சனை என்றால் இந்தியத் தமிழ்நாடு வெற்றுக் கோஷம்தான் போடமுடியுமே தவிர அரசியல் ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது.

எனவே இச்சூழலை அவதானித்து மலேசியா செய்திருக்கும் பாடலே அனைத்துத் தமிழர்களும் பாடத்தக்க தமிழ் மொழி வாழ்த்தாக அமையமுடியும் என்பது வெள்ளிடை மலை!

0 பின்னூட்டங்கள்: