இளையராஜாவின் வேறொருமுகம்!

இளையராஜா என்றவுடன் நமக்கு பச்சை வயல்களும், பாவாடை தாவணிக் கனவுகளும், பண்ணையார்களும்தான் ஞாபகத்திற்கு வருவர். ஆனால் இந்த பிம்பத்திற்கு நேர் எதிரான ஒரு நிகழ்ச்சியை இளையராஜா இத்தாலியில் நடத்தியுள்ளார். இவரது நிகழ்ச்சியின் ஆரம்பமே ஹிந்துஸ்தானி இசையில் தொடங்குகிறது! அதுவும் இவரது இசையமைப்பு என்று சொல்லமுடியாது. காலம் காலமாக உள்ள ஹிந்துஸ்தானி இசையது. சரி அடுத்த பாடல்? கர்நாடக சங்கீதம். அதுவும் கேரளத்தவர் பிரபலப்படுத்திய கீர்த்தனை. அதுவும் இவர் இசை கிடையாது. காதல் கீதம் எனும் போது இவர் ஞாபகத்திற்கு வருவது யார்? சங்கர் ஜெய்கிஷான்!! ஏன் தமிழர்கள் விரும்பும் எத்தனையோ காதல் பாடல்களை இவர் அமைக்கவில்லையா? மருந்திற்கும் ஒரு தமிழ் பாடல் இல்லாத ஒரு நிகழ்ச்சியை இளையராஜா இத்தாலியில் கொடுத்துள்ளார். அதுதான் போகிறது என்றால் இசை அமைப்பு இளையராஜா என டைட்டிலில் போட்டிருந்தாலும் ந்கழ்ச்சியை நடத்திக்கொடுப்பவர் உத்தம் சிங்.இவரது பெண்ணை வெளிநாடு காட்ட அழைத்து வந்திருக்கார் போல! பவதாரிணி ஏதோ சின்ன தாலாட்டுப் பாட்டுப்பாடுகிறார். இளையராஜா ரசிகர்களுக்கு அவரை டாக்டர் என்று அழைப்பதும், பேண்ட் சூட் போட்டுப் பார்ப்பதும் ஒரு கிக் தரலாம். அவ்வளவுதான். இளையராஜாவின் முத்திரை எனும் தமிழிசை மருந்திற்கும் இல்லாத ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர் இத்தாலிவரை போயிருக்க வேண்டியதில்லை. இதை எந்த இசைக்குழுவும் நடத்தும். எல்லார் காதுகளிலும் அது என்ன ரிகாரிடிங் ஸ்டீடியோவில் உள்ளது போன்ற ஹெட்ஃபோன்? மேலை இசையரங்குகளில் யாரும் இப்படி இசைப்பதில்லை. ஏதோ போனாப்போகுதுன்னு ஒரு கபடி விளையாட்டுப் பாடலொன்று. அதுதான் இளையராஜாவின் கிராமத்து மணத்தை இங்கே காட்டுகிறது!