இளையராஜாவின் வேறொருமுகம்!

இளையராஜா என்றவுடன் நமக்கு பச்சை வயல்களும், பாவாடை தாவணிக் கனவுகளும், பண்ணையார்களும்தான் ஞாபகத்திற்கு வருவர். ஆனால் இந்த பிம்பத்திற்கு நேர் எதிரான ஒரு நிகழ்ச்சியை இளையராஜா இத்தாலியில் நடத்தியுள்ளார். இவரது நிகழ்ச்சியின் ஆரம்பமே ஹிந்துஸ்தானி இசையில் தொடங்குகிறது! அதுவும் இவரது இசையமைப்பு என்று சொல்லமுடியாது. காலம் காலமாக உள்ள ஹிந்துஸ்தானி இசையது. சரி அடுத்த பாடல்? கர்நாடக சங்கீதம். அதுவும் கேரளத்தவர் பிரபலப்படுத்திய கீர்த்தனை. அதுவும் இவர் இசை கிடையாது. காதல் கீதம் எனும் போது இவர் ஞாபகத்திற்கு வருவது யார்? சங்கர் ஜெய்கிஷான்!! ஏன் தமிழர்கள் விரும்பும் எத்தனையோ காதல் பாடல்களை இவர் அமைக்கவில்லையா? மருந்திற்கும் ஒரு தமிழ் பாடல் இல்லாத ஒரு நிகழ்ச்சியை இளையராஜா இத்தாலியில் கொடுத்துள்ளார். அதுதான் போகிறது என்றால் இசை அமைப்பு இளையராஜா என டைட்டிலில் போட்டிருந்தாலும் ந்கழ்ச்சியை நடத்திக்கொடுப்பவர் உத்தம் சிங்.



இவரது பெண்ணை வெளிநாடு காட்ட அழைத்து வந்திருக்கார் போல! பவதாரிணி ஏதோ சின்ன தாலாட்டுப் பாட்டுப்பாடுகிறார். இளையராஜா ரசிகர்களுக்கு அவரை டாக்டர் என்று அழைப்பதும், பேண்ட் சூட் போட்டுப் பார்ப்பதும் ஒரு கிக் தரலாம். அவ்வளவுதான். இளையராஜாவின் முத்திரை எனும் தமிழிசை மருந்திற்கும் இல்லாத ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர் இத்தாலிவரை போயிருக்க வேண்டியதில்லை. இதை எந்த இசைக்குழுவும் நடத்தும். எல்லார் காதுகளிலும் அது என்ன ரிகாரிடிங் ஸ்டீடியோவில் உள்ளது போன்ற ஹெட்ஃபோன்? மேலை இசையரங்குகளில் யாரும் இப்படி இசைப்பதில்லை. ஏதோ போனாப்போகுதுன்னு ஒரு கபடி விளையாட்டுப் பாடலொன்று. அதுதான் இளையராஜாவின் கிராமத்து மணத்தை இங்கே காட்டுகிறது!

3 பின்னூட்டங்கள்:

Anonymous 6/15/2012 06:22:00 PM

தயவு செய்து இளையராஜா ஐயாவை பற்றி தவறாக எழுத வேண்டாம்.

தமிழ் வாடையே இல்லாத வெளிநாடுகளில் இன்றும் பல தமிழர்கள் இவரது இசையின் துணையுடன் நிம்மதியை தேடுவதை நாம் மறுக்க முடியாது.

இரவு பத்து மணிக்கு மேல் அனைத்து வானொலி நிலையங்களும் அவரது பாதங்களில் சரணாகதி ஆக வேண்டிய நிலை உள்ளது, ஏனெனில் மக்கள் அவரது படங்களை அவ்வளவு விரும்புகிறார்கள்.

The Songs by Ilayaraja are real stress reducers.
Millions are not getting an heart attack because of his songs - this is a real life situation - confession by many of my patients. Dwelling into the personal and private life of others is not nice.

என்னடா, ஆங்கிலத்தில் எழுதுகிறேன் என ஆச்சர்யமா?
இந்த செய்தியை நான் எழுதும் நிலையில் தனது கருத்தையும் பதிவு செய்ய சொன்னார் எனது நண்பர்.

அவரும் ஒரு மருத்துவர்.
அவர் ஒரு பஞ்சாபி.
ராஜா சார் உடைய பாடல்களை அவருக்கு அவரது அமெரிக்க நண்பர்கள் ( patients )அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள்.

ராஜாவை தவறாக சொன்னால் இந்த சிங்குக்கு எண்ண கோபம் வருகிறது .........தெரியுமா .

இளையராஜாவின் இசை உலகம் உள்ளவரை வாழும் அற்புதம்.

தமிழனை தமிழனே same side goal போடும் இந்த பழக்கம் என்றுதான் ஒரு முடிவுக்கு வருமோ ???

நாளைய தமிழ்
மின்தமிழ் ஊடாக

நா.கண்ணன் 6/15/2012 06:23:00 PM

அன்பரே:

தமிழ் பல படிநிலைகளில் பொருள் தரக்கூடியது.

அக்கட்டுரையின் புறச்சாடலை மட்டும் கணக்கில் கொண்டு same side goal என்று என்னென்னவெல்லாமோ எழுதுகிறீர்கள்.

மேலும் அப்பதிவு அவரது ஜூன் மாத இத்தாலிய நிகழ்ச்சி பற்றி மட்டுமே. அது
ஒட்டு மொத்த இளையராஜாவின் இசை பற்றியது அல்ல.

இளையராஜா என்ன, யாரையுமே தொழும் நிலைக்குப் போய்விடாதீர்கள். அவன் ஒரு
கலைஞன். கலை விமர்சனத்திற்கு உட்பட்டது. யாரும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல. இது இறைவனுக்கும் பொருந்தும் என்றுதான் தமிழ்ச்
சரிதம் காட்டுகிறது (உம்.நக்கீரன்).

அக்கட்டுரையின் ஆதங்கம் என்ன?

1. இளையராஜா தன்னளவில் தனித்து நிற்கக்கூடிய கலைஞன். ஆயிரக்கணக்கான
மெட்டுகள் போட்டுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் முன்னிருத்துவது
என்ன? ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை, ஹிந்திக் காதல் பாடல் மெட்டு. இது
அவசியமா? இது அவரது தாழ்வு மனப்பான்மையா? இல்லை பரந்த மனப்பான்மையா?

2. இவரைக் கம்போஸர் என்று வெளிநாட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும்
போது இவர் கம்பீரமாக கண்டக்டர் நிலையில் நிற்க வேண்டும். உத்தம்சிங்கிடம்
அதைக் கொடுத்துவிட்டு இவர் ஆர்மோனியப்பொட்டியுடன் சக கலைஞன் போல்
இருக்கக்கூடாது. அது கேவலமாக உள்ளது (உங்களுக்கு மேற்கத்தைய
இசைப்பரிட்சயம் உண்டா? வெளிநாடுகளில் கான்செர்ட்க்குப்
போயிருக்கிறீர்களா? இல்லையெனில் இந்த ஆதங்கம் புரியாது).

3. என்னைப் பொருத்தவரை இந்திய சாஸ்திரீய சங்கீதத்தை ‘கண்டெக்ட்’ செய்ய
முடியாது. அது மனோதர்மத்தை அடிப்படையாகக் கொண்டது (குன்னக்குடி
திருவையாரில் கூத்தடிக்கும் வீடியோ காணவும்). ஆனால் சினிமாப் பாடல்களை
கண்டெக்ட் செய்யலாம். அது நொடேஷன் அடிப்படையில் அமைவது. ஆயினும் அதையும்
நம்மவர் மனோதர்மத்தின் அடிப்படையிலேயே அமைப்பதால் வெளிநாட்டிற்கு வந்து
ஒரு இசை நடத்துநர் (conductor) போல் கையையும் காலையும் அசைப்பது
வேடிக்கையாக இருக்கும். ஏனெனில் கலைஞன் அடுத்த நோட்ஸ் எப்படி எடுப்பான்
என்பது கண்டெக்டருக்குத் தெரியாது. கலைஞனின் அத்தருண மனோதர்மம் அதைச்
செய்யும்.

இந்த நிகழ்வு வேறு மாதிரி அமைந்திருக்கலாம். இளையராஜா தனது மிகப்பிரபலமான
மெட்டுக்களை அங்கு வாசித்து மேலைநாட்டினருக்கு தமிழ்நாட்டு மெல்லிசையை
அறிமுகப்படுத்தி இருக்கலாம்! அதற்குப் பதில் ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை
(50% நேரம் இதற்குப் போய்விட்டது)ப் பாடல்களை அத்துறை வல்லுநர்களுக்கு
விட்டு இருக்கலாம். ஜெர்மனியில் நானே பல ஹிந்துஸ்தானி, கர்நாடக இசைக்
கச்சேரிகளை ஏற்பாடு செய்திருக்கிறேன். அது சுத்த சாஸ்தீரிய இசை.

அந்த வீடியோப் பதிவு இளையராஜா எனும் பிம்பத்தை மேலும் உறுதிப்படுத்த்
எடுக்கப்பட்டது போல் உள்ளது. இளையராஜா என்ற நல்ல தமிழகத்துக் கலைஞனை
வெளிக்காட்டுவது போல் அமையவில்லை.

இந்நிகழ்ச்சியை கீழுள்ள இரண்டு வகைகளில்தான் புரிந்து கொள்ள முடியும்:

1. கலைஞன் என்பவன் ஒரு நிலையில் அவன் சார்ந்த மண், மொழி இவைகளை மேவி
நிற்கிறான். அப்போது அவன் ‘யாது ஊரே’ எனும் நிலைக்கு வருகிறான். அப்போது
அவனுக்கு வெஸ்டர்ன் மியூஸிக், ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை, சினிமாப்பாட்டு
என்ற பேதம் வருவதில்லை. அவனுக்கு முன் நிற்பது இசை வடிவம் ஒன்றுதான்.
இப்படிப் பார்த்தால் நாம் இளையராஜா எனும் தமிழன் என்று மார்தட்டிக்கொள்ள
ஒன்றுமில்லை. அவன் மண் மேவிய ஒரு கலைஞன் அவ்வளவே.

2. தமிழனுக்கு தாழ்வு மனப்பான்மை நிறைய உண்டு. அது கூடும் போது தன்
இசையின் மீதே தனக்கு நம்பிக்கை வருவதில்லை. அதனால்தான் இந்தியாவின்
பரபலமான இசை என அறியப்படும் ஹிந்துஸ்தானியை முன்னிலைப்படுத்தி
நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறார். இரண்டு, சினிமாப்பாட்டு மூன்றாம் தரம் என்று
அவருக்கேத் தெரிகிறது. எனவே அடுத்து கர்நாடக இசையை
வைத்துவிட்டுமுன்றாவதாக மெல்லிசைக்கு வருகிறார். மெல்லிசையிலும் ஹிந்தி
இசை மிகவும் பரவலாக அறியப்படுகிறது, எனவே சங்கர் ஜெய்கிஷானை
முதன்மைப்படுத்துகிறார். கட்டக்கடைசியாகத்தான் தமிழகத்துக் கபடி இசைக்கு
வருகிறார். இது தாழ்வு மனப்பான்மையின் உச்சம் என்றும் காணலாம். ஏனெனில்
ஏ.ஆர்.ரகுமானின் கச்சேரிகள் இப்படி அமைவதில்லை. அவர் எடுத்த எடுப்பில்
தமிழ்ப்பாடல்களை முன்னிலைப்படுத்தும் வழக்கு உண்டு. தமிழ் எனும் வடிவத்தை
இந்திய அளவில் பெருமைப்படுத்தியவர்கள் இரண்டு முஸ்லிம்கள். ஒன்று
ஏ.ஆர்.ரகுமான். இரண்டாவது அப்துல் கலாம்.

பேச நிறைய உள்ளது. பின்னூட்டத்திற்கு நன்றி.

நா.கண்ணன்

sivaraj K 1/17/2013 01:34:00 AM

நீங்கள் நா கண்ணணா இல்லை -------------------கண்ணணா போய்யா போ
வேற வேலை இருந்தா போய் பாருய்யா