உருமி - திரைப்பார்வை

உருமி என்றொரு படம் வந்திருக்கிறது, ‘உடனே பார்!’ என்றொரு அசரீரி! இங்கு அசரீரி என்பதை ஏதோ நண்பர் எப்போதோ கூற எந்த நண்பர் எப்போது கூறினார் என்பது மறந்து போன நிலையில் அது ‘அசரீரி’ ஆகிவிடுகிறது எனக்கொள்க ;-)


யார், யார் நடித்தது, ஏன் பார்க்க வேண்டுமென்ற எந்த விவரமும் இல்லாமல் வேறு எங்கோ பிராக்குப் பார்த்துக் கொண்டிருக்கும் போது உருமி கண்ணில் சிக்கியது. தட்டினால் பிரபு தேவா! சரி சுவாரசியமாக இருக்குமென்று பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்பம் படு ஜோர்! அழகு, அழகுப் பெண்கள்! மலையாளத்தில்


கதை நடக்கிறது. எனவே கேரளத்து அழகு! அரக்கல் ஆயிஷா என்று கலப்பினப் பெண் வேறு கண்களுக்குக் குளுமையூட்ட! இவர் உண்மையான பெயர் Genelia D’Souza என்பது. அதுவே ஒரு போர்த்துக்கீசியப்பெயராக உள்ளது! கதையும் ஒரு வகையில் போர்த்துக்கீசியக் கதைதான். வாஸ்கோடகாமா மிளகு வாங்க வந்து நாட்டைப்பிடிகின்ற கதை! பின் வித்யா பாலா என்ற அழகி வேறு! கண்ணிற்கு இளமை விருந்து!


கேமிராவும் படப்பிடிப்பும் மேலைப்படங்களுக்கு ஒப்ப என்றால் மிகையில்லை. பெரிய தியேட்டரில் பார்ப்பது ஒரு அனுபவமாக இருக்கும்! அழகு மட்டும் போதுமா? கூடவே வன்முறையும் வேண்டுமே! அது நிறைய்ய இருக்கிறது.

சினிமா என்பது நமது புராணங்கள் போல. அதில் உண்மை எங்கோ ஒட்டிக்கொண்டிருக்கும். மிச்சமிருப்பதெல்லாம் கற்பனைதான்! வாஸ்கோடகாமா பற்றி இப்படியெல்லாம் கதை இருப்பதை நான் அறியேன். ஆயினும் ஒரு குறியீட்டளவில் இப்படம் வெற்றியே பெற்றுள்ளது. ஒரு காலத்தில் உண்மையாய் அடிமை ஆனோம். இப்போது பொருளாதாரப்பின்னலில் அடிமை ஆகிறோம் என்கிறது படம். சர்வதேச வியாபாரம் என்பது பொருளாதார அடிமைகளை, காலனிகளை உருவாக்கிய வண்ணமே உள்ளது என்பதன் அடிப்படையில் அமைகிறது படம். 

இது முதலில் மலையாளத்தில் வந்திருக்கிறது. இசை அற்புதம்! தீபக்தேவ் என்பவர் ஹாலிவுட் படத்திற்கு இசையமைக்க வேண்டியவர். என்ன நேர்த்தி! படத்தில் வசனம்தான் உதைக்கிறது. அதுவும் இந்த ஆர்யா பேசும் தமிழ்! அதுசரி, அந்தக்காலத்துப்படமென்றாலே எழுத்துத்தமிழில்தான் பேச வேண்டுமென்ற நியதியா? யார் போட்ட பாடமிது? வீரமாமுனிவர் காலத்தில் விவிலியத்தை பேச்சுத்தமிழில் எழுத வேண்டுமா? செந்தமிழில் எழுத வேண்டுமா? என்ற விவாதம் நடந்திருக்கிறது. மலையாளம் கலந்த பாலக்காட்டுத்தமிழே தேர்வாகியிருக்க வேண்டும். பொருத்தமாக இருந்திருக்கும். பிரபுதேவா தமிழ் பேசும் போதும் கேட்க முடியவில்லை! இப்படத்தில் பிரபுதேவா anyway waste!

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் பேசிவிட்ட உருமி விரைவில் ஆங்கிலம் பேச இருக்கிறது. இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜப்பான் வாங்கியிருப்பதே உருமியின் வெற்றிக்குச் சான்று. படத்தின் முக்கியத்துவம் சிதைந்து விடாமல் தமிழில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வெளியிட்டிருப்பது போன்று ஹிந்தியில் யாராவது முன்வந்தால் நிச்சயம் ஹிந்தியிலும் உருமி வெளியாகும்… இன்னும் பத்து வருடம் கழித்துப் பார்த்தாலும் புதிதாகத் தெரியும் அளவிற்கு காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன் என்று கூறுகிறார் ப்ருத்விராஜ்!

எனக்குப் பிடித்தவர் மால்குடி சுபா! வித்தியாசமான கலைஞர். இவர் பாடியிருக்கும் ‘சலனம், சலனம்’ பாடலும் சரி, அதைப்படமாக்கியிருக்கும் விதமும் சரி! படத்தின் உச்ச வெற்றியென்றே கூற வேண்டும். இப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் கேட்க!


ஆனாலும் இந்த உருமி என்ற ஆயுதம் திடீரென்று விஸ்வரூபமெடுத்திருப்பதற்குக் காரணம் நேஷனல் ஜியாகிரபிஃக் ஹ்ஸ்டரி சேனலில் இது பற்றிய ஒரு ஆவணம் வந்ததுதான். அந்த ஆயுதத்தால் ஒரே வீச்சில் 9 பேர் தலையை உருவமுடியும். ஆனால் படத்தில் அதன் முழு பலத்தையும் காட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்! நம்மிடம் உள்ளதை நாம் அறிந்து கொள்ளவும் நாம் வெள்ளைக்காரர்களை நம்பி இருப்பது இப்படம் சொல்ல வரும் கருத்திற்கு முரணாக அமையவில்லையா? எல்லாம் ஹாலிவுட் சொன்னபின்னால்தான் என்றால் எப்படி?1 பின்னூட்டங்கள்:

திண்டுக்கல் தனபாலன் 7/31/2012 05:09:00 PM

படங்களுடன் நல்ல விமர்சனம்.

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை

உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று மதுரை சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/2.html) சென்று பார்க்கவும். நன்றி ஐயா !