இறைமைக்கிட்டுச்செல்லும் இராப்பொழுதுகள்


இரவுகள் ஏன் தோன்றின?

பிரபஞ்சம் மிகப்பெரியது. எத்தனையோ விண்மீன் மண்டலங்கள். அதில் சூரிய மண்டலமொன்று. அதில் 9 கிரகங்கள். அதில் பூமியும் ஒன்று. பூமி தன்னைச் சுற்றிக்கொள்வதுடன், சூரியனையும் சுற்றுகிறது. இச்சுழற்சியால் இரவு பகல், பருவகாலங்கள் வருகின்றன. இந்த இரவு பகல் எனும் சுழற்சி உயிர்களின் ஸ்தியை உறுதிப்படுத்துகின்றன. இரவு, பகல் எனும் திட்டம் (pattern) இல்லையெனில் வாழ்வு வித்தியாசமாக இருந்திருக்கும். நிலா கூட பூமி போல் சுற்றுவதில்லை. அதன் ஒரே முகத்தையே நமக்குக் காட்டிக்கொண்டுள்ளது. ஆனால் பூமியில் ஒரு பொழுது முழு இரவு, மறுபொழுது முழுப்பகல். பகலில் வெளிச்சம். இரவில் இருள். இவைதான் நம் ஜீவனம்.

நேற்றிரவு ஒரு கனவு. கனவுகளை உருவாக்குபவர் யார் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்! நான் தெருவில் நடமாடிக்கொண்டிருக்கும் போது நாலைந்து பேர் என்னைச் சூழந்து கொள்கின்றனர். அவர்களது கெட்ட நோக்கம் விரைவிலேயே தெரியவருகிறது. அவர்கள் என் பங்காளி அனுப்பிய அடியாட்கள். என்னை அடித்துத்துன்புறுத்தி என் சொத்து, பத்தை எழுதிவாங்க வைக்க வந்திருக்கிறார்கள். எப்படித்தெரிந்தது எனில், திரும்பிய ஒரு பொழுதில் என் பங்காளியும் இக்கூட்டத்தில் இருப்பது தெரிந்தது. பின் தமிழக ஹீரோ மாதிரி சண்டை போட்டு கூட்டத்தை விரட்டினேன் என்று எண்ணாதீர்கள் ;-) வாய்ச்சவுடாலால் என்னவோ பேசி அவர்களை விரட்டுகிறேன். ஏதோ சமாதானம் சொல்லி அவர்களும் நகர்கின்றனர். ஆனால் அந்த உயிருக்குப் பயந்த பொழுதுகள் ஆழமான அதிர்வலைகளை என்னுள் உருவாக்கின. நிஜமாக நடப்பது போலிருந்தது. திடுக்கிட்டு விழித்த பின் ஆறுதலாய் இருந்தது. எனக்கு பங்காளி உண்டு. இருந்த ஒரு வீடும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருடங்களாகின்றன. ஆனால், திடீரென்று இப்படியொரு கனவு. எனக்குள் கனவு நெறியாள்கை யார் என்று தெரிவதில்லை. சும்மா சொல்லக்கூடாது! சூப்பரா பண்ணியிருப்பார். காட்சிகள் தத்ரூபமாய் அமையும் ;-)இரவில் ஒரு சிறுதுளி பயம், பிரம்மாண்டமாகிறது. பெரிய கோயிலுள் எழுப்பும் சிறு ஒலி (கைதட்டல்) பெரிதாவது போல், நம் மனதின் சிறு பயம் இரவில் பூதாகரமாகிறது. முன்னொருகாலத்தில் இரவு என்பது மிகவும் பயங்கரமானது. துஷ்ட மிருகங்கள் வந்து நம்மைத்தின்று போகலாம். பின் எரிநெறுப்பு, வீடு, குடும்பம், கிராமம், நகரம் என்று வந்த பின் நாம் மிகப்பாதுகாப்பாக உள்ளோம். ஆயினும் ஆதி மனது, ஆதியாகவே உள்ளது. நம் பரிணாம வளர்ச்சியை உருவாக்கிய காரணிகள் அப்படியே நிலைபெற்றுவிட்டன. மனிதனுள் ‘பயம்’ என்பது இல்லையேல் ‘இறைவன்’ பற்றிய கருத்தாக்கம் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது! பயப்படும் போது துணை தேவையாய் உள்ளது. ‘தெய்வம் நமக்குத்துனை பாப்பா! ஒரு தீங்குவரமாட்டாது பாப்பா! என்கிறான் பாரதி, குழந்தைகளிடம்.

எனவே இரவு/பகல் என்ற இந்த சுழற்சி அமைப்பே இறைவனை நமக்குக்காட்டத்தானோ என்று தோன்றுகிறது. இரவு, பகல் இல்லாத உலகங்கள் உண்டா என்று தெரியவில்லை. அங்கு தெய்வ நம்பிக்கை இருக்குமா? என்பதும் தெரியவில்லை. நமக்குத்தெரிந்து இந்தப் பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் இருப்பது ஒரு பூமி. அந்தப் பூமி சுழல்கிறது. சூரிய ஒளி படும் நேரம் பகலெனப்படுகிறது, சூரிய ஒளியற்ற பகுதி இரவு எனப்படுகிறது. இரவின் தோற்றம் ஏனென்று கேட்டுப்பார்த்தால் இறைவன் உள்ளான் என்று காட்டுவதற்குத்தான் என்றொரு பதில் வந்தது! கவிதையாய்!!

இரவுகள் ஏன் தோன்றின?

அரவமில்லாக் காட்டில்
பரபரக்க நகரும்
உருவமில்லா
நிழல்களின்
உரசல் ஒலிகூட
உறைக்க வைத்து
மறைந்து சாகும்.

மோனத்துயில் கொள்ளும்
தூரத்து பொய்கையில்
விழுந்து தவழும்உதிர் இலை கூட
ஒரு கணம் விதிர்க்க வைத்து
விந்தை செய்யும்.

யாருமில்லா வீட்டினுள்
தனிமையில் ஒழுகும்
குழாயின் சொட்டொலி
இடிக்கும் மேகத்தை
இருளில் அழைத்துவரும்.

இரவு தனிமை
இரவு மோனம்
இரவு ஆழம்

இரவு இல்லையேல்
இறைமையும் இல்லை


கடல்வெளி - The Inner Space of Kasumi Chan

0 பின்னூட்டங்கள்: